பசிப்பிணி குறித்த பத்துக் கதைகள் - பரிதி


உலக மக்களுக்குத் தேவையானதை விட அதிக அளவில் உணவு உற்பத்தியாகிறது. இருப்பினும் பசி, பட்டினி, பஞ்சங்கள் உலகைத் தொடர்ந்து வாட்டுகின்றன. அவற்றைக் குறித்த பல கட்டுக்கதைகளும் தவறான கருத்துகளும் உலகெங்கும் பரவியுள்ளன; 'பரவியுள்ளன' என்பதைக் காட்டிலும் 'பரப்பப்பட்டுள்ளன' என்று சொல்வதே சரியாக இருக்கும்! அத்தகைய கட்டுக்கதைகள் பத்து வகையானவை. அவை ஒவ்வொன்றும் தவறானவை என்பதைத் தக்க தரவுகளுடன் நிறுவியுள்ளனர் இரு ஆய்வாளர்கள். அவர்களுடைய நூல் 1986-இல் முதலில் வெளியாகிற்று. அதற்கு முன்பு தொடங்கி இன்று வரை சுமார் நாற்பது ஆண்டுகளாக அவர்கள் செய்த ஆய்வுகளைக் குறித்து அண்மையில் அவர்கள் வெளியிட்டுள்ள கட்டுரையின் சுருக்கத்தை இனிக் காண்போம்.

கட்டுக்கதை 1: உலக உணவு உற்பத்தி மிகக் குறைவு, மக்கள் தொகை மிக அதிகம்

உண்மை நிலை: உலகில் தேவையைக் காட்டிலும் மிக அதிக அளவு உணவு உற்பத்தியாகிறது. பற்றாக்குறை என்பது பொய். 1961 – 2013 காலக்கட்டத்தில் உலக மக்கள் தொகை இரண்டு மடங்குக்கும் அதிகமாகப் பெருகிற்று. ஆனால், இன்று உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் தேவையானதை விட ஐம்பது விழுக்காடு அதிக உணவு உற்பத்தியாகிறது. அதில் மூன்றிலொரு பங்கை நாம் வீணாக்குகிறோம். உணவு தானியங்கள், சோயா புரத்தம் ஆகியவற்றின் உற்பத்தியில் பாதிக்கும் அதிக அளவு விலங்குகளுக்கு உணவாகவும் ஊர்திகளுக்கு எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதையுங் கடந்து, உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் நாளொன்றுக்கு 2,900 கலோரி ஆற்றல் தரக்கூடிய அளவு உணவு உற்பத்தியாகிறது. ஆனால், உலகெங்கும் உணவின் தரம் குறைந்துகொண்டே போவதால் உணவிலிருந்து நமக்குக் கிடைக்கும் ஆற்றலும் சத்துகளும் வரவர எதிரெதிர்த் திசைகளில் சென்றுகொண்டுள்ளன. அன்றாட ஆற்றல் (கலோரிப்) பற்றாக்குறையை மட்டும் வைத்துப் பார்த்தால் உலகில் எண்பது கோடிப்பேர் - உலக மக்களில் ஒன்பதில் ஒருவர் - பசியால் வாடுவதாக ஒன்றிய நாடுகளவை தெரிவிக்கிறது. ஆனால், சத்துப் பற்றாக்குறைகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் உலக மக்களில் நால்வரில் ஒருவர் பாதிக்கப்படுவதாக நாங்கள் கணிக்கிறோம். நம் முன் உள்ள சிக்கல் உணவுப் பற்றாக்குறை அன்று; சத்துள்ள உணவு பெறும் உரிமையை அனைத்து மக்களுக்கும் வழங்கக்கூடிய உண்மையான மக்கள்நாயக ஆட்சி தான் பற்றாக்குறையாக உள்ளது. எனவே, பசிப்பிணியை எதிர்த்துப் போராடுவோர் செய்யவேண்டியது இதுதான்: அரசியற் பொருளாதார வல்லமை ஒரு சிலரிடம் குவிந்திருப்பதை ஒழித்து நீதியும் நேர்மையும் நிறைந்த சட்டதிட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்துதல். இதைச் செய்யாதவரை எவ்வளவு உணவு உற்பத்தி செய்தாலும் பசியையும் பற்றாக்குறையையும் போக்கவே முடியாது!

