தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

மண் பயனுற வேண்டும்


பீடையிலாத‌து ஓர் கூடு கட்டிக் கொண்டு - ஜெய்சங்கர்

தற்சார்பு வாழ்வியல் என்பது மையப் படுத்தப்பட்ட சந்தையில் இருந்து வெளியேறித் தன் தேவைகளைத் தானேயோ அல்லது தன் அண்மையில் உள்ள கிராமப் பொருளாதாரத்தாலோ நிறைவு செய்ய முயற்சிப்பது. இதில் வெற்றி, தோல்வி என்பதற்கு இடமே இல்லை. வெற்றியும், தோல்வியும் பிறருடன் போட்டியிடுபவர்களுக்கு நிகழ்வது. தனக்குள் உந்தும் ஒரு விடுதலை வேட்கையால் ஏற்படும் தேடலின் வெளிப்பாடே தற்சார்பு வாழ்வியல் என்னும் முயற்சி. சீன ஞானி லாவோட்ஸே சொன்னது போல “உண்மையான பயணிக்கு அடையுமிடம் என்று ஏதுமில்லை; அவன் சென்று சேர்வதற்கும் அவசரப்படுவதில்லை”.

கடந்த 10 வருடங்களாக‌ இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். தற்சார்புக்கான தேடலில் முதலில் உணவை நாமே தயாரிக்கலாம் என்று சம்பளத்திற்கு வேலை செய்வதை விட்டு உழவனானேன். குடும்பம் சென்னையில்… பண்ணை எழுபது கிலோ மீட்டர் தொலைவில்… வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் தொடர் வண்டியில் பண்ணைக்கு பயணம்… இரண்டு வருடம் இவ்வாறு முயற்சி செய்த பின்னர் ஒன்று தெளிவானது! நமக்குத் தேவையான உணவை நாமே உற்பத்தி செய்வது சாத்தியம். ஆனால் சென்னை (நகர) வாழ்க்கை முறையை அப்படியே தொடர தற்சார்பு விவசாயம் பொருள் ஈட்டாது. பல கிலோ மீட்டர்கள் பயணம் செய்து பண்ணையை பராமரிப்பது உடலுக்கு மட்டுமல்ல, உள்ளத்திற்கும் விரைவில் சோர்வை உண்டாக்குகிறது. எனவே, பண்ணைக்கு குடும்பத்துடன் பெயர்வதே அடுத்த கட்ட நடவடிக்கையானது.

பண்ணைக்கு குடும்பத்துடன் பெயர்வது என்றதும், வாழ்க்கை முறையில் ஏற்படப்போகும் மாற்றங்கள், குழந்தைகளின் கல்வி, பொழுது போக்கு (ஆம்; பொழுதுபோக்கும் நகர வாழ்க்கையில் ஓரு முக்கியமான அம்சமல்லவா?) என்று பல்வேறு கோணங்களில் விவாதித்து அவை எல்லாவற்றிற்கும் விடை கண்ட பிறகும் ஒரு முக்கியமான கேள்வி நாம் இருக்கப்போகும் வீடு எவ்வாறு அமைய வேண்டும் என்பது. தற்சார்பாக வீடு கட்டுவது எப்படி? கொத்தனாரை பண்ணைக்கு அழைத்து, செங்கல், மணல், இரும்பு, சிமெண்ட் ஆகியவற்றை பண்ணைக்கு வரவழைத்து வீடு கட்டினால் அது தற்சார்பாகுமா? பண்ணைக்கு அருகில் உள்ளவர்களை அழைத்து அருகில் உள்ள பொருட்களை கொண்டு வீடு கட்டினால் அது (நகரத்திலிருந்து பெயரும்) நாம் தங்குவதற்கு ஏதுவானதாக இருக்குமா? தேவை, விருப்பம், வசதி ஆகிய மூன்றையும் சமன் செய்து ஒவ்வொன்றிலும் சற்று விட்டுக்கொடுத்து, குடும்ப அங்கத்தினரும் , நமது பணப்பையும்,இவற்றை விட நம் மனசாட்சியும் ஒப்புக் கொள்ளும்படியான ஒரு வீட்டை வடிவமைப்பது விவசாயத்தை விடப் பல மடங்கு கடினமானது.

