தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

அடிசில் தீர்வு - அனந்து


[இதுவரை பாதுகாப்பற்ற உணவுகளைப் பற்றித் தன் “அடிசில் பார்வை” தொடரில் விழிப்புணர்வு ஏற்படுத்திய அனந்து, இனி வரும் இதழ்களில் “அடிசில் தீர்வு” என்ற பெயரில் பாதுகாப்பான உணவை எப்படி நாம் கைக்கொள்வது, நம் சமையல் அறையை எப்படி நச்சற்ற நல்லறையாக்குவது என்று எழுதுவார். தற்சார்பு வாழ்வியலுக்கு நல்லுணவு என்பது இன்றியமையாதது ]

உணவு- நல்லுணவு, நஞ்சில்லா உணவு இவற்றை எப்படி அறிவது?

நமது நல்வாழ்விற்கும், வாழ்வாதாரத்திற்கும் அதி முக்கியமான உணவை நாம் எப்படி நஞ்சால் நிரப்பினோம். இன்று இவ்வளவு வியாதிகளில் உழன்று பல இன்னல்களை அனுபவிக்கிறோம். இன்றைய உணவு தயாரிப்பிலிருந்து, பதப்படுத்துதல் (processing), மற்றும் கொள்ளிருப்பு (shelf life) அதிகரிக்கும் பொதிவு (packing) என்று ஒவ்வொரு படியிலும் விஷம் கலக்கப்படுகிறது. பல நேரங்களில் நாம் அறியாமலும் நமக்கு தெரியாமலும் (தெரிவிக்கப்படாமலும்) கலக்கப்படுகிறது.

அப்படியானால் பாதுகாப்பான உணவு என்பது எப்படி கிடைக்கும்? நாம் , நமது அரசுகளின் 'உணவு பாதுகாப்பு' வாரியங்கள் போல, 'துப்புரவு' என்னும் குழிக்குள் விழ வேண்டுமா? துப்புரவு என்ற பெயரில் கைகள் படாத பிளாஸ்டிக்கில் சுற்றி பேக் செய்யப்பட்ட உணவு வகைகள் தான் பாதுகாப்பானவை என்று கண் மூடி கிடப்பதா? இப்படி அரசு வந்து 'பாதுகாப்பினை' கொடுக்க இயலுமா என்றால், அரசுக்கு பெரு வியாபாரிகளின் அழுத்தம் இல்லாமலிருந்தால் ஓரளவிற்கு சாத்தியம், இல்லை என்றால் பாட்டிலில் கொடு, ப்ளாஸ்டிக்கில் கொடு, லேபில் பரிசோதனை செய், என்று கூறி, சிறு கடைகளுக்கும் பாரம்பரிய உணவுகளுக்கும் கடினமான விதிகளை கொணர்ந்து மேலும் குழப்புவர். அதில் கலக்கப்படும் நஞ்சுகளை மறைத்து, மறந்து விடுவர்.

ஆகையால் நம் கைகளில் தான் பாதுகாப்பான உணவு உள்ளது. இப்பொறுப்பை நம் கையில் எடுத்துக்கொள்வது தான் சிறந்தது. அதற்குச் சரியான புரிதல் வேண்டும்.

தயாரிப்பு

உணவு உற்பத்தி என்பது சோதனைக்கூடங்களிலும் உயர் தொழிற்சாலைகளிலும் நிகழ்வது அல்ல; நமது விவசாயிகளின் நிலங்களில்தான் என்பதை நாம் எல்லோரும் அறிய வேண்டும். அந்த உற்பத்தி நஞ்சில்லாமல் இருப்பது அவசியம். உழவர்கள் முதலில் தங்களுக்கு நஞ்சில்லா உணவு தயாரிக்கவும், தங்கள் தேவையைத் தாங்களே பூர்த்தி செய்யவும் வேண்டும். உழவர்களாகிய நாம் சந்தைக்குச் செல்வதினால் நமது தற்சார்பை மட்டும் இழக்கவில்லை, நமது ஆரோக்கியத்தையும் இழந்தோம். இயந்திர தினங்களுக்கு பின் வந்த இந்த மட்டற்ற பொருள் ஈட்டும் (திறந்த) சந்தை எப்பொழுதும் சுரண்டலுக்காக மட்டுமே இருக்கும். ஆதலால் உழவர்கள் சந்தைக்காக உற்பத்தி செய்தவை நல்ல பொருளாதாரத்தை ஈட்டாது, பாதுகாப்பானதாகவும் இருக்காது, நஞ்சற்றதாகவும் இராது.

