தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

உயிர்மூச்சே நஞ்சான அன்று - நினைவேந்தல் - அனந்து


1984; டிசம்பர் 3; நள்ளிரவு: அந்தப் பன்னாட்டு கம்பனியின் ஆலையிலிருந்து விஷ வாயு கசிகிறது. 25000 மக்கள் உயிரிழக்கிறார்கள். மேலும் 5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். இன்றளவும் , 3 தலைமுறைக்குப் பின்னும், பல குறைபாடுகளுடன் அங்கவீனமான குழந்தைகள் பிறக்கின்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் பல உடல் கேடுகளுடனும் பல நோய்களுடனும் பல்வேறு பாதிப்புகளுடனும் இன்றும் தவிக்கின்றனர். சுற்றுச்சூழல் கேடு வேறு.

எல்லா இடர்களிலும்போல் இதிலும் 99 சதவிகிதம் பாதிக்கப்பட்டு அவதிப்படுவது ஏழைகளே. அவர்களே மருத்துவ‌ வசதி கூட இல்லாமல், இன்றளவும் தூய குடி நீர் கூட இல்லாமல் தவிக்கின்றனர். அவர்கள் இந்த விஷ வாயுவை கக்கிய ரசாயன ஆலையின் அருகில் சேரிகளில் ஏழ்மையில் வாழ்ந்து வந்தவர்கள். 30 ஆண்டுகளாக போராடியும் இன்று வரை நீதி மறுக்கப்பட்டவர்கள் .

நம் நாட்டிலும், அமெரிக்காவிலும் நீதி மறுக்கப்பட்டு, உண்மை நிலை மறைக்கப்பட்டு, பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். அந்தப் பெரும் அரக்க பன்னாட்டுக் கம்பனிக்குக் கை கட்டிச் சேவகம் செய்து, விசிறி விடுவதில்தான் இரு அரசாங்கங்களும் முனைப்புடன் உள்ளன. அன்று நமது அரசாங்கம் சிகப்பு விளக்குப் பொருத்திய காரில், அந்த கறுப்பு இரவில், விமானம் வரை அந்த கும்பனியின் தலைமை நிர்வாகியைக் கொண்டு விட்டது. அதற்கு சில ஆண்டுகளுக்கு முன் அந்த ஆலை அமைக்கவும் பின்னர் அந்த வெள்ளைக்கார முதலாளியின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று மிகவும் முனைப்புடன் செயல்பட்டவர் அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிஸ்ஸிங்கர் என்று பல ஆவணங்கள் இன்று தகவல் உரிமை சட்டம் மூலம் பெற்றுள்ளனர், இந்த போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்ட மக்களின் அமைப்பினர். அதற்கு நமது டாடாவின் பெரும் சிபாரிசு வேறு! அந்த வில்லக் கம்பனியின் மொத்த சொத்துக்களையும் இந்த பேரிடரில் பிழைத்தவர்களுக்கல்லவா எழுதி இருக்க வேண்டும். அதுவல்லவோ மற்ற கம்பனிக்களை கவனமாகவும், பொறுப்புடனும், பாதுகாப்புடனும், செயல்படத் தூண்டியிருக்கும்?

