தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

செவிக்குணவு இல்லாத போழ்து - பயணி


மக்காச் சோளக் கூழ்


முன்குறிப்பு

காவிரிக் கடைமடைப் பாசனப் பகுதிகளான திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் குறுவை (நெல்), சம்பா (நெல்) , நவரை (பாசிப்பயறு (அ) உளுந்து) என்று மூன்று போகம் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பரப்பின் பெரும்பகுதி கடுமையான களிமண் பூமியே. காவிரி நீர் சரியாக வராவிடினும் இப்பழக்கத்தை விட முடியாமல் அல்லது வேறு பயிர் சாகுபடி செய்ய முடியாமல் உழவர்கள் நிலத்தடி நீரை இறைத்துக் குறுவை சாகுபடி செய்கின்றனர். பலகோடி லிட்டர் தண்ணீரையும் பல கோடி யூனிட் மின்சக்தியையும் வீணடித்து TKM-9 AST 16 போன்ற மோட்டா ரக நெல் விளைவித்து அதை சொற்ப‌ லாபத்தில் வியாபாரிக்கு விற்று இப்போது நிலத்தடி நீரின் நிலை 120 அடி முதல் 180 அடி வரை போய் களர்-உவர் தன்மையுடன் விளைச்சலுக்கே உத்தரவாதமின்றி இருக்கின்றது. இச்சூழலில் மாற்றுப் பயிர்களை முயற்சிக்கலாம் என்று நண்பர் ஜெயக்குமாரின் வயலில் காணி நிலத்தில் (1.33 ஏக்கர்) மக்காச்சோளம் பரிசோதனைப் பயிராகச் செய்யப்பட்டது. மக்காச்சோளம் எந்தப் பெரிய பராமரிப்பும் இன்றி 450 கிலோ விளைந்தது. இதை அப்படியே வியாபாரிக்கு விற்றால் உழக்குக் கூட மிஞ்சாது என்பதால் தாளாண்மை அதை கிலோ 40 ரூபாய்க்குக் கொள்முதல் செய்து வைத்துள்ளது. இப்போது அதில் என்னென்ன உணவுப்பண்டங்கள் செய்யலாம் என்னும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளோம். அதில் ஒன்றுதான் இன்று நாம் காண்பது. தாளாண்மை சமையல் குறிப்பு அச்சிடுவதும் கூட உழவன் விடுதலையைக் கருத்தில் கொண்டே!

செய்முறை

மக்காச்சோளத்தை மில்லிலோ , எழுந்திரக் கல்லிலோ பொடியாக அரைத்துக் கொள்ளவும். இயற்கை மாவு மிக இனிமையான ஒரு மணத்துடன் இருக்கும். ஒரு கோப்பை மாவு எடுத்து அதை வாயகன்ற பாத்திரத்தில் குளிர்ந்த நீருடன் கலக்கவும். கொதிக்க வைக்கும் முன் வர மாவோ கட்டியோ இல்லாமல் நன்கு கையால் நீருடன் பிசைந்து பசைபோல் ஆக்கிக் கொள்ளவும். பின்னர் மேலும் நீர் விட்டு அதை அடுப்பில் மிதமான தீயில் வைக்கவும். கேழ்வரகுக் களிக்குச் செய்வது போல் நிறுத்தாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும் - இல்லையெனில் கட்டி தட்டிவிடும். நீர்க்க இருக்க வேண்டுமானால் நீர் விட்டுக் கொண்டே இளக்க‌ வேண்டும். சுமார் 15 முதல் இருபது நிமிடங்கள் கிளறினால் கண்ணாடி போன்ற பதத்துடன் மிக நல்ல மணத்துடன் மக்காச்சோளக் கூழ் தயார். தீ அளவாக இருத்தல் மிக முக்கியம்.

அரிசியில் செய்த சோறு போல் இது ஒரு அடிப்படை உணவு. 75 முதல் 100 கிராம் வரமாவு ஒரு நபரின் ஒரு வேளை உணவுத் தேவையை நிறைவு செய்துவிடும். இதில் அவரவர் விருப்பின்படி உப்பு, பால், இனிப்பு போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். அல்லது வெங்காயம், மிளகாய் எல்லாம் தாளித்துக் கலந்து உப்புமா போலவும் சுவைக்கலாம். அல்லது சாதத்தைச் சாப்பிடுவது போல, கூழில் சாம்பார், ரசம், தயிர் கலந்து சாப்பிடலாம்.

இதைக் கூழ் என்று சொல்ல்க் கூச்சமாயிருப்பவர்கள் பொலென்டா (polenta) என்ற இத்தாலியப் பெயரில் அழைத்து விருந்தினர்களை மயக்கலாம்!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org