தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தோரோ பக்கம்


சாட்சி

1817ல் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தில் பிறந்த தோரோ (Henri David Thoreau - 1817-1862), தற்சார்பு வாழ்வியலைத் தேடித் தன் 28ஆம் வயதில் (1845) வால்டன் என்னும் குளக்கரையில் தானே தன் கையால் கட்டிய ஒரு குடிசை வீட்டில் 2 வருடம் 2 மாதம் தங்கி, எந்தக் கொள்முதலோ, பண்டமாற்றோ இன்றித் தன் உழைப்பால் மட்டுமே தன் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள இயலுமா என்று ஆராய்ந்தார். இவ்வனுபவங்களைத் தொகுத்து வால்டன் (Walden or Life in the woods) என்னும் புத்தகமாக வெளியிட்டார். இன்றளவும் தற்சார்பு வாழ்வியலைப் பற்றிய அடிப்படை நூலாக அது கருதப்படுகிறது. முன்னரே நாம் இவரைப் பற்றித் தாளாண்மையில் எழுதியிருந்தோம். அவருடைய எழுத்துக்களில் இருந்து சில முத்துக்களை ஒவ்வொரு இதழிலும் தொகுத்தளிக்க முயல்கிறோம்.

“நான் இப்பக்கங்களை எழுதும் பொழுது, காட்டில், எந்த மனிதருக்கும் ஒரு மைல் தள்ளி, மாசசூசட்சு மாநிலத்தின் கன்கார்ட் நகரில் வால்டன் என்னும் குளக்கரையில், நானே என் கையால் கட்டிய வீட்டில் தனியாக வாழ்ந்தேன். என் உடல் உழைப்பால் மட்டுமே என்னைக் காப்பாற்றிக் கொண்டேன். அவ்வாறு இரண்டு வருடம் இரண்டு மாதம் வாழ்ந்தேன்.”

நான் கன்கார்ட் நகரத்தில் பெருமளாவு பயணித்துள்ளேன். எங்கு நோக்கினும்- கடைகளில், அலுவலகங்களில், வயல்களில் - வசிப்பவர்கள் எல்லாம், ஆயிரம் ஆச்சரியமான விதங்களில் தவம் செய்வதாகவே எனக்குப் பட்டது.

பிராம்மணர்கள் செய்யும் தவங்களைப் பற்றி நான் கேள்விப் பட்டிருக்கிறேன். நாற்றிசையும் தீயெரிய சூரியனை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதும், நெருப்பின் மீது தலைகீழாய்த் தொங்குவதும், அல்லது தலையை நிரந்தரமாய்த் திருப்பி விண்ணைப் பார்த்துக் கொண்டே இருந்து திரவங்களைத் தவிர எதுவுமே தொண்டைக்குள் செல்ல இயலாமல் போவதும், வாழ்நாள் முழுவதும் ஒரு மரத்தில் தன்னைச் சங்கிலியால் கட்டிக் கொண்டு இருப்பதும், கம்பளிப் புழுக்களைப் போலப் பெரும் ராச்சியங்களைத் தன் உடம்பால் அளப்பதும், கம்பத்தின் உச்சியில் ஒற்றைக் காலில் நிற்பதுவும் போன்ற அதிர்ச்சியூட்டும் , நம்ப இயலாத தவங்களை விடவும் நான் தினம் காண்பவை என்னை வியக்க வைக்கின்றன.

“உங்கள் சகமனிதரை எப்படி எல்லாம் தவம் செய்து கெஞ்சுகிறீர்கள்! அவரது ஷூக்களைத் தயாரிக்க‌ உங்களை அனுமதிக்கவோ, அல்லது அவரது தொப்பியைச் செய்யவோ, அல்லது கோட்டையோ, கோச்சு வண்டியையோ செய்யப் பணிக்குமாறோ, அல்லது அவரது மளிகை சாமான்களை அவருக்காக வேற்றூரில் இருந்து இறக்குமதி செய்யவோ ! என்றோ உடல் நலியும் ஒரு நாள் பயன்படும் என்று சேமிப்பதற்காக இப்போதே உடல் நலிந்து, ஒரு பழைய பெட்டியிலோ, சுவற்றில் ஒரு சுரங்கத்திலோ அல்லது இன்னும் பாதுகாப்பாக கல்லால் கட்டிய வங்கியிலோ எங்கேனும், எப்படியேனும், ஏதேனும் சிறிதோ பெரிதோ சேமிக்க என்னவெல்லாம் தவங்கள்!”

மாந்த இனத்தின் விளையாட்டுக்கள், வேடிக்கைகள் என்று சொல்லப்படுபவற்றில் கூட ஒரு இனந்தெரியாத கவலையும் பதட்டமும் ஒளிந்திருக்கிறது. அவற்றில் விளையாட்டு இல்லை - ஏனெனில் அவை வேலைக்குப்பின் ஓய்வில் செய்யப்படுகின்றன. ஆனால் பதற்ற‌மும், கவலையும் கொண்ட செயல்களைச் செய்யாமல் இருப்பதே அறிவின் லட்சணம்!

ஒரு மனிதன் தான் விளைவிப்பதை மட்டும் உண்டு, உண்பதை மட்டும் விளைவித்தால், அவனுக்குத் தேவையானதை அவ்வப்போது, நினைத்த நேரத்தில், இடது கையால், ஒரு கைக்கலப்பையால் விளைவிக்கலாம். இதற்குத் தேவை ஒரு வருடத்தில் 30 நாட்கள் உழைப்பு மட்டுமே… இந்த உலகில் உயிர்வாழ்வது என்பது ஒரு போராட்டமல்ல, அது ஒரு பொழுது போக்கே!

ஒரு மனிதனால் எல்லாவற்றையும் எவ்வளவுக்கெவ்வளவு அலட்சியப் படுத்த முடிகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அவன் செல்வந்தன்.

 
--
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org