கட்டுக்கதை 2: சூழல் கெட்டுவிட்டது; எனவே பசிப் பிணியைத் தவிர்க்கமுடியாது!

உண்மை நிலை: சூழல் கெட்டுத் தாறுமாறாக மாறிவருகிறது என்பது பொய்யன்று; உண்மையே! சூழல் மாசுபட்டதன் விளைவாக வறட்சி, தீங்குயிரிகள் புதுப்புது இடங்களில் புகுதல் உள்ளிட்ட சிக்கல்கள் பெருகிவருகின்றன. அதனால் 2050 வாக்கில் கூடுதலாக இரண்டு கோடியே நாற்பது லட்சம் குழந்தைகள் சத்துப் பற்றாக்குறையால் வாடுவார்கள் என்று ஒன்றிய நாடுகளவையின் உலக உணவுத் திட்டம் கணித்துள்ளது. நாம் விழித்தெழ வேண்டியதன் கட்டாயத்தை இந்த அறிவிப்பு உணர்த்துகிறது. ஆனால், பசியும் பஞ்சமும் தவிர்க்கமுடியாதவை என்று இது கூறவில்லை. மாறாக, முறையான தீர்வுகளைச் செயல்படுத்துவதற்கான நல்வாய்ப்பாக இதை நாம் கொள்ளவேண்டும். உலக உணவு முறைமை செயல்திறன் குறைவானது, அநீதியானது. அதைச் சரி செய்தாலே இயற்கையை அழிக்காமல் அனைவருக்கும் போதுமான சத்துள்ள உணவைத் தரவியலும்.

நல்வாய்ப்பாக, சூழல் கேடுகளைக் குறைக்கும் நோக்கில் நம் உணவு முறையிலும் வேளாண் முறையிலும் செய்யவேண்டிய மாற்றங்கள் நம் சூழலுக்கும் பசியால் வாடுவோர் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் நலம்பயப்பன. தீய வளிகளின் வெளியீட்டைக் குறைப்பதன் மூலம் கரிய வளையத்தை மீண்டும் சமநிலைக்குக் கொண்டு வருவதற்கும் பெருமளவு கரியத்தை மண்ணில் தக்கவைப்பதற்கும் நம் உணவு முறைமையால் முடியும். அத்தகைய வேளாண் முறைகள் குறைந்த செலவு பிடிப்பவை; ஆதலால் அவை சிறு குறு உழவர்களுக்கும் வேளாண் தொழிலாளர்களுக்கும் நலந்தரும். இவர்கள்தாம் இப்போது பசிப்பிணியால் பெருமளவில் வாடுகின்றனர். [மாந்தச் செயல்பாடுகளால் நிகழ்ந்துவரும்] சூழல் சீர்குலைவை இப்போது தடுக்கவியலாது; ஆனால், அதற்கு எந்த அளவுக்கு நாம் வடுப்படுவோம் என்பது பெருமளவு நம் கட்டுப்பாட்டில் உள்ளது. நம் உணவு முறைமையில் மிகப்பெரிய அளவில் உள்ள ஏற்றத்தாழ்வுகளையும் செயல்திறன் குறைபாடுகளையும் சரிசெய்வதன் மூலம் நாம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தலாம்: (அ) பசிப்பிணியைப் போக்குதல் (ஆ) சூழல் மாசுபடுதலைக் குறைத்தல்.

