தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தலையங்கம்


முதல் எனும் நோய் நாடும் மருத்துவர்கள்

எந்நாளும் அழியாத மகாகவிதை எழுதிய பாரதி, 'பார்க்கும் மர‌ங்களெல்லாம் நந்தலாலா, நின்றன் பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா' என்று மிகவும் உருகிப் பாடினான். அந்நாளில் பார்க்கும் இடமெல்லாம் பச்சையாய் இருந்தது; இன்று பச்சையைப் பார்ப்பதற்கு இடம்பெயர வேண்டியிருக்கிறது. இயற்கை விவசாயியும், பிரபல எழுத்தாளரும், சிந்தனையாளரும் ஆன வெண்டல் பெர்ரி, “மேம்படுத்துதல் என்ற பெயரில் நாம் இயற்கையை அழித்துக் கொண்டே இருக்கிறோம். உணவு என்பது இயற்கையால் உற்பத்தி செய்யப்படுவது; எவ்வளவுதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் மனிதனால் உணவை உருவாக்க இயலாது” என்றுள்ளார். உணவுப் பற்றாக்குறை, பருவ மாற்றம், புவி வெப்பமாதல் என்றெல்லாம் நம்மை அச்சுறுத்திப் பன்னாட்டு நிறுவனங்களின் வியாபாரத் தொழில்நுட்பங்களைத் திணிக்கும் அரசு, இயற்கை அழிவு என்பதைப் பற்றி ஏன் கவலைப் படுவதில்லை? எல்லாம் வல்ல விஞ்ஞானத்தால் உணவையும், மழையையும், மேல்மண்ணையும், மக்கையும் உருவாக்க இயலுமா?

ஊழலின் உப்பக்கம் கண்ட காங்கிரஸ் அரசு, மன்மோகன், சிதம்பரம் தலைமையில் மேம்படுத்துதல் என்ற போர்வையில் எண்ணற்ற இயற்கை வளங்களை அழித்தது. இமயம் முதல் குமரி வரை எல்லா வளங்களும் வாணிப நிறுவனங்களுக்கு அடமானம் வைக்கப் பட்டன‌. உலகிலேயே சிறந்த 10 உயிரிப்பன்மைய மையங்களில் ஒன்றான மேற்குத் தொடர்ச்சி மலையின் நிலை என்ன ? பாலைவனத்தில் ஒரு சிறு சோலைபோல, ஜெயந்தி நடராஜன் தலைமையில் இருந்த சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், திரு. மாதவராவ் காட்கில் தலைமையில் “மேற்குத் தொடர்ச்சி மலை சூழல் நிபுணர் குழு”வை அமைத்து மேற்குத் தொடர்ச்சி மலையை ஆராயச் சொன்னது. மிக நுட்பமான ஆய்வுக்குப் பின் மேற்குத் தொடர்ச்சி மலையில் எந்த வளம் சுரண்டும் 'வளர்ச்சிப் பணி'களும் தகாது என்ற அக்குழுவின் பரிந்துரையை அரசு ஏற்றுக்கொண்டது! உடனே ஒரே நாளில் அதன் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் மாற்றப் பட்டு அவர் பதவியில் ஊழலின் ஜாம்பவான் வீரப்ப மொய்லி அமர்த்தப் பட்டார்.

சரி காங்கிரஸ்தான் கப்பலேறிப் போயாச்சே இனி இந்தியாவின் புதிய முதல்வர் மோடி, தூய்மையான இந்தியாவை உருவாக்குவார் என்றல்லவா நம்பினோம்; அவர் என்ன செய்துள்ளார் ? மகாராட்டிரத்தின் மாநிலத் தேர்தலுக்கு முன் “அந்நிய முதலீட்டாளர்களுக்கு வரி விதிப்பில் எல்லாச் சலுகைகளும் எங்கள் அரசு செய்து தரும்” என்று 6000 கோடி சிறப்புப் பொருளாதார மண்டலம் ஒன்றிற்கு அடிக்கல் நாட்டுகையில் கூறினார். மேற்குத் தொடர்ச்சி மலையில் டாக்டர். காட்கிலின் அறிக்கையை அமல்படுத்துவது பற்றி மராட்டிய முதல்வர் ஐயம் எழுப்பியதும், ” பல பழைய நோய்கள் புது மருத்துவர் வந்ததும் சரியாகி விடும்” என்று கூறினார். மோடிக்கு சூழல் பாதுகாப்பில் எந்த அக்கறையும் இல்லை என்பது பா.ஜ.க அரசு பதவிக்கு வந்த ஒரே மாதத்தில் சூழல்-வனத்துறை அமச்சகம் 175 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்ததில் இருந்தே தெளிவாகிறது. தேசிய வனவிலங்குகள் ஆணையம் இரண்டே நாட்களில் 160 திட்டங்களில் 133 க்கு அனுமதி அளித்தது. சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தார் மாவட்டத்தில் 70% பேர் பழங்குடியினர். இங்கு 30000 மத்திய ரிசர்வ் போலீஸ் செலுத்தப்பட்டு தெற்கு ஆசியாவிலேயெ மிக அதிக காவலர்கள் நிறுத்தப்பட்டிருக்கும் மாவட்டம் என்ற “பெருமையை” பஸ்தார் பெற்றுள்ளது - ஏனெனில் அங்குள்ள வன வளங்களைப் பெரும் நிறுவனங்கள் சுரண்டுவதைப் பழங்குடியினர் கேள்வி கேட்பதால்!

நல்ல மருத்துவரைப் பற்றி வள்ளுவர்

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் என்கிறார். நம் புதிய மருத்துவரோ அந்நிய முதல் என்னும் நோயை நாடிப் பசுமையை, வளங்களை அழிக்கிறார். மருத்துவர் புதிதானாலும் நோய் அதேதான்!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org