நகரத்தில் பெரும்பாலும் அடுக்கு மாடி வீடுகளே. சிற்றூர்களில் அடுக்கு மாடி வீடுகள் இல்லாவிட்டாலும் கூட, ஓட்டு வீடுகளை பார்ப்பது அபூர்வமாகி விட்டது. எல்லாம் காங்கிரீட் வீடுகளே. கிராமங்களில் கூட இப்போது காங்கிரீட் வீடுகளே அதிகம் உள்ளன. (நமது அரசின் மானிய வீடு கட்டும் திட்டங்களுக்கு நன்றி!) சில வீடுகள் ஓடு அல்லது ஓலைக் கூரைகளை கொண்டுள்ளது. அவற்றிலும் பெரும்பாலும் 'ஹாலோ பிளாக்’ என்றழைக்கப்படுகிற காங்கிரீட் கற்களைக் கொண்டே சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. மண் சுவர் வீடுகள் வெகு குறைவே. கேழ்வரகு, சாமை, வரகு, கம்பு, தினை போன்ற சத்து நிறைந்த சிறு தானியங்களை உண்ணுவது கீழானது என்றும், இவை எல்லாவற்றையும் விட சத்து குறைந்த நெல் அரிசி அல்லது கோதுமை உண்பதே மேலானது என்று கருதுவது போலவே மண் சுவர், கூரை வீடுகள் கீழானது என்றும் காங்கிரீட் வீடுகள் சூடாக இருந்தாலும் அதுவே நமது கிராமமும் உறவினரும் நம்மை மதிக்கச் செய்யும் என்ற கருத்து பலரிடமும் உள்ளது. சமூக அங்கீகாரம் மற்றும் மரியாதை என்பது பெரும்பாலும் நம்மால் எவ்வளவு செலவு செய்ய இயலும் (அல்லது செய்ய இயலுமாறு பறைசாற்றுகிறோம்) என்பதைப் பொறுத்தே அமைகிறது; எவ்வளவு நன்மையான செயல் என்பதைப் பொறுத்து அல்ல - இது மிக வேதனையான விஷயம்; தற்சார்பு முயற்சிகளுக்கு இந்த சமூக நையாடலை விடப் பெரிய எதிரி எதுவுமே இல்லை. இயற்கை வேளாண்மையை முதலில் முயலும் விவசாயிகள் இதை நன்கு அறிவார்கள்.

நகரத்தில் வசித்துப் பழக்கமுள்ளவர்கள், கூரை வீடுகளில் பூச்சிகள், தேள்கள், பாம்புகள் ஆகியவை அடிக்கடி வரும் என்று பயப்படுகின்றனர். சென்னை வேளச்சேரியில் எனது குடும்பம் தங்கும் சாதாரண காங்கிரீட் வீட்டிற்குள் எப்படியோ இரவில் எலி வந்து விடுகிறது. எல்லா சன்னல்களையும் சாத்தி, சமையல் அறையில் புகை போக்கும் மின் விசிறியை இரவு முழுவதும் ஓட்டினால் கூட எப்படி வருகிறது என்று தெரியவில்லை… ஆனால் வருகிறது. வீட்டைச் சுற்றி பல முறை பாம்புகள் வந்துள்ளன. சீர்காழியில் வசிக்கும் நமது ஆசிரியரின் அலுவலகத்தின் உள்ளே கணிப்பொறி அருகே நல்ல பாம்பு வந்துள்ளது. கூரை வீட்டில் மட்டும்தானா ஆபத்துகள்! இது போன்று அடிப்படை இல்லாத பல எண்ணங்களினால் எப்படிப்பட்ட வீடு கட்ட வேண்டும் என்று முடிவு செய்வது இன்னும் சிக்கலாகி விடுகிறது.

