தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வாசகர் குரல்

வணக்கம். தாளாண்மை போன்ற ஒரு இயற்கை வேளாண் இதழ் பறவைகள் சார்ந்து ஆர்வம் கொள்வதில் உண்மையாகவே நானும் மகிழ்கிறேன். அதேநேரம் நாம் எதைச் சொன்னாலும் அது அறிவியல்பூர்வமாகவும், துல்லியமாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக, நம்மைப் போன்று மாற்றுச் சிந்தனையை முன்வைப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.

குறிப்பிட்ட அந்தப் பறவை குறித்து தாளாண்மையில் வெளி வந்துள்ள தகவல்கள் பெருமளவு சரியாக உள்ளன. மஞ்சள்மூக்கு நாரை நம் நாட்டுப் பறவை என்பது உட்பட. அதேநேரம், White stork பறவைக்கு செங்கால் நாரை என்ற பெயர் சங்ககாலத்திலேயே சூட்டப்பட்டுவிட்டது. 2,000 ஆண்டுகளுக்கு முன்பு. அதற்கான ஆதாரங்கள் தெளிவாக இருக்கின்றன. அதனால், அதற்கு புதிதாக வெள்ளை நாரை என்றொரு மொழிபெயர்ப்புப் பேரை சூட்ட வேண்டாமே என்பதுதான் என் கோரிக்கை.

அத்துடன் பறவைகள் குறிப்பிட்ட காலத்தில் நாடு விட்டு நாடு இரை தேடி வருவதை, வலசை (Migration) என்ற பெயரால் சுட்டுகிறோம். இப்படி வரும் பறவைகளுக்கு விருந்தாளிப் பறவை, வரத்துப் பறவை என்று அழைக்கப்படுகின்றன.

நம்மைப் போன்றவர்கள் மொழி சார்ந்து கூடுதல் கவனத்துடன் செயல்படுவது அவசியம் என்பது என் கருத்து. மற்றபடி உங்கள் பணி சிறப்பானது.

செங்கால் நாரை என்ற பெயரை ஏன் பயன்படுத்துகிறோம் என்பதற்கு மூத்த காட்டுயிர் எழுத்தாளர்கள் சு.தியடோர் பாஸ்கரன், மா.கிருஷ்ணன் இருவரும் கொடுத்த குறிப்புகளை உங்கள் பார்வைக்காக கீழே தந்திருக்கிறேன்.

1. ஆயிரத்திஐநூறு ஆண்டுகளுக்கு முன் கும்பகோணதிற்கருகேயுள்ள சத்திமுத்தம் என்ற கிராமத்தில் வாழ்ந்த கவி ஒருவர் மதுரைக்குப் பயணித்திருந்தபோது அங்கு வலசை போகும் செங்கால் நாரை ஜதை ஒன்றைக் கவனித்திருக்கின்றார். சத்திமுத்தப் புலவர் எழுதியதாகக் கூறப்படும் கவிதை இந்த நாரையை வர்ணித்து, தூது போகும்படி கேட்டுக் கொள்கின்றது.

நாராய்…நாராய்…செங்கால் நாராய் பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக்கூர்வாய் செங்கால் நாராய்

2. நாராய்! நாராய்! செங்கால் நாராய்! என்ற நாரை விடுதூது எல்லோருக்கும் தெரியும். இதன் பறவையியல் விஞ்ஞானப் பெயர்: Ciconia ciconia (http://en.wikipedia.org/wiki/White_stork) ஏன் செங்கால் நாரை Painted Stork இல்லை என்றும் எழுதியவர் மா. கிருஷ்ணன் (தமிழ் எழுத்தாளர் அ. மாதவையா அவர்களின் கடைசி மகன்). முதன் முதலாக, செங்கால் நாரை விடுதூது பாட்டை அழகான ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரும் அவரே.

”சத்திமுத்தப் புலவரின் புகழ்பெற்ற ‘நாராய் . . . நாராய்’ பாடலில் குறிப்பிடப்படும் பறவை செங்கால் நாரையா (White Stork) அல்லது சங்குவளை நாரையா (Painted Stork) என்ற கேள்வியை ஆசிரியர் எழுப்பியுள்ளார். ஐம்பதுகளில் Esquire என்ற ஆங்கில மாத இதழில் இந்தப் பாடல் பற்றிய ஒரு கட்டுரையை மா.கிருஷ்ணன் எழுதினார். வலசை போகும் ஒரு பறவையினத்தை எப்படித் துல்லியமாகக் கவிஞர் வர்ணிக்கிறார் என்று வியந்து எழுதினார். இந்த நாரையின் முக்கியமான அடையாளங்கள் சிவப்பு நிறக்கால்கள், பவள நிறம் கொண்ட, பனங்கிழங்கின் உட்பாகம் போன்ற அலகு, அலகின் நிறம் பவளம். இது செங்கால் நாரை என்பதில் என்ன சந்தேகம்? கிருஷ்ணனின் மொழி பெயர்ப்பு With coral-red beak, sharp tapered/ Like the split tuber of the sprouting palmyra என்கிறது.”

ஆதி வள்ளியப்பன் 7401329452

(திரு வள்ளியப்பன் அவர்களின் மிகநேர்த்தியான விமர்சனத்திற்கு நன்றி. சகி அவர்களின் பதிலை அடுத்த இதழில் வெளியிடுகிறோம். -ஆசிரியர்)

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org