தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

உழவை வெல்வது எப்படி


முத்தூர் பண்ணை - பசுமை வெங்கிடாசலம்


காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மேட்டூர் அணையிலிருந்து ஈரோடு செல்லும் சாலையில் 20 ஆவது கி.மீ. இல் உள்ள அம்மாபேட்டையில் இருந்து மேற்கே 5 ஆவது கி.மீ.இல் உள்ளது முத்தூர் பண்ணை. இதன் பரப்பு 2 ஏக்கர்.

இந்தப்பண்ணை 15 வருடங்களாக உழவு செய்யப்படாமல் பயிர் செய்யப்படுகிறது. தவிர்க்கப்பட்டது உழவு மட்டுமல்ல, வெளியில் இருந்து கொண்டுவரப்படும் இடுபபொருட்களும்தான். இந்தப்பண்ணைக்குள் செல்வது விதைகள் மற்றும் நாற்றுக்கள் மட்டுமே. 1999 இல் நம்மாழ்வாரின் சந்திப்புக்குப்பின் இந்தப்பண்ணையை சுயசார்புப்பண்ணையாக மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டது. அதுவரை இந்தப்பண்ணை மற்ற பண்ணைகளைப்போல் ஓரினப்பயிர் சாகுபடி நிலமாக இருந்து வந்தது. அதனால் வருவாய் மிகவும் குறைந்து நஷ்டம் அடைந்து வந்தது. மிளகாய், நிலக்கடலை, பருத்தி, கரும்பு போன்ற பயிர்களில் ஏதாவது ஒன்று மட்டும் பயிர் செய்யப்பட்டது. இரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்டது. மகசூல் மிகவும் குறைந்து ஒரு கட்டத்தில் இந்த பூமி தரிசாக விடும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதற்கு மிக முக்கிய காரணம் நீர்மட்டம் மிகவும் குறைந்தது ஆகும்.

நம்மாழ்வாரின் சந்திப்புக்குப்பின் இந்தப்பண்ணையில் அவரின் கொள்கைப்படி சுய தேவைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதன்படி பண்ணையை சார்ந்திருக்கும் கால்நடைகளின் உணவுத்தேவையான பசுந்தீவனம், உலர்தீவனத்திற்கு ஒரு அரை ஏக்கர் ஒதுக்கப்பட்டது. அதில் வறட்சியை தாங்கி வளரக்கூடிய கினியா புல் பயிர் செய்யப்பட்டது. அதில் மேல்மட்ட அடுக்குப்பயிராக வேலிமசால், மல்பெரி, கல்யாண முருங்கை, கிளரிசிடியா, சூபாபுல், முருங்கை போன்ற வெட்ட வெட்ட துளிர்க்கக்கூடிய மரவகைகள் நடப்பட்டன. இந்த பூமியின் ஒரு ஓரம் முள் இல்லா மூங்கில் 15 தூர்கள் நடப்பட்டன. மற்ற ஓரங்களில் தென்னை, மலைவேம்பு மற்றும் தடுசு போன்ற தடிமரங்கள் நடவு செய்யப்பட்டன. ஆங்காங்கே பழ மரங்கள் முந்திரி, கொய்யா, மாதுளை, மா, இலந்தை போன்றவைகள் நடப்பட்டன.

இன்னும் ஒரு 1/2 ஏக்கரில் நெல் மற்றும் தானிய வகைகளும், பருப்பு வகைகளும் மாற்றி மாற்றி வருடம் முழுவதும் பயிர் செய்யப்பட்டன. நெல் அறுவடைக்குப்பின் ராகி மற்றும் பாசிப்பயிறு விதைக்கப்பட்டு மூடாக்கு கொடுத்து தெளிப்புநீர் பாசனம் செய்யப்படுகிறது. சோளம் போன்ற தீவனப்பயிர்களும் பயிர் செய்யப்படுகிறது. இது உலர்தீவனமாக கால்நடைக்கு பயன்படுகிறது. நெல்லும் நேரிடையாக விதைக்கப்பட்டு மூடாக்கு இடப்படுகிறது. தெளிப்புநீர் பாசனம் செய்யப்படுகிறது. ஆக நெல்வயலையும் உழவு செய்வதில்லை.

இன்னும் ஒரு 1/2 ஏக்கரில் 1 1/2 அடிக்கு 3 1/2 அடி மேட்டுப்பாத்தி அமைக்கப்பட்டு காய்கறிச்செடிகள், பூச்செடிகள், பழச்செடிகள், மூலிகைச்செடிகள் நிரந்தரமாக உழவு இன்றி விதைப்பதும் அறுவடை செய்வதும் தொடர்ந்து வருடம் முழுவதும் நடைபெறுகிறது. இந்த வயலின் ஓரங்களிலும் தென்னை மற்றும் தடிமரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. உட்புறத்திலும் பலவகையான பழமரங்கள் சீத்தா, சப்போட்டா, கொய்யா, கறிவேப்பிலை, காபி, மிளகு போன்றவையும் நடப்பட்டன. காபி, மிளகு பயிர்கள் நன்றாகவே வளர்ந்துள்ளன.