உண்மையில் ஒரு இடத்தில் நாம் வீடு கட்ட வேண்டுமானால் என்ன என்ன கூறுகளை ஆராய வேண்டும்?

    1. அறைகள் மற்றும் அவற்றின் அளவு (நமது வசதிக்கேற்ப) 2. அறைகளின் உபயோகத்திற்கேற்ப அமைப்பு 3. வீடு அமையும் இடத்தின் தட்ப வெப்ப நிலை 4. வீடு அமையும் இடத்தின் மண் வாகு 5. அருகில் (கிடைக்கும் அல்ல) உள்ள கட்டுமானப் பொருட்கள் 6. கட்டுமானச் செலவு 7. வீட்டின் உறுதி மற்றும் நீடித்த வயது 8. குறைவான பராமரிப்பு 9. நம் தெரிவுகளால் ஏற்படப் போகும் சூழல் சுவடு

இவற்றை விட்டு விட்டு, நமது உறவினர் கட்டிய வீட்டை விட பெரியதாக கட்ட வேண்டும், நம்மிடம் கார் இல்லாவிட்டாலும் கார் நிறுத்தும் இடம் கட்ட வேண்டும் என்று வீம்புக்கு வீடு கட்டினால் நாம் அதில் நிம்மதியாக இருக்க முடியுமா? உங்களால் செலவு செய்ய முடிந்த அளவுக்கே உங்கள் வீடு அமைய வேண்டும் என்று காந்தி சொன்னார். வீடு தங்குவதற்கேயன்றி நமது செல்வச் செழிப்பை பறை சாற்றிக் கொள்ள அல்ல. எனவே, நம்மால் செலவு செய்ய முடிந்தால் கூட சிறிய, எளிய வீடு கட்டுவதே சிறந்தது. “சிறிய எளிய வீடு அழகு மட்டுமல்ல அவசியம் கூட… அது பெரிய வீட்டை விட அதிக முக்கியமானது” என்று லாரி பேக்கர் சொன்னார். “வீடு நமக்காக… நாம் வீட்டுக்காக அல்ல. எனவே, வீடு நம்முடைய மன மற்றும் உடல் தேவைக்கேற்ப அமைய வேண்டும்” என்று ஹஸன் ஃபாத்தி சொன்னார். இவ்வாறு பலர் சொன்னதை படித்ததனாலும், வீடு கட்டுவது இயன்ற அளவு இயற்கையை சிதைக்காமலும், அது அதிக ஆற்றலை விழுங்குவதாக அமையக் கூடாது என்பதாலும், எங்களுடைய பண்ணையில் அமையப்போகும் வீடு எப்படி அமைய வேண்டும் என்பதை முடிவு செய்ததே ஒரு நீண்ட, ரசமான அனுபவமாக இருந்தது.

ரசமான அனுபவம் தானேயொழிய அது, அமைதியான அனுபவம் அல்ல. சில முடிவுகளில் மனைவியும், சிலவற்றில் நானும், சிலவற்றில் குழந்தைகளும், சிலவற்றில் பெரியவர்களும், சிலவற்றில் இயற்கையும் விட்டுக் கொடுக்க வேண்டி வந்தது. அந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்வது தான் நோக்கமே தவிர இது தான் சரி என்றோ, இது தவறு என்றோ சொல்வதற்காக இந்தக் கட்டுரை அல்ல. மேலும், எங்கள் பண்ணையில், நாங்கள் கட்ட, எங்கள் குடும்பத்திற்கேற்றவாறு வீட்டை எவ்வாறு வடிவமைத்துள்ளோம் என்பது முழுவதுமாக எல்லோருக்கும் சரி என்று பட வேண்டிய அவசியமில்லை. மேலும், இன்னொரு முறை, இன்னொரு சமயம் வீட்டை இதே இடத்தில் நாங்களே வடிவமைத்தாலும் இப்படியே செய்வோம் என்று உறுதி சொல்வதற்குமில்லை. இது ஒரு பயண அனுபவம். நீங்களும் இதே போல் வீடு கட்ட விழைந்தால் இந்த அனுபவம் உங்களுக்கு உதவியாக அமைய வாய்ப்புள்ளது.

