தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

கிராமிய வாழ்வாதாரங்களும் உலகமயமாக்கலும் - ராம்


“புதிதாக அமைக்கபட்டுள்ள ஆந்திர மாநிலத்திற்கு, அதன் கிராமப்புற ஏழை மக்களுக்கான வாழ்வாதாரத்தை ஏற்படுத்துவதற்காக உலக வங்கி 75 மில்லியன் டாலர் கடன் வழங்க முன்வந்துள்ளது” என்னும் சமீபத்திய செய்தி பலரின் கவனத்தை ஈர்த்தது. இதைபோலவே மற்றொரு 75 மில்லியன் டாலர்கள் தெலுங்கானா மாநிலத்திற்கும் உலக வங்கி அளிக்கும் என்னும் செய்தியும், அதேசமயத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது பலரின் மத்தியில் பல கேள்விகளை கணைகளை எழுப்பியிருந்தது. ஆச்சரியம் என்னவென்றால், இத்தகைய கேள்விகளை எழுப்புபவர்கள் “வளர்ச்சிக்கு எதிரிகள்” என்று இன்றைய ஆட்சியாளர்களால் சித்தரிக்கப்படும், தன்னார்வு தொண்டு நிறுவனங்களோ அல்லது களப்பணியாளர்களோ அல்ல. இவர்களில் பெரும்பாலானவர்கள், வாழ்வாதார திட்டத்தின் பயனாளிகளுக்கும், சுய உதவிக்குழு நிறுவனங்களுக்கும் ஆசான்களாக திகழும் பேராசிரியர்கள் மற்றும் வல்லுனர்கள்தான்.

அப்படி இந்த வல்லுனர்கள் கூறுவதுதான் என்ன? இதோ, அவர்கள் வாயிலிருந்தே கேட்போம்!

 1. “1. சிறுகடன் (micro-credit) ஏழைகளுக்கு எந்த அளவிலும் பயனளிக்கவில்லை, மற்றும் பயனளிக்கும் வல்லமையும் இந்தத் திட்டத்திற்கு இல்லை என்பதை, உலகளவில் நடத்தப்பட்ட பல ஆய்வுகளும், சமூக ஆராய்ச்சிகளும் உறுதி செய்கின்றன.

 2. “2. 'குடிசைத் தொழில்–உள்ளூர்த் தொழில்–உள்ளூர் வாணிபம்' சார்ந்த தொழில் அணுகுமுறை, நமது கிராமப்புற வாழ்வாதாரங்களையும், மக்களையும் கீழ்க்கண்டது போன்ற உலகளாவிய பரந்த நிகழ்வுகளில் இருந்து காக்கத் தவறி விட்டது:


  உழவுப்பணியில் தேக்கநிலை
  உலகமயமாக்கல்
  புவிவெப்பமாதல்
  நகரமயமாக்கல்

 3. “3. மூன்று முக்கிய வேறுபாடுகளை, நாம் ஆராயாமல் இன்றைய வாழ்வாதார நிலையை முழுவதுமாக புரிந்துகொள்ள இயலாது. அவை,
  கிராமப்புற – நகரப்புற வேறுபாடு
  நிர்வகிக்கப்பட்ட மற்றும் நிர்வகிக்கப்படாத வர்த்தக அமைப்பு
  உலகளாவிய மற்றும் உள்ளூர் வர்த்தக நிர்வாக கண்ணோட்டம்

  இன்று, மிக ஏழைகளாக உள்ளவர்கள் பெரும்பாலும் கிராமப்புற – நிர்வாகிக்கப்படாத வர்த்தக அமைப்பு மற்றும் உள்ளூர் வர்த்தக தளத்தில் உள்ளதால், அவர்களைப் பெரும்பாலான சந்தையை சார்ந்த வாழ்வாதார முயற்சிகள் முன்னிறுத்தத் தவறிவிடுகின்றன. (குறிப்பு : படத்தைக் கொண்டு எளிதாக புரிந்து கொள்ள முடியும் )

