வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி


சிவப்பு மூக்கு ஆள்காட்டி

Red-wattled Lapwing (Vanellus indicus)

படம் உதவி: சாந்தனு குவேஸ்கர்

தோற்றம்

35 செ.மீ அளவு நீளம் இருக்கும். கண்களைச் சுற்றியும், மூக்கும் சிகப்பாக இருக்கும்.இரு கண்களிலிருந்து புருவம் போன்று சிகப்புக் கோடு மூக்கிடம் சேரும். தலை மேற்பகுதியும், கழுத்துப் பகுதியும் கருமை நிறத்தில் இருக்கும். கண் முதல் உடம்பு வரை வெள்ளை நிறத்தில் இருக்கும். சிறகின் மேற்பகுதி பழுப்பு நிறத்திலும், அதன் பிறகு வெண்மை நிறத்திலும், அதன் பிறகு கருப்பு நிறத்திலும் அழகாக அமைந்திருக்கும். சிறகின் அடிப்பகுதி வெள்ளை நிறத்திலும் வாலின் அடிப்பகுதியில் ஆங்காங்கே கருமை நிறத்திலும் இருக்கும். கால்கள் நீண்டு ஒல்லியாக மஞ்சள் நிறத்தில் இருக்கும். மூக்கு கூர்மையாகவும், சிகப்பாகவும் நுனியில் கருப்பு நிறத்திலும் இருக்கும். ஆண், பெண் ஒரே தோற்றத்தில் இருக்கும்.

காணும் இடம்

துருக்கி முதல் தாய்லாந்து வரை இவற்றைக் காணலாம். இந்தியா முழுவதும் காணலாம். குளம், குட்டை, வாய்க்கால், ஏரி ஆகிய கரை ஒரங்களில் இவற்றை அதிகமாகக் காணலாம். ஈரமான நிலப்பகுதியில் தான் இவை பெரும்பாலும் தென்படும்.

உணவு

கரையோரங்களில் இருக்கும் நத்தைகள், பூச்சிகள், புழுக்கள்,மரத்திலிருந்து தண்ணீரில் விழும் பழங்கள், சில சமயங்களில் தானியங்கள் போன்றவற்றை உண்ணும். இவை இரவு நேரங்களிலும் உணவைத் தேடி உண்ணும். பெரும்பாலும் முழு நிலவு அன்று கரையோரங்களில் தன் உணவைத் தேடி அவை வருவதைக் காணலாம்.

இனப்பெருக்கம்

பங்குனி முதல் ஆடி வரை இனப்பெருக்கத்தில் ஈடுபடும். மூன்று முதல் நான்கு முட்டைகள், கருமை நிறத்தில் இடும். பெரும்பாலும் கரையோரங்களில் உள்ள வங்குகளிலும், மரங்களிலும், சில நேரங்களில் தண்டவாளக் கற்கள் இடையிலும் முட்டையிடும். எளிதில் அடையாளம் காண முடியாதவாறு கூட்டைக் கட்டும். 28 முதல் 30 நாட்களில் குஞ்சு பொறித்து விடும். அவ்வப்போது குளங்கள், குட்டைகளில் உள்ள நீரில் நன்றாக குளித்துப் பின் ஈரச் சிறகால் சூட்டைக் குறைத்து தன் முட்டைகளை அடைகாக்கும்.

குறிப்பு

1.இதற்கு ஏன் ஆள்காட்டி என்று பெயர் வந்தது என்றால் மனிதர்கள் வந்தால் எச்சரிக்கை செய்ய குரல் கொடுக்கும். Did-he-do-it என்று ஆங்கிலத்திலே வினவுவது போல் குரல் எழுப்பும்

2.இரவு நேரங்களில் தன் உணவை வேட்டையாடும் சில பறவைகளில் இவையும் ஒன்று.

3.இவை ஒரிடத்தில் நிற்காமல் நடந்து கொண்டே இருக்கும்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org