தரம்பால் கண்ட இந்தியா - ராம்


[கட்டுரையாளர் தரம்பாலுடன், அவர் வாழ்நாளில் நெருங்கிப் பழகியவர். காந்திய சிந்தனையாளர்களுள் அதிகம் அறியப்படாத ஒரு மிகச் சிறந்த சிந்தனையாளர் திரு.தர‌ம்பால். அவரையும், அவரின் எழுத்துக்களையும் தாளாண்மை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மிகுந்த மகிழ்வடைகிறோம். - ஆசிரியர்] இந்தியாவின் வரலாற்றை படிக்க கற்றுத்தந்த காந்தியவாதி

தரம்பால் எங்கின்ற ஒரு உண்மையான காந்தியவாதியை சந்தித்ததும், அவருடைய வாழ்வின் கடைசி 7 வருடங்கள் அவருடன் சிறிதளவும் வேலை செய்யவும், மற்றும் அவருடைய சிந்தனைகளை அருகாமையிலிருந்து உணரவும் வாய்பு எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு ஆசியாகவே நாங்கள் கருதிகிறோம்.

இந்த காந்தியவாதி மேற்கொண்ட “உண்மை அறிதல்” என்ற ஒரு வாழ்க்கைப் பயணம், இன்று இந்தியா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது. அவரது வரலாற்று ஆராய்ச்சியும், அதன் முடிவாக பதிப்பில் முடிந்த சில புத்தகங்களும், அவற்றுள் ஊறும் அவரது ஆதங்கமும், சிந்தனை முத்துக்களும் இன்றும் இந்தியாவின் பல கோடியில் உள்ள பலரை தனிப்பட்ட அளவிலும், பல நிறுவனங்களின் ஆராய்ச்சி நோக்குகளிலும், சமூகபணியில் ஈடுபடுவோர் அணுகுமுறைகளிலும், தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.

தரம்பால் ஒரு வரலாற்று வல்லுனரோ அல்லது ஆசிரியரோ இல்லை. இவருக்கு ஆராய்ச்சி செய்வதிலும் எந்தப் பயிற்சியும் கிடையாது. இருந்தும் 1950களில் துவங்கி அவர் மறைந்த 2006 வரை, ஏறத்தாழ 50 வருடங்களில் அவர் அயராது உழைத்தும், எழுதியும், பகிர்ந்தும் வந்த பல சிந்தனைகள் இன்று பல்கலைகழகங்களில் வரலாற்றுப் பாடமாகவும், ஆராய்ச்சிகளுக்கு திசைகொடுக்கும் கலங்கரை விளக்காகவும் விளங்குகின்றது.

சரி, அப்படி என்னதான் இந்த தரம்பால் செய்தார்?

இதற்கு நமது நாட்டின், அல்லது நாகரீகத்தின் (தரம்பால் என்றுமே இன்றைய இந்திய நாட்டை அதன் நாகரீகத்தின் பின்புலத்திலிருந்து பிரித்து பார்த்ததில்லை) வரலாற்றை நாம் எவ்வாறு கற்கின்றோம் மற்றும் உணர்கின்றோம் என்று சிறிது அலசுவது அவசியம்.