கட்டுக்கதை 3: ஆலைமயமான வேளாண்மையும் மரபீனி மாற்றப்பெற்ற உயிரினங்களுந்தாம் உலக மக்களுக்குப் போதுமான உணவு தர இயலும்.

உண்மை நிலை: ஆலைமயமான வேளாண்மையானது, காப்புரிமை பெற்ற விதைகள், ஆலைகளில் உற்பத்தியாகும் வேதியுரங்கள் மற்றும் உயிர்க்கொல்லிகள், பெரிய இயந்திரங்கள் ஆகியவற்றைச் சார்ந்துள்ளது. மொத்த வேளாண் உற்பத்தி அதிகரிக்கிறது. ஆனால் இது நீடித்த, நிலைத்த வேளாண்மைக்கு வழிகோலாது; பசிப்பிணியையும் போக்கவில்லை. மேலும், மனிதருக்கிடையிலும் ஒட்டுமொத்த இயற்கைச் சூழலிலும் இயங்கும் பற்பல வலையங்களை இந்த வேளாண்முறை தகர்க்கிறது. நிலம் உள்ளிட்ட இயற்கை வளங்கள் மீது ஒரு சிலருக்கு ஒட்டுமொத்த உரிமை கிடைப்பதற்கு வழி செய்வதன் மூலம் மிகப் பலரை வறியோராக்குகிறது. விளைநிலங்களின் மேல் மண் (சுமார் 9 முதல் 12 அங்குல ஆழம் வரை) வேளாண்மைக்கு இன்றியமையாதது. உலக அளவில் இந்த மேல் மண் இயற்கையால் புதுப்பிக்கப்படும் வேகத்தைக் காட்டிலும் 13 முதல் 40 மடங்கு வேகமாக அரிக்கப்படுகிறது. அத்துடன் அரித்துச் செல்லப்படும் வேதிப் பொருள்கள் உலகெங்கும் நீர்நிலைகளை மிக மோசமாகக் கெடுத்துவிட்டன.

கட்டுக்கதை 4: கரிம வேளாண்மை, சூழலுக்கியைந்த வேளாண்மை போன்றவற்றால் பசியால் வாடும் உலகுக்குப் போதுமான உணவை உற்பத்தி செய்ய இயலாது.

உண்மை நிலை: கரிம வேளாண் முறைகளின் மேன்மை உலகின் பல பகுதிகளில் ஐயத்துக்கிடமின்றி நிறுவப்பட்டுள்ளது. சூழலுக்கியைந்த வேளாண்மை என்பது இதன் அடுத்த கட்டம். வேதிப் பொருள் பயன்பாடு இல்லாதிருப்பது இதன் ஒரு கூறு மட்டுமே. அதிகாரத்தை மக்களிடையே பரவலாக்குதல், மக்களுக்கு அதிகாரந்தருதல், அவர்களுடைய தன்மதிப்பு, அறிவு, செயலாற்றல் ஆகியவற்றை வளர்த்தெடுத்தல் ஆகியவற்றையும் அது தன்னகத்தே கொண்டது. மக்களுக்கு ஆளுந்திறன் இல்லாதிருப்பதுதான் பசிப்பிணிக்கு மூலக்காரணம் என்று ஏற்கெனவே பார்த்தோம். அத்தகைய திறனை வளர்க்க உதவுவதன் மூலம் சூழலுக்கியைந்த வேளாண்மை பசிப்பிணியை ஒழிக்கவல்லது. அது ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகச் சிறு குறு உழவர்கள் சேகரித்த பாரம்பரிய அறிவை நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளுடன் இணைத்து வேளாண் உற்பத்தியைப் பெருக்குகிறது. பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருந்து பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் மீட்பதற்கு இந்த வேளாண் முறை வழி வகுக்கிறது.

