தேனீக்கு ஏங்குமா பூக்கள்? - பாபுஜி


1990 ஆம் ஆண்டுகளில் உலகம் முழுவதும் நியோநிகோடினாய்ட் என்கிற வகையை சேர்ந்த பூச்சிக்கொல்லிகள் பன்னாட்டு நிறுவனங்களான மொன்சொண்டோ, பேயர் போன்றவைகளால் விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.

விதைகளை இந்த பூச்சிக்கொல்லிகளில் நனைத்து விதைத்தால் பூச்சி தாக்குதல் பெருமளவு குறைந்துவிடும் (கடுகு விதைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டாலும் பல்வேறு தானியங்களின் விதிகளுக்கும் பொருந்தும்) என உலகம் முழுவதும் உள்ள விவசாயிகள் நம்பவைக்கப்பட்டனர் இந்த நிறுவனங்களால்.

ஏறத்தாழ 25 ஆண்டுகள் ஆகியும் இவற்றின் சுயரூபம் ஒரு புதிர் மெல்ல மெல்ல கட்டவிழ்வது போல தம் கோரமுகத்தின் பல பரிமாணங்களை இப்போதுதான் வெளிப்படுத்தத்தொடங்கியுள்ளது. இந்த நியோநிகோடினாய்ட்பற்றிய புரிதல் எவ்வளவு அவசரமான ஒன்று என்பதை இந்தக்கட்டுரையை படிக்கும்பொழுதே படிப்படியாக உணரத்தொடங்குவீர்கள்.

இந்த பூச்சிக்கொல்லி வெறும் பூச்சிக்கொல்லி மட்டுமல்ல இது ஒரு உயிர்க்கொல்லியும்கூட என்பதை அறியாத அப்பாவி விவசாயிகள் செய்ததெல்லாம் தம் தானிய விதைகளை இந்த வேதிக்கரைசலில் முக்கி எடுத்து விதைத்தது மட்டுமே. 25 ஆண்டுகள் கழித்து அவற்றின் பாதிப்புகளாக இது வரை கண்டறியப்பட்டிருப்பவற்றில் சில புள்ளிகளை மட்டும் இங்கே காண்போம்.

2008 - இந்தியா - குஜராத்தின் கட்ச் பகுதி தேனுக்கு பெயர்பெற்ற ஒன்று. ஆண்டு ஒன்றுக்கு 300 டன் அளவில் உற்பத்தியாகிக்கொண்டிருந்த தேன் 2010 ஆம் ஆண்டில் 50 டன்னாக குறைந்தது. கிழக்கு இந்திய பகுதியில் கிடைக்கும் மிகவும் புகழ்பெற்ற மாம்பூ தேன் சுத்தமாக நின்றே போயிற்று. நம்மால் முடிந்தவரையில் (அரசு உதவியின்றியே) இதற்கான காரணங்களைத் தேடுகையில் கண்டறிந்தது என்னவென்றால் தேனீக்களின் எண்ணிக்கை இந்த பகுதிகளில் மிகவும் குறைந்து போனது என்பதே. ( அமெரிக்க ஹார்வார்ட் பல்கலைக்கழத்தினால் நிதியுதவி செய்யப்பட்டு பேராசிரியர் சென்ஷெங் லு, கென்னெத் M வார்ச்சொல் மற்றும் ரிச்சர்ட் A கல்லஹான் ஆகியவர்களால் Bulletin of Insectology என்கிற அறிவியல் பத்திரிகையில் ஜூன் 2012 இல் பதிப்பிக்கப்பட்ட கட்டுரையிலிருந்தும், ஊடக செய்திகளிலிருந்தும் கண்டறியப்பட்டது. கட்டுரையை இந்த உரலியில் படிக்கலாம் http://beekeepingtimes.com/index.php/research-&-tech/70/424-imidacloprid-widely-used-in-india-found-to-cause-honey-bee-colony-collapse )

