தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

மக்களாட்சியில் மக்களின் பொறுப்பு - ராம்


“டிசம்பர் மாதம் 4ஆம் தேதிக்கு, தமிழக சட்டமன்றம் தொடங்கும்”, என்ற அறிவிப்பு சமீப காலத்தில் எந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. வழக்கமாக, “பீதி”, “பதட்டம்”, என்று தினமொரு நிகழ்வினைக் கொண்டு நம்மை மிரட்டும் தொலைக்காட்சிகள் கூட, தமிழக சட்டமன்றம் கூடுவதினால் யாரும் பீதி அடைந்ததாகவோ அல்லது எந்த தமிழகப் பகுதியிலும் பதட்டம் நிலவியதாகவோ செய்திகள் வெளியிடவில்லை. “இன்னும் கொஞ்ச நாளைக்கு எங்கும் செல்லாமல் ஒரே இடத்தில் பல காமெடி செய்திகளாக கிடைக்கும்” என்று நிருபர் ஒருவர் கூறினார்!

சாதாரண மக்களின் வாழ்க்கை எந்த விதத்திலும் அவர்களது பிரதிநிதிகள், இந்த மாநிலத்தின் முக்கிய பிரச்சனைகளை ஆராய்ந்து எதேனும் நல்ல முடிவெடுப்பார்கள் என்று எந்த எதிர்பார்ப்பும் கொண்டுள்ளதாகவே தெரியவில்லை. இன்று கத்திரிக்காய் என்ன விலை? என்பதைவிட அதிக அளவில் யோசிக்காத மக்களை நான் இங்கு குறிக்கவில்லை, அதைத் தாண்டிச் சற்று சமூக அக்கறை கொண்டுள்ளவர்களும் கூட, சட்டசபை கூடுவதில் எந்த எதிர்பார்ப்பும் கொள்ளவில்லை.

இது, கடந்த இரண்டு மாதங்களாக தமிழகத்தில் எந்த விதமான ஆட்சியும் நடைபெறாமல் உள்ள தேக்கநிலைக்கு முன்னரே உள்ள நிலைதான். சலுகைகளை வாரி வழங்குவதையே ஆட்சி செய்வதின் அடையாளமாகக் கொண்டுள்ள நமது முக்கிய கட்சிகள், மென்மேலும் சலுகைகளை ஏற்படுத்துவதைத்தான் தங்கள் ஆட்சியின் குறிக்கோளாகவும், சாதனைகளாகவும் எடுத்துரைக்கின்றனர்.

இந்த சட்டமன்றம் 2011 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து இதுவரை 3 வருடங்களில், 152 நாட்கள் மட்டுமே நடந்ததாக சட்டமன்ற இணைய தளம் தெரிவிக்கின்றது. இந்த அரசாங்கத்தை நடத்தும் மாபெரும் கஷ்டத்தை ஈடுகட்ட ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் மாதம் 55,000 ரூபாய் சம்பளம் பெறுகின்றனர். அதாவது, நமது பிரதிநிதிகளுக்கு (இதர சலுகைகள் சேர்க்காமல்) 56 கோடி ரூபாய்கள் இன்றுவரை சம்பளமாக மட்டும் இந்த சட்டமன்றம் துவங்கியதிலிருந்து அளிக்கப்பட்டுள்ளது. இன்றைய பன்னாட்டு கும்பனிகளில் வாங்கும் சம்பளத்தைவிட இது மிகக் குறைவு என்றாலும், வருடத்தில் 11 விழுக்காடு நாட்கள் மட்டுமே அவர்கள் அலுவல் செய்து நாளொன்றிற்குத் தலா 10,000 ரூபாய் சம்பாதித்துக் கொண்டுள்ளனர். ஏறத்தாழ 2 லட்சம் மக்களின் பிரதிநிதி என்று கொண்டால், தலா ஒவ்வொரு வாக்காளரையும் சட்டமன்றத்தில் அவர்கள் பிரச்சனைகளை கொண்டு சேர்க்கும் வேலை செய்வதற்கு, தலா 1 பைசாவிற்கும் குறைந்த அளவில்தான் அவர்களுக்கு ‘சம்பளமாக’ மக்களாகிய நாம் கொடுக்கின்றோம். இன்றைய விலைவாசியில், நமக்கு இதனைவிட எளிய சம்பளத்தில் வேலை செய்ய யாரேனும் ஒப்புக்கொள்வார்கள் என்பது சாத்தியமாக தெரியவில்லை!. இதர சலுகைகள் மற்றும் வரும்படிகளை நான் இங்கு கணக்கில் சேர்க்கவில்லை. சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வின்படி, தமிழக சட்டமன்ற உறுப்பினரின் சம்பளம் மற்ற தென் மாநிலங்களைவிடவும் அதிகமாக இல்லை (கேரளத்தை தவிர்த்து).