இன்றுவரை இந்த நிலைமை நீடிக்கிறது. பாதிக்கப்பட்ட இவர்கள் 5 லட்சம் பேரும் சேர்ந்து உண்டியல் குலுக்கினாலும் அமெரிக்காவில் ஒரு வழக்கறிஞரை நியமிக்க முடியாது. ாதிக்கப்பட்டவர்கள் அமெரிக்க கோர்ட்டில் இந்த வழக்கை தொடரக்கூட விடாமல் நமது அரசு செயல்பட்டது. அவர்கள் உயிருக்கு மதிப்பும் இல்லை. மருத்துவ, பொருளாதார, சுற்று சூழல், நீதி என்று எந்த வகையிலும் நிவாரணம் இல்லை. அந்த 'கோலியத்' கம்பனியின் காசிற்கும், அரசியல் மற்றும் பண பலத்திற்கும், ஊடக செல்வாக்கிற்கும், வழக்கறிஞர் முதல் நீதிபதிகள் வரை இருந்த 'பிடி'க்கும், அந்த ஏழை 'டேவிட்'டுகள் எம்மாத்திரம்? இந்த ஏழைகளுக்கு ஒரே நண்பர்கள் - நகல் எடுக்கவும், ஃபாக்ஸ் அனுப்பவும் காசில்லா ஆர்வலர்கள்/சிவில் சொசைட்டி உறுப்பினர்கள்! சற்றே கண் மூடி கூடங்குளத்தினை நினைத்துப்பாருங்கள்!

அந்த போபால் கசிவிற்கு சில நாட்களுக்கு முன், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் “மிகவும் தெளிவாக பாதுகாப்பு குறைவு மற்றும் பெரும் இடர்களுக்கு காப்பு அல்லது மாற்றும் இல்லை, அவற்றை கையாள தேர்ச்சி பெற்ற ஆட்களும் இல்லை..”என்று எழுதியிருந்தது. எப்படிக் “கூடங்குளம் அணு ஆலையில் பாதுகாப்பு சரியில்லை” என்றும் “கசிவிற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்” என்றும் எழுதியிருந்தும் நம் அரசாங்கமோ, ஆலையோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையோ அதே போல் அன்றும். எந்த வித பாதுகாப்பு நடவடிக்கைகளும் இல்லாமல், சரியான வசதிகளும், ஆபத்துக்காலத்தில் அல்லது பேரிடர் காலங்களில் செயல்படும் வசதிகளும் இல்லாமல் இயங்கக்கூடிய இந்த ஆலைக்கு கண் மூடி எல்லா உரிமைகளும் வழங்கப்பட்டன.

டொவ் கெமிக்கல் என்ற‌ வேறு ஒரு கம்பனி யூனியன் கார்பைடை வாங்கிய பொழுதும் நம் அரசாங்கமோ, அந்த புது கம்பனியோ ஒரு தார்மீக அளவிலும் இந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த நலனும் கிடைக்க வழி செய்ய வில்லை.

இன்று வரை அங்கு குவிக்கப்பட்டிருக்கும் நச்சு எச்சங்களைக் கையாள எந்த கம்பனிக்கும் உலக அளவில் திறமையோ தொழில் நுட்பமோ கிடையாது. அதனால் அது இன்றும் அங்கேயே குவிக்கப்பட்டு அதனால் நிலம். நீர், காற்று எல்லாம் மாசடைந்து இன்னும் பல பிரச்சினைகளை கூட்டியுள்ளன. இந்த அழகில் நாம் ஏன் கூடங்குளத்தை இயக்க வேண்டும்?

மேலும் போபாலில் அந்த கசிவு நடந்தவுடன் செர்மானியர்கள், இந்த மீதைல் ஐசோ சையனேட்டிற்கு எதிர் நிவாரணம் அளிக்கக் கூடிய ஒரே மருந்தை அனுப்பிய போது, அதனை தடுத்து (அப்படி அனுமதித்தால் அவர்களது கொடிய விஷ உற்பத்தி, அதன் விஷத்தன்மை, பாதுகாப்பின்மை எல்லா குட்டுக்களும் வெளிப்படும் என்பதால்) உடனடி நிவாரணத்திலும் தலையிட்டுக் கெடுத்தது இந்த மனசாட்சியற்ற கொடிய யூனியன் கார்பைடு நிறுவனம்.

அங்கு உற்பத்தி செய்யப்பட்ட பொருள்- செவின் என்னும் பூச்சிக்கொல்லி. இன்றளவும் (வேறு பெயர்களிலும்) உபயோகிக்கப்படுகிறது. அந்தக் கசிவினால் அவ்வளவு பாதிப்பு என்றால், இதனை பிரயோகிக்கும் விவசாயிகளின், அதன் எச்சத்துடன் உண்ணும் மக்களின் கதி?