2013 - இங்கிலாந்து - கென்னெட் ஆறு - (இங்கிலாந்தில் மட்டுமே இருக்கும் உலகின் பழமையான chalk streams என்று அழைக்கப்படும் பனிப்பாறை நீரூற்றுகளில் இருந்து உண்டான ஆறு, மிகவும் பாதுகாக்கப்படும் ஒன்று) - இதன் கரைகளில் உள்ள ஒரு வீட்டில் ஒரு விவசாயி தனது கழிவு நீர் தொட்டியில் 2 தேக்கரண்டி மட்டுமே அளவுள்ள chloropyrifos என்கிற நியோநிகோடினாய்ட் வகையை சேர்ந்த உயிர்க்கொல்லியை கொட்டுகிறார் (அவர் யார்,ஏன் இப்படி செய்தார் என்பது தெரியவில்லை). அந்த உயிர்க்கொல்லி அந்த ஊரின் கழிவு நீர் வெளியற்றப்பாதையில் இணைந்து கென்னெட் ஆற்றில் சென்று சேர்கிறது. விளைவு? அந்த ஆற்றில் 15 மைல் நீளத்திற்கு வாழ்ந்துவந்த invertebrate என்று சொல்லப்படுகின்ற அனைத்து முதுகெலும்பற்ற உயிரினங்களும் அழிந்தே போயின!. அந்த ஆற்றில் மீன்பிடிக்கும் உரிமையை பெற்றிருக்கும் ஒரு அமைச்சர் chloropyrifos பயன்பாட்டிற்கு எதிரான தம் குமுறலை அரசிடம் பதிவு செய்கிறார். அவரது குமுறல் இந்த குறிப்பிட்ட உயிர்க்கொல்லி மீது மட்டுமே, முழு நியோநிகோடினாய்ட் வகை உயிர்க்கொல்லிகள் மீதல்ல.

2014 - அமெரிக்க தேனீ வளர்ப்போர் குழுமங்கள் நாட்டின் 50 சதத்தை விளைநிலமாக கொண்ட தம் நாட்டில் வெகு வேகமாக குறைந்து வரும் தேனீக்கள் தொகையை வருத்தத்தோடும் வலுவோடும் அரசு அமைப்புகளுக்கு எடுத்துச்சென்றனர். அவர்களுக்கு ஆதாரமாக இருந்தது FDA என்று சொல்லப்படுகின்ற அமெரிக்க ஐக்கிய மருந்துப்பொருட்கள் துறையில் உள்ள ஒரு அறிவியல் ஆய்வாளரின் அறிக்கை மற்றும் ஊடக பேட்டிகள். இந்த ஆய்வாளர் தமது கண்டுபிடிப்புகளை, அதாவது நியோநிகோடினாய்ட் வகையை சார்ந்த உயிர்க்கொல்லிகள் எவ்வாறு தேனீக்கள், மண்புழுக்கள், monarch வகை வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் மகரந்த சேர்க்கைக்கு உதவும் இதர உயிரிகளை அழிக்கின்றன என்பதை, அறிவியல் ஆய்வு மூலமாக உறுதிப்படுத்தி வெளியிட்டதுதான்.

அப்படி என்னதான் செய்கிறது நியோநிகோடினாய்ட்?

DDT என்கிற உயிர்க்கொல்லியை விட 10,000 மடங்கு அழிக்கும் ஆற்றலுடைய இந்த உயிர்க்கொல்லியில் நனைக்கப்பட்ட விதைகளில் இருந்து 1.6 முதல் 2.0 விழுக்காடு மட்டுமே தாவரங்களால் உள்ளீர்க்கப்படுகிறது. இந்தத் தாவரங்களின் பூக்கள் வழியாக இவை மகரந்த சேர்க்கையாளர்களை ( தேனீக்கள், வண்டுகள்,வண்ணத்துப்பூச்சிகள் போன்றவை) சென்றடைகின்றன. கிட்டத்தட்ட 90 விழுக்காடு மண்ணில் தங்கிவிடுகிறது - ஒன்றல்ல,இரண்டல்ல, 19 ஆண்டுகளுக்கு! மண்ணில் தங்கிய இந்த உயிர்க்கொல்லி மூலமாக சுற்றுப்பகுதிகளுக்கும் பரவி அங்குள்ள எலும்பற்ற (invertebrate ) உயிரினங்களை முற்றிலும் அழிக்கிறது. நிலத்தடி நீரையும் மாசு படுத்தி நம்மையும் வந்தடைகின்றது! உழவனின் நண்பன் என்ற பெருமையை உடைய மண்புழுக்களை அறவே அழிக்கின்றது!

DDT என்கிற உயிர்க்கொல்லியை 'நிலத்தைப் பாழ்படுத்துகிறது, கொழுப்புப் படிமங்களில் சேகரிக்கப்பட்டு பல்லுயிர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது' போன்ற காரணங்களால் உலகில் பல நாடுகள் தடை செய்துள்ளபோதும் அதை விட 10,000 மடங்கு அழிக்கும் ஆற்றல் மிக்க நியோநிகோடினாய்ட் தடை செய்யப்பட்டிருக்க வேண்டாமா?

இவ்வளவு கொடிய உயிர்க்கொல்லியை அரசுகள் எந்த அளவு தாங்கிப்பிடிக்கின்றன என்பதை இப்போது பார்ப்போம். பல ஆண்டுகளாக இந்த உயிர்க்கொல்லியினால் பயிர்களை அழிக்கும் பூச்சிகளைத்தவிர வேறு எவற்றுக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்ற உலகின் வளர்ந்த நாடுகளின் நிலைப்பாடு மாறி (வளர்ந்த நாடுகளின் விவசாயிகள் மற்றும் பல்லுயிர் வளர்ச்சியில் அக்கறை உள்ள குழுக்களின் இடைவிடாத போராட்டங்களினால்) 2011 ஆண்டில் ஒருங்கிணைந்த ஐரோப்பா இந்த உயிர்க்கொல்லியை தடை செய்ய முடிவெடுத்தவுடன் அவற்றை உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள் காய் நகர்த்தத்தொடங்கின. தங்களின் அரசுகளூடான செல்வாக்கை பயன்படுத்தி அந்த நிரந்தர தடையை 2 ஆண்டு-இடைக்காலத்தடையாக மட்டுமே மாற்றி, அந்த இரண்டு ஆண்டுகளுக்குள் 'விவசாய குழுமங்கள்' மூலமாக இந்த உயிர்க்கொல்லிகள் இல்லை என்றால் எவ்வாறு தம் கடுகு விளைச்சல் (மற்றும் பிற தானிய விளைச்சல்) மலையளவு பாதிக்கப்படும் என்கிற பிம்பத்தை உண்டாக்கி அரசுகளை 'உண்மையறியும் குழுக்களை' அமைக்கச்செய்து அதிலும் தமக்கு சாதகமான ஆட்களை அமர்த்தி இடைக்காலத்தடையை உடைத்ததோடு மட்டுமல்லாமல் தடை நீங்கியவுடன் அந்த ஆட்களை தமது நிறுவனங்களிலேயே வேலைக்கும் அமர்த்தி அமளி செய்து கொண்டிருக்கின்றன (உதாரணம், இங்கிலாந்தில் அமைக்கப்பட உண்மையறியும் குழுவில் தடை நீக்க வாதிட்ட நபர், தடை நீங்கியதும் மொன்சொண்டோ நிறுவனத்திலேயே வேலைக்கமர்ந்தது உட்பட பலவற்றை சொல்லிக்கொண்டே போகலாம்). அறம் சார்ந்த இங்கிலாந்து அமைப்புகள் அரசின் மெத்தனமான போக்கினால் மேலும் உந்தப்பட்டு, தம் போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்திக்கொண்டுள்ளன.

அமெரிக்காவில் ஒரு நேர்மையான அறிவியல் ஆராய்ச்சியாளர் 'உண்மையை' சொன்ன ஒரே காரணத்திற்காக அவரது ஆராய்ச்சி எல்லைகள் ஒடுக்கப்பட்டு, ஆராய்ச்சிக்கான நிதி வரத்து துண்டிக்கப்பட்டு, சக அறிவியலாலர்களுடனான அவரது கலந்துரையாடல்கள் முடக்கப்பட்டு (ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு தனது ஆராய்ச்சி அறிக்கையை சமர்ப்பிக்க அவர் பயணம் தொடங்கியபோது ஓடுபாதையில் இருந்த விமானத்தில் இருந்து அவரை கட்டாயப்படுத்தி இறங்கி திரும்ப வைத்தது, ஒரு புகழ்பெற்ற ஆராய்ச்சி பத்திரிகையில் அவருடன் இணைந்து ஒரு அறிக்கையை வெளியிட்ட இன்னொரு அறிவியலாளரை மிரட்டி, நமது கதாநாயகனின் பெயரை சமர்ப்பிப்பாளரின் பெயரிலிருந்து நீக்க வைத்தது என்று சொல்லிக்கொண்டே போகலாம்…புதிய புலவர்கள் பற்றிய நமது தொடரை படித்திருப்போருக்கு இந்த 'முறைகள்' நன்கு பரிச்சயமானவைதான்!). அந்த நேர்மையான அறிவியல் ஆராய்ச்சியாளர் ஜோனாதான் லுண்ட்க்ரென் (Jonathan Lundgren) தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு, பல அமைப்புகள் மட்டும் ஊடகங்களின் சீற்றத்தினால் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டு இப்போது சில அற அமைப்புகளுடன் சேர்ந்து நீதி கேட்டு நீதிமன்றத்தில் போராடி வருகிறார். (http://harvestpublicmedia.org/article/usda-whistleblower-claims-censorship-pesticide-research)