 4. “4. இன்று தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் பலவும் நிர்வகிக்கப்பட்ட சந்தைப் பொருளாதாரத்தினுள், மிகவும் ஏழைமக்களின் வாழ்வாதாரத்தை முன்நிறுத்தி முனைவுகளில் ஈடுபட்டுள்ளனர். எனினும், இத்தகைய பொருளாதாரத்தில் மூலப்பொருள் உற்பத்தியாளரானவர், வாடிக்கையாளர், நுகர்வோர் மற்றும் உற்பத்தித் தொழிலாளர்களைச் சார்ந்துள்ளதை இவர்கள் உணர்வதில்லை. இன்று, பெரும் நிறுவனங்கள் பல இந்தத் தளங்களில் தங்களின் பணவலுவைக் கொண்டு, பொருளாதார ஆளுமை செலுத்துகின்றன என்பதைத் தொண்டு நிறுவனங்கள் உணர்வதில்லை.

  ” 5. வரலாற்று அடிப்படையில் சில முக்கியமான படிப்பினைகளை வாழ்வாதார முனைவோர் புரிந்துகொள்வதில்லை. தொன்றுதொட்டு வரும் நமது கிராமப்புற வாழ்வாதாரம், உற்பத்தித்திறனை தக்கவைத்துக்கொள்ளுவதில்தான் இருக்கிறது, என்பதை ஏனோ நமது தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த நண்பர்கள் மறந்துவிடுகின்றனர். உள்ளூரோ, வெளியூரோ நுகர்வோர் யாராகினும், உற்பத்தித் திறனிலிருந்து, நமது மக்களை மாற்றி வெறும் வாணிபத்தில் நுழைப்பதன் மூலம், எந்த லாபமும் நிரந்தரமாக அடைய‌ முடியாது. இத்தகைய திறனை ஏற்படுத்தவும், தக்கவைத்துக்கொள்ளவும் தேவையான திறன்சார் கல்வி, கிராமப்புற நிர்வாகத்திறன், கட்டமைப்பு, அரசாங்க உதவி மற்றும் ஊக்கத்திட்டங்கள் ஆகியவையும், நாம் கருத்தில் கொள்ளவேண்டியது கட்டாயமாகின்றது. இதற்குத் தேவையான அரசாங்கத் திட்டங்களும், கொள்கைகளும் அவற்றின் செயலாக்கமும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.

 5. “6. ஒரு புறம் ஏழை மக்களை “காக்கும்” அரசாங்கத் திட்டங்களும், மற்றொரு புறம் அவர்களது வாழ்வாதார வ‌ளங்களை “வளர்ச்சி” என்கிற பெயரால் அழிக்கும் அரசாங்க கொள்கைகளின் தாக்கத்தையும் குறைத்து மதிப்பிடமுடியாது.”

இதனை ஒரு உதாரணம் கொண்டு புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். நமது கிராமங்களில் “வாழ்வாதார முனைவு” என்கிற பெயரால், இன்று பெரும்பாலான தொண்டு நிறுவனங்களின் முயற்சியின் துவக்கம் - பெண்களை சுய உதவி குழுக்களாக அமைத்தலே. அத்தகைய குழுக்களுக்கு சிறு சேமிப்பிலிருந்து துவங்கி, சிறுகடன்வரை அனைத்தையும் தாங்களே நிர்வகிக்கும் திறனை ஏற்படுத்துதல் வரை பெரும்பாலான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மிக எளிதாகவே செய்துவிடுகின்றன. இதற்கு முக்கிய காரணம், நமது கிராமப்புற மக்களின் கண்ணியமான போக்கேயாகும். கிராமப்புறத்திலிருந்து மொத்தமாக காலிசெய்து வெளியேறிய வங்கிகளும், இத்தகைய குழுக்களை அணுகி, தங்கள் வங்கிக்கு எந்தவிதமான நஷ்டமும் இல்லாத, சிறு கடன்களை வழங்கத் தயங்குவதில்லை.

