பாரம்பரிய நெல் ஒரு பணப்பயிரே! - ஜெயக்குமார்


[வருவாய்க்காகப் பணப் பயிர்களைத் தேடி உயர் விளைச்சல் என்று ஏய்க்கப்படும் விதைகள் மற்றும் புதிய தொழில்நுட்ப மாதிரிகளில் பணத்தைச் செலவு செய்யும் உழவன் பெரும்பாலான நேரம் கடனில் சிக்கி அப் பணப்பயிர்களே அவனுக்கு ருணப்பயிராய் (ருணம் = கடன்) மாறி பெரும் ரணப்பயிராகி விடுகிறது - சில சமயங்களில் கடன் சுமை தாங்காது தற்கொலைக்குத் தள்ளிப் பணப்பயிர்கள் பிணப்பயிர்களாகவும் கோர தாண்டவம் ஆடிவிடுகின்றன. ஆனால் பாரம்பரிய நெல் ரகங்களான கிச்சடி சம்பா, சீரக சம்பா, மாப்பிள்ளைச் சம்பா போன்றவற்றை இயற்கை முறையில் குறைந்த இடுபொருட் செலவில் சாகுபடி செய்து அவற்றை நல்ல விலைக்கு இயற்கை அங்காடிகளுக்கு விற்பனையும் செய்தால் உணவுக்கும், மண்ணிற்கும், நிலத்தடி நீருக்கும் பாதுகாப்பு அளிப்பது மட்டுமன்றி உழவனின் நிரந்தர வருவாய்க்கும் ஒரு உத்தரவாதம் கிடைக்கிறது. இது வெறும் மேடைப் பேச்சோ, கட்டுக்கதையோ அல்ல - நடைமுறை நிதர்சனம்.

பாரம்பரிய நெல் ஒரு பணப்பயிரே என்று தாளாண்மை தொடர்ந்து கூறி வருகிறது. இவ்வாறு செய்யும் உழவர்களைப் பேட்டி கண்டு செய்தி வெளியிட்டும் வருகிறது. உழவு என்பது வெற்றிகரமான தொழிலாக வேண்டுமெனில், உழவில் உற்பத்தி மட்டுமன்றித் திட்டமிடல், நிதி நிர்வாகம், இடர் நிர்வாகம், சந்தைப் படுத்துதல், வரவு-செலவு நிர்வாகம் போன்ற அனைத்துக் கூறுகளும் அடங்கும். இவை அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான புரிதல் உழவனுக்கு ஏற்பட‌ வேண்டும். இவை அனைத்தையும் உழவன் தனி ஒருவனாகச் செய்வது இயலாத செயல். எனவே இயற்கை வேளாண்மை வெற்றி பெற ‌ஒவ்வொரு ஊரிலும் இயற்கை வேளாண்மை செய்ய விழையும் உழவர்கள் ஒரு குழுவாகக் கூடித் தங்கள் விளைபொருட்களைத் தாங்களே அங்காடிகளுக்கு விற்பனை செய்யும் அமைப்புக்களை உருவாக்க வேண்டும். இது ஒன்றுதான் உழவன் விடுதலைக்கு நிரந்தரத் தீர்வு.

இதற்கென நபார்டு போன்ற வங்கிகளிலேயே பல திட்டங்கள் உள்ளன. இப்போது வேளாண்மையும், கிராமிய வாழ்வாதாரங்களும், கிராமங்களும் தழைக்க‌ மிக மிகத் தேவையானது, கிராமங்களை வழிநடத்திச் செல்லச் சுயநலம் இல்லாத, சேவை மனப்பான்மை கொண்ட‌, விவரம் அறிந்த நல்லவர்களே. இத்தொடரில் இவ்விதழில் நம் நிருபர் ஜெயக்குமாரின் சம்பா சாகுபடி அனுபவங்களை வெளிடியிடுகிறோம். - ஆசிரியர் ]

நாங்கள் எங்கள் நிலங்களில் ஒரு போக (சம்பா) நெல்லும், நெல்லின் தொடர்பயிராக பச்சைப்பயறும் சாகுபடி செய்துவருகின்றோம். நெல்லைப் பொருத்தவரை கிச்சிலிசம்பா தான் எங்களுக்கு பிடித்த ரகம் என்றே கூறலாம். இந்த‌ ஆண்டு (2015 சம்பா) மட்டும் சீரகசம்பா 70 சென்ட் நிலத்தில் சாகுபடி செய்தோம். 16 ஏக்கர் நிலத்தில் கிச்சிலிசம்பா பயிர்செய்தோம். கடந்த மூன்று வருடங்களாக சாதாரண முறையில் வரிப்பட்டம் போட்டு நடவுசெய்தோம். பட்டத்திற்கு பட்டம் 30 செ.மீ மற்றும் பயிரின் இடைவெளி 20 - 22.5 செ.மீ இருக்கும். ஆனால் இம்முறை சற்றே வித்தியாசமான முறையில் செய்யலாம் என்று நினைத்து 'ஆலங்குடி பெருமாள்' அவர்களை வரவைத்து தங்களின் முறையில் (50 * 50 செ.மீ) நடவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அதற்கு அவர் அதற்கென்ன செய்துவிடலாமே என்று நம்பிக்கையும், தைரியமும் ஊட்டினார். அதன்பிறகு நாற்றாங்கால் முதல் அறுவடை வரை மூன்று முறை நேரடியாக எனது வயலுக்கு வந்தும், மற்ற எந்த சந்தேகங்களை எந்த நேரத்தில் கேட்டாலும் அலுக்காமல் கூறி உற்சாகம் அளித்த‌ திரு. பெருமாள் அவர்களுக்கு எனது நன்றி.