வாழ்க்கையின் - அதாவது, இயற்கையின் - பல பரிமாணங்களையும் இணைத்துச் செயல்படுத்தும் இந்த வேளாண் முறை உற்பத்தித் திறனை மேம்படுத்துதல் எனும் குறுகிய நோக்கத்தில் செயல்படுவதுடன் நின்றுவிடுவதில்லை. சூழலையும் மாந்த நலனையும் காக்கிறது. இதுகாறும் நிகழ்ந்துள்ள சூழல் மாற்றத்தின் தாக்கங்களைக் குறைப்பதற்கும் உதவுகிறது.

கட்டுக்கதை 5: நியாயம் அல்லது உணவு உற்பத்தி - இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றை நாம் தேர்ந்தெடுக்கவேண்டும்! (அதாவது, சிறு குறு உழவர்கள், குறிப்பாகப் பெண்கள், கூலித் தொழிலாளர்கள் ஆகியோருக்கு நில உரிமையும் அவர்களுடைய பணிக்கு நியாயமான ஊதியமும் கொடுப்பதற்கு நாம் முதன்மை தந்தால் உணவு உற்பத்தி பாதிக்கப்படும். ஏனெனில் உலக மக்கள் அனைவருக்கும் தேவையான உணவை உற்பத்தி செய்வதற்கு ஆலைமயமான பெருநிறுவன வேளாண்மையால் தான் இயலும்.)

உண்மை நிலை: இவ்விரண்டும் ஒன்றோடொன்று போட்டியிடுபவையன்று! வளரும் நாடுகளிலுள்ள சிறு குறு உழவர்களுடைய வேளாண் உற்பத்தித் திறன் ஆலைமயமான வேளாண்மையின் உற்பத்தித் திறனைக் காட்டிலும் அதிகம். மேலும், கலப்புப் பயிரிடுதல், ஊடுபயிரிடுதல், கால்நடைகளையும் மீன்களையும் வேளாண்மையில் இணைத்தல் ஆகிய செயல்களின் விளைவாக அவர்களுடைய விளைபொருள்களின் தரமும் வளமும் (சத்து) அதிகரிக்கின்றன. அவர்களின் ஆற்றல் பயன்பாடு மிகக் குறைவு; அவர்கள் கன்னெயம் ('பெட்ரோலியம்') உள்ளிட்ட புதைபடிவ எரிபொருள்களை அதிகம் பயன்படுத்துவதில்லை. முதலீடு அதிகம் தேவைப்படுகிற ஆலைமயமான வேளாண் முறைகள் ஒரு கலோரி உணவாற்றலை உற்பத்தி செய்வதற்கு ஏழு முதல் பத்து கலோரி புதைபடிவ ஆற்றலைப் பயன்படுத்துகின்றன.

ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் உரிமை தருதல் உற்பத்தித் திறனை மேலும் வளர்க்கிறது. வளரும் நாடுகளில் உணவு உற்பத்தியில் பெண் உழவர்களின் பங்கு அறுபது முதல் எண்பது விழுக்காடாக உள்ளது. ஆனால் நில உரிமையைப் பொருத்தவரை பெண்கள் நிலை மிக மோசமாகவே உள்ளது. வேளாண் விரிவாக்கச் சேவைகள் உலகளவில் பெண்களுக்கு ஐந்து விழுக்காடு தான் கிடைக்கின்றன. பெண்களுக்கும் சம வாய்ப்புக் கிடைக்குமாயின் அவர்களுடைய வேளாண் விளைச்சல் 20-30 விழுக்காடு உயரும்; அதைக் கொண்டு மேலும் 15 கோடிப்பேருக்கு உணவு தர இயலும். களத்தில் இறங்கிப் பணியாற்றுவோருக்கு அதிக உரிமையும் தம் உழைப்பின் பலனில் அதிகப் பங்கும் தந்தால் மட்டுமே உற்பத்தியை அதிகரிப்பதுடன் பசிப்பிணியையும் போக்கமுடியும்

கட்டுக்கதை 6: கட்டற்ற சந்தை பசியை ஒழிக்கும்.