ஆதலால், நஞ்சில்லா உணவினை, இயற்கையாய் உற்பத்தி செய்து, நம் நுகர்ச்சிக்கு எஞ்சியதை மட்டுமே (அண்மையில்) சந்தைப்படுத்தி நல்வாழ்வு வாழலாம். சந்தைக்கும் - முடிந்தவரை அண்மைச் சந்தையாகவும் - நமக்கு அறிந்த வரையில் இருப்பது நலம்.

அப்படியானால் தொலைவில், நகரங்களில் உள்ள நுகர்வோர் என்ன ஆவர்?

நுகர்வோர் முதலில் உணவு என்பது என்ன? எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது? என உற்றுப் பார்க்க வேண்டும்.

கொடிய நஞ்சுகள் தெளித்து உற்பத்தி செய்யப்பட்டவை, மரபீனி மாற்றப்பட்ட விதைகளால் ஆனவை, பதப்படுத்துதல் என்ற பெயரிலும், மேம்படுத்துதல் என்ற பெயரிலும் பல கொடிய ரசாயனப் பொருட்கள் கலக்கப்பட்டவை போன்ற பொருள்களைத் தவிர்க்க வேண்டும்.

முதலில் எப்படிப்பட்ட கொடிய நஞ்சுகள் கலக்கப்படுகின்றன என்று அறிந்து பின் அவற்றைத் தவிர்க்க வேண்டும். நல்ல இயற்கை உணவினைத் தயாரித்து அல்லது கொள்முதல் செய்து விற்கும் கடைகளாய்ப் பார்த்து வாங்க வேண்டும்.

எப்படி நல்ல சரியான இயற்கை அங்காடிகளைக் கண்டறிவது?

எந்தக் கடையில் ஒவ்வொரு பொருளுக்கும் பின்னால் உள்ள விவசாயியை குறிப்பிடுகிறார்களோ, எங்கு அவர்களுக்கு என்ன (நியாய) விலை கொடுக்கிறோம் என்பதை தெரிவிக்கிறார்களோ, எங்கு ஒளிவு மறைவு இல்லாமல் இருக்கிறதோ அங்கு மட்டுமே வாங்க வேண்டும். பெரும் வியாபாரமாகவும், பல கைகள் மாறி பல்வேறு பெயர்களில் (labels) கொள்ளை லாபம் மட்டுமே குறியாக விற்பனை செய்யப்படுகிறதோ அவற்றை மறுக்க வேண்டும். எண்ணெய் என்றால் ரீஃபைன்டு அல்லாத செக்கிலே ஆட்டிய முழுமையான சத்துள்ள எண்ணெய், மாவுகள் எனில் அவ்வப்பொழுது அரைத்தது, சிறுதானியங்கள் மற்றும் அரிசி எனில் முழுவதும் தீட்டப்படாதவையாக சத்து கூடியதாக, விற்கும் இடங்களாக இருத்தல் அவசியம். பல்வேறு சாறுகளை (அவை இயற்கை பழம் மற்றும் நலன் பயக்கும் மூலிகைகளாக இருப்பினும்) பிளாஸ்டிக் குப்பிகளில் பல வகை ரசாயனங்களுடன் அடைத்து அவற்றை விற்பவர்களை முழுமையாகத் தவிர்க்க வேண்டும்.

முடிந்த வரை சிறு அங்காடிகளில் , முக்கியமாக தீவிர நம்பிக்கையுடனும் நேர்மையாகவும் இயங்கும் உரிமையாளர்களின் கடைகளில், மட்டுமே வாங்க வேண்டும். இவை அண்மையில் இருத்தல் முக்கியம்.

