தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தலையங்கம்


தில்லி சட்டசபைத் தேர்தல் முடிந்து வரலாறு காணாத வெற்றியாக 95 % இடங்களை ஆம் ஆத்மி கட்சி வென்றுள்ளது. கிரண் பேடி, ஜகதீஷ் முகி, ஜனாதிபதியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி போன்றோர் தோல்வி அடைந்தனர். மாற்றமாம் வையகத்தில் மக்கள் மாற்றத்தை விரும்பியுள்ளனர் என்று தெளிவாகிறது. இது ஆம் ஆத்மியின் வெற்றி என்பதை விட பி.ஜே.பியின் தோல்வி என்பதே சரியாகும். பி.ஜே.பியின் இந்தக் கடுமையான பின்னடைவின் காரணங்கள் பல. மேலோட்டமாகக் கூறப்படுபவை, உணரப்படுபவை : கிரண்பேடியை முதலமைச்சராக அறிவித்தது கட்சித் தொண்டர்களுக்குக் கசப்புணர்ச்சியை ஏற்படுத்தி விட்டது; ஆம் ஆத்மி கட்சி மக்களின் நாடித்துடிப்பை ந‌ன்றாக உணர்ந்துள்ளனர் போன்றவை. ஆனால் இதன் உண்மைக் காரணங்கள் இன்னும் ஆழமானவை. 8 மாதங்களுக்கு முன் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையுடன் பி.ஜே.பி வென்று, அதன் பின்னர் நடந்த பல மாநிலத் தேர்தல்களில் பல இடங்கள் வென்றதும் பி.ஜே.பி பெரும் தன்னம்பிக்கை பெற்று விட்டது. மோடி அரசை மக்கள் விரும்புகிறார்கள், நாமே நாடாளப் போகிறோம் என்று நாளுக்கு நாள் இத் தன்னம்பிக்கை வளர்ந்து ஆணவம் ஆகி விட்டது.

ஏழைகளுக்கு இவர் நல்லது செய்வார் என்ற எதிர்பார்ப்புடன் அவருக்கு வாக்களித்த மக்களுக்கு மத்திய அரசின் பல நடவடிக்கைகள் (கறுப்புப் பணக்காரர் பட்டியல், நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டம், மர‌பீனிப் பயிர்களுக்குத் திறந்த வெளி ஆய்வு அனுமதி போன்று) ஏமாற்றத்தையே அளித்தன. 70% மக்கள் வாழும் கிராமங்களுக்கு ஏதும் செய்யாமல் வெளிநாட்டுப் பயணம், ஹெலிகாப்டரில் சுற்றுதல், ஒபாமாவை அழைத்து வருதல் போன்ற “வளர்ச்சிப் பணிகள்” ஊடகங்களுக்குச் சுவையாய் இருந்தாலும் கவைக்கு உதவவில்லை.

முழுக் கட்டுரை »

கிராமிய வாழ்வாதாரங்களும் உலகமயமாக்கலும் - ராம்


“புதிதாக அமைக்கபட்டுள்ள ஆந்திர மாநிலத்திற்கு, அதன் கிராமப்புற ஏழை மக்களுக்கான வாழ்வாதாரத்தை ஏற்படுத்துவதற்காக உலக வங்கி 75 மில்லியன் டாலர் கடன் வழங்க முன்வந்துள்ளது” என்னும் சமீபத்திய செய்தி பலரின் கவனத்தை ஈர்த்தது. இதைபோலவே மற்றொரு 75 மில்லியன் டாலர்கள் தெலுங்கானா மாநிலத்திற்கும் உலக வங்கி அளிக்கும் என்னும் செய்தியும், அதேசமயத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது பலரின் மத்தியில் பல கேள்விகளை கணைகளை எழுப்பியிருந்தது. ஆச்சரியம் என்னவென்றால், இத்தகைய கேள்விகளை எழுப்புபவர்கள் “வளர்ச்சிக்கு எதிரிகள்” என்று இன்றைய ஆட்சியாளர்களால் சித்தரிக்கப்படும், தன்னார்வு தொண்டு நிறுவனங்களோ அல்லது களப்பணியாளர்களோ அல்ல. இவர்களில் பெரும்பாலானவர்கள், வாழ்வாதார திட்டத்தின் பயனாளிகளுக்கும், சுய உதவிக்குழு நிறுவனங்களுக்கும் ஆசான்களாக திகழும் பேராசிரியர்கள் மற்றும் வல்லுனர்கள்தான்.

