(பகுதி 2 - சென்ற இதழ்த் தொடர்ச்சி)
ஒளிச் சேர்க்கையின் போது தாவரங்கள் (கரியமில வளி எனப்படும்) கரியீருயிரகையை உள்வாங்கிக்கொள்கின்றன. தாவரங்களும் பிற உயிர்களும் மூச்சு விடுகையில் கரியீருயிரகையை வெளிவிடுகின்றன; அது மட்டுமன்றி, ஆலைகள், போக்குவரத்து, வேளாண்மை போன்ற மாந்தச் செயல்பாடுகள் பெரிதளவு கரியீருயிரகையை வெளிவிடுகின்றன. ஒளிச் சேர்க்கையின்போது உள்வாங்கிக்கொள்வது அதிகமாக இருந்தால் மொத்தத்தில் வளி மண்டலத்தில் உள்ள கரியீருயிரகையின் அளவு குறைகிறது. இது வளிமண்டலத்தில் இருந்து கரியத்தைத் தனிமைப்படுத்தி ஒதுக்கிவைக்கிறது. (இவ்வாறு கரியத்தை வளிமண்டலத்தில் இருந்து மண்ணில் ஒதுக்கிவைப்பதன் மூலம் புவிச் சூழல் சூடேறுவது குறைக்கப்படுகிறது.)
வளி மண்டலத்தில் இருந்து உள்வாங்கப்படும் கரியீருயிரகையைப் பயிர்களின் வளர்ச்சிக்குப் பயன்படுத்துதல், அவ்வாறு மண்ணில் சேமிக்கப்படும் கரியத்தை மீண்டும் வளி மண்டலத்திற்கு இழந்துவிடாதிருத்தல் ஆகியவை கரியத்தை ஒதுக்கப் பயன்படும் செயல்கள். இதைச் செய்வதற்குப் பல பாரம்பரிய வேளாண் உத்திகள் உள்ளன.
செயற்கை (வேதி) உரங்களையும் உயிர்க்கொல்லிகளையும் தவிர்த்தல் அவற்றில் ஒன்று. அவற்றைத் தவிர்ப்பதன் மூலம் மண்ணில் உள்ள எண்ணற்ற வகையான உயிரினங்களின் வாழ்வாதாரத்தை நாம் சிதைக்காதிருக்கிறோம்; மனிதச் செயல்பாடுகளால் வெளியாகும் வெடிய உயிரகையின் அளவைப் பெருமளவு குறைக்கிறோம். இவற்றின் மூலம் மண்ணின் வளத்தைப் பெருக்குகிறோம். இதைத் தவிர, “மூடுபயிர்” (மூடாக்குப் பயிர்) வளர்த்தல், தாவரக் கழிவுகளைக் கொண்டு மூடாக்கிடுதல், மட்கு எரு தயாரித்தல், பயிர் சுழற்சி ஆகியனவும் மீட்டுருவாக்க உயிர்ம வேளாண்மையின் கூறுகள். மேலும், “காப்புழவு” (மண்வளம் காக்கும் உழவு) செய்வதன் மூலமும் மண்ணில் கரியத்தை ஒதுக்கவியலும்.
இவை மண்ணில் உள்ள நன்மை செய்யும் உயிரினங்களைக் காப்பதுடன் மண் அரிப்பைத் தடுக்கவும் பயன்படுகின்றன. மண் வளம் மேம்படுவதன் விளைவாகப் பயிர்கள் நோய்த் தாக்குதலில் இருந்து பெருமளவு காக்கப்படுகின்றன. வேதிப் பொருள்களையும் அதிக முதலீட்டையும் சார்ந்திருக்கும் நவீன வேளாண்மைக்கு மாறாக, உழவர்களின் ஆழ்ந்த அறிவையும் இயற்கையையும் சார்ந்திருக்கும் நிலைக்கு வேளாண்மை மீண்டும் மாறுகிறது.
மீட்டுருவாக்க வேளாண்மை என்பது ஒருமுகப்படுத்தப்பட்ட, முழுமையான செயல்முறை; அதன் கூறுகளைத் தனித்தனியாகப் பிரித்துப் பார்ப்பது சரியன்று. எனினும், மண்ணில் கரியத்தை ஒதுக்கிவைக்கும் செயல்முறையைப் புரிந்துகொள்வதற்காக மீட்டுருவாக்கச் செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் குறித்துச் சற்று விளக்கமாக இனிப் பார்க்கலாம்.
மண் வெயிலில் காய்வதைத் தடுத்தல்
வெயிலில் காய்வது மண் வளத்தை பாதிக்கும்; கரியம் மண்ணில் ஒதுக்கப்படுவதையும் குறைக்கும். பயிரிடப்படாத தரிசு நிலத்திலும் அதிகம் உழப்பட்ட நிலத்திலும் காற்று, மழைநீர் ஆகியன வளமான மேல்மண்ணை அரித்துச் சென்றுவிடுகின்றன. அந்த நிலம் வளிமண்டலத்தில் உள்ள கரியத்தை ஈர்த்துத் தக்கவைத்துக்கொள்ளாதது மட்டுமின்றி, ஏற்கெனவே (மண்ணில்) சேர்த்துவைக்கப்பட்டிருந்த கரியத்தையும் கரியீருயிரகையாக வெளியிட்டுவிடும். மேலும், உழுவதால் மைக்கோரைசல் பூஞ்சானங்களின் வளர்ச்சியும் தடைப்படுகிறது.
