தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

உழவை வெல்வது எப்படி - பசுமை வெங்கிடாசலம்


[திரு.பசுமை வெங்கிடாசலம் (9443545862) உழவை வெல்வது எப்படி என்ற தலைப்பில் இதுவரை தற்சார்பு வேளாண்மையின் அடிப்படைத் த‌‌த்துவங்களையும் கொள்கைகளையும் விளக்கி இருந்தார். சொல்வதோடு மட்டுமின்றி, பல வேளாண் பண்ணைகளை அக்கோட்பாடுகள் கொண்டு லாபகரமாகப் பொருள் ஈட்டுவதாக மாற்றியுள்ளார். அதில் ஒரு பண்ணையைப் பற்றிய விவரம் இக்கட்டுரையில் - ஆசிரியர் ]

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம் முதுகுளம் கிராமத்தில் உள்ளது முதுகுளம் பண்ணை. இந்த பண்ணை திருச்சியில் வசிக்கும் தொழிலதிபர் திரு. ராமநாதன் என்பவருக்கு சொந்தமானது. இது கம்பெனியாக பதிவு செய்யப்பட்டு நிர்வாகிக்கப்படுகிறது. 1990 இல் தரிசாக இருந்த பூமியை வாங்கி சமன் செய்து ஆழ்துளை கிணறு அமைத்து விவசாய பூமியாக மாற்றியுள்ளார். வாழை, மஞ்சள் போன்ற பயிர்கள் செய்யப்பட்டு பின் 1994 முதல் 1996 வரை அனைத்து பரப்பிலும் 25 அடி இடைவெளியில் 6500 தென்னை கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இதில் குட்டை-நெட்டை, நெட்டை-குட்டை, நெட்டை போன்ற மரக்கன்றுகள் நடப்பட்டன. இன்று இவற்றின் வயது சுமார் 20 வருடங்கள்.

அனைத்து மரங்களுக்கும் சொட்டுநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் 5 ஏக்கர் பரப்பில் 20 வருடங்களை கடந்த முந்திரி மரங்கள் உள்ளன. இந்த பண்ணையின் நிர்வாகத்தை 2005 ஆம் ஆண்டு திரு. ராமநாதன் அவர்கள் தன் மகன் செந்தில்நாதன் வசம் ஒப்படைத்துள்ளார். திரு. செந்தில்நாதன் சென்னையில் கட்டிடக்கலையில் பொறியியல் பட்டம் படித்து பின் அமெரிக்காவில் M.S முடித்துள்ளார். வயது சுமார் 35 உடையவர். இந்தப்பண்ணையின் மேலாளராக திரு.சுந்தர்ராஜ் என்பவர் பண்ணையிலேயே குடும்பத்துடன் தங்கி பணிபுரிகிறார். கடந்த 6 வருடங்களாக அங்கு அவர் வேலை செய்கிறார். 5 குடும்பங்கள் பண்ணையின் உள்ளேயே நிரந்தரமாக தங்கி வேலை செய்கின்றன. அருகில் உள்ள கிராமத்தில் இருந்து தினமும் 30 முதல் 40 ஆட்கள் வேலைக்கு வந்து போகிறார்கள். பண்ணை முழுவதும் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. பாதைகளும், நீர்ப்பாசன குழாய்களும் மிகவும் துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. கம்பெனியாக நிர்வாகிக்கப்படுவதால் அனைத்து வரவு, செலவுகள், உற்பத்தி பொருட்களின் அளவு அனைத்தும் முறையாக பதிவு செய்யப்படுகிறது. ஐந்து வருடங்களாக தென்னையில் ஊடுபயிராக அனைத்துப்பகுதியிலும் கோகோ நடவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 16,000 (பதினாறாயிரம்) செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. வழக்கம்போல இரசாயன உரங்களும் களைக்கொல்லிகளும் பயன்படுத்தப்பட்டன. மகசூலும் மிகவும் நன்றாகவே இருந்தது. மரம் ஒன்றுக்கு சராசரியாக 150 காய்கள் கிடைத்தது. மட்டை உரித்த ஒரு காயின் சராசரி எடை 1/2 கிலோவாக இருந்தது. இது தமிழ்நாட்டில் பெறப்படும் சராசரி மகசூலை விட ஒன்றரை மடங்கு அதிகம். தமிழ்நாட்டில் தென்னை ஒன்றின் சராசரி காய்ப்புத்திறன் 90 (தொண்ணூறு) ஆகும். இதை மத்திய தென்னை வாரியம் பதிவு செய்துள்ளது.

