நிகழ்வுகள் -அனந்து


திருச்சி: பாரம்பரிய விதைகள் மற்றும் உணவுத் திருவிழா

பசுமை சிகரம், சஹஜ சம்ருத்தா, பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பு, பாரத் பீஜ் சுவ‌ராஜ் மன்ச் (இந்திய விதைத் தற்சார்புக் குழுமம்), குடும்பம், எனப் பலரும் இணைந்து திருச்சியில் 2016 சனவரி 30 , 31 நாட்களில் ஒரு பெரும் இயற்கை விதைகள் கண்காட்சி மற்றும் இயற்கை உணவு திருவிழா நடத்தினர். திருச்சி யோகநாதனின் முழு முயற்சியில், தில்லை நகர் மக்கள் மன்றத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பல்வேறு இயற்கை மற்றும் மருத்துவப் பொருட்கள், நஞ்சில்லா உணவு, இயற்கை விதைகள், புத்தகங்கள், இயற்கையாக விளைவிக்கப்பட்ட விவசாயப்பொருட்கள், இயற்கை பருத்தியினின்று கைத்தறியாக இயற்கை சாயம் பூசிய 'துலா' ஆடைகள், மிகவும் அரிதான மூலிகை செடிகள், மரக்கன்றுகள், கையால் இயங்கும் சிறு உழவுக்கருவிகள் என எல்லாம் இருந்தன. மக்கள் பெருமளவில் வந்து கலந்து கொண்டும், வாங்கியும் ஆதரித்தனர்.

இதில் பாமயன், அன்பு சுந்தரானந்தா,காசி பிச்சை, கொடுமுடி நடராஜன், பூச்சி செல்வம், அனந்து, அரச்சலூர் செல்வம், ஜெரோம், சஹஜா பிரவீன், மோகனகிருஷ்ணன், பார்திபன், புண்ணியமூர்த்தி, நெல் ஜெயராமன் என பலரும் கலந்துகொண்டு உரையாற்றியதை இரு நாட்களும் மக்கள் கடைசி வரை இருந்து கண்டு களித்தனர்.

குளித்தலை “மாற்றம்” குழுவினரின் கலைகளும், ஸ்ரீமத் ஆண்டவன் கலி அறிவியல் கல்லூரி மாணவர்கள் “பூமித் தாயைக் காப்போம்” நாடகமும் மற்றும் கலை நிகழ்சிகளும் நடத்தி எல்லோரது பாராட்டையும் பெற்றனர். யோகநாதன் முன்னின்று நடத்தும் இத்தகைய விதை மற்றும் இயற்கை விழா மேலும் மேலும் மெருகேறி, ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் செய்திகளும், பொருட்களும் கிடைக்கும் இடமாகத் திகழ்கிறது. தில்லி: மரபீனிக் கடுகுக்கு எதிரான போராட்டம்

மரபீனி பயிர்கள் நமது தட்டில் எப்பொழுது வேண்டுமானால் விழலாம். ஆள்வது காங்கிரஸ் ஆனாலும் பாரதிய ஜனதாவானாலும், அந்த மிரட்டல் தொடர்ந்து கொண்டேதானிருக்கிறது. பாஜக அரசு தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை மறந்து மரபீனி மாற்றுப் பயிர்களுக்கு அனுமதி வழங்கத் திட்டமிட்டு வருகிறது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் மரபீனிப் பொறியியல் மதிப்பீட்டுக் குழு நடத்திய கூட்டத்தில் ஃபிப் 7 அன்று மரபீனி கடுகு கொண்டுவருவதற்கான ஆயத்தங்கள் நடக்க, இந்தியா முழுவதும் விவசாயிகள், விவசாய குழுக்கள், தன்னார்வலர்கள் கொதித்து எழுந்து ஆர்ப்பாட்டங்கள் பல செய்து மோடி அரசின் கவனத்தை ஈர்த்தன.

மரபீனி அற்ற இந்தியாவிற்கான கூட்டமைப்பின் கவிதா குருகன்டி, பஞ்சாபின் உமேந்தர் உட்பட தில்லி ந‌க‌ர ஆர்வலர்கள், தன்னர்வலர்கள் பலர் ஃபிப் 7 அன்று சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் முன் கூடி மௌன எதிர்ப்பில் ஈடுபட்டனர். இந்த சத்தியாகிரக ஆர்பாட்டத்திற்கு ஓரளவு வெற்றியும் கிட்டியது. மரபீனிப் பொறியியல் மதிப்பீட்டுக் குழு தலைவர் ஹேம் பான்டேயும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சரும் இந்த அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்வலர்களை சந்தித்து ' இப்போதைக்கு மரபீனிப் பயிர்கள் வராது. சீரிய செயல்முறைகள், ஆவணங்கள் பொதுத் தளத்தில் கொடுக்கப்பட்ட பின்பே மேற்கொள்ளப்படும் ' என்று உறுதி அளித்தனர். கூட்டமைப்பினர், வெளிப்படைத்தன்மை அற்ற ஒளிவுமறைவான வழிமுறைகளைக் கைவிடும்படியும், எல்லாத் தரவுகளையும் வெளிப்படையாகக் கொடுக்கும் படியும் கூறி, மேலும் மரபீனி தேவைதானா என்று ஆராய வேண்டும், தர்க்கம் செய்ய வேண்டும் என்றும், வேறு மாற்றுக்களிருந்தால் இதனை உடனடியாகக் கை விடவேண்டுமென்றும் வலியுறுத்தினர்.மரபீனி வேண்டாம் என்ற‌ வலைப்பூ மனுவிற்கு 41,000 பேர் கையெழுத்திட்டிருந்தனர். அதனையும் அமைச்சரிடம் ஒப்படைத்தனர் ந‌ம் செயல் வீரர்கள்.

மரபீனி மாற்றுப் பயிர்களைத் தொடர்ந்து உட்கொண்டால் பல உடல் உபாதைகள் வருகின்றன, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது, நிலம் நீர் எல்லாம் பாதிக்கப்படும், விவசாயிகளின் விதை உரிமை மற்றும் வாழ்வாதாரம் அழிக்கப்படும் என்று அறிந்தும் அடுத்தடுத்து வரும் மத்திய அரசுகள் அதைப் பெரும் அவசரத்துடனும், ஒளிவு, மறைவுகளுடனும் நாட்டில் புகுத்தத் துடிப்பதன் காரணத்தை இங்கு கூறவும் வேண்டுமா? எளிய, நீடித்து நிலைக்கும் தீர்வுகள் இருக்கும் பொழுது, இந்தக் கொடிய, மீட்க இயலாத‌ பல பின் விளைவுகளை ஏற்படுத்தும், மிகவும் விலையுயர்ந்த, தீர்வு தேவையா? கவிதா, உமேந்தர் போன்ற செயல் வீரர்களின் முனைப்பால் தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது. எனினும் இது முடிவல்ல, அநீதி எதிர்ப்பிற்கு ஒரு ஆரம்பமே . இந்த மோடி அரசுக்கு, பரவலான மக்கள் பல்வகைகளிலும் தம் எதிர்ப்பைத் தெரிவித்து, அகிம்சை முறையில் மேலும் அழுத்தம் கொடுத்து இந்த மரபீனி விதைகளும் உணவும் வேண்டாம் என்று கூற வைக்கும் வரை, பாதுகாப்பான நல் உணவு வேண்டுவோர் நிம்மதியாக உறங்க முடியாது. சேலம்: விழிப்புணர்வுப் பேரணி - மாரி "அம்மாவின் உத்தரவு" !

மழை, பெருமழை எப்படிப் பேரிடரானது சென்னையில் என்று முன்பே பார்த்தோம்! அதற்குள் மறந்தே விட்டது சென்னை மாநகரம். “சகஜ” நிலைக்கு திரும்பி விட்டது. ஒரு கிராம் நெகிழி கூடக் குறைக்காமல், ஆக்கிரமிப்புகளிலிருந்து ஒரு செங்கல்லைக் கூட அகற்றாமல், நீர் நிலைகளைப் பற்றி ஒரு துளிச் சிந்தனையும் இல்லாமல் சகஜ நிலைக்கு வந்து விட்டது சென்னை. இன்னும் 5 மாதங்களில் தண்ணீர் இல்லை என்று அலையும், அழும். அரசும், மக்களும் திருந்துவதற்கு எதுவும் செய்யா. இந்தப் பேரிடலிருந்து நாம் கற்றது ஒன்றுமே இல்லையா?

சேலத்தில், “சேலம் மக்கள் குழு” என்னும் அமைப்பு தொடர்ந்து போராடிப் பல ஏரிகளை கடந்த சில ஆண்டுகளில் காப்பாற்றி (ஆம் அரசிடமிருந்தும் அரசியல் வியாதிகளிடமிருந்தும்) பெரிய வெற்றியும் கண்டுள்ளனர். சென்னையில் வெள்ளம் வந்தபோது, அந்த மக்கள் குழு அறைகூவல் விடுக்கப் பெரும் திரளாய் இளைஞர்கள் கூடிப் பலவற்றை சேகரித்து, மூங்கிலில் படகுகளும் தற்காலிக வீடுகளும் செய்து சென்னைக்கு அனுப்பினர்.

இப்பொழுது அதே குழுவினர் 30 பேர் சேர்ந்து (12 வயது முதல் 30 வயது வரை உள்ளோர்) சேலத்தில் புறப்பட்டு சென்னை வரை மிதி வண்டியில் பயணம் செய்கின்றனர். இது ஒரு விழிப்புணர்வுப் பயணம். வழியில் தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம் வழியாக பல கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு, நீரின், நீர்நிலைகளை காப்பதன் முக்கியத்துவம் பற்றி பேசி வருகின்றனர். அவர்கள் ஃபிப் 18 - 20 க்கு சென்னையை அடைவார்கள்.

பியுஸ் மானுஷ் மற்றும் குழுவினர் இந்தத் தொடர் மிதி வண்டிப்பயணத்தை மேற்கொண்டு சென்னை வரை வந்து, நாமெல்லாம் மறந்த அந்த பெருமழையையும், நீர்நிலைகளைப் பற்றியும், அவற்றைக் காப்பதைப் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த வந்து கொண்டிருக்கின்றனர். மாரி என்ற மழை, மாரியம்மனாய்க், கடவுளாய்ப் போற்றப் படுகிறது. 'வானமழை இல்லையென்றால் வாழ்வுண்டோ' என்றான் பாரதி. மாரியம்மனின் இருப்பிடமான நீர்நிலைகளை நாம் ஆக்கிரமித்தால், அவள் பெரும் சீற்றம் கொண்டு வெடித்து உறுமித் திரிவாள், செருவெங் கூற்றே புரிவாள். பேரிடராக மாற்றி நம்மை இடம் பெயர்ப்பாள். மாரி என்னும் மழையையும் அந்த தெய்வத்தின் ஆணையாக நீர் நிலைகளை காப்பதின் கட்டாயத்தை எடுத்துரைக்கிறது இந்த குழு. மாரி “அம்மாவின் உத்தரவு” என்று வலம் வரும் இந்த சைக்கிள் பயணம் வழியெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. அவர்கள் வரும் பாதையில் கலந்துரையாட, அவர்களின் பேச்சைக்கேட்க 9443248582 (அ) 9566607077 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளவும்.

[organicananthoo@gmail.com | 9444166779]

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org