வரலாறு உணர்தல்…

இந்தியாவில், நமது வரலாற்றை நாம் 4 வகையாக உணர்கின்றோம் – (1) நமது குடும்ப, சாதி, சமூக மற்றும் சொல்வழி உணரும் வரலாறு, (2) நமது கலை, கலாச்சாரம், பண்பாட்டு தளங்கள் மூலமாக நாம் உணரும் சமூகம் சார்ந்த வரலாறு, (3) பள்ளிகளில் போதிக்கப்படும் வரலாறு, மற்றும் (4) நாமாக சுதந்திரமாக ஊடங்களின் மூலமாகவும், இதர பதிப்புகளின் மூலமாகவும் உணரும் வரலாறு. இதில் முதல் மற்றும் இரண்டாவது வகை, இதிகாச, புராண வகையை பெருமளவில் கொண்டதாகவும், மூன்றாம் வகை மேற்கத்திய ஆய்வுகளை சார்ந்தும் அவற்றைபோலவே செய்யப்பட்ட இந்திய ஆய்வுகளையும் சார்ந்து உள்ளது, நான்காம் வகை இவை இரண்டையும் சார்ந்து உள்ளது. முதல் இரண்டு வகை வரலாற்று உணர்தல் பெரும்பாலும் சொல்வழியாகவே அமைகின்றது. ஆனால் இத்தகைய வரலாறு கற்றல் இன்றைய நவீன வாழ்கை முறையில் இல்லாமலே போகின்றது, பள்ளிக்கூடங்களில் போதிக்கப்படும் மூன்றாம்வகை வரலாற்று கல்விதான் “உண்மை வரலாறு” என்று பல தலைமுறைகளாக நாம் நம்புகின்றோம். இந்த வரலாறோ வெள்ளையன் நமது துணைகண்டத்தை ஆட்சிசெய்தபோது, நமது மக்களை அடிமைகளாகவே தக்கவைத்துக்கொள்ள ஏற்படுத்திய திட்டத்தின் நிழலில் சமீபகாலம்வரை எழுதப்பட்டு வந்தது. இதனை துவங்கியபோது மேற்கத்திய வல்லுனர்கள் மற்றும் வரலாற்றாலர்கள் அவர்களது வரலாற்று, சமூக, கலாச்சார, தொழில்நுட்ப புரிதலுடன் இந்தியாவை வர்ணித்தார்கள் மற்றும் சித்தரித்தார்கள்.

அதாவது, ஐரோப்பா எங்கின்ற “ஒரு குறுகிய பரப்பளவில் அவர்களது அனுபவங்களையும், அதன் அடிப்படை சித்தாந்தங்களையும், கூறுகளையும் கொண்டு தராதரமற்ற மூர்கத்தனத்துடனும், தார்மீகமற்றமுறையிலும், இதர அனைத்து உலக அனுபவங்களையும் அளக்கவும், வர்ணிக்கவும் மற்றும் மாற்றி அமைக்கவும் பயன்படுத்தபட்டுள்ளது” (கிளாடு அல்வாரிஸ் எழுதிய, “டீகாலனைஸிங்க் ஹிஸ்டரி” எங்கின்ற புத்தகத்தின் அறிமுகத்திலிருந்து). இதனாலேயே, “நமது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்கின்றோம், அவனுக்கு முதலில் போதிக்கப்படுவது, அவன் தந்தை முட்டாள் என்பது, அடுத்தது, அவன் தாத்தா ஒரு பித்தன் என்பது, பிறகு, நமது ஆசான்கள் அனைவரும் பித்தலாட்டகாரர்கள் அடுத்து நமது மரபுவழி புத்தகங்கள் யாவையும் பொய்” என்று 120 ஆண்டுகளுக்கும் முன்னர் விவேகானந்தர் விவரித்தார் (சென்னையில் பிப்ரவரி 14, 1897ல் நிகழ்த்திய ‘இந்தியாவின் வருங்காலம்’ எங்கின்ற சொற்பொழிவில்). இன்றும் இந்த நிலையில் இருந்து மாறவில்லை. இந்த விதத்தில் எழுதப்பட்ட வரலாற்று மற்றும் சமூகவியல் படைப்புகளை, “இயூரோஸென்ட்ரிக்” அல்லது, “ஐரோப்பா மைய உலகநோக்கு” என்று இன்று அழைக்கின்றனர். முன்பு ஐரோப்ப வரலாற்று கூறுகளை கொண்டு நமது சமூகத்தை நோக்கிய நாம், இன்று அமெரிக்க மனோதத்துவரீதியிலான ஒரு குறுகிய கண்ணோட்டத்தை கொண்டுதான் நமது அனுபவங்களை வருணிக்கவும், ஆராயவும் முற்படுகின்றோம். இதனை பின்னொரு சமயத்தில் இன்னமும் விரிவாக‌ எழுதுகின்றேன். இப்பொழுது தரம்பாலின் கதையை தொடர்வோம்.