இவ்வளவு அதிகபட்ச மகசூல் கிடைத்தும் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காத காரணத்தினால் வரவுக்கும் செலவுக்கும் மட்டும் சரியாக இருந்தது. முறையாக அனைத்து தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தியதால் செலவு கூடுதலாக ஆனது. பெரும்பான்மையான செலவு உரம், பூச்சி நிர்வாகம் மற்றும் கூலியாக இருந்தது. இதை உணர்ந்த திரு. செந்தில்நாதன் பல வழிகளிலும் இதற்குண்டான மாற்று வழி முறைகளை மறுபுறம் தேட ஆரம்பித்தார். இதில் இயற்கை விவசாய பண்ணையை பார்வையிடுதல், பல மாற்று விவசாய முறைகளை கையாளும் பண்ணைகளை பார்வையிடுதல் மற்றும் அப்பண்ணையாளர்களுடன் கலந்துரையாடல் போன்ற வகையிலும் அவரது தேடல் தொடர்ந்தது. நான்கு வருட தேடலின்பின் தன் பண்ணையை நிரந்தரமான சுயசார்பு பண்ணையாக மாற்றி அமைக்க முடிவு செய்தார்.

தேங்காய் விற்பனை ஒன்றின் மூலமே வரவு உள்ளது. அதுவும் வருடத்திற்கு ஆறு முறை மட்டுமே. ஆனால் செலவு தினமும் தொடர்ந்து நடைபெறுகிறது என்பதை உணர்ந்து பண்ணையில் இருந்து தினமும் ஏதாவது ஒரு உற்பத்தி பொருள் விற்பனைக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்க முடிவு செய்தார். இந்த முயற்சி பற்றி பண்ணை மேலாளர் சுந்தர்ராஜ் உடன் கலந்து பேசி இனி எந்த விதமான செயல்பாட்டினை செய்வது என ஒரு செயல்திட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி தேவையற்ற செலவினங்களை தவிர்ப்பது, பண்ணைக்கு தேவையானவற்றை பண்ணைக்குள்ளேயே உற்பத்தி செய்வது. இதன்படி முதலில் வெளியில் இருந்து உரம் வாங்குவதை முற்றிலுமாக நிறுத்துவது, அதற்கு மாற்றாக தென்னையில் இருந்து கிடைக்கும் அனைத்து கழிவுப்பொருட்களையும் இரண்டு தென்னை மர வரிசைக்கிடையில் மூடாக்காக இடுவது ஆகும்.

இதுவரை தென்னை மரத்தை சுற்றி வட்டமாக சொட்டுநீர் கொடுக்கப்பட்டுவந்தது. அதை மாற்றி இரண்டு மர வரிசைக்கு மத்தியில் நீரை சொட்டவிடுவது ஆகும். தேவையற்ற களைகளையும் எடுத்து இரண்டு வரிசைக்கு இடைவெளியிலேயே மூடாக்காக போடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. சொட்டு நீருடன் E. M (திறன்மிகு நுண்ணுயிர்) கலந்து விடுவது என்றும் அதையும் பண்ணையிலேயே தயாரிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதுவும் மிகவும் எளிய முறையில் பச்சரிசி சோற்றுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து தயாரிப்பதாகும். இது மிகவும் செலவு குறைந்த முறையாகும். வருடம் ஒருமுறை ஏக்கர் ஒன்றுக்கு ஒரு டன் நெல் உமி சாம்பல் போடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த இரண்டு இடுபொருட்களை தவிர வேறு எந்த இடுபொருட்களையும் கொடுக்கவேண்டியதில்லை என்று முடிவு செய்தனர்.

அடுத்து பண்ணையை சுற்றி வெளி ஓரத்தில் இரண்டு வரிசை நீண்ட கால தடி மரங்களை நட முடிவு செய்தனர். உதாரணம், தேக்கு, ஈட்டி, மகாகனி, வேங்கை, நாவல், குமிழ் போன்றவை. பண்ணையின் உள்புறம் அமைந்துள்ள பாதையில் இருபுறமும் பழமரங்களை நட முடிவு செய்தனர். உதாரணம், மா, சப்போட்டா, கொய்யா, நெல்லி, நாவல், சீத்தா போன்றவை. தென்னை மரங்களுக்கு இடையிலும் பழமரங்களும், தடி மரங்களும், நட முடிவு செய்தனர். பண்ணைக்குள் இருந்த காலி இடங்களில் காய்கறி செடிகள் பயிர் செய்ய முடிவு செய்தனர். தென்னைக்குள் உள்ள இடைவெளியில் பரவலாக மஞ்சள், இஞ்சி, சேனை,சேம்பு போன்ற வருடப்பயிர்களை பயிர் செய்ய முடிவு செய்தனர்.