உண்மை நிலை: திரும்பத் திரும்ப ஓதப்படும் இந்த மந்திரம் பின்வரும் இரண்டு உண்மைகளை மறைக்கிறது:

(அ) உணவு என்பது வெறும் வணிகப் பண்டம் மட்டுமன்று; (ஆ) மக்கள்நாயக அரசு இல்லாவிடில் சந்தை வர்த்தகம் முறையாக இயங்காது.

ஒவ்வொருவருக்கும் போதுமான உணவு கிடைப்பது அவருடைய மனித உரிமை என்று பெரும்பாலான நாடுகள் வெளிப்படையாக அறிவித்துள்ளன. ஓர் உரிமையை நிறைவு செய்வதைச் சந்தைப் பரிமாற்றத்தின் கட்டுப்பாட்டில் எப்படி வைத்திருக்கமுடியும்? உணவு என்பது உயிர் வாழ்வதற்கு இன்றியமையாதது மட்டுமல்லாது ஒரு சந்தை வர்த்தகப் பண்டமாகவும் இருக்கிறது; ஆகவே, உணவு உரிமையை நிலைநிறுத்தவேண்டுமானால் நாட்டு மக்கள் ஒவ்வொரும் தமக்குத் தேவையான உணவைப் பெறுவதற்கான வழிகளை அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டும்; உணவு பெறுவதற்கு வேண்டிய வருமானத்தை ஈட்ட இயலாதோருக்குப் பொது வழங்கல் முறை மூலம் உணவுப் பண்டங்களை அரசு வழங்கவேண்டும்.

மக்கள் தம் விருப்பு வெறுப்புகளைச் சந்தை வர்த்தகத்தில் வெளிப்படுத்துவதற்குத் தேவையான வாங்குதிறன் (பண வசதி) பெற்றிருந்தால் மட்டுமே சந்தையானது மனித உரிமையை மதித்துச் செயல்படும். ஆகவே, குமுக வளம் ஒரு சிலரது கட்டுப்பாட்டில் குவியாமல் அனைவருக்கும் பரவலாகக் கிடைக்கும்வண்ணம் சட்டதிட்டங்கள் அமைந்தால் மட்டுமே மனித உரிமை என்பது செயல்பாட்டிற்கு வரும். ஆனால் இப்போது நிலைமை இதற்கு நேர்மாறாக உள்ளது. எடுத்துக்காட்டாக, உலக தானிய வர்த்தகத்தில் 90 விழுக்காடு நான்கு பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அத்தகைய முற்றுரிமையானது, சந்தையில் போட்டிகளே நேராமல் தடுப்பதன் மூலம் உலகில் உபரி விளைச்சல் இருக்கின்றபோதும் பசிப்பிணியை உருவாக்கும். மேலும், அதிகாரம் ஒரு சில தனிப்பட்ட மனிதர்களிடம் குவிகையில் அரசு திட்டக் கொள்கைகள் அந்தச் சிலருக்கே மேன்மேலும் பலனளிக்கும் வகையில் கட்டுப்படுத்தப்படும். எனவே, அரசியலில் பணக்காரர்களுடைய செல்வாக்கைக் கட்டுப்படுத்துதல் என்பது பசிப்பிணியைப் போக்குவதற்கு இன்றியமையாததொன்று; இவ்விரண்டும் ஒன்றோடொன்று தொடர்பற்றன அன்று.

கட்டுக்கதை 7: தங்குதடையற்ற வர்த்தக முறை பசியை ஒழிக்கும்.