இந்தக் குழுக்களில் நிர்வாகத்திறனின் அடுத்த கட்டமாகத்தான், “வாழ்வாதார முயற்சிகள்” துவங்கப்படுகின்றன. இதன் முதல் கட்டமான “திறன் மேம்படுத்துதல்” என்னும் பயிற்ச்சி அளித்தலில்தான் இத்தகைய தொண்டு நிறுவனங்களின் அணுகுமுறையில் குறைபாடுகள் வெளிவருகின்றன. எந்தத் துறையில் “திறன்” மேம்படுத்த வேண்டும்? என்னும் கேள்விக்கு பெரும்பாலான நிறுவனங்கள் தீவிரமாக சிந்திப்பதில்லை. சுலபமாக இவர்கள் இந்த முக்கிய கட்டத்தில் செய்யும் முடிவு, எதனைக்கொண்டு முடிவு செய்யப்படுகிறதென்றால் –

 1. நிதிஉதவியளிக்கும் அரசாங்க திட்டம் அல்லது பன்னாட்டு நிறுவனம், எந்தக் துறையை சார்ந்து உதவிகளை அளிக்க விரும்புகிறதோ, அந்தக் துறைக்கு “திறன் மேம்பாட்டு” உத்திகள் முடிவு செய்யப்படுகின்றன.

 2. எந்தத் துறைக்கு இன்றைய சந்தையில் அதிக அளவில் மவுசு உள்ளது என்று தோன்றுகின்றதோ அத்துறையில்.

 3. சுய உதவிக் குழுக்கள் ஏற்கனவே பயனடைந்த துறையில்.

 4. யாரேனும் பெரும் தொழில் செய்பவர்கள், தங்களுக்கு தொடர்ந்து சில பொருட்கள் உற்பத்தி செய்து அளிக்கவேண்டும் என்னும் துறைகளில்.

இவையாவையும் சில பிரச்சனைக்குட்பட்ட, சில ஊகங்களின் அடிப்படையிலான முடிவுகள் என்பதை, இத்தகைய தன்னார்வு தொண்டு நிறுவனங்களை நிர்வகிப்பவர்கள், முழுவதுமாக உணருவதில்லை. அவை யாவை என்பதை சில உதாரணங்களை கொண்டு பார்க்கலாம் –

 1. 1. சமீபத்தில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் மிகப்பெரிய உற்பத்தி ஆலையை, மற்றொரு தொழில்நுட்ப பன்னாட்டு நிறுவனம் மொத்தமாக வாங்கியதும், அதில் வேலை செய்த அனைத்து தொழிலாளர்களும் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த தொழிற்சாலையின் முதல் சொந்தக்காரர் ஒரு “ஐரோப்பா நாட்டு நிறுவனம்”, இரண்டாவது ஒரு “அமெரிக்க நிறுவனம்”. “பன்னாட்டு தொழில் முதலீடு ஊக்குவிப்பு” என்னும் பெயரால் இந்த நிறுவனத்திற்கு சலுகை விலையில் இடமும், அனைத்து வசதிகளும் இந்திய அரசாங்கத்தாலும், தமிழக அரசாங்கத்தாலும் அளித்ததின் நோக்கமே, நமது மக்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்பதற்குதான். இதனாலேயே, ஊரகவளர்ச்சி திட்டத்தின் கீழ், இந்த நிறுவனத்திற்கு தேவையான “திறன்” சார்ந்த பயிற்சிகள் அரசாங்க செலவில் அளிக்கபட்டு, நமது ஏழை மக்களை இந்நிறுவனத்திற்கு, தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள். இன்று அவர்கள், மீண்டும், வேலையற்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

 2. 2. உலகவங்கி போன்ற பன்னாட்டு நிதி நிறுவனங்கள், ஒரே காலகட்டத்தில் அனைவரையும், ஒரே விதமான தொழில் முயற்சிக்கான திறன் நோக்கி, திட்டங்கள் வகுத்ததை தவறு என்று ஒப்புக்கொள்ளுகின்றன. ஆனாலும் நமது மக்கள், இன்றும் இத்தகைய “திறன் மேம்பாட்டு” திட்டங்களின் கீழ் செயல்படும், அரசாங்க சலுகைகளை எதிர்பார்த்து, தையற்பயிற்சி, உணவுப்பண்டங்கள் உற்பத்தி பயிற்சி, சிறு அலங்கார கைவினைப்பொருட்கள் உற்பத்தி பயிற்சி போன்றவற்றில் ஈடுபட்டுவருவது வருத்தமளிக்கின்ற செய்தி.