அப்படி இந்த வல்லுனர்கள் கூறுவதுதான் என்ன? இதோ, அவர்கள் வாயிலிருந்தே கேட்போம்!

 1. “1. சிறுகடன் (micro-credit) ஏழைகளுக்கு எந்த அளவிலும் பயனளிக்கவில்லை, மற்றும் பயனளிக்கும் வல்லமையும் இந்தத் திட்டத்திற்கு இல்லை என்பதை, உலகளவில் நடத்தப்பட்ட பல ஆய்வுகளும், சமூக ஆராய்ச்சிகளும் உறுதி செய்கின்றன.

 2. “2. 'குடிசைத் தொழில்–உள்ளூர்த் தொழில்–உள்ளூர் வாணிபம்' சார்ந்த தொழில் அணுகுமுறை, நமது கிராமப்புற வாழ்வாதாரங்களையும், மக்களையும் கீழ்க்கண்டது போன்ற உலகளாவிய பரந்த நிகழ்வுகளில் இருந்து காக்கத் தவறி விட்டது:

  முழுக் கட்டுரை »

  புதிய பொருளாதாரக் கொள்கை - உழவன் பாலா


  [“உலக அரசுகள் வியாபாரிகளைக் காக்க வேண்டும்; பொருள் ஈட்டுவதே நவீன வாழ்வின் குறிக்கோள்” என்ற கருத்தை வலியுறித்தியவர் பிரபல பொருளாதார நிபுணரான கெய்ன்ஸ். அவரின் மாணவரான சூமாக்கர், இக்கருத்தை முற்றிலும் எதிர்த்ததோடன்றி “மக்களை முன்னிறுத்திய ஒரு பொருளியல் தேடல்” என்ற கருத்துடன் “சிறியதே அழகு” என்ற நூலை எழுதினார். இது இருபதாம் நூற்றாண்டில் மிகப்பெரும் தாக்கம் ஏற்படுத்திய நூல்களில் ஒன்றாகப் பரவலாகக் கருதப் படுகிறது. இந்நூலில் “மனித முகம் உள்ள‌ தொழில்நுட்பம்” என்றும் “பௌத்தப் பொருளியல்” என்றும் இரண்டு கட்டுரைகள் எழுதியுள்ளார் சூமாக்கர். பொருளியலும், அதன் கைப்பாவையாக்கப்பட்ட தொழில்நுட்பமும் லாபத்தை மட்டுமே குறியாகக் கொள்ளாமல், மனித உணர்வுகளையும், தேவைகளையும் மதிக்குமாறு இருக்க வேண்டும் என்று வாதிட்டார் சூமாக்கர்.

  அதன் தொடர்ச்சியாக 'இடைப்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சிக் குழுமம்'(Intermediate Technology Development Group -ITDG) என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் பற்பல நாடுகளில் பல ல‌ட்சம் ஏழைகள் பயனுறுமாறு ஒரு புதிய தொழில்நுட்ப இயக்கத்தையே உருவாக்கினார். பின்னர் 'இடைப்பட்ட தொழில்நுட்பம்' என்ற பெயர் 'பொருந்திய தொழில்நுட்பம்' (Appropriate Technology) என்ற பெயரில் செயல்படலாயிற்று. இப்பொருந்திய தொழில்நுட்பத்தைப் பற்றி திரு.சூமாக்கர் அவர்களே எழுதிய அறிமுகத்தில் இருந்து தொகுப்பை மூன்று பகுதியாக வெளியிடுகிறோம். இது கடைசிப் பகுதி. இக்கட்டுரையில் நான் என்பது சூமாக்கரையும், நாங்கள் என்பது ITDGயையும் குறிக்கிறது - உழவன் பாலா ]