மேற்கத்திய ஆதிக்க வரலாற்று முறை

மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்கள் தங்கள் குறுகிய உலக புரிதலை கொண்டு விஸ்தாரமான உலக வரலாற்றை எழுத துவங்கியகாலத்தில், இந்தியாவை குறித்த அவரகளது புரிதலுக்கு பல சவால்கள் இருந்தன - (1) இந்தியாவில் அவர்கள் ஏற்கும் விதத்தில் ஒவ்வொரு வரலாற்று நிகழ்வுக்கும் சான்று கிடைக்காதது, அதாவது அவர்கள் ஒப்புக்கொள்ளும் சான்றுகள். (2) ‘வரலாறு என்றும் வெற்றிகொண்டவனின் மாண்பே’ என்பதன் உதாரணமாக, அவர்கள், ஒரு சமூகமாகவோ, நாகரீகமாகவோ, இந்தியா ஐரோப்பாவைவிட மிக அதிக அளவில் முன்னேறியிருக்க வாய்ப்பில்லை என்பதை நம்பியிருந்தனர், இதனாலேயே பல இந்திய நாகரீகத்தின் அபரிமிதமான முன்னேற்றங்களை நம்ப மறுத்தனர் மற்றும் (3) இந்தியாவின் பரந்த பன்மையத்தை ஒருபோதும் முழுமையாக கிரகிக்க இயலாத அவர்கள், ஆங்காங்கே கிடைத்த ஆவணங்களை கொண்டு பொதுப்படையாகவே தங்கள் வரலாற்றை ஆய்வுகளை அமைத்ததால், அதில் அவர்களுக்கு ஒத்துவராத பதிவுகளை பொய்யெனவும், புனைவுவென்றும் எளிதில் சித்தரித்து புரந்தள்ளினர். தரம்பாலின் காலத்திலேயே அவரைப்போலவே மலேசிய சரித்திரத்தை மாற்றி எழுதிய, முனைவர். சயீத் அலாதாஸ், இதனுடன் இன்னமொரு சிக்கலையும் சேர்க்கின்றார், அது, அரசியல் சித்தாந்தம். பெரும்பாலான ஆங்கிலேய சரித்திர எழுத்தாளர்கள் அவர்களது அரசியல் சித்தாந்தத்தின் கண்ணாடிகளை பொருத்திக்கொண்டுதான் இதர நாகரீகங்களின் சரித்திரத்தை எழுத முற்பட்டனர். இந்த தாக்கம், நமது நாட்டவர்கும் இன்று பொருந்தும் என்பது ஒரு கசப்பான உண்மை.

முந்தைய ஆங்கிலேயரின் ஆவணங்கள்

ஆனால், இந்தியாவில் வர்தகம் செய்வதற்காகவே நுழைந்த, கிழக்கு இந்தியா கொம்பனியின் (கி.இ.கொ.) முதல் சிப்பந்திகள் இந்தியாவை அடிமைப்படுத்தும் நோக்கோடு பார்க்கவில்லை, அவர்களில் பெரும்பாலானவர்கள் வெறும் கொள்ளையர்கள். தாங்கள் இந்தியாவில் பார்த்த வளத்தையும், பல சமூக வர்ணணைகளையும் இவர்கள் ஆவணங்களில் பதிவு செய்து இங்கிலாந்திற்கு அனுப்பலாயினர். அவர்களில் பலர் இந்தியாவின் சமூகத்தையும், கலாசாரத்தையும், கலைகளையும் மிகவும் வியப்புடனும், விரிந்த கண்களுடனும் நோக்கியதாகவே அவர்களது ஆவணகுறிப்புகளை கொண்டு அறிய முடிகின்றது. தங்கள் நாட்டிற்கு முடிந்தவரை இந்தியாவிலிருந்து கொள்ளையடிக்கவே அவர்கள் கவனம் இருந்தது. பெரிய படைகளை கொண்டு, தங்கள் நாட்டு பிரஜைகளை ஆக்கிரமிப்பு செய்யவிட்டு இந்தியாவை ஆட்சி செய்யவேண்டும் எங்கின்ற எண்ணம் என்றும் ஆங்கிலெயருக்கு இருந்ததாகவே தெரியவில்லை.

1780களில் இதனைகுறித்த பல சர்சைகளை பிரிட்டனில் நடந்து கொண்டிருந்த பொழுது, முனைவர். ஆடம் ஃபெர்கூசன் மிகவும் தெளிவாகவே, இந்தியாவை ஆளவேண்டியது அந்த நாட்டில் மிக அதிகமாக விளையும் பொருட்களையெல்லாம் இங்கிலாந்திர்க்கு கொள்ளையடிக்கவும், பலவிதங்களில் இந்தியர்களிடமிருந்து வரிகளை வசூலித்து இங்கிலாந்து நாட்டின் வருமானத்தை இன்னமுன் கூட்டவும்மே இன்று வாதிக்கின்றார்.