பண்ணையில் வீடு கட்டும் போது இடம் இல்லாததனால் பிரச்சனை எழாது. இடம் இருப்பதுதான் குழப்பமாக அமையும். பண்ணையில் எங்கே வீடு கட்டுவது என்று முடிவு செய்வது ஒரு முக்கியமான செயல். எங்களது வீடு மின்சாரம் இல்லாமல் இருக்கப்போவதால் நீர் நிலைக்கு அருகில் இருப்பது இன்றியமையாதது. கட்டுமானத்திற்கும், பிறகு வீட்டு உபயோகத்திற்கும் நீரை எடுத்துக் கொள்வது சுலபமாக அமையும். எனவே, பண்ணையில் உள்ள கை பம்புக்கு 40-50 அடி தொலைவுக்குள் வீடு அமைய வேண்டும் என்பதால் அதிக குழப்பம் இல்லாமல் போனது. மின்சாரம் வேண்டாம் என்று முடிவு செய்யக் காரணம்… நுகர்ச்சியை குறைக்காமல் எந்த விதத்தில் மின்சாரம் தயாரித்தாலும் அது renewable - ஆக அமையாது. காற்றாலைகளுக்கு தேவையான இரும்பு மிக மிக அதிகம். சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் எடுக்க தேவையான சூரிய ஒளிக் கண்ணாடிகளை (solar panels) பல நிறுவனங்கள் தயாரித்தாலும் அதன் உட்கூறான செல்கள் (photo voltaic cells) எல்லாம் ஒரே ஒரு ஏரியில் எடுக்கும் தனிமத்திலிருந்தே தயாராகிறது. எல்லோரும் வீட்டில் தொலைக்காட்சி பெட்டிகள், மின் விசிறிகள், தண்ணீர் இறைக்கும் மோட்டார், தண்ணீரை கொதிக்க வைக்கும் ஹீட்டர்கள், குளிர் சாதன பெட்டிகள், மிக்ஸி, கிரைண்டர், ஃபிரிட்ஜ் என்று அடுக்கிக் கொண்டே போனால் எந்த விதத்திலும் அதற்கு ஈடு கொடுக்க வருங்காலத்தில் மின்சாரம் தயாரிக்க இயலாது. அரசின் மின்சார இணைப்பு பெற்றால் நாம் எவ்வளவு உபயோகிக்கிறோம் என்ற உணர்வை நாம் இழந்து விடுகிறோம். எனவே, விளக்குகள் மற்றும் கைபேசி, மடிக்கணினிகளை சார்ஜ் செய்ய மட்டுமே மின்சாரம் எங்கள் வீட்டில் தேவை என்று முடிவு செய்தோம். தற்போதுள்ள குடிசையில் உள்ள எல்லா உபகரணங்களும் சேர்ந்து பத்து வாட்டுகளுக்குள் அடங்கி விடும். தண்ணீருக்கு கை பம்பு, சமையலறைக்கு அம்மி, உரல். பண்ணை கடல் மட்டத்திலிருந்து 800 மீட்டர் உயரத்தில் இருப்பதால் மின் விசிறி கோடைக்காலத்திலும் அவசியமில்லை.

அடுத்தது அறைகள்… ஒரு சமையலறை, ஒரு வரவேற்பறை, இரண்டு படுக்கை அறைகள், ஒரு குளியலறை, ஒரு கழிப்பறை அவசியம் வேண்டும் என்று முடிவானது. வீட்டைச் சுற்றி இரண்டு அல்லது மூன்று திண்ணைகள் வேண்டும் என்பது கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு முக்கியமானது. திண்ணையில் நன்றாக பொழுதுபோகும், காற்று வரும் - ஓய்வு கிடைக்கும். இந்த அமைப்பு தேவையை விட கொஞ்சம் அதிகம் தான். ஆனால் அப்படித்தான் அமைகிறது வீடு.