காப்புழவு
ஒரு பயிரை அறுவடை செய்கையில் நமக்கும் கால்நடைகளுக்கும் பயன்படும் பொருள்களை எடுத்துக்கொண்டு மீதமுள்ள கழிவுகளை
- (அ) தோட்டத்திலேயே விட்டுவிடலாம்,
- (ஆ) அப்புறப்படுத்திவிடலாம், அல்லது
- (இ) எரிக்கலாம்.
இதில் முதலில் குறிப்பிடப்பட்டது தான் சிறந்த வழி.
அடுத்து பயிரிடுவதற்கு முன்னர்,
- (அ) வழக்கமாகச் செய்வது போல நிலம் முழுவதையும் உழலாம், இதில் பதினைந்து விழுக்காட்டுக்கும் குறைவாகத்தான் முந்தைய பயிர்க் கழிவுகள் நிலத்தில் மூடாக்காகப் பயன்படும்.
- (ஆ) அடுத்த பயிரை எந்த வரிசைகளில் நடப்போகிறோமோ அந்த வரிசைகளில் மட்டும் உழலாம், இம்முறையில் முப்பது விழுக்காட்டுக்கும் மேற்பட்ட நிலப் பரப்பு பயிர்க் கழிவுகளால் மூடப்படும். (இது மேல்மண்ணைக் காப்பதால் காப்புழவு எனப்படுகிறது,) அல்லது
- (இ) உழவே செய்யாமல் விடலாம்.
உழவே செய்யாதிருப்பதற்கும் முழு உழவுக்கும் இடையில் பல்வேறு அளவுகளில், வெவ்வேறு வகைகளில் உழலாம். இது மண்ணின் தன்மை, (மழை, காற்று உள்ளிட்ட) சூழல், உழவுக்குப் பயன்படுத்தும் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் ஆகியவற்றைப் பொருத்தது. வழக்கமான முறையில் உழுவதால் மண்ணிலுள்ள நன்மை தரும் மைக்கோரைசல் பூஞ்சானங்களின் வளர்ச்சி தடைப்படுகிறது. அதன் விளைவாகவும் பயிரிடாமல் மண்ணை வெயிலிலும் காற்றிலும் காய விடுவதாலும் மண்ணிலுள்ள கரியம் வளிமண்டலத்தில் சேர்கிறது. உழுவதைக் குறித்துச் சற்று விரிவாகப் பிறிதோர் கட்டுரையில் பார்க்கலாம். மூடுபயிர்கள்
விளைநிலங்களில் சேமிக்கப்படும் கரியத்தில் குறைந்தது பாதி நிலத்தின் மேல் உள்ள பசுந்தாள்களில் உள்ளது. ஆகவே, உயிர் மூடாக்குப் பயிர்களை வளர்ப்பதும் பயிர்க் கழிவுகளை நிலத்திலேயே விட்டுவைப்பதும் கரியத்தை ஒதுக்கிவைப்பதில் முதன்மையான பங்கு வகிக்கின்றன. உயிர் மூடாக்குகளின் நன்மைகள் வருமாறு:
- மண்ணில் கரியத்தின் அளவை அதிகரித்தல்;
- வெடியம் வெளியேறுவதைக் குறைத்தல்;
- காற்றும் நீரும் வளமான மேல்மண்ணை அரிப்பதை மட்டுப்படுத்துதல்;
- புல் பூண்டுகளைக் குறைத்தல்;
- மண்ணை வளப்படுத்துதல்;
- மண்ணுக்குள் நீர் செல்வதற்கு உதவுதல்;
- மண்ணின் ஈரப் பதம் காத்தல்;
- (வேர் முடிச்சுகள் உள்ள மூடுபயிர்களாயின்) காற்றில் உள்ள வெடியத்தை அடுத்து வரும் பயிர்களுக்குக் கிடைக்குமாறு மண்ணில் தக்கவைத்தல்.