1600 முதல் 1757வரை வெறும் வர்த்தகத்தைத் தனது இலக்காக கொண்ட கி.இ.கொ. இயங்கியதாக (ஆங்கிலேயர் எழுதிய) வரலாறு கூறினாலும், அந்த கொம்பெனி தன்னிச்சையாக இயங்கவில்லை. பல காலகட்டங்களில், பிரிட்டீஷ் கப்பற்படையும், காலாட்படையும் அந்தக் கொம்பெனிக்குத் துணைபுரியவும், தலைமை தாங்கவும் செய்தனர் என்பது உண்மை. முனைவர். ஆடம் ஃபெர்கூசன் இதனை பற்றி எழுதும்பொழுது, “ஒரு நாட்டை இங்கிலாந்து நேரடியாக ஆட்சிசெய்யுமேயானால், ஆட்சிசெய்யும் அரசாங்க சிப்பந்திகள் இங்கிலாந்தின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும். ஆனால், கொள்ளையடிப்பதை நோக்கமாக கொண்டுள்ள ஒரு கும்பல் பல நேரங்களில் சட்டங்களையும், நியதிகளையும் உடைத்துதான் ஆதிக்கத்தை நிலைநாட்ட முடியும், ஆகையால், கி.இ.கொ. ஆட்சியியை நடத்தவும், அதற்கான அனைத்து உத்திரவுகளையும் பிரிட்டீஷ் அரசாங்கம் நிர்ணயிக்க வேண்டும், ஆனால், கொம்பெனி சிப்பந்திகள் எந்த வரம்புகளையும் உடைத்து பணமும், வளமும் சேர்க்கும் பொழுது, அரசாங்க அதனை கண்டுகொள்ளாத விதத்திலும் இருக்கவேண்டும்”, என்று வாதிடுகின்றார். அதுபோலவே 1784ஆம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் அரசாங்கம், “போர்டு ஆஃப் கமிஷ்னர்ஸ்” எங்கின்ற 7 பேர் கொண்ட ஒரு குழுவை நியமிக்கின்றது. இந்த மிக முக்கியமான, மற்றும் சக்திவாய்ந்த குழுவில், பிரிட்டிஷ் பிரதம மந்திரியும் ஆரம்ப காலங்களில் முக்கிய உறுப்பினராக இருந்தார். அன்று முதல் 1857 வரை, இந்த போர்டு அறிவுரையின்பேரில் தான் கி.இ.கொ.வின் “போர்ட்” இயங்கியது. இவர்களுக்கிடையே மிக அதிக அளவில், ஆவணங்களின் போக்குவரத்து தொடர்ந்து இருந்து வந்தது.