  முழுக் கட்டுரை »

  குமரப்பாவிடம் கேட்போம்


  கிராம் உத்யோக் பத்ரிக்கா மே 1948

  நம் அயல்நாட்டு வாணிபம் (அடித்தளமற்ற‌) ஒரு ஆட்டம் காணும் சமநிலையில் இருக்கிறது. ஏற்றுமதிக்கென‌ நாம் உற்பத்தி செய்யும் பொருட்களைத் தயாரிக்க, மிகப்பல இடைப்பட்ட பொருட்களை நாம் இறக்குமதி செய்கிறோம். இவ்வாறு உருவாக்கிய பொருட்களை ஏற்றுமதி செய்து நமக்கு உணவை இறக்குமதி செய்கிறோம். இது மிகவும் விரும்பத் தகாத‌ ஒரு நிலைமை. பிரிட்டானிய அரசின் இரண்டாவது பெரிய சந்தையாக இந்தியா இருக்கிறது. வேறு எந்த ஒரு நாட்டையும் விட இரண்டு மடங்கு அதிகமான இயந்திரங்களை இந்தியா இறக்குமதி செய்கிறது - இயந்திர இறக்குமதியில் மிகப் பெரிய நுகர்வோராகவும் இருக்கிறது. நெசவாலை இயந்திரங்களைப் பொருத்தமட்டில் பிரிட்டனின் மொத்த வாணிபத்தில் 30 விழுக்காடு நாமே வாங்குகிறோம் - நமக்கு அடுத்துள்ள நாட்டை விட மூன்று மடங்கு அதிகமாக நம் கொள்முதல் இருக்கிறது.

  நம் தேவைகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதை நாம் ஆட்சேபிக்கவில்லை ; எனினும் அகில இந்திய தொழிற்சாலை முதலாளிகளின் சங்கத் தலைவர், நாம் இறக்குமதி செய்வதைச் சமன் செய்ய நாம் உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்னும்போது, நாம் மிகுந்த ஆபத்தான‌ களத்தில் இருப்பதாகப் படுகிறது - அதிலும் அவ்விறக்குமதிகள் உணவுப் பொருட்களாய் இருக்கையில். ஏனெனில் இத்தகைய இறக்குமதிகளே நாடுகள் இடையில் பூசலை ஏற்படுத்துகின்றன. நம் நாட்டின் பொருளாதாரத் தன்மை தேசிய அரசின் கீழ் மிகவும் வேக‌மாக மாறிவருகிறது; ஆனால் அம்மாற்றம் அழிவை நோக்கிப் போகிறதோ என்றே அச்சம் ஏற்படுகிறது. சமச்சீரான ஒரு பொருளாதாரம் அடிப்படைத் தேவைகளைப் பொருத்தவரை (அனைவரையும் உள்ளடக்கிய) ஒரு பரந்த கொள்கையுடன் இருக்கவேண்டும். நம் உள்நாட்டு உற்பத்தியானது குறிப்பாக‌ உணவுக்கும் உடைக்கும் அயல்நாட்டு இறக்குமதியை நம்பி இருக்கல் ஆகாது. துணி, ஆடை மற்றும் நூல் போன்றவற்றை ஏற்றுமதி செய்து உணவை இறக்குமதி செய்து கொள்ளலாம் என்பது சரியான வாதம் அல்ல. அத்தகைய ஒரு பாதையின் விளைவுகளை நாம் கருதவேண்டும்.

  முழுக் கட்டுரை »

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org