நம்மிடையே உள்ள நாயகர்கள் - செம்மல்


இம்மாத நாயகர்களைச் சந்திக்க நாம் மதுராந்தகம் செல்லும் பேருந்தில் பயணப் பட்டுக் கொண்டிருக்கையில், உடன் வந்த நண்பர் நம் தொடரில் நாம் போதுமான அளவுக்கு பொருளாதார விவரங்களைக் கொடுப்பதில்லை என்பதைச் சுட்டிக் காட்டினார். நாம் நம் தொடரில் இது பற்றி உண்மையில் சிறிதளவும் கவனம் செலுத்தவில்லை என்பதை ஒத்துக் கொண்டோம். சில வாசக அன்பர்களும் இது பற்றி நம்மிடம் உரையாடியுள்ளனர் என்று அவருக்குத் தெரிவு படுத்தினோம். எனினும் நம் தொடரின் நோக்கமே வழக்கமான காசு, சொத்து போன்ற விடயங்களைக் கடந்தது.

நாம் கண்டு வரும் நாயகர்கள் ஒவ்வொருவரும் எவ்வாறு இவ்வெண்ணங்களில் இருந்து விடுபட்டு, வாய்ப்புகள் இருந்த போதிலும் புறப் பொருள் தேடலை ஒதுக்கி, தேவைகளுக்கும் ஆசைக்கும் உள்ள பாகுபாட்டை ஆய்ந்து உணர்ந்து, மகிழ்ச்சியான வாழ்வுக்கு இயற்கை வாழ்வே சிறந்த வழியென்று முடிவெடுத்தவர்கள். சுற்றுச்சூழலினைப் பேணுவதில் ஒரு தனி மனிதனின் பங்கு பெருமளவு உள்ளது என்று முழுமையாய் நம்புபவர்கள். இத்தொடரில் நம் பணி அதையொட்டியே இருக்க வேண்டுமென்ற நம் அவாவை அவருக்குக் கூறினோம். மதுராந்தகத்தில் இறங்கி, இம்மாத நாயகர் திரு. சிரீராம் அவர்களை அலைபேசியில் அழைத்தோம். அவர் அச்சமயத்தில் அவர்களது கிராமத்துக்கு வர பேருந்து இல்லையென்றும், அருகில் உள்ள தானிகள் (ஆட்டோ) நிறுத்தத்தில், இராமு என்னும் நண்பர் இருப்பார் அவருக்கு த‌ம் பண்ணைக்கு வழி தெரியும் என்றும் பதிலுரைத்தார். நாம் தேடுமுன்னரே, இராமு அவர்கள் தானியுடன் நம் அருகில் வந்து, “செல்வோம் வாருங்கள், கற்பகம் அவர்களின் விருந்தினர் தானே” என்று நம்மை வண்டியில் ஏற்றிக் கொண்டார். மதுராந்தகத்தில் இருந்து சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜமீன் எண்டத்தூர் கிராமத்தில் வசிக்கிறார்கள் சிரீராம் கற்பகம் தம்பதியினர்.

நாம் சென்ற போது, பண்ணையின் ஒரு பாகத்தில் சேற்றுழவுப் பணி நடந்து கொண்டிருந்தது. ராம் பணியாளாருடன் இணைந்து இயங்கிக் கொண்டிருந்தார். எங்களைக் கண்டதும் வந்து வந்தனம் தெரிவித்து விட்டு மீண்டும் பணியைத் தொடர்ந்தார். கற்பகம் தம் பெற்றோரைக் காண முன் தினம் சென்னை சென்றிருக்கிறார், இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு விட்டார் என்ற செய்தியை முன்னமே அறிந்திருந்தோம்.

ராம், இந்தியாவின் தலையாய பொறியியல் கல்வி நிறுவனமான ஐ ஐ டி யில் பொறியியல் கல்வி பயின்றவர். அதன் பின் மேலாண்மையில் பட்ட மேற் படிப்பும் படித்தவர். அக்கல்வியும், நம் நாட்டின் சிறப்பு வாய்ந்த‌ ஐ ஐ ம் கல்வி நிறுவனத்தில். படித்தவுடன் ஒரு பெரிய தொழில் வணிக நிறுவனத்தில் மும்பாய் நகரத்தில் பணி மேற்கொண்டார். மூன்று நான்கு வருடங்களில் தாம் செய்யும் பணியின் அர்த்தமற்ற வெறுமை அவரைச் சலிப்புக்குள்ளாக்கியது. அவரது கண்ணோட்டத்தில், செய்யும் பணிக்கு அவருக்குக் கொடுக்கப் படும் ஊதியம் மிக அதிகமானதாகத் தோன்றியது. எத்தனையோ மனிதர்கள், தம் ஒரு நாள் உணவுக்கு தினம் அல்லல் படுவதை காணும் போதெல்லாம், தாம் ஏதோ தவறிழைப்பதாக ஒரு உள்ளுணர்வு. ஒரு தருணத்தில், அப்பணியை விட்டொதுங்கி, மும்பாயில் பொது நல சிந்தையுடன் செயலாற்றிக் கொண்டிருந்த‌ ஒரு கல்விச் சேவை நிறுவனத்தில் இணைய முடிவு செய்தார். அந்த நிறுவனம் சில கல்வி ஆர்வலர்களால் நிறுவ பட்டு, மும்பாயில் வசிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு அவர்களைக் கல்வியில் மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தது. அவ்வமைப்பில் ராம் அவர்கள், மும்பாய் மாநாகராட்சி கல்வித் துறையுடன் இணைந்து மாநாகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, கல்வி மேம்பாட்டிற்கான ஒரு திட்டத்தை வகுத்து, அதனைச் செயல் படுத்துவதில் முழு மூச்சுடன் ஈடு பட்டார். ராம், அந்த நாட்களைப் பற்றி பேசும் போது, “அந்த நான்கைந்து வருடங்கள் மிக இனிமையானவை. அதைப் போல கூடுதல் எண்ணிக்கையில் பலதரப் பட்ட குழந்தைகளுடன் பழகும் வாய்ப்பு ஒரு பேறு என்றே சொல்ல வேண்டும். அவர்களின் புரியும் திறனும், அறிவு நுட்பமும் என்னை பலமுறை வியப்புக்குள்ளாக்கியுள்ளன.” என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

ராமின் பணி திட்டமிட்ட இலக்கை நோக்கி சரியான பாதையில் சென்று கொண்டிருந்ததது. அந்தத் தன்னார்வ நிறுவனமும் வளர்ந்து வந்தது. ராம் அவர்களின் கண்ணோட்டத்தில் அந்த வளர்ச்சி, சில எதிர்பாராத அவசியமற்ற மாற்றங்களை உருவக்கியது. புதியதாக இணைந்த சில நபர்கள் முக்கியமான முடிவுகள் எடுக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். இதுகாறும் கல்வி நோக்கம் மட்டுமே கொன்டு எவ்வித ஆரவாரமும் இன்றி செயல் பட்டது மாறி - விளம்பரங்கள், பறை சாற்றல், நிதியுதவிக்காக பெரு நிறுவனங்களின் ஆதரவு நாடல் - என தொண்டு நிறுவனத்தின் பாதை விலகத் தொடங்கியது. பணியாற்றியவர்க்கெல்லாம் பன்ம‌டங்கு ஊதிய உயர்வு வழங்கப் பட்டது

நமக்கு ஒரு ஐயம் தோன்றியது. “அதிலென்ன தவறு? ஊதிய உயர்வு என்பது, இதுகாறும் பிறர் நலன் கருதி உழைத்தோருக்கு, ஒரு சரியான ஆமோதிப்பு தானே?” என்று வினவினோம்.

ராம் மறுதலித்தார். ” நாங்கள் யாருமே ஊதியத்துக்காக இப்பணிக்கு வந்தவர்கள் அல்ல. அதிக வருவாய் பெறுவது தான் எங்கள் நோக்கமெனில், வேறெங்காவது பெரு நிறுவனங்களில், மிகக் கூடுதலாய்ப் பணம் ஈட்டியிருப்போம். இந்தச் செயல் புதிதாக வந்தவர்கள் தம் ஊதியத்தை உயர்த்த வகுத்த திட்டம் என்பது என் எண்ணம். ஆகவே நான் அந்த அமைப்பில் இருந்து விலகி விட்டேன். பின்னர் என் ஐயம் சரியென்னும் வண்ணம் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. எனினும் அதைப்பற்றி நான் குறை கூறவில்லை. எனக்கு அதில் உடன்பாடில்லை, அவ்வளவே.” நாங்கள் உரையாடிக்கொண்டிருக்கையில் கற்பகம் வந்து சேர்ந்தார். அறிமுகத்துக்கு பின், அவரும் எங்கள் பேச்சில் கலந்து கொண்டார். கற்பகம் சென்னையில் கல்லூரியில் படிக்கும் பொழுதே, கல்விக்கு உதவும் பணிகளில் பங்கேற்றவர். அவரது ஒவ்வொரு வார இறுதியிலும், கல்லூரியில் இருந்து நண்பர்களுடன் காஞ்சீபுரத்தில் சில கிராமங்களுக்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு பாடம் பயிற்றுவித்தவர்.

அவர் கல்லூரி படிப்பு முடிந்ததும், மும்பாயில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கும் தன் வார இறுதி தன்னார்வ பள்ளி வேலையை மேற்கொள்ள எண்ணும் போது ராம் அவர்களைச் சந்தித்துள்ளார்.

ராம் உங்களுக்கு ஏதேனும் வழிமுறைகள் சொல்லித் தந்தாரா என்று கேட்டோம். கற்பகம், சிரித்துக் கொண்டே “இப்பொழுது தான் மும்பாய்க்கு வந்திருக்கிறாய். இங்குள்ள வேக வாழ்க்கைக்குள் மாட்டி கொள்ளாமல், விரைவாக இந்த நகரத்தை விட்டுச் சென்று விடு என்பது தான் அவர் எனக்குரைத்த வழி.” என்றார்.

கற்பகம், ராம் தம் திருமணத்திற்கு பிறகும் சில ஆண்டுகள், மும்பாயில் வாழ்ந்திருந்தனர். பிறகு சென்னை திரும்பி, முதிய இயற்கை விவசாயி / சுற்றுச்சூழல் ஆர்வலர், திரு. D. V. சிரீதரன் அவர்களின் பண்ணையில் சில காலம் விவசாய வாழ்க்கைக்கு முன்னோட்டம் பார்த்திருக்கின்றனர். (அன்பர் D. V. சுமார் இருபது ஏக்கரில் ஒரு இயற்கை விவசாயப் பண்ணை வைத்திருக்கிறார். அவரைப் பற்றி மற்றொரு சமயம் காண்போம்). பின்னர், இவ்வூரில் நிலம் வாங்கி இப்பொழுது இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர். அவர்களே வடிவமைத்த சிறிய வீட்டினைப் பற்றி முன்னரே நம் நண்பர் எழுதியது உங்களுக்கு நினைவிருக்கலாம். இருவருமே இயற்கை வேளாண்மையில் நுட்பங்களை நன்கறிந்தவர்கள். எளிமையே இனிமை என்ற சிந்தாந்த்தில் முழு நம்பிக்கை உள்ளவர்கள். அவர்களின் எளிமைக்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு, இருவரும் சேர்ந்து ஒரு அலைபேசியே வைத்துக் கொண்டிருக்கிறனர். ஒவ்வொரு மனிதரும் இரணடு மூன்று அலைபேசிகளை சுமந்து திரியும் காட்சியை நாம் தினசரி காணும் இக்காலத்தில் இது வியக்க வைக்கும் எளிமையன்றோ.

அவர்களின் தலைமைப் பண்பு அங்குள்ள மக்களுக்கு மிகுந்த பயனளிப்பதாக இருக்கும் என்பது நம்க்கு நன்றாக விளங்குகிறது. அக்கிராமத்தில் உள்ள சில இளைஞர்கள் இயந்திர கலப்பை வாங்க வங்கிக் கடனுக்கு முயற்சித்த போது, சில தரகர்கள் தாம் கடன் பெற்று த‌ருவதாகக் கூறி, அதற்கு முன்பணம் கேட்டிருக்கிறார்கள். இது பற்றி அறிந்த கற்பகம், இடையிட்டு, தரகர்கள் கூற்று பொய்யென்பதைக் கண்டு கொண்டு, அவ்விளைஞர்கள் இன்னலுக்காளாகாமல் காத்திருக்கிறார். அதிக வட்டிக்கு கடன் பட்டிருந்த வேறோர் குடும்பத்திற்கு தக்க சமயத்தில் பண உதவி செய்துள்ளனர்.

உலகப் பொருளாதாரத்தின் அழிவுப்பாதை, நரக மயமாக்கலின் தீமைகள், கல்வியில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் என்று பல விடயங்களைப் பற்றி தம்பதியர் ஆழ்ந்த அறிவு கொண்டிருக்கிறனர். ராம் விவசாயிகள் எவ்வாறெல்லாம் வேதிமுறை பயிர் வளர்ப்பால் இடர்படுகிறார்கள் என்பது பற்றி பல நுணுக்கமான செய்திகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார். வியாபாரிகள் ஆதிக்கத்தில் உள்ள உணவுப் பொருள் விலை நிர்ணயம் எவ்வாறு வேளாண் தொழிலையே பாதிக்கிறது என்று நன்கு புரிந்து வைத்துள்ளார். அவர் கருத்துப்படி, “உலகெங்குமே விவசாயிகளுக்கு உரிய மதிப்போ, உழைப்புக்கு தகுந்த வருமானமோ கிடைப்பதில்லை. அதற்கு காரணம் உலகச் சந்தைமயமாக்கலே. யாவுமே உள்ளூர்ச் சந்தைக்கு மாற்றப்படுதல் சரியான தீர்வாகும். கிராமப்புறத்தை அடிப்படையாய் கொண்ட சிறு தொழில்கள் ஒரு மிகச் சிறந்த வழி.”

அவர்கள் இருவரின் கருத்துப் பரிமாற்றத்தில் ஒரு தீவிரம் தெரிகிறது. ஏமாற்றப்படும் எளியவர்களை தம்மால் இயன்ற அளவு காக்க வேண்டும் என்ற உறுதி புலப்படுகிறது. பேராசைக்கு ஆட்பட்டு மனித இனம் தம் அழிவுப்பாதையைத் தானே ஏற்படுத்திக்கொள்வது பற்றி ஒரு நியாயமான சினம் வெளிப்படுகிறது. அவர்கள் உலகத்தை, பறவைகளை, மற்ற உயிரினங்களை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பது மிக்க மகிழ்ச்சியடைய செய்கிறது.

சுமார் ஐந்து அல்லது ஆறு மணி நேரம் அவர்களுடன் உரையாடி விட்டு, இருளில் பயணித்து, நிறைந்த மனத்துடன் சென்னை வந்தடைந்தோம்.

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org