1847வரை, இந்த நிலை தொடர்ந்தது. இந்தியாவைப் பெயரளவில், கி.இ.கொ. ஆண்டது, அந்த வருடத்தில்தான் சிப்பாய்களின் சுதந்திரப்போர் மிகப்பெரிய ரணகளமாக முடிந்தபின்னர், இந்தியா நேரடியாக இங்கிலாந்து அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் அமைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்தியாவிலிருந்து முதல் முதலில் வரத்துவங்கிய ஆவணங்களிலிருந்து, 1947ல் இந்தியாவிற்கு சுதந்திரம் அளித்தவரையிலான அனைத்து ஆவணங்களையும், பிரிட்டனில் உள்ள “இந்தியா ஆஃபிஸ் லைப்ரரி” எங்கின்ற ஆவண நூலகத்தில் பிரிட்டீஷ் அரசாங்கம் பாதுகாப்பாக பராமரித்து வருகின்றது. கோடிக்கணக்கான பக்கங்களை கொண்ட இந்த ஆவணங்கள் இந்தியாவை ஆண்ட அந்நியர் தங்களுக்குள் இந்தியாவை குறித்து என்ன பேசிக்கொண்டனர் என்பதை மிக நுணுக்கமாக புரிந்து கொள்ள உதவுகின்றது. நமது நாட்டின் முக்கிய காலகட்டத்தின் வரலாற்று ஒருபக்க சான்றாக இந்த ஆவணங்கள் விளங்குகின்றன. நமது கிராமப்புற வாழ்கை, நமது ஜாதி கட்டமைப்புகள், நமது மக்களை ஏமாற்றும் தந்திரங்கள், சூழ்ச்சிகள், நமது நாட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட வளங்களிந் அளவு, அவற்றை அவர்கள் பங்கிட்ட முறை, நமது கைவினைஞர்களின் கலை மற்றும் வடிவமைப்புத் திறன், அவற்றை சிதைத்து அவர்களது வாழ்வாதாரத்தை அழிக்கப் பயன்படுத்தபட்ட யுக்திகள், நமது மக்களை ஒடுக்க உபயோகிக்கப்பட்ட ஒற்றர் படை மற்றும் அத்தகைய ஒற்றர்களிடமிருந்து வந்த மாகாணம் வாரியான குறிப்புகள் என்று பல விதமான ஆவணங்கள். இவை ஒவ்வொன்றும் எங்கோ, இந்தியாவில் உள்ள ஒரு ஊரின் கதையை லண்டனில் உட்கார்ந்து கொண்டு மாற்றி அமைக்க ஆங்கிலேயர்களுக்கு தேவைபட்ட பல தகவல்கள். இதனை படித்தால் நாம் எவ்வாறு அடிமைகளானோம் என்பதும், நாம் எவ்வாறு அடிமைகளாக இருந்தோம் என்பதையும் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். மீண்டும் நாம் எவ்வாறு அடிமைகளாவதை தடுக்கமுடியும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

தரம்பாலும் ஆங்கிலேய ஆவணங்களும்

தரம்பாலின் ஆராய்ச்சியின் முக்கிய சான்று இந்த ஆவணங்கள்தான். அவருக்கு முன்னர் இந்த ஆவணங்களை மற்ற இந்தியர்கள் பார்க்காமல் இல்லை, ஆனால் அவர் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் தொடர்ந்து இவற்றை பார்த்தும், படித்தும், சிந்தித்ததினாலோ என்னமோ, இந்த ஆவணங்களிலிருந்து வேறொரு பாரதத்தை அவர் நமக்கு சுட்டிக்காட்ட முடிந்தது. 1950களிலும் 60களிலும் அவர் லண்டன் நகரத்தில் இருந்தபொழுது, அவரது நேரம் பெரும்பாலும் இந்தியா ஆபிஸ் லைப்ரரியில் கழித்தார். பொருளாதார நெருக்கடி, மனைவியின் வருமானத்தில் 3 குழந்தைகளை வைத்துக்கொண்டு ஒரு இந்தியர் அந்தக் காலத்தில் எந்த ஒரு பயிற்சியும் இன்றி, இத்தகை ஆராய்ச்கியில் ஈடுபட முயற்சிப்பதே கடினம், இவர் தொடர்ந்து 10 வருடங்களுக்கும் மேலாக இதனைத்தான் செய்தார். அவ்வப்பொழுது சிறு சிறு வேலைகள் (ஒரு முறை மூட்டை சுமக்கும் தொழிலாளியாகவும், மற்றோரு முறை அஞ்சல்காரராகவும்) செய்து தன் ஆராய்ச்சியைச் சமாளித்தார்.

