தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

சலிக்காமல் பல்லுயிரைப் பேணுவதே பண்பாம்!


கண்களுக்கு இனிதாகக் கான்வீட்டீல் இருந்தே
கதவொன்றைத் திறந்துவிட்டால் காட்டுமொரு விருந்தே
எண்ணித்தான் பார்த்துவிட்டோம் எதற்காக வந்தே
எந்நாளும் புள்ளிணைதான் இங்குலவு தென்றே
கண்டுவிட்டோம் இறுதியிலே கனிந்தவொரு காட்சி
கதவருகில் பலகணியில் கூடுகட்டும் மாட்சி
வெண்தொண்டைச் சில்லையதோ என்றெண்ணி நின்றோம்
வெகுநன்றாய் விளங்கபல ஏடுபுரட்டு கின்றோம்

புல்விதையும் பூச்சிகளும் பொறுக்கியுண்ணும் அதுவாம்
பொறுப்பாகக் கூடுகட்டும் வேலையெலாம் பொதுவாம்
மெல்லியதோர் ஒலிகேட்பின் விரைந்தோடும் எழுந்தே
மிரளுவதேன் குடியேறிப் பலநாள்கள் கழிந்தே
புல்பலவும் பொறுக்கிவந்து புதுக்கூடு கட்டும்
புள்ளிரண்டும் சேர்ந்தொன்றாய்ப் பலகணியை எட்டும்
பலநாளாய்ப் பழகிவரப் பறந்ததின்று அச்சம்
பார்த்தவுடன் அஞ்சியினிப் பறப்பதுவும் மிச்சம்

பயிர்தாக்கும் பூச்சிகளைப் பிடித்துதவும் தோழர்
பாழாக்கும் புல்விதைகள் களைந்துதவும் உழவர்
உயிரான பறவைகளும் உலவிவரக் காட்டில்
உலைவைக்கும் வேதிகளை ஒழித்திடலாம் நாட்டில்
உயிர்மழையால் உவந்துலவும் உயிரினங்கள் எங்கும்
ஒருசுழற்சி முறையினிலே உண்பொருளைப் பங்கும்
தயங்காமல் இடங்கொடுத்தால் தக்கபயன் உண்டாம்
சலிக்காமல் பல்லுயிரைப் பேணுவதே பண்பாம்!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org