= ஒரு ஏக்கருக்கு சாகுபடி முறைகள் =

விதையின் அளவு: 250 முதல் 500 கிராம் வரை.

நாற்றாங்கால் அளவு: 5 சென்ட்

ஒரு ஏக்கர் நடவு செய்ய 5 சென்ட் நாற்றாங்காலில் சாணி எரு 1000 கிலோ அடித்து நன்கு களைத்துவிட்டு தண்ணீர் பாய்ச்சி அதில் 1கிலோ பசுந்தாள் உர‌விதைகளை விதைத்து 30 முதல் 40 நாட்களில் மடக்கி உழவு செய்ய வேண்டும். ரோட்டவேட்டர் மூலம் உழவு செய்து ஒரு வாரம் கழித்து இரண்டாம் சால் கைவிசை ஏர் (power tiller) கொண்டு இரண்டு சால் உழவு செய்ய வேண்டும்.

அதன் பின் 10 நாட்கள் கழித்து அசோஸ்பைரில்லியம் + பாஸ்போபாக்டீரியா தலா ஒரு கிலோ போட்டு கைவிசை ஏர் மூலம் ஒரு முறை அடித்துப் பின்பு சமன் செய்யவும். மறுநாள் காலை பரம்பு வைத்து அன்று அல்லது மறுநாள் நன்கு முளையிட்ட நெல் மணிகளை (சன்னரகமாக இருப்பதால்) 250 கிராம் தேர்வுசெய்யப்பட்ட விதைகளை விதைக்க வேண்டும். விதை தேர்வு செய்யும் போது நல்ல தரமான விதைகளை தேர்வு செய்யவேண்டும். 1 கிலோ நல்ல விதை நெல்லை 2ம் நம்பர் சல்லடை கொண்டு சலித்து, சுத்தம் செய்து அதிலிருந்து 250 கிராம் எடுக்கவேண்டும். விதை விதைத்த மறுநாள் காலை தண்ணீர் வடிகட்டி நன்கு நாற்றாங்காலை உலர்த்த வேண்டும். அன்று மாலை தண்ணீர் வைக்கக்கூடாது. மறுநாள் மாலை தண்ணீர் வைத்து மூன்று நாட்கள் தொடர்ந்து மாலை வேளைகளில் தண்ணீர் வைத்து காலை 6 மணிக்கு வடித்து விட வேண்டும். மற்றபடி சாதாரண நாற்றாங்காலை எப்படிப் பராமரிப்போமோ அதேபோல் பராமரித்தால் போதுமானது.

5 சென்ட் நிலத்தில் 250 கிராம் விதைகளை விதைக்கும் போது வெற்றிடங்களே அதிகமாக இருக்கும். 6ம் (அ) 7ம் நாள் காலையில் சென்ற போது இடைவெளியில் அதிக களை இருப்பதை கண்டு அதிர்ச்சியாக இருந்தது. பெருமாள் அவர்களுக்கு தொலைபேசி மூலம்கேட்ட போது களைகள் அதிகமாக வரும், அதற்காக‌ பயப்படத்தேவையில்லை என்றார். அவர் சொன்னது போலவே நாற்றை விட களைகளே இருந்தது. 12 வது நாளில் பஞ்சகவ்யம் 500 மில்லியை 13 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தேன். 18 வது நாள் நாற்றுப்பறிக்கும் போது நாற்றைவிட களைகளே நன்கு தூர்க்கட்டி இருந்தது. நாற்றில் 4 முதல் 6 தூர்வரையும், களைச்செடியில் 12 முதல் 16 தூர்களும் இருந்தன‌. பெருமாள் கூறியது போலவே களைகளை நாற்றங்காலிலேயே விட்டு விட்டு நாற்றுக்களை மட்டும் நடவு ஆட்களை விட்டுப் பறித்து நடவு செய்தோம்.