புதிதாக உருவான தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் சம்பளத்தை 2 லட்சத்திற்கு உயர்த்த வேண்டும் என்று விண்ணபித்துள்ளதாக இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.

ஆனால், கொடுக்கும் சம்பளத்திற்கு இவர்கள் என்ன வேலை செய்யவேண்டும்? இவர்களை எப்படி வேலை வாங்க வேண்டும்? அதற்கான குறியீடுகள் என்ன? என்பதெல்லாம் குடிமக்களாகிய நாம் சிந்திப்பதில்லை.

அதனால்தான், நாம் தேர்தலின் பொழுதும் கொஞ்சமும் அக்கறை காட்டுவதே இல்லை. தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் வாக்களிக்கும் விதத்தை மூன்று வகையாக பிரிக்கலாம். - முதலாவதாக போட்டியிடும் வேட்பாளர்களில் “கொஞ்சம்” நல்லவர் என்று யாரை நினைக்கின்றோமோ அவர்களுக்கு வாக்களிக்கின்றோம். - அடுத்தபடியாக கொஞ்சம் வியாபார சிந்தனை கொண்ட நம்மில் சிலர், நமக்குத் தெரிந்தவரை பிரதிநிதியாக அனுப்பி அதன் மூலம் லாபமடைய முற்படுகின்றோம். - இதனைவிட இன்னமும் குறுகிய சிந்தனை கொண்டவர்தான், “இன்றைக்கு யார் தமக்கு காசு அதிகம் கொடுக்கிறார்களோ”, அவர்களுக்கு வாக்களிக்கிறார்கள்.

எப்படியும் காசு சம்பாதிக்கலாம் என்று ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடில்லாமல் பரவலாகிவிட்ட வியாதி, இந்த கடைசி நிலைக்கும் நமது மக்கள் பலரையும் தள்ளிவிட்டுள்ளது நமது அவலநிலை. இதனாலேயே, நாம் தேர்ந்தெடுக்கும் உறுப்பினர் நம் பிரச்சனைகளை சரிவர எடுத்துரைக்க வல்லமை உள்ளவராக இருப்பதில்லை. இன்றைய தமிழக சட்டசபையில் உள்ள உறுப்பினர்களில் 30% பேர், தங்கள் பெயரில் குற்றசாட்டுகள் உள்ளதாக, தேர்தலின்போது ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களில் பெயர்களில் கொலை, கற்பழிப்பு மற்றும் இத்தகைய தீவிரமான குற்றசாட்டுகளும் உள்ளன. மொத்தமுள்ள 234 உறுப்பினர்களில் 120 பேர் தங்களிடம் கோடிக்கணக்கான சொத்துக்கள் உள்ளதை தேர்தலின் பொழுதே ஒப்புக் கொண்டுள்ளனர். விந்தை என்னவென்றால், உறுப்பினர்களில் ஏறத்தாழ 60% பேர், வருமானவரி செலுத்தும் விவரங்களை தங்கள் தேர்தல் வேட்புமனுவில் அளிக்கவில்லை.

நம்மால் தேர்ந்தேடுக்கப்படும் நபர் நேர்மையானவராக இருக்கவேண்டும் என்னும் சிந்தனை நமது மக்கள் மறந்துபோய்விட்ட ஒரு கூறாகவே தோன்றுகிறது. இதனாலேயே நமது தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் கூச்சமில்லாமல் தங்களைப் பற்றிய விளக்கங்களை தேர்தல் சமயத்தில் அளிக்கின்றனர். தன்னுடைய சரியான தகவல்களை தேர்தலிலேயே தராத ஒரு நபரை எப்படி நமது மக்கள் நம்புகின்றனர் என்பது இன்னுமொரு விந்தை. உதாரணமாக, நமது சட்டமன்ற உறுப்பினர்களில் 161 பேர், தாங்கள் தேர்தல் செலவுக்கு வெறும் 8 லட்சம் மற்றும் அதற்கு கீழ் மாத்திரமே செலவு செய்ததாக தெரிவித்துள்ளனர். 58 உறுப்பினர்கள், தாங்கள் எந்தவிதமான ஊர்வலம் அல்லது பொதுக்கூட்டத்திற்கான செலவு செய்யவில்லை என்றே தேர்தல் ஆணயத்திற்கு அளித்த கணக்குகளில் கூறியுள்ளனர். இதனைத் தேர்தல் அதிகாரிகளும், மக்களாகிய நாமும் நம்புகின்றோம்.

மக்களாட்சியில் மக்களின் பொறுப்புதான் என்ன? ” நீ விரும்பும் மாற்றமாக நீ இரு ” என்றார் காந்திஜி. பொது வாழ்வில் தூய்மையையும், நேர்மையையும், சேவையையும் மாற்றமாக விரும்பும் நாம், அது போன்ற வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டாமா? எல்லோரும் இந்நாட்டு மன்னர் தான் - ஐயமில்லை. ஆனால் அதுதான் நம் அவல நிலைக்குக் காரணமோ?

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org