மீதமுள்ள 1/2 ஏக்கரில் பலவிதமான தடிமரங்களும், கால்நடை தீவனங்களும் பயிரிடப்பட்டுள்ளன. இதில் பண்ணை வீடு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இன்று வரை சுமார் 35 அடி ஆழமுள்ள கிணற்று நீரையே பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டுவருகிறது. இதில் வருடத்தில் சுமார் 3 மாதங்களுக்கு குடிப்பதற்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. பாசனத்திற்கு தேவையான நீர் கிடைப்பதில்லை!.

தற்போது இந்தப்பண்ணையில் இருந்து 10 கால்நடைகளுக்கு தேவையான அனைத்து தீவனங்களும் குறைவின்றி வருடம் முழுவதும் எடுக்கப்படுகிறது. இந்தப்பண்ணையை சார்ந்து 10 கால்நடைகளும், 50 கோழிகளும், 100 புறாக்களும் உள்ளன. இந்தப்பண்ணையில் இருந்து கிடைக்கும் பொருட்கள் 5 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் தேவையான எரிபொருள், உணவு, மருந்து, காய்கறி, கீரைகள், பழங்கள் ஆகியவற்றை குறைவின்றி பூர்த்தி செய்கின்றன. தேவைக்குப்போக மீதியானவை மற்றவர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தப்பண்ணை குடும்பத்திலுள்ள கணவன், மனைவி இருவரால் மட்டுமே நிர்வாகிக்கப்படுகிறது. மிகவும் அரிதாகவே வெளியில் இருந்து வேலையாட்கள் வந்து செல்கின்றனர்.

உழவு செய்யப்படாமலும், வெளியில் இருந்து எந்த இடுபொருட்களும் கொடுக்கப்படாமலும் இருந்தும் பூமி பஞ்சுமெத்தை போல் வளமானதாகவும் களைகள் இன்றியும் காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்த பூமியில் உள்ள மரங்களின் இலைகளும், வேண்டியதை எடுத்துக்கொண்டு வேண்டாததை அதிலேயே திருப்பிக்கொடுக்கும் உத்தியும் ஆகும்.

இன்று நீரின் தேவை மிகவும் குறைந்து விட்டது. வாரம் ஒரு முறை 2 மணி நேரத்திற்கு தெளிப்பு நீர் கொடுத்தாலே போதுமானதாக உள்ளது. இந்த பண்ணையை சார்ந்துள்ள குடும்பத்தின் தேவைகளை இந்த பண்ணையே 80 சதம் பூர்த்தி செய்துவிடுகிறது. கால்நடை மற்றும் பூமியின் தேவைகள் 100 சதம் பூர்த்தி அடைந்துவிட்டது. இன்று இந்த பண்ணையில் இருந்து பால், எருமை, கோழிகள், புறா மற்றும் விறகு, தடி மரங்கள், எலுமிச்சை, பப்பாளி, கறிவேப்பிலை, முருங்கை, அகத்தி போன்றவை விற்பனை செய்யப்படுகிறது.

இந்தப்பண்ணையை சுற்றி ஆடாதொடையினால் உயிர்வேலி அமைக்கப்பட்டுள்ளது. அது சித்த மருந்து செய்ய வருடம் மூன்று முறை அறுவடை செய்யப்படுகிறது அல்லது மூடாக்குக்கு பயன்படுத்தப்படுகிறது.

ஆக இந்தப்பண்ணை மனித உழைப்பை மட்டுமே பெற்று அவனுக்கும், அவனது குடும்பத்திற்கும், அவனை சார்ந்துள்ள கால்நடைகளுக்கும் தேவையானவற்றை கொடுத்து, மீதமுள்ள பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் அவனுக்கு வருவாயையும் ஈட்டித்தரும் ஒன்றாகவும் ஆகிவிட்டது. ஆக இந்தப்பண்ணை நம்மாழ்வாரின் கருத்துப்படி உழவின்றி, வெளி இடுபபொருட்களின்றி முழுமையான சுயசார்பு பண்ணையாக அமைந்துள்ளது. இந்த பண்ணை முழு சுயசார்பு பண்ணையாக மாற எடுத்துக்கொண்ட காலம் சுமார் 5 வருடங்கள். இந்தப்பண்ணையில் இருந்து கிடைத்த கட்டுமான பொருட்களை கொண்டே கால்நடை கொட்டகை, புறா கூடு, கோழிக்கூடு மற்றும் பண்ணை வீடு அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தப்பண்ணையை சுமார் 1000 பேர் வந்து பார்த்துச்சென்றுள்ளனர். அவர்களில் சுமார் 50 பேருக்கு மேல் தங்கள் பண்ணையை உழவாண்மைக்கு மாற்றி அமைத்துள்ளனர். ஆக இன்று இந்த பண்ணை நஷ்டம் என்ற பேச்சுக்கு இடமில்லாமல் செய்துவிட்டது. இதில் இந்த வேலையை செய்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. வருவாயும் நிரந்தரமாக கூடிக்கொண்டே செல்கிறது. இன்னும் லாபம் பெற மதிப்பு கூட்டும் வேலையும் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகிறது. இதனால் 2 பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்.

இந்தப்பண்ணையில் 2 ஏக்கர் முழுவதும் தெளிப்புநீர் பாசனம் செய்யப்பட்டுள்ளது. இது அமைத்து 10 வருடங்கள் கடந்துவிட்டது. எந்த வித பிரச்சினைகளும் இன்றி செயல்பட்டு வருகின்றது.

– கட்டுரை வடிவாக்க உதவி - பாபுஜி

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org