உண்மை நிலை: 'உலகளாவிய வர்த்தகத்தில் ஒவ்வொரு நாட்டுக்கும் சில துறைகள் சாதகமானவை; அத்துறைகளில் அந்த நாடு பொருள்களை மலிவு விலையில் உற்பத்தி செய்ய முடியும்; அவற்றை ஏற்றுமதி செய்துவிட்டுத் தன்னால் மலிவு விலையில் உற்பத்தி செய்ய இயலாதவற்றை இறக்குமதி செய்துகொள்ளவேண்டும்' என்று ஒரு சாரார் கருதுகின்றனர். இது “ஒப்பீட்டுச் சாதகக்” கோட்பாடு எனப்படுகிறது. அரசுச் சட்டதிட்டங்கள், கட்டுப்பாடுகள் போன்றவற்றில் இருந்து விடுவிக்கப்பட்ட வர்த்தகம் பசியைப் போக்க உதவும் எனும் வாதம் மேற்கண்ட “ஒப்பீட்டுச் சாதகக்” கோட்பாட்டின் அடிப்படையில் உதிப்பது. இதன்படி, பசியும் வறுமையும் நிறைந்த நாடுகள் தம் புவியியலுக்கு உகந்த பண்டங்களின் ஏற்றுமதியை அதிகரித்து, அதில் ஈட்டும் அந்நியச் செலாவணியைக் கொண்டு தமக்குத் தேவையான உணவுப் பொருள்களையும் பிற இன்றியமையாத் தேவைகளையும் இறக்குமதி செய்துகொள்ளவேண்டும்; அதன் மூலம் பசியையும் வறுமையையும் ஒழிக்கலாம் என்பது இந்தக் கட்டுக்கதையின் சாரம்.

ஏற்றுமதிக்கு இத்தகைய பலன் இருக்குமானால் உலகில் பல நாடுகளின் ஏற்றுமதி அதிகரித்துக்கொண்டே போகும் வேளையில் பசியும் வறுமையும் தொடர்வது மட்டுமன்றி மேலும் மோசமாகிக்கொண்டே போவது எதனால்? பெரும் உழவர்கள், நாட்டிடை வர்த்தகத்தில் ஈடுபடும் பெருநிறுவனங்கள், அந்நிய முதலீட்டாளர்கள், மற்றும் ஏற்றுமதியால் ஈட்டும் உபரியை வறியோருடைய பசியைப் போக்குவதற்குப் பயன்படுத்துவதில் தமக்கு எவ்வித நன்மையும் இல்லை எனக் கருதுவோர் ஆகியோரே ஏற்றுமதியின் பலனை அடைகின்றனர் என்பதுதான் மேற்படி வினாவிற்குரிய எளிமையான விடையாகும். மேலும், பெரும்பாலான சமயங்களில் ஏற்றுமதிக்காக விளைவிக்கப்படும் பயிர்கள் உணவுப் பயிர்களையும் சிறு குறு உழவர்களையும் ஓரங்கட்டிவிடும். ஒரு நாட்டின் இயற்கை வளங்கள் மீது அந்நாட்டு மக்கள் அனைவருக்கும் சம உரிமை இருந்தால் மட்டுமே வர்த்தகம் வறியோருக்கும் பசியைப் போக்குவதற்கும் உதவும்.

கட்டுக்கதை 8: [வளரும்] நாடுகளுக்கு அமெரிக்கா உதவி செய்வது தான் பசியைப் போக்குவதற்கு உகந்த வழி.

உண்மை நிலை: ஒடுக்கப்பட்ட மக்கள் தம் எதிர்காலத்தைத் தாமே நிர்ணயிக்கும் அரசியற் பொருளாதார உரிமைகளைப் பெற உதவுவது தான் பசியைப் போக்கக்கூடிய ஒரே மந்திரம். ஆனால், அமெரிக்க அரசு தரும் உதவியில் பெரும்பங்கினைப் பெறும் நாடுகளில் உள்ள மேல்தட்டு மக்கள் அத்தகைய மாற்றங்களைத் தம் நலனுக்கு எதிரானதாகக் கருதுவதற்கான வாய்ப்பு அதிகம். மேலும், அமெரிக்க அரசு பிற நாடுகளுக்கு உதவுதல் என்பது அமெரிக்காவின் நலன்களைக் காத்துக்கொள்வதற்காக மட்டுமே! [பிற நாட்டு] மக்கள் நலனைக் கருத்தில் கொண்டதன்று. இதை அமெரிக்க ஆளும் வர்க்கம் வெளிப்படையாகவே அவ்வப்போது தெரியப்படுத்தியுள்ளது. எனவே “தேசிய நலன்” என்பதை ஆள்வோர் எப்படிப் புரிந்துகொள்கிறார்கள் என்பது முதன்மை பெறுகிறது.