நுகர்விற்கு இவ்வளவெல்லாம் பாடுபட‌ வேண்டுமா? - வேண்டாம். நாமே கூட விளைவிக்கலாம்! “என்ன? நாமே விளைவிப்பதா? இது நடக்கிற காரியமா” என்று கூவுகிறதா மனம்? எவ்வளவு நபர்கள் விளைவித்து எவ்வளவு உணவு உட்கொள்ள முடியும் என்று மலைக்கிறதா மனம்?

வரலாற்றைக் கொஞ்சம் பின்னோக்கிப் பார்ப்போமா?

நாடு: க்யூபா ; வருடம்: 1989!

ஓரிரவு, ருசிய நாடு வீழ்ந்தது! அன்று முதல் (அடுத்த நாள் விழிக்கும் பொழுது) க்யூபாவில் பெட்ரோல், டீசல், யூரியா, உரம் முதலிய ரசயான பொருட்கள் கிடைக்காது. கிடையாது! ட்ராக்டர் ஓட்ட முடியாது. உரம், பூச்சிக்கொல்லிகள் தெளிக்க முடியாது. என்ன செய்வது? உண்ண உணவு வேண்டாமா?

இந்த இக்கட்டான சூழலில், கட்டாயத்தின் பேரில் இயற்கையாக மட்டுமே விளைவிக்கத் தொடங்கினர். கரும்பும் புகையிலையும் மட்டுமே பணப்பயிர்களாக விளைத்து வந்த கியூபா, விரைவில் உணவில் தன்னிறைவு எய்தது.இன்றளவும் க்யூபா ஆரோக்கியம் மற்றும் உடல்நலப்பாதுகாப்பில் முதன்மையான‌ நாடாக உள்ளது.

அன்று, அச்சிக்கலிலிருந்து அவர்கள் தப்பிக்க உதவியது மாடித்தோட்டம். அவரவர் இருந்த இடங்களில் எல்லாம் (பள்ளித் திடல்கள், பூங்காக்கள், வீட்டின் மாடிகள்) தோட்டங்கள் அமைத்தனர். இதனால் 70% காய்கறிகள் மற்றும் பழங்களின் தேவையை நகரங்களிலயே நிறைவு செய்தனர்.

நாமும் நமது மாடிகளில், பின் தோட்டங்களில் விளைவித்து பாதுகாப்பான உணவினை உட்கொள்ளமுடியும். அது எப்படி என்றும், முடியுமா என்று மலைக்காமல், நாம் நமது முன்னோர் கண்டு வென்ற வழிகளில் எளிதாக விளைவிக்க முடியும். ஒரு நாடே அப்படி வாழ்ந்தது என்று பார்த்தோமல்லவா, அதே போல் நாமும் விளைவிக்க முடியும். ஒரு முழு குடும்பத்துக்கும் தேவையான கீரை வகைகள், காய் கறிகள், சில பழ வகைகள் எல்லாம் எளிதாக விளைவிக்க முடியும். வினோபா முதல் மொரார்ஜி வரை இதனையே கூறி வந்தனர். இன்று பலரும் இதனைக் கடைப்பிடித்துத் தம் தேவை போக சந்தைப்படுத்தியும் பெருமளவு வெற்றி கண்டுள்ளனர். பஞ்சாபில் அமன் ஜோத் கவுர், வார்தாவில் விபா குப்தா போன்றோர் பல நூறு பெண்களை குழுக்களாக்கி வீட்டிற்கு சத்தான இயற்கை உணவினை விளைவிப்பதுடனல்லாமல், மிகுதியை சந்தைப்படுத்தி அவர்களுக்கு பொருளாதார வெற்றியும் காண வழிவகுத்துள்ளனர். இவற்றைப்பற்றி விரிவாக வரும் இதழ்களில் பார்க்கலாம்.

மேலும் குப்பிகளில் அடைக்கப்பட்டு கண்ட, கேட்ட, கேட்காத ரசாயனங்களையெல்லாம் சேர்த்து அவற்றை சேர்த்திருப்பதை மறைத்து, அதனால் விளையக்கூடிய கொடிய விளைவுகளை மறைத்து/மறுத்து இருக்கும் மிக அதிக புழக்கத்தில் இருக்கும் பல்வேறு பொருட்களையும் அடுத்த இதழில் பார்ப்போம்

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org