அந்த பாதிக்கப்பட்டோர் கேட்பதெல்லாம் இதுதான்:

1) கொலை குற்றத்திற்கு ஆளான அந்த கம்பனிகளின் உயர் அதிகாரிகளை நீதி மன்றத்தின் முன் நிறுத்த வேண்டாமா? சென்ற மாதம் வாரன் ஆன்டர்சன் இறந்ததால் ஒன்றும் மாறவில்லை. மற்ற அதிகாரிகளை கூண்டில் நிறுத்தி தக்க தண்டனை அளித்து நீதியை நிலை நாட்ட வேண்டாமா? (கடைசி வரை ஒடி ஒளிந்த ஆன்டர்சன் கொலைக்கான தண்டனை அனுபவிக்காமல் 'சுதந்திரமாக' இறந்தது பெரும் அவலமே)

2) பாதிக்கப்பட்டோரின் கணக்கை சரியான படி (அறிவியல் பூர்வமாக) மறுபரிசீலனை செய்து சரியாக கணக்கில் கொண்டு வந்து, அவர்கள் எல்லொருக்கும் சரியான நஷ்ட ஈடு கொடுக்கச்செய்ய வேண்டும்.

உயிர்களை மீண்டும் கொண்டு வர முடியாது, பாதிக்கப்பட்டவர்களுக்காவது சரியான நஷ்ட ஈடு கொடுக்கலாம் அல்லவா?

மக்களுக்கான அரசாங்கங்களால் இது கூடவா செய்ய இயலாது?

இப்பொழுதும் இதனைத் திருத்தவில்லை என்றால் எப்பொழுதுதான் நாம் விழிப்பது?

இந்த விஷவாயு கசிவிற்கே இப்படி என்றால் அணுவுலைகளின் பாதுகாப்பு மற்றும் ஆபத்து பல மடங்கு இருக்காதா? இதைபோன்ற அக்கறையற்ற அரசாங்கங்களால் நம் பாதுகாப்பினை உறுதி செய்ய முடியுமா? இதே கேள்விகள் தான் பூச்சிக்கொல்லிகளின் உற்பத்தி மற்றும் அதன் எச்சங்கள் நமது உணவில் வருவது பற்றியும். அதை விட கவலைக்கிடம் மரபீனி மாற்றம், சுற்றுச்சுழல் மாசு கேடு.

நாம் ஏன் இதைப் பற்றி கவலைப்பட வேண்டும்?

அங்கு தவிக்கும் ஏழைகளுக்கும், பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகளுக்காகவும், 30 ஆண்டுகளாக அகிம்சை முறையில் போராடும் குழுக்களுக்காகவும், நீதியை நிலைநாட்டவும், பாதுகாப்பு, மனித உரிமை மற்றும் தொழிலாளர் உரிமை எல்லாம் புரிந்து ஆதரித்து இவை யாவும் நிலை நாட்டவும் போராடவும். இதை போன்ற பேரிடர் அல்லது பெரும் மாசுகள் நமது அக்கம்பக்கத்தில் வந்து நம்மையும் நமது சுற்றுப்புறம் மற்றும் நமது எதிர்காலத் தலைமுறையினரையும் பாதிக்கும். வேறு பெரும் கும்பனிகள் இப்படி ஒரு தண்டனையும் இல்லாமல் தப்பிக்க விட்டு விடக்கூடாது. உலகமயமாக்கல், மேம்படுத்துதல், வேலைவாய்ப்பு என்ற பெயரில் நமது எல்லா உரிமைகளையும் இழந்து இப்படி இன்னல்களிலும் உழலாமல் இருக்கவும் விழிப்போம், எழுவோம்.

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org