அமெரிக்கா தரும் பிற உதவிகளைப் போலன்றி, “உணவு உதவி” மட்டுமாவது பசியால் வாடுவோருக்கு உதவக்கூடும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், 1954 முதல் அமெரிக்கா தரும் உணவு உதவியானது அமெரிக்கப் பெரு நிறுவனங்களின் நலனையே மனத்தில் கொண்டு செயல்படுகிறது: உணவு விளைவிப்பதில் தொடங்கி, பதப்படுத்துதல், பொட்டலங்கட்டுதல், பிற நாடுகளுக்குக் கொண்டு செல்லுதல் ஆகிய அனைத்துமே அமெரிக்க நிறுவனங்களால்தான் செய்யப்படும். இதன் விளைவாக அந்த உணவின் விலை அதிகரிப்பது மட்டுமன்றி அது பசியால் வாடுவோருக்கு உரிய நேரத்தில் கிடைக்காமல் தாமதமும் ஆகிறது. அமெரிக்க அரசு மற்றும் பெருநிறுவனங்கள் ஆகியவற்றின் கட்டுப்பாடுகளில் இருந்து மக்களை விடுவித்து நம் குமுகங்கள் அனைத்தையும் மக்கள்நாயகச் செயல்பாடுகளுக்கு உட்படுத்துவதற்குப் பாடுபடுவதன் மூலம் பசிப்பிணி ஒழிப்பில் நாம் பங்காற்றமுடியும்.

கட்டுக்கதை 9: பசி, வறுமை ஆகியன நம்மை பாதிப்பதில்லை; எனவே நாம் அவற்றைக் குறித்து கண்டுகொள்ளவேண்டியதில்லை.

நம் மறுமொழி: எல்லா நாடுகளிலும் பசியும் ஏற்றத்தாழ்வுகளும் அதிகரித்துவருகின்றன. உலகெங்கும் உள்ள தொழிலாளர்கள் குறைந்த கூலிக்கு உழைப்பதற்கு ஒருவரோடொருவர் போட்டியிடுவதன் முழுப் பலனையும் அடைபவை உலகளாவிய பெருநிறுவனங்களே. எனவே அவை தம் நலனுக்கேற்ற உலக வர்த்தக ஒப்பந்தங்களை உருவாக்குவதற்கு அரசுகளைப் பணிக்கின்றன. தொழிலாளர்கள் சங்கங்களில் ஒன்றிணைதல், பணியிட இடர்களில் இருந்து பாதுகாப்புக் கோருதல், சூழல் கேடுகளை உருவாக்கும் ஆலைகளை நிறுவுவதைத் தடுத்தல் உள்ளிட்ட அனைத்து முயற்சிகளையும் அவை முடிந்த அளவு எதிர்க்கின்றன. இந்நிலை நாளடைவில் உலக மக்களில் பெரும்பாலானோரைக் கடுமையாகப் பாதிக்கும் என்பது உறுதி.

கட்டுக்கதை 10: எந்தவொரு பருண்மையான மாற்றத்தையும் கொண்டுவர இயலாத அளவிற்கு ஒரு சிலர் வல்லமை பெற்றுவிட்டார்கள். இனி நம்மால் ஒன்றும் செய்ய முடியாது!.