இந்த செயல்திட்டத்துடன் செயல்பட ஆரம்பித்து இன்றுடன் 1 1/2 வருடங்கள் முடிவடைந்து விட்டது. பெரும்பான்மையான வேலைகள் முடிக்கப்பட்டுவிட்டன. ஒவ்வொரு தென்னையிலும் மிளகு கொடி நடவு செய்ய முடிவு செய்து அதன்படி மிளகு நடவும் நடைபெறுகிறது. 1 1/2 வருடங்களாக உரம் கொடுக்கப்படாதபோதும் தென்னையின் காய்ப்புத்திறன் குறையவில்லை. மரங்கள் பார்ப்பதற்கு ஆரோக்கியமாகவும் பசுமையாகவும் காட்சியளிக்கின்றன. பண்ணையில் எங்கெல்லாம் சூரிய ஒளி படுகிறதோ அங்கெல்லாம் ஒரு மரச்செடி நடப்படுகிறது. இனி நிழலில் வளரக்கூடிய எலுமிச்சை, கறிவேப்பிலை, பாக்கு, திப்பிலி, பட்டை, கிராம்பு, ஜாதிக்காய், சர்வசுகந்தி போன்ற மரக்கன்றுகளும் மூலிகைகளும் நடவு செய்யப்படுகிறது. இப்போது இரண்டாவது செயல்திட்டம் ஒன்றையும் செயல்படுத்தத்தொடங்கியுள்ளனர். இரண்டாவது செயல் திட்டம் பண்ணை உற்பத்தி பொருட்களான காய்கறி, பருப்பு வகைகள், சிறுதானியங்கள், தேங்காய்கள், முந்திரி, தற்போது கிடைக்கும் சிறிதளவு பழங்கள் போன்றவற்றை வியாபாரிக்கு கொடுக்காமல் நேரிடையாக உபயோகிப்பாளர்களிடம் விற்பனை செய்வது ஆகும். இந்த விற்பனையிலும் முதலிடம் பண்ணையில் வேலை செய்யும் நபர்களுக்கு மட்டுமே. மீதி இருந்தால் மட்டுமே வெளி நபர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

பண்ணையின் உற்பத்தி பொருட்களை உபயோகிப்பாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்வதற்கு வசதியாக அவற்றை மதிப்புக்கூட்டும் வேலையும் மிகவும் கவனத்துடன் செயல்படுத்தப்படுகிறது. தேங்காயில் இருந்து கொப்பரை தயாரிக்கப்பட்டு அதில் இருந்து தரமான எண்ணெய் எடுக்கப்படுகிறது. அதற்காக பண்ணைக்குள்ளேயே ஒரு செக்கு அமைக்கப்பட்டுள்ளது. எண்ணெய் தரமானதாக இருப்பதற்காக கொப்பரையை உலரவைக்க பண்ணைக்குள்ளேயே ஒரு சூரிய ஒளி உலர்விப்பான் அமைக்கப்பட்டுள்ளது. 100 மிலி முதல் 1 லி வரை நெகிழி பையிலும், 15 கிலோ தகர டின்னிலும் எண்ணெய் விற்பனை செய்யப்படுகிறது. தேங்காய் புண்ணாக்கும் விற்பனைக்கு தயாராக உள்ளது. இது அருகில் உள்ள கால்நடை வளர்ப்போருக்கு வசதியாக உள்ளது. ஏனென்றால் இதில் கலப்படமில்லை, புதியதாகவும் உள்ளது. இதைபோன்று பிற பொருட்களையும் மதிப்பூட்டி விற்பனைக்கு கொண்டுவர முயற்சி நடைபெறுகிறது.

ஆக மேல்கண்ட செயல்திட்டங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட பண்ணை தற்போது வெளி இடுபொருட்கள் எதையும் சார்ந்து இல்லாமல் செயல்படுகிறது. உற்பத்தி பொருட்கள் மட்டுமே வெளியில் செல்கிறது. ஆக பண்ணையின் தேவையற்ற செலவினங்கள் பெருமளவு குறைக்கப்பட்டு இன்று பயனுடைய பல வேலைகள் நடைபெறுகிறது. இன்று பலவிதமான உற்பத்தி பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதால் பண்ணையில் வேலை செய்பவரின் தேவையும் பூர்த்தி அடைகிறது. அவர்களுக்கு நஞ்சற்ற, விலையும் குறைவான பொருட்கள் கிடைக்கிறது. பண்ணையின் வருவாயும் கூடியுள்ளது. இதுவரை இந்தப்பண்ணையில் கால்நடைகள் இல்லாமல் இருந்தது இன்று சில பசுக்களும் கோழிகளும் உள்ளே கொண்டுவரப்பட்டுள்ளன.

ஆக 1 1/2 வருடங்களுக்கு முன் ஒரே பயிரான தென்னையுடன் இருந்த பண்ணை இன்று பலவிதமான பயிர்களுடன் மூன்று அடுக்கு முறையில் அமைந்து, சுய சார்பு பண்ணையாக வருடாவருடம் வளம் கூடிக்கொண்டே செல்லும் வகையில் முக்கியமாக நம்மாழ்வார் சொல்வது போல உழவாண்மை பண்ணையாகவும் மாறியுள்ளது.

புகுவொகா சொல்வது போல தேவையற்ற வேலைகளை நீக்கி நமது தேவைக்காகவே வேலையை அமைத்துக்கொள்வதே மகிழ்ச்சி தரும் என்பது இந்த பண்ணையை பார்க்கும்போது நமக்கு புரிகிறது.

தபோல்கர் சொல்வது போல தேவையானவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு தேவையற்றவற்றை அங்கேயே திருப்பிப்போடுப்பதால் பூமியின் வளம் குறைவதில்லை என்பதும் இந்தப்பண்ணையின் செயல்பாட்டின் மூலம் நமக்கு தெள்ளத்தெளிவாக புரிகிறது.

- கட்டுரை வடிவாக்கம் - பாபுஜி

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org