கற்பதும் கசடும் - வழிப்போக்கன்


சென்ற கட்டுரையில் பண்பாடு மற்றும் கலாசாரத்திற்கும், எழுத்தறிவிற்கும் ஏதும் தொடர்பு உள்ளதா என்று முன்னர் பிளேட்டோவும் அதன் பின்னர் ஆனந்த குமாரசாமியும் கேட்ட கேள்வியையும், அவரின் எழுத்தறிவு என்னும் பூதம் (Bugbear of Literacy) என்ற கட்டுரையைப் பற்றியும் எழுதியிருந்தோம். இம்மாதம் அக்கட்டுரையின் சில பகுதிகளைக் காண்போம். அதற்கு முன் ஆனந்த குமாரசாமி பற்றிச் சற்று அறிந்து கொள்வோம்.

குமாரசாமி 1877ல் இலங்கையில் பிறந்த இலங்கைத் தமிழர். அவர் தந்தையார் முத்து குமாரசுவாமி தமிழ் அந்தணர் வகுப்பைச் சேர்ந்தவர்; தாய் எலிசபெத் பீபி என்னும் ஆங்கிலேயர். குமாரசாமிக்கு இரண்டு வய‌தாக இருக்கும் போதே அவர் தந்தையார் இறந்து விடவே அவர் தன் இளம் வயதிலேயே தாயுடன் இங்கிலாந்து சென்று படித்தார். பின்னர் இலங்கை , இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பல்வேறு பணிகளைப் புரிந்த குமாரசாமி, ஓவியம் மற்றும் சிற்பக் கலை பற்றிய ஆழ்ந்த ஆய்வுகளைச் செய்திருக்கிறார். இந்தியக் கலையை மேற்கு நாடுகளுக்கு எடுத்துச் சென்ற முதல் மனிதர் என்ற பெருமையைக் குமாரசாமி பெறுவார். அமெரிக்காவில் பற்பல பெரும் அருங்காட்சியகங்களில் பொறுப்பாளாராகப் (curator) பணி புரிந்திருக்கிறார். குமாரசாமி மிகப்பெரும் அளவில் இந்தியக் கலையைப் பற்றியும், தத்துவங்களைப் பற்றியும் பலப்பல ஆழ்ந்த ஆய்வு நூல்களை எழுதியிருக்கிறார். மாக்ஸ் முல்லரைப் போலவே இந்தியவியலைக் கற்கத் தன் வாழ்நாளை அர்ப்பணித்துள்ள ஹென்ரிச் சிம்மர், குமாரசாமியைப் பற்றிக் கூறும்போது “நாம் அனைவரும் [இந்தியாவைப் பற்றி அறிந்து கொள்ள முற்படும் மேலைநாட்டோர்] ஏறி நிற்பது குமாரசாமி என்னும் மாபெரும் அறிஞரின் தோள்களில்தான்” என்று குறிப்பிட்டுள்ளார். “இயந்திரமயமாக்கலுக்குப் பிற்பட்ட காலம்” (post industrial era) என்ற சொல்லாடலை முதலில் பயன்படுத்தியவர் குமாரசாமிதான். இந்தியக் கலைகளைப் பற்றி இவர் எழுதிய “சிவனின் நடனம்” (Dance of Shiva) என்ற கட்டுரைத் தொகுப்பு இன்றும் அச்சாகி விற்றுக் கொண்டிருக்கிறது.

கலை மட்டுமன்றித் தத்துவத்திலும் குமார‌சாமி தன் வாழ்நாளில் பெரும்ப‌குதியைச் செலவிட்டார். ரெனெ குனான், ஃப்ரித்யாஃப் ஷுவான் போன்ற பிரஞ்சுத் தத்துவ சிந்தனையாளர்களுடன் இணைந்து என்றுமுளன்மை (perennialism) என்ற ஒரு கோட்பாட்டை உருவாக்கினார். “உண்மை என்பது எக்காலத்திலும் ஒன்றே; அது எம்மதத்தில், எவ்விதத்தில் கூறப் பட்டிருப்பினும் அதன் அடிப்படைக் கோட்பாடுகள் ஒன்றே” என்பது இவர்கள் அடிப்படைக் கருத்து.. அடிப்படை உண்மைகள் என்றும் மாறாதவை என்ற கோட்பாடு கொண்டதால் இது என்றுமுளன்மை என்று அழைக்கப் படுகின்றது. “நான் எங்குப் பிறந்தேன், எங்கு வளர்ந்தேன், யாரைத் திருமணம் செய்து கொண்டேன் என்றெல்லாம் என்னைப் பற்றி அறிவது வெறும் வம்புக்குத் தீனி போடுவதுதான். என் எழுத்துக்களைத் தெரிந்துகொண்டால் என்னைத் தெரிந்து கொண்டது ஆகிவிடும். நான் பல விஷயங்களைப் பற்றி எழுதியிருந்தாலும் என்னை ஒரு தத்துவ சிந்தனையாளன் (metaphysics) என்றே கொள்ள விரும்புகிறேன்” என்று குமாரசாமி எழுதினார். நாம் இனிக் குமாரசாமியைப் பற்றி வம்பு பேசுவதை விட்டு, அவர் எழுதிய எழுத்தறிவு என்னும் பூதம் என்னும் குறுநூலைக் காண்போம்! பின் வரும் கருத்துக்களும், மேற்கோள்களும் குமாரசாமி எழுத்தறிவு என்பது மட்டும் அறிவாகி விடாது என்ற தன் கருத்துக்கு ஆதாரமாய்த் தன் நூலில் குறிப்பிட்டுள்ளவை. இதன் ஆங்கில மூலம் வேண்டுவோர் http://kaani.org/dl/akcbbl.pdf என்ற வலைப்பூவில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். கட்டுரையாசிரியர் குறிப்புக்கள் பகர அடைப்புக்குள் உள்ளன.

“முற்புரிதலால் அணியமாகாதவன் நூல்களைப் படிப்பது, குருடன் கண்ணாடியில் அழகு பார்ப்பது போன்றது” - கருட புராணம்

”[அமெரிக்காவிலே] எழுத்தறிவு வேகமாகப் பரவிவருவதாய்க் கூறப் படுகிறது. எனினும், ஒரு உயர்ந்த நிலையில் ஒருவருக்கு ஒருவர் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளக் கூடிய மக்கள்தொகை முன்னை விட மிகவும் குறைந்து விட்டது” - 1944ம் ஆண்டு ஹாம்லின் பல்கலைக் கழகத்தில் உரையாற்றிய ஜான் நெஃப் என்னும் முனைவர்

“எழுதத் தெரியாத ஒரு கவிஞன், படிக்கத் தெரியாத ஒரு ரசிகர் கூட்டத்திற்குக் கவிதைகளைக் கூறியும், பாடல்களாகப் பாடியும் இலக்கியப் பரிமாற்றம் நிகழ்த்துவதைப் புரிந்து கொள்ள [நம் நாகரிக மனதிற்கு] புத்தியும், கற்பனையும் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கிறது. பல நூற்றாண்டுகளாக வாய்வழி மரபாகவே பெரும் இலக்கியங்கள் பகிர்ந்தளித்துப் பாதுகாக்கப் பட்டது நிரூபிக்கவும், ஒத்துக்கொள்ளவும் பட்டிருக்கிறது. இவ்வாய்வழி இலக்கியத்திற்குப் பள்ளிக் கல்வி ஒரு நண்பனே அல்ல. நாகரிகம் அதனை அழிக்கிறது - பல சமயம் வியப்பூட்டும் வேகத்தில். ஒரு நாடு படிக்க ஆரம்பிக்கும் பொழுது, அனைவருடைய பொதுச் சொத்தாக இருந்த இலக்கியம், எழுத்தறிவு உள்ள சிறுபான்மையினரின் சொத்தாகி விடுகிறது.” - ஜி.எல்.கிட்டரிட்ஜ் , “பிரபலமான‌ ஆங்கில மற்றும் ஸ்காட்லாந்தின் நாட்டுப் பாடல்கள்” (English and Scottish Popular Ballads) என்ற நூலின் முன்னுரையில். [இவ்வுண்மையை நாம் இப்பொழுதும் தமிழகத்தின் உட்கிராமங்களில் சென்று உணரலாம். தஞ்சை, நாகை போன்ற மாவட்டங்களில், வள்ளி திருமணம், அரிச்சந்திர புராணம் போன்ற நாடகங்கள் 10 ஆண்டுகள் முன்வரை மிகவும் விமரிசையாக ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும். எழுதப் படிக்கத் தெரியாத 60 - 65 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் 'சந்திரமதி புலம்பல்' போன்ற பாடல்களை முழுவதுமாக ராகத்துடன் பாடுவார்கள். தற்போது தொலைக்காட்சியின் ஊடுருவலுக்குப் பின் நாடகங்கள் நடப்பதே இல்லை. இளைஞர்களும் அவற்றைக் காண விழைவதும் இல்லை.]

“சென்ற நூற்றாண்டின் இறுதியில் அமலுக்கு வந்த அனைவருக்குமான கட்டாயக் கல்வி, எதிர்பார்க்கப் பட்டபடி, மகிழ்வும், திறமையும் நிறைந்த‌ குடிமக்களை உருவாக்கவில்லை; மாறாக மஞ்சள் பத்திரிக்கை வாசகர்களையும், சினிமா ரசிகர்களையுமே உருவாக்கி உள்ளது” - கார்ல் ஓட்டன்

“திட்டமிடப்பட்ட கட்டாயக் கல்வியானது, வாழ்வில் இருந்து தூரம்போய், தனக்கே உரித்தான ஒரு வெளியில், இளைஞர்களின் துடிப்பை நசுக்கிச் சலிப்பூட்டும் ஒரு சூழலில் இயங்குகிறது. இதன் விளைவு, இளைஞர்களுக்கு எதுவுமே நன்றாகத் தெரியாமல் போய் விடுகிறது. இன்னும் சரியாகச் சொல்வதானால், அறிவு என்பது என்னவென்றே இவர்களுக்குத் தெரியாமல் போய்விடுகிறது” - எரிக் மெய்ஸ்ஸனர் - பேராபத்தில் ஜெர்மனி (Eric Meissner, Germany in Peril)

“மிகவும் ஏழ்மையான மக்கள் [கூட] மொழியை மிகவும் பாராட்டும்படிப் பேசுகிறார்கள். சிலர் ஆயிரக் கணக்கான வரிகள் கொண்ட பாடல்களை ஒப்பிக்கின்றனர். பல [பண்டைக்] கதைகள் சிதிலமடைந்து காணப்படுவதற்கு நவீன நாகரிகத்தின் சிதைக்கும் விளைவே காரணம்” - அலெக்ஸாண்டர் கார்மைக்கேல், மேலும் பல மேற்குமலைக் கதைகள் (More West Highland Tales)

“இந்த அறிவுச் சொத்தானது, இந்தப் பண்டைக் கலாசாரமானது, ஸ்காட்லாந்தின் வட மற்றும் வட மத்தியப் பகுதி முழுவதும் காணப்பட்டது. இக் கலாசாரத்தைக் கொண்டவர்கள் பெரும்பாலும் எழுத்தறிவு இல்லாதவர்களே. ஆனால் அவர்களைக் கல்வி இல்லாதவர்கள் என்று கூறவே இயலாது. இவ்வழிவில் [இக்க‌லாசாரத்தின் அழிவில்] நம் பள்ளிகள் மற்றும் கிறுத்தவத் திருச்சபைக்கும் பங்கு உண்டு என்று எண்ணும்போது வருத்தமாய் இருக்கிறது” - அதே நூலின் முன்னுரையில் ஜே.வாட்சன். (உண்மையில், பள்ளிகள் மற்றும் திருச்சபையால்தான் உலகெங்கிலும் உள்ள கலாசாரங்களின் அழிவு, கடந்த நூறு வருடங்களில் மிகவும் வேகப் படுத்தப் பட்டுள்ளது - குமார‌சாமி )

ஐரோப்பிய‌ வரலாற்றைப் பார்க்கும் போது ஆங்கிலோ-சாக்ஸன் என்ற இனமே பிரெஞ்சின் கால் (Gaul - Galle) இனத்தவரையும், ஸ்காட்லாந்து, வேல்ஸ், அயர்லாந்து ஆகிய நாடுகளின் கெல்ட் (Celt) இனத்தவரையும் ஊடுருவி, ஆதிக்கம் கொண்டு ஆங்கிலக் கல்வியையும், கிறுத்துவ மதத்தையும் திணித்தனர். கொலைக் குற்றவாளிகளைப் புறந்தள்ளும் தீவாய் இருந்த ஆஸ்திரேலியாவில் தங்கம் கண்டறியப் பட்டதும் அங்கு அனைத்து ஐரோப்பியரும் வேகமாய்க் குடியேறினர். அங்கு வெகு சமீபத்தில் அபோரிஜின் என்று அழைக்கைப்படும் கறுப்பு இனத்த‌வரைக் கொன்று, அவர்களின் ப‌ச்சிளாம் குழந்தைகளைத் திருடி அவர்களை ஆங்கிலப் பள்ளிகளிலும், திருச்சபைகளிலும் உறுப்பினராக்கினர். இதைத் “திருடிய வம்சம்” (stolen generation) என்று வரலாற்றில் குறிப்பிடுகின்றனர். ஆங்கிலேயர்கள் ஸ்காட்லாந்தைத் தெற்கில் இருந்து ஊடுருவியதால் வட மற்றும் வட மத்திய ஸ்காட்லாந்தின் கலாசார பாதிப்புக் குறைவாய் இருந்தது. நம் இந்தியாவில் தென் கோடியில் இருந்ததால் அந்நிய ஊடுருவலில் தமிழ் மொழியும் கலாசாரமும் மிகக் குறைந்த பாதிப்புக்கு உள்ளாயின. நாம் இன்று கன்னித் தமிழ் என்று மார்தட்டிக் கொள்ள முடிவதற்கு நாம் புவியியலுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்!

இதே போல் 12 பக்கங்களுள்ள இக்கட்டுரையில் குமார‌சாமி, உலகெங்கும் எழுத்தறிவால் சிதைக்கப்பட்ட வாய்வழிக், குரு-சீட மரபுக் கல்விக்குப் பல சான்றுகளைக் கொடுக்கிறார். 500 ஆண்டுகளே வயதான, அறிவு முதிர்ச்சி சற்றும் இல்லாத, விடலைப் பையனான‌ அமெரிக்க நாட்டிற்கு இது மிகத் தேவையாய் இருக்கலாம். ஆனால் உலகின் மிகவும் பழமையான பண்பாடு, கலாசாரம் மற்றும் இலக்கியங்களைத் தன்னகத்தே கொண்ட தமிழர்களான நமக்கு இவை யாவும் ஓரளவு ஏற்கனவே உணரப்பட்டதுதான் - குமாரசாமியளவு நம்மால் இதை அழகாய்க் கூற இயலாவிடினும், ந‌ம்மில் பெரும்பாலோர் இதை உணர்ந்தே இருக்கிறோம். “தற்காலக் கல்வி சிறப்பானது, அது நல்ல விற்பன்னர்களையும், குடிமக்களையும் உருவாக்குகிறது, குமுகத்தில் நிறைவையும், மகிழ்வையும் ஏற்படுத்துகிறது” என்று நேர்மையுள்ள எந்தத் தமிழனாலும் கூற இயலாத‌தே இதற்குச் சான்று.

'கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார்' என்று பலரின் வாழ்வைப் பற்றி நூல்களில் படிக்கிறோம். கேள்வியே கல்வியின் முதற்தளமாக இருக்க வேண்டும். எழுத்தறிவு அல்ல - அதிலும் நமக்குத் தொடர்பே இல்லாத ஆங்கில எழுத்துக்களுடன் நம் கல்வியைத் தொடங்குவது வேட்டைக்குக் கிளம்பும் நரி தானே தன் வாலை அறுத்துக் கொண்டு பின் கிளம்புவது போன்றது.

செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை

என்றும்

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பயனைத் தரும்

என்றும்

ஆசிக முனிவரான நம் வள்ளுவர் வழிகாட்டியுள்ளார்.

அடுத்த கட்டுரையில் முற்றிலும் கசடற்ற, நேர்மையான, குழந்தைகளுக்கு ஆர்வத்தையும், சிந்திக்கும் திறனையும் தூண்டும் அடிப்படைக் கல்வித் திட்டம் எங்ஙனம் அமைக்கலாம் என்று ஆராய்வோம்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org