வளர்ந்த நாடுகளின் அரசுகள், தமது மக்களை தீங்கிலிருந்து காக்கும் அறச்செயலில் இருந்து தவறி பன்னாட்டு நிறுவனங்களுக்கு விலை போய் மக்களை பலியாக்கி இந்த நிறுவனங்களுக்கு தொண்டு செய்துவருவது உலகின் மற்ற நாடுகளுக்கு மிக மிக மோசமான முன்னுதாரணம். பல்லுயிர்ச்சங்கிலியின் முக்கியமான (நமக்குத்தெரிந்த) கண்ணிகளான தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள், மண்புழுக்கள் மற்றும் பிற உயிரினங்களின் மீது நடத்தப்படும் இந்த அபாயகரமான, வரையறையற்ற தாக்குதல் நம் வாழ்வுச்சூழலை எந்த அளவு மோசமாக பாதிக்கும் என்பதன் ஒரு துளியை மட்டுமே இதுவரையில் அறிவியல் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது என்பது மிகவும் அச்சமூட்டக்கூடிய நிகழ்வு.

வளர்ந்த நாடுகளின் போராட்ட களங்கள் இவ்வாறிருக்க வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாடுகளின் நிலைமை இன்னும் கவலைக்கிடம். அறம் சார்ந்த அமைப்புகள் அதிகமற்ற, அறிவியல் கள ஆய்வுகளில் வலிமையற்ற, மக்களைப்பற்றி சிந்திக்காத அரசியல் சூழல் மிகுந்த இந்தியாவில் குறுகி வரும் தேனீக்கள் எண்ணிக்கையைப்பற்றி கவலைப்படுவதைத்தவிர நம்மால் இது வரையில் வேறு ஒன்றும் செய்யமுடியவில்லை. இந்தியாவில் எந்த அளவு நியோநிகோடினாய்ட் பயன்பாட்டில் உள்ளது, பயன்படுத்தப்படும் இடங்களில் என்னென்ன பாதிப்புக்கள் உண்டாகின்றன என்பவற்றை பகுத்தறிய 110 கோடி மக்களுள்ள நம் நாட்டில் யாருமில்லை, எந்த கட்டமைப்புமில்லை என்பதே வலிக்கும் உண்மை…நம்மில் பெரும்பாலோருக்கு இத்தகையதொரு பெரிய அபாயம் நம்மைச்சூழ்ந்துவருவதைப்பற்றிய விழிப்புணர்வு கூட இல்லாமல் வாழ்ந்துவருகிறோம். இனியாவது நம்மை சிந்திக்க வைத்து இந்த அபாயத்தை வெல்ல வழி காணத்தூண்டுமா?

தொழில்நுட்பம் உணவு உற்பத்தியைப் பெருக்கும் என்று பொய் சொல்லிக் கொண்டே தொழில்நுட்பத்தால் வாழ்வாதாரங்களைக் காவுகொடுத்துக் கொண்டிருக்கின்றன வாணிப வெறி கொண்ட நிறுவனங்கள். ஒன்று மட்டும் நிச்சயம்… உலகளாவிய அளவில் மண் மற்றும் மனிதர்களின் மாண்பினை சீர்தூக்கி, வணிக நிறுவனங்களின் லாபம் சார்ந்த வரையறையற்ற முயற்சிகளுக்கு துணைபோகாமல் இருக்க நாம் தவறினோமென்றால், சிட்டுக்குருவிகளற்ற 'மௌன வசந்தம்' (ரசேல் கர்சன் 1960களில் பூச்சுக்கொல்லி பயன்பாட்டிற்கு எதிராக எழுதிய, உலகளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நூல்) போல 'தேனீக்களற்ற மௌன வசந்தத்திற்கு' நாம் தயாராக வேண்டியதுதான் . மலர்கள் இல்லாத உலகைக் கற்பனை செய்யவே வலிக்கிறது. மலர்கள் மலர்ந்தும் அவற்றின் மகரந்தச் சேர்க்கைக்குத் தேனீக்கள் இல்லையெனில் என்னாவது? தேனீக்கு ஏங்குமா பூக்கள்?

[babuji.janakarajan@gmail.com|9698373592]

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org