மேம்பட்ட பயிர் சுழற்சி
ஓரினப் பயிர் சாகுபடி செய்தல், பின்னர் சிறிது காலத்துக்கு நிலத்தைத் தரிசாக விட்டுவைத்தல், பின்னர் மீண்டும் ஓரினப் பயிர் சாகுபடி என்பதே இப்போது பரவலாகக் கையாளப்படும் வேளாண் முறை. இதற்கு மாறாக, ஊடுபயிர் சாகுபடி (ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பயிர்களை வளர்த்தல்) சாலச் சிறந்தது. இது மண்ணில் கரியத்தின் அளவையும் உயிரிப் பன்மயத்தையும் அதிகரிக்கிறது. ஊடுபயிரிடல் மொத்த விளைச்சலை அதிகரிப்பதுடன் நோய்த் தடுப்புக்கும் உதவுகிறது. எ.கா. நிலக்கடலையை மட்டும் தனியே விதைப்பதைவிட ஆங்காங்கு உளுந்து, தட்டைப் பயறு ஆகியவற்றையும் சேர்த்து விதைத்தால் நிலக்கடலையைத் தாக்கும் சில புழு பூச்சிகள் உளுந்து, தட்டைப் பயறு ஆகியவற்றைத் தம் உணவாக்கிக்கொண்டு நிலக்கடலையைத் தாக்காது விட்டுவிடும். ஊடுபயிர்களில் ஒன்றன் விளைச்சல் அல்லது விலை குறைந்தாலும் வேறொன்றில் அந்த இழப்பைச் சரிக்கட்டுவதற்கு வாய்ப்பு அதிகம். பயிர்க் கழிவுகளைத் தோட்டத்திலேயே விட்டுவைப்பதும் கரியத்தை மண்ணில் தக்கவைப்பதற்கு உதவுகிறது.
இயற்கை எரு இடுதல்
வெடியம் உள்ள செயற்கை (வேதி) உரங்களைப் பயன்படுத்துவதால் வெடிய உயிரகை வெளியாகிறது; மேலும், நுண்ணுயிர்கள் கரியீருயிரகையை வெளிப்படுத்துவதும் அதிகரிக்கிறது. எரிப்பொறைய உரங்கள் வேர் முடிச்சுகளில் பயிர்களுக்கு நலந்தரும் பூஞ்சானங்களின் வளர்ச்சியை மட்டுப்படுத்துகின்றன; அதன் விளைவாகக் காலப்போக்கில் மண்ணில் கரியம் சேமிக்கப்படுவது குறைகிறது.
மட்கு எரு
மட்கு எரு மண்ணின் உயிரிப் பன்மயத்தை, குறிப்பாக நுண்ணுயிர்களின் அளவை, அதிகரிக்கிறது. அதனால் சத்துகள் மறுசுழற்சி செய்யப்படுதல். நோய்க் கட்டுப்பாடு, மண் வளம் அதிகரித்தல் ஆகிய பலன்கள் கிடைக்கின்றன. இதன் விளைவாகத் தண்ணீர் மற்றும் உரத் தேவைகள் குறைவதுடன் விளைச்சலும் அதிகரிக்கிறது. மட்கு எரு இட்டு அடுத்த முறை பயிர் செய்தவுடன் அதன் பலன்களைப் பெறலாம். மண்ணில் அதிக அளவில் கரியத்தைத் தக்கவைப்பதற்கும் மட்கு எரு நன்கு பயன்படுவதை ஆய்வுகள் நிறுவியுள்ளன. அதிலும், மணற்பாங்கான நிலத்தைக் காட்டிலும் களிமண் நிலத்தில் கரியம் நெடுங்காலத்துக்குத் தக்கவைக்கப்படுகிறது. மண்ணின் தன்மையும் சூழலும் இடத்துக்கு இடம் வேறுபடுவதால் இத்தகைய ஆய்வுகள் மிகச் சிக்கலானவை என்பது தெளிவு.
விளைச்சல்
உயிர்ம வேளாண்மை உள்ளிட்ட மீட்டுருவாக்க வேளாண் முறைகளுக்கு மாறினால் விளைச்சல் குறைந்துவிடும் என்பது பரவலான நம்பிக்கை. செயற்கை வேளாண் முறைகளைப் பின்பற்றி இடுபொருள்களை மட்டும் மாற்றிச் செய்கையில் பல சமயங்களில் ஒட்டுமொத்தச் சராசரி விளைச்சல் சற்று குறைவதாகத்தான் பல ஆய்வறிக்கைகள் காட்டியுள்ளன. ஆனால், மக்காச்சோளம், கோதுமை, நெல், சோயா, சூரியகாந்தி உள்ளிட்ட உணவுப் பயிர்களைப் பொருத்தவரை உயிர்ம வேளாண்மையில் விளைச்சல் வேதி வேளாண்மையைக் காட்டிலும் அதிகமாக இருப்பதாக நிறுவப்பட்டுள்ளது. இதில் நாம் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது என்னவெனில், சூழல் மாற்றங்கள் காரணமாகப் பருவ நிலை வேறுபாடுகள் வழக்கத்தைக் காட்டிலும் அதிகரிக்கையில் உயிர்ம வேளாண் முறைமைகள்தாம் வறட்சி உள்ளிட்ட அத்தகைய மாற்றங்களைத் தாங்குகின்றன. அந்நிலையில், மக்காச்சோளம் விளைச்சல் வேதி வேளாண்மையைக் காட்டிலும் 28 முதல் 34 விழுக்காடு அதிகரித்ததாக ஆய்வுகள் நிறுவியுள்ளன [1].