தினமும் காலை இந்த அலுவலகத்திற்கு சென்றுவிடுவார், அங்கு உள்ள ஆவணங்களைப் பார்த்துப், படித்துக் குறிப்பெடுக்கத் துவங்குவார். அக்காலத்தில் நகல் எடுப்பது மிகவும் சிரமமான மற்றும் செலவு மிகுந்த காரியம், இவரிடமோ பணமில்லை. ஆகையால், தான் கண்ட அனைத்து முக்கிய ஆவணங்களையும் கைப்பட சில சமயம் முழுமையாகவும், சில சமயம் முக்கிய பகுதிகளையும் கைப்பட எழுதிக்கொள்ளுவார். மை பேனாக்கள் இத்தகைய ஆவணங்களை கொண்டுள்ள நூலகங்களில் எடுத்துச்செல்ல தடை என்பதால், இவர் இந்த நகலெடுக்க முழுவதும் பயன்படுத்தியது எளிதில் அழியக்கூடிய பென்ஸில்தான். இதனால், ஒவ்வொரு நாளும் மாலை வீடு திரும்பியபின், தனது தட்டச்சு இயந்திரத்தின் முன் உட்கார்ந்து அன்று நகலெடுத்த ஆவணங்களை முழுவதுமாக பல நகல்களுடன் 2 விரல்களால் தட்டி (கடைசிவரை அவர் ‘இருவிரல் தட்டச்சு நுபுணர்’ ஆகவே இருந்தார்) பதிவுசெய்து கொள்ளுவார். இப்படியாக இவர் கைப்பட எழுதி நகலெடுத்த பக்கங்கள் ஏறத்தாழ 20,000. “நான் பதிவு செய்த ஒவ்வொரு ஆவணத்தை போல் 15-20 ஆவணங்களாவது நான் அங்கு பார்த்திருப்பேன். இவற்றில் எனக்கு எவை அப்பொழுது முக்கியமென்று உணர்ந்தேனோ அவற்றை மட்டும்தான் நான் நகலெடுத்தேன்” என்று அவர் பிற்காலத்தில் கூறுவார். லண்டனிலிருந்து அவர் இந்தியா திரும்பிய பொழுது அவருடைய பெரும்பாலான சொத்தாக பல டிரங்கு பெட்டிகள் முழுவதுமாக இந்த ஆவணங்கள் இந்தியா பயணித்தன.

“நான் என்றுமே ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று எந்த ஆவணத்தையும் தேடவோ அல்லது எழுதத்துவங்கவோ இல்லை. எனக்கு, நமது மக்கள் ஏன் இவ்வாறு இருக்கின்றார்கள் என்னுள் எழுந்த கேள்விகளுக்கான விடையை தேடும் பயணத்தில் எனக்கு இந்த ஆவணங்கள் கிடைத்தன, அவற்றை படிக்க படிக்க பல உண்மைகள் புலப்படலாயின, எனது சில் கேள்விகளுக்கு விடை கிடைத்தது. அதனைப் பகிரவே நான் எழுதத்துவங்கினேன். எனக்கு எழுதவே வராது”, என்று திரு. தரம்பால் பல முறை கூறியுள்ளார்.

இந்தியாவை அடிமைப்படுத்தி ஆங்கிலேயர்கள் செய்த பல அட்டூழியங்களை, ஒரு மனிதன், 50 ஆண்டுகாலம் தொடர்ந்து படித்தும், சிந்தித்தும் வந்தால் எவ்வளவு கோபம் அவனுள்ளே எழுந்திருக்கும்? பலமுறை இந்த கோபத்தை பற்றிப் பேசிய தரம்பால், “நாம் கோபப்பட்டுப் பயனில்லை. இது நடந்து முடிந்த கதை, ஆனால், மேற்கத்திய சக்திகள் மாறவில்லை, இன்னுமொரு வாய்ப்புக் கிடைத்தால் அவர்கள் மீண்டும் இத்தகைய முயற்சியில் ஈடுபட வாய்ப்புண்டு. இந்த ஆவணங்களைக் கொண்டு நாம், நமது பலவீனங்களை புரிந்து கொண்வோமேயானால், மீண்டும் ஒரு முறை அடிமைத்தனத்திற்கு ஆளாகாமல் நம்மைக் காத்துக்கொள்ள முடியும்”, என்று கூறுவார்.

அவரது புத்தங்களும்கூட எந்த ஒரு விதத்திலும் படிப்போரை கோபப்படுத்தவோ அல்லது வருத்தமுறச் செய்யவோ எழுதப்படவில்லை. மாறாக, ஒரு ஆவணங்களின் கோப்பாகவே இந்தப் புத்தகங்கள் விளங்கின. தான் கூறவரும் கருத்துக்குச் சான்றாக விளங்கும் ஆவணங்களை தொகுத்து, வரிசைபடுத்தி, அவற்றிக்கு ஒரு அறிமுகம் எழுதி, படிப்போரின் முடிவுக்கு தன் தொகுப்பை சமர்ப்பிக்கும் விதத்திலேயே அவர் புத்தகங்கள் அமைந்துள்ளன.

(தொடரும்)

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org