நடவு வயலும் மேற்சொன்னது போலவே தயார் செய்து நன்கு சமன் செய்ய வேண்டும். நடவு செய்வதற்கு முதல் நாள் நடவு வயலைச் சுற்றி 50 x 50 செ.மீ அடையாளமிடவேண்டும். மறுநாள் காலை நாற்றைப்பறித்து உடனே நடவு செய்யவேண்டும். முதல் நாள் என்பதால் பெண் வேலையாட்களைக் கொண்டு நாற்றுப்பறித்தோம். 12 நடவு ஆட்கள் காலை 10 -11 மணி வரை நாற்றைப்பறித்தார்கள். அதன் பின் நடவு வயலுக்கு நாற்றுகளை தூக்கிச்சென்று நடவு செய்தார்கள் மதியம் 2 மணிவரை, அவர்களுக்குப் புரிய வைக்க, சற்றுக் கடினமாகவே இருந்தது . மதியம் 2 மணிக்கு மேல் நடவு விருவிருப்பானது. 20 நாட்களில் பறிக்கும் நாற்றுக்களை ஏக்கருக்கு 12 நடவாள்களும், 23 நாட்களுக்கு மேல் நாற்றுப்பறித்து நடவு செய்ய ஏக்கருக்கு 16 ஆட்களும், 26 நாட்களுக்கு மேல் ஏக்கருக்கு 18 - 20 ஆட்களும் ஆனது. காரணம் நாற்றுகளின் வேர்கள் அதிகமாகும் போது பறிப்பது சற்றே கடினமானது. களைகளின் வேர்களும் ஒரு அடி வரை இருப்பதால் அவற்றை பிடுங்க முடியவில்லை. முதன் முறையில் பெருமாள் முறை நடுவதால் ஏக்கருக்கு 1 கிலோ அளவிற்கு விதை விட்டு இருந்தோம். ஆகையால் அதிகக் களை உள்ள இடங்களை நாற்றுப்பறிக்காமல் உழவு செய்துவிட்டோம்.

நடவு செய்து முடிந்த வயலில் எந்த பக்க‌ம் நின்று பார்த்தாலும் பட்டம் தெரியவேண்டும். பட்டத்திற்கு பட்டம் 50 செ.மீ மற்றும் பயிருக்கு பயிர் 50 செ.மீ என்பதால் ஒரு நாற்று வைத்து நட்டாலே போதுமானது. ஒரு நாற்றே 6 முதல் கடைசியாக நடும் நாற்றுகள் 15 தூர்கள் கொண்டு இருந்தது. நடவு முடிந்தபின் 3 முதல் 5 செ.மீ வரை தண்ணீர் நிறுத்த வேண்டும். அப்போதுதான் களைகளைக் கட்டுப்படுத்த முடியும். களைகள் சற்று அதிகமாகவே தென்பட்டன‌. களை எடுக்கும் இயந்திரம் கொண்டு களைகளை அமுக்கி விட்டோம். களை இயந்திரத்தை இரு புறமும் அதாவது கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு,வடக்கு ஓட்டலாம். இதற்கு ஒரு ஏக்கருக்கு(ஒரு சால்) ரூ 450 ஆகிறது. அதன் பின் பெண் ஆட்கள் ( ஏக்கருக்கு 6 முதல் 8 ஆட்கள்) களைஎடுத்தார்கள். களை எடுத்துவிட்டால் வேறு வேலை எதுவும் கிடையாது. எலிகள் அதிகம் தென்பட்டால் வரப்புகளை வெட்டிப் பி்டிக்கலாம்.

எனது வயலைப் பொருத்தவரையில் பெருமாள் முறையில் 30 முதல் 46 தூர்கள் இருந்தன‌. இந்த ஆண்டு ஐப்பசி கார்த்திகை மாதங்களில் மிகக் கன மழை பெய்து முற்றிலும் வெய்யிலே இல்லாததால், பயிர்களில் ஒளிச்சேர்க்கை குறைந்தும், வேர்களில் காற்றுப் புகாமலும், தூர்களின் எண்ணிக்கை சரி பாதியாகி விட்டது என்பதே என் எண்ணம். இந்த வருடம் கிச்சிலி சம்பாவை பொருத்தவரையில் ஏக்கருக்கு 23 முதல் 24 மூட்டை வரை மட்டுமே மகசூல் இருந்தது. [1 மூட்டை = 60 கிலோ; ஏக்கருக்குச் சராசரியாக 23 * 60 = 1380 கிலோ]

ஒரு ஏக்கருக்கு ஆன‌ செலவு

நாற்றாங்கால் 5 சென்ட் தயாரிக்க = 1,000 விதை 250 கிராம் = 50 நடவு வயல் உழவு = 2,400 (ரோட்டவேட்டர் இரண்டு சால்) சட்டனை = 400 அண்டை மற்றும் சமன் செய்ய 7 ஆட்கள் = 2,800 நடவு+நாற்றடி = 3,000 கோனேவிடர் 2 சால் = 900 களை எடுக்க(8 *170) = 1,360 எலி பிடிக்க = 200 தண்ணிர் பாய்ச்ச மற்றும் இதர‌ செலவு = 500 அறுவடை மற்றும் நெல் உலர்த்த = 4,500

மொத்த செலவு = ரூ 17,110

வரவு

1380 * 25 = 34500

நிகர வருவாய், ஏக்கருக்கு ரூ.17390 /-

இது, பெரும் மழையில், நெல்லாக விற்றால் வரும் உடனடி வருவாய். இயற்கை வேளாண்மையில், இயற்கைப் பேரிடர்கள் தாக்கினும், உழவனுக்கு ஒரு நிரந்தர வருவாய் உண்டு. பொறுமையும், திருப்தியும் அவசியம் - அவ்வளவே!

[jai.organic@gmail.com | 9962009302]

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org