தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

அடிசில் தீர்வு - அனந்து


சோகாப்பர் பல்லிழுக்குப் பட்டு ...

அச்சம் என்பது ஒரு மிக வலுவான உந்து சக்தி. அதிலும் நம் குழந்தைகளுக்கு ஏதாவது ஆகிவிடும் என்றால் பெற்றோர் இடறியடித்துப் போய் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இதை விளம்பர நிறுவனங்கள் முழுமையாய்ப் பயன்படுத்திக் கொள்கின்றன. உங்கள் குழந்தைக்கு சொத்தைப்பல், பற்குழி வராமல் எங்கள் பற்பசை 24 மணிநேரம் பாதுகாக்கிறது; இதில் அந்த பார்முலா இருக்கிறது, அது பல்டாகடர்களால் பரிந்துரை செய்யப்பட்டது, அது, இது, அப்படி, இப்படி என்று நம்மை மூளைச் சலவை செய்யும் விளம்பரங்கள்.

இந்த விளம்பரங்களுக்காகப் பல கோடிகள் சம்பளம் பெற்றுக் கொண்டு, மெத்தப் படித்துப் பல டாக்டர் பட்டங்கள் பெற்ற டென்டுல்கர்களும், ஷாருக்குகளும், விஜய்களும் கண்ட பற்பசையையும் நமது பிரஷில் ஆரம்பித்து அக்குள் வரை போட்டுக்கொள்ள சொல்லுவார்கள். தெருக்கோடிகளில் புரளும் நாமும் இந்த “விஞ்ஞானி”களின் பேச்சை நம்பி ஏமாறுகிறோம்!

சரி விளம்பரம் நன்றாயிருந்தால் நாம் வாங்கி விடுவோம்; ஆனால் வேறு ஒரு நிறுவனம் தன்னை விட ஜாலமாக விளம்பரம் செய்து விட்டால், வாடிக்கையாளர்கள் மாறி விடுவார்களே? அதற்கும் ஒரு குயுக்தியைக் கண்டுள்ளனர். அதுதான் பற்பசையில் அடிமைப்படுத்தும் நிகோட்டினைக் கலப்பது! இந்த நிகோட்டின் என்பது சிகரெட் தயாரிப்பில் ஆண்டாண்டு காலமாகக் கலப்படும் செய்யப் பட்டு வருவது - புகையிலையில் இயல்பாக உள்ளது. இது அதன் சுவைக்கு நம் நரம்பு மண்டலத்தையும், மூளையையும் அடிமைப்படுத்தும் வல்லமை உடையது. சில ஆண்டுகளுக்கு முன் டிப்சார் (Delhi Institute of Pharmaceutical Sciences and Research - DIPSAR) பல்கலைக்கழகம் இதை ஒரு ஆய்வில் கண்டறிந்து வெளிப்படுத்தியது. பின்னர் வேறு சில பல்கலைக்கழகங்களும் இதனை தங்கள் ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தி உள்ளன. வழக்கம்போல் பற்பசை நிறுவனங்கள் இதை முற்றிலுமாக மறுத்து விட்டன. சில கம்பனிகளின் பசைகளில் பல சிகரட்டுகளில் உள்ள அளவினை விட அதிகமிருந்தது. (பார்க்க அட்டவணை).

அது மட்டுமா? சர்க்கரை அளவு? பற்பசைகள் எப்படி அவ்வளவு இனிப்பாக உள்ளன என்று யோசித்தது உண்டா? காலையில் முதன் முதலில் அவ்வளவு இனிப்பு தேவையா? பாரம்பரியமாக வேம்பு போன்ற கசப்பு அல்லது ஆல்/வேல் போன்ற துவர்ப்பு நிறைந்த சுவையில்தான் துவங்கியது. மேற்கூறிய டென்டுல்கர் போன்ற அறிஞர்கள் நமக்கு பல் துலக்கும் போது நுரை வர வேண்டும் எனவும் அறிவுறுத்துகின்றனர். அதனால் SLS (Sodium Lauryl Sulfate) என்னும் புற்று நோய் பயக்கக்கூடிய ஒரு பொருள் கலக்கப்படுகிறது. சோப்பிலும் ஷாம்பூவிலும் சேர்க்கப்படும் இந்த பொருள் பற்பசையில் ஏன்? 'நுரை வருமாