தலையங்கம்


பயிரை மேயும் வேலிகள்


நம் இந்தியா உலகிலேயே மிகப் பெரிய மக்களாட்சிக் குடியரசு என்று நாம் மார்தட்டிக் கொள்கிறோம். இந்தியாவில் பொதுத் தேர்தல் நடந்தால் அது உலகின் மிகப் பெரிய தேர்தல் என்று உலக ஊடகங்கள் அனைத்தும் உன்னிப்பாய்க் கவனிக்கும்படி உள்ளது. ஆனால் இன்னும் நம் மக்களாட்சி மிகவும் கவலைக்கிடமாக, முற்றிலும் விழிப்புணர்வற்ற வாக்களிப்போரின் கையில்தான் உள்ளது. ஒரு பெரிய அரசியலிய‌ல் அறிஞர் முன்னர் , ” பெரும்பான்மையான மக்கள் எழுத்தறிவு இல்லாத நம் நாட்டில், எழுதப்பட்ட‌ அரசியல் சாசன‌ம் கடைப்பிடிக்க‌ப்படுவதே தன் காலத்துக்கு முற்பட்டதாகத் தெரிகிறது” என்று எழுதினார்.

பாமர மக்களை அறியாமையிலேயே இருத்தி, இலவசங்களாலும், பணத்தாலும் அவர்களை மயக்கி, அரசே மதுபானம் விற்று, தொலைக்காட்சி, கிரிக்கெட், சினிமா போன்ற அபின்களால் இருக்கும் கொஞ்ச நஞ்ச சிந்திக்கும் திறனையும் மழுக்கி, இளைஞ‌ர்கள் எல்லாம் நவீன அலைபேசிகளில் ஆபாசப் படங்களைப் பார்க்க வசதியாய் 3 ஜி, 4 ஜி என்று நாடு முழுவதும் அலைக்கற்றை வலையைப் பரப்பி, அப்பாவித் தாய்மார்களையும், குடும்பத் தலைவிகளையும் 'ஆன்லைன் ஷாப்பிங்' என்று ஏமாற்றி, இணையத்தில் கடைவிரித்து, நுகர்ச்சி அரிப்பைத் தூண்டி விட்டு - மொத்தத்தில் யாருமே சிந்திக்காமல், ஒரு பெரும் போதையில் வல‌ம்வரச் செய்து கொண்டிருக்கின்றன‌ அரசும், ஊடகங்களும், பிற‌ அமைப்புக்களும் அவற்றை இயக்கும் சந்தைச் சக்திகளும்.

மக்களைப் பாதுகாக்க மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள், அரசியல் சாசனங்களையும், சட்டத்தையும், நாட்டின் வளங்களையும், நலிந்தோரையும் அல்லவா காக்க வேண்டும்? காங்கிரஸைக் கண்டபடி திட்டி விட்டு, நாட்டைக் காப்பாற்றப் போவதாய் மக்களை ஏய்த்து ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா, காடுகளை, மலைகளை எல்லாம் கூவிக் கூவி ஏலம்போட்டு விற்கிறது. விளைநிலங்களை அபகரிக்கச் சட்டத் திருத்தம் கொண்டு வந்து அது இயலாமல் கைவிட்டது. மரபீனிப் பயிர்களை அரசு இயந்திரங்களால், அரசின் பணத்தைக் கொண்டு அமலுக்குக் கொண்டு வரத் துடிக்கிறது. உச்ச நீதிமன்றம் தடை செய்த மரபீனிப் பயிர்களை அரசே அனுமதித்தால் அது சட்ட‌ விரோதம் அல்லவா? நீதிமன்றத்தை அவமானப் படுத்தியது அல்லவா?

மாநில அரசோ தேர்தல் அறிவித்தால், தேர்தல் ஆணையத்திட‌ம் ஆட்சி மாறிவிடும் என்ற நிலையில், அரசுப் பணியாளார்களை அரசின் அனுமதியின்றி ஊழல் புகார்களில் கைது செய்யக் கூடாது என்று சட்டம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளது! உச்ச நீதி மன்றமோ உழவர்களின் விளை நிலங்கள் வழியாக கெயில் நிறுவனம் குழாய் அமைக்கலாம் என்று கூறியுள்ளது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய த‌ர்மம் உள்ள ஊடகங்கள், தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு விளம்பர நிறுவனங்களை நம்பி உள்ளன. அவ் விளம்பர நிறுவனங்களோ பெரும் பன்னாட்டுக் கும்பணிகள் இழுக்கும் கயிற்றுக்கு ஆடும் பொம்மைகளாய் இருக்கின்றன.

சிறுமை கண்டு பொங்கலாம் என்று தனிமனிதர்கள் கிளம்பினால், அவர்களை முடிந்தவரை துன்புறுத்துவதும், பொய் வழக்குகள் இட்டுச் சிறையில் இடுவதும், வீட்டை இடிப்பதும் வரை எல்லா அவலங்களும் நடக்கின்றன.

இப்படி நம்மைக் காப்பவர்கள் என்று நாம் எண்ணும் அனைவருமே நம்மை மாறி மாறிக் காவு கொடுக்கத் துடித்தால் பாமர மனிதன் எங்கே போவது? சுரண்டலுக்கு இலக்காய் இருப்பதைத் தவிர வேறு வழிதான் என்ன? இப்போது நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு, இணையமும், தனி மனிதர்களின் அறப்போராட்டங்களும்தான்.

சுரண்டல் நிறைந்த மையப் பொருளாதாரத்திற்கு மாற்று சுரண்டல் அற்ற மையப் பொருளாதாரம் அல்ல - ஆங்காங்கே பாலைவனச் சோலைகள் போல் சிறு சமூகங்களும், அண்மைப் பொருளாதாரமுமே தீர்வு. நகரங்களில் ஊழலும், சுரண்டலும் அளவற்றுப் புரையோடி விட்டன. கிராமங்களில் இன்னும் சற்று நம்பிக்கை மீதம் இருக்கிறது. நல்லவர்கள் கூடித் தற்சார்பான சிறு சமூகங்கள் அமைப்பது ஒரு மிக நல்ல தீர்வு - மிக நல்ல எடுத்துக்காட்டு. வேலிக்களே பயிரை மேயும் போது வேலியைப் புறக்கணிப்பதுதான் பயிருக்குப் பாதுகாப்பு!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org