நம் மறுமொழி: அரசியற் பொருளாதார ஆற்றல் மிகச் சிலரிடம் குவிந்திருப்பது உண்மையே. பழங்காலத்தைப் போலப் பண்ணையடிமை முறைக்கு நாம் திரும்பிச் சென்றுகொண்டிருப்பதாகக்கூடச் சிலர் கருதுகின்றனர். பண்ணையார்களுக்கு மாறாக இப்போது பன்னாட்டுப் பெருநிறுவனங்கள் உள்ளன. ஆனால், பண்ணையடிமை முறை எப்படி முடிவுக்கு வந்தது என்பதை நாம் நினைத்துப் பார்க்கவேண்டும். மக்கள் அந்த முறை மீதிருந்த தம் நம்பிக்கையை விலக்கிக்கொண்டதுதான் அது முடிவுற்றதற்குக் காரணம். அதுபோலவே, உலகெங்கும் உள்ள மக்கள் தம்மைத் தலை தூக்க விடாது அழுத்திக்கொண்டிருக்கும் இந்த அரசியற் பொருளாதார முறை மீதான தம் நம்பிக்கைகளை விட்டொழிக்கத் தொடங்கியிருக்கும் காலம் இதுவாக இருக்குமோ?

அடிப்படை மாற்றம் தொடங்கியிருக்கிறது என்பது உறுதி. தம் செயலாற்றல் தாம் இதுவரை உணர்ந்திருப்பதைக் காட்டிலும் மிக அதிகமானது என்பதை மேன்மேலும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் உணர்ந்துவருகின்றார்கள். நம் புத்தாக்கத்திறன், நுழைபுலம் (நுண்ணறிவுத்திறம்), இடுக்கணழியாமை (துன்பங்களைக் கண்டு அஞ்சாமை), அறிவு, பிறர்துயர் கண்டு இரங்கும் பண்பு, விருப்பங்கள், சுற்றியிருப்போருடன் நம்மை இணைத்துக்கொள்ளும் மனநிலை உள்ளிட்ட பலவற்றைப் பொருத்து அது ஏற்ற இறக்கங்களுடன் அமைகிறது. நம் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு வலு இருக்கிறது என்பதை நாம் உணர உணர நம் செயலூக்கமும் வலுப்பெறுகிறது.

இந்த உண்மைகளை நாம் புரிந்துகொண்டால் நம்மால் என்னவெல்லாம் சாதிக்கவியலும் என்பதை நாம் முன்கூட்டியே அறிய முடியாது என்பதை நாம் உணர்வோம். “செய்யவே முடியாது!” என்று கருதப்பட்ட ஒன்று செயல்படுத்தப்பட்ட நிகழ்வுகள் பலவற்றைக் குறித்து நாம் ஒவ்வொருவரும் அறிந்திருப்போம்.

இந்த மாதிரி நேரங்களில் மனத் துணிவுதான் தலையாய தேவை. செயல்படுத்தவேண்டிய தீர்வில் நாமும் பங்கேற்க விழைந்தால் இடர்களை எதிர்கொள்ளும் துணிவு நமக்கிருக்கவேண்டும். “இயல்பானவை” என்று நாம் இதுகாறும் நினைத்தவற்றைக் கேள்விக்கு உட்படுத்திப் புதுப்புதுக் கோணங்களில் சிந்திப்பதற்கும் அத்தகைய துணிவு தேவை. எவ்வித வலுவும் இல்லாதவர்கள் கூடப் பலப்பல சமயங்களில் தம்மை அடிமைப்படுத்தியிருந்த பெரும் வல்லமைகளை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்ற நிகழ்வுகளில் இருந்து பாடங் கற்றுக்கொள்வதற்கு நாம் முயலவேண்டும்.

நன்றி: Frances Moore Lappe and Joseph Collins., “World Hunger: Ten Myths”, Food First Backgrounder, Institute for Food and Development Policy, Vol. 21, No. 2, Summer 2015

[ thiru.ramakrishnan@gmail.com | 9442560429 ]

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org