 3. 3. 'நுகர்வோர் பழக்கங்களை', முற்றிலும் மாற்றி அமைக்கும் விதமாக ஊடங்கங்களின் மூலம் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிவரும் பெரும் வர்த்தக நிறுவனங்களின் சில மாதங்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கும் குளியல்சோப்பு போன்ற பொருட்களை தங்களால், பெரும் நிறுவனங்களைவிட குறைந்தவிலையில் உற்பத்தி செய்து, விற்பனை செய்ய இயலும் என்னும் இறுமாப்பில் சில தொண்டு நிறுவனங்கள், இத்தகைய பொருட்களை பெருமளவில் உற்பத்தி செய்யும் தறுவாயில், சந்தையில் அத்தகைய பொருட்களுக்கு தேவை குறைந்துவிடுவது பலமுறை நாம் காண்கின்றோம். சந்தைக்கு இன்று தேவை இது என்று ஊகித்து, உற்பத்தி செய்ய துவங்குவதிற்கு முன்னரே சந்தையில் தேவைகள் மாறிவரும் வணிகப்போக்கைகண்டு பல சுய உதவிக்குழுக்கள் ஏமாற்றமடைந்தது இன்று பரவலாக காணலாம்.

 4. 4. “சிறந்த முயற்சிகள்” என்கின்ற பெயரில், நிதி நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்டு, இவை அனைவராலும், “கடைப்பிடிக்கத்” தக்கவையென்று ஊக்குவிக்கப்பட்ட பல முயற்சிகளும் இன்று இருந்த இடம் தெரியாமல்போன மாயம் – செம்மெறி ஆடுகள் வளர்த்தல், அலங்கார மீன்கள் வளர்த்தல், காளான் வளர்த்தல், எங்கோ தேவைப்படும் சீமை வெள்ளரிக்காய் வளர்த்தல் மற்றும் பல. இந்தப் பட்டியலில் ஏமாற்றமடைந்த இந்தியத் தொழில்முனைவோரில், கடந்த 20 ஆண்டுகளாக வேலை/சேவை செய்த, பல சுய உதவிக் குழுக்களின் பெயர்களும் அடக்கம். திறன்மேம்பாட்டு அளவிலேயே, இவ்வளவு தவறுகள் செய்ய வாய்ப்புள்ளதென்றால், இதனைத் தொடர்ந்து, ஒரு கிராமப்புறத் தொழில் தொடங்க இன்னமும் பல கட்டங்கள் உள்ளன. அவற்றில் என்னென்ன தவறுகள் நிகழ‌ வாய்ப்புள்ளது என்பதைப் பின்னர் பார்க்கலாம்.

 5. 5. தமிழகத்தில் 5,56,000 பெண்கள் சுய உதவிக்குழுக்கள் இயங்குகின்றன. 3000 கோடிக்கு அதிகமாக சேமிப்பு வங்கிகளின் மூலமாக செய்யும் இந்த குழுக்களுக்கு, 17 ஆயிரம் கோடிவரை இந்த வங்கிகள் கடனுதவி அளிக்கின்றன. 85 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் பங்குகொள்கின்ற இந்தக் கட்டமைப்பில், வருடத்திற்கு, 25000 பெண்களுக்கு “திறன்” மேம்பாட்டு பயிற்சிகள் அரசாங்கத்தால் அளிக்கப்படுகின்றன! …தொடரும்…
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org