தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தலையங்கம்


கெடுமுன் கிராமம் சேர்


11 வருடங்களுக்கு முன்னர் சுனாமி வந்து தமிழகத்தில் மிகப் பெரும் உயிர் மற்றும் பொருள் இழப்பு ஏற்பட்டது. நல்ல விளைநிலங்கள் கொண்ட‌ கடைமடைப் பாசனப் பகுதியில் பல லட்சம் ஏக்கர் விளைநிலங்களில் குறுவையே விளைக்க இயலாதவாறு நிலத்தடி நீர் உப்புத்தன்மை கொண்டது. ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகவும், பலப்பல கிராமங்களின் வாழ்வாதாரங்களை நிரந்தரமாக‌ச் சூறையாடியதாகவும் சுனாமி இருந்தது. அதன் பின் தானே புயல் வந்து கடலூர் மற்றும் புதுச்சேரி மாவட்டங்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாயின. இவ்வருடம் இயற்கை வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து மிகப்பெரும் பேரிடராக உருவெடுத்து இருக்கிறது. இவை எல்லாம் நாம் இயற்கை தன் வேலையைச் செவ்வனே செய்ய விடாமல் குறுக்கிடுவதற்கும் அதை அடக்கி ஆள இயலும் என்று செருக்குக் கொள்வதற்கும் இயற்கை விடும் எச்சரிக்கை.

சென்னையின் இழப்பின் வீச்சை நினைத்து நாம் கண்ணிர் விடுகிறோம்; வெள்ளத்தில் உயிரிழந்தோருக்கு நம் இதயம் கசிகிறது. இதையெல்லாம் தவிர்த்திருக்கலாம் , அல்லது சற்றுத் திட்டமிட்டு இருந்தால் உயிர்ச்சேதத்தைப் பெருமளவில் குறைத்திருக்கலாம் என்று அறியும்போது அரசின் பொறுப்பற்ற தன்மை மேலும் அதிகாரிகளின் மெத்தனத்தின் மேலும் கடுமையான சினம் பொங்குகிறது. பல லட்ச‌ம் மக்கள் அளவிலாப் பெருந்தன்மையுடன் ஒருவொருக்கொருவர் உதவிக் கொண்டபோது எஞ்சியிருக்கும் மனித நேயத்தை எண்ணி மிகவும் நம்பிக்கை பொங்குகிறது. இளைஞர் சக்தி மிக இயல்பாகப் பொங்கித் தன்னார்வலர்களாகத் தெருவில் இறங்கி வேலை செய்வதைப் பார்க்கையில் பெருமை விம்முகிறது. எரிகிற வீட்டில் பிடுங்கிய கொள்ளி லாபம் என்று இதையெல்லாம் அரசியல் ஆக்கி ஆதாயம் தேடும் அரசியல்வாதிகளையும், கட்சிக்காரர்களையும் பார்க்கும்போது சொல்லொணா அருவெருப்புத் தோன்றுகிறது. “சீ நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு” என்று காறி உமிழவே தோன்றுகிறது. இவ்வளவு சிக்கல்களுக்கு இடையிலும், இடுக்கண் வருங்காலும் நகைச்சுவையைக் கைக்கொள்ளும் மனிதர்களை நினைத்தால் புத்துணர்ச்சி ஆகிறது. இப்படி நவரசங்களையும் ஒருங்கே நமக்குள் உருவாக்கும் சென்னையின் பேரிடரில் நாம் முக்கியமான பாடம் ஒன்றைக் கற்றதாகத் தெரியவில்லை.

இவ்வெள்ளத்துக்கு நான்கு முக்கிய காரணங்கள்

1.திட்டமிடப் படாத/ சட்டத்துக்குப் புறம்பான‌ கட்டுமானங்கள்
2.சதுப்பு நிலங்கள் மற்றும் நீர் நிலைகளை ஆக்கிரமித்தல்
3.முற்றிலும் கொள்வாய், வடிகால் அற்ற சாக்கடைகள், கழிவுகள்
4.எஞ்சியிருக்கும் சிறு சிறு வடிகால்களையும் அடைத்துக் கொள்ளும் நெகிழிக் குப்பைகள்

ஆனால் இவைய‌னைத்திற்கும் அடிப்படையான காரணம் ஒன்றே ஒன்றுதான். எல்லோரும் சென்னையை நோக்கிப் படையெடுப்பதும், அதனால் அங்கு உருவான மக்கள் நெருக்கமுமே இதற்குக் காரணம். ஒரு ஊரில் ஒரு கோடிப்பேர் போய் ஏறினால் அது எவ்வளவுதான் தருமமிகு சென்னையாய் இருந்தாலும் எப்படித் தாங்கும்? நிலம், நீர், ஆற்றல், காற்று, வெளி என்று பஞ்ச பூதங்களுக்கும் பஞ்சமான இடத்தில் நல்வாழ்வு வாழ்வது எப்படி? சென்னை இருக்கும் நிலைமையில் எல்லா நிகழ்வுகளுமே பேரிடர் ஆகவே வாய்ப்பு உள்ளது. ஒரு கொசுக்கடித்தால், டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவுகின்றன. மழை பெய்தால் வெள்ளம் வந்து பேரிடர் ஆகிறது. மழை பெய்யவில்லையென்றால் கடுமையான‌ குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுக் காலரா, பேதி போன்ற நோய்கள் பெருகுகின்றன.

இதற்குத் தனி மனிதர்கள் எப்படித் தீர்வு காண்பது? சென்னைக்கு யாரும் புதிதாய்ப் பெயராமல் இருப்பது முதல்படி . சென்னையில் இருப்போர் வேறு ஊர்களுக்குப் பெயர முயற்சிப்பது இரண்டாம் படி. ஒவ்வொருவராக நகரங்களை விட்டு வெளியேறினால் நாடு நலம்பெறும்; நமக்கும் மிகுந்த நன்மை உண்டாகும். இதுவே நிரந்தரத் தீர்வு.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org