பிறகு, வீட்டின் கட்டுமானப் பொருட்கள் என்ன என்று முடிவு செய்வது… பல மாதங்கள் பிடித்தது. முதலில் ஒரு அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன். ஏற்கனவே பண்ணையில் கிடைக்கும் கடுக்காயை நெருப்பில் காயப் போட ஒரு குடிசை கட்டினோம். முற்றிலும் இந்தப் பகுதி மக்களைக் கொண்டே கட்டினோம். கொத்தனார் கூட யாரும் இல்லை. அதன் தரை மண் தரை. கூரை தென்னை ஓலை மேல் கரும்பு சோகை [ பார்க்க படங்கள்]. சுவர்கள் பண்ணையில் உள்ள மூங்கில் மூலம் தட்டிகள் செய்து நிறுத்தி அதன் இரு பக்கங்களிலும் சேற்றை வைத்து அப்பியது. கடைகாலே கிடையாது. இதில் சேறின் பதம் எப்படி இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. கட்டும் கிராமவாசிகள் பழக்கத்தினால், இந்த சேறு நல்லது, இந்த சேறு சரியில்லை என்று கூறுகிறார்கள். ஆனால், அது செய்து பார்த்து செய்து பார்த்து தான் சரி செய்வதாக (trail and error) உள்ளதே தவிர இந்த முறையில் செய்தால் சரியாக வரும் என்று சொல்வதற்கில்லை (repeatable). மேலும், இங்கு நிறைய கரையான்கள் உள்ளது. அவை இந்த சுவற்றை பிடித்து கூரைக்கு ஏற முயற்சித்துக் கொண்டே உள்ளது. எனவே, மிகவும் கண்காணிப்புடன் இருக்க வேண்டியுள்ளது. தரைகளிலும் எந்த ஒரு மரப் பொருளையோ அல்லது சாக்கையோ வைத்தால் ஒரே மணி நேரத்தில் கரையான் வந்து விடுகிறது. தரையும் அடிக்கடி சுத்தம் செய்து சாணி மெழுகினாலும் பொரபொரவென்றாகி விடுகிறது. குளிர் நாட்களில் தரையில் ஈரம் ஊறி சில்லென்றாகி விடுகிறது.

எனவே, அருகில் உள்ள பொருட்கள், அருகில் உள்ள மக்கள் மட்டுமே கொண்டு எல்லோரும் இருக்க வீடு கட்டினால் செலவு வெகுவாக குறையும். ஆனால், பராமரிப்பு அடிக்கடி செய்ய வேண்டும். கூரையையும், சுவரையும் ஐந்து வருடத்திற்கொரு முறையாவது மாற்ற வேண்டும், தரையை ஒவ்வொரு மாதமும் மெழுக வேண்டும். அவ்வாறு செய்தாலும், ஓதம், கரையான்கள் மூலம் ஏற்படும் தொந்தரவுகள் இருக்கும். 200 சதுர அடி கொண்ட இந்தக் கொட்டகை படல்-மண் சுவர் (wattle and daub ) தொழில்நுட்பத்தால் ஆனது. 90% அண்மைப் பொருட்களால் உருவாக்கிய இவ்வீடு கட்ட 12000 ரூபாய் செலவு ஆனது (சதுர அடிக்கு 60 ரூ). இந்த ‘மாதிரி’ வீட்டை வைத்து கிடைத்த அனுபவம், என்ன கட்டுமானப் பொருட்களை கொண்டு வீடு கட்டலாம் அல்லது கட்ட வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்ய அடிப்படையானது.

கட்டுமானப் பொருட்களை முடிவு செய்ய ‘பல’ மாதங்கள் ஆனது என்று சொன்னேனல்லவா? என்ன முடிவு செய்தோம் என்பதை ‘ஒரே ஒரு’ மாதம் காத்திருந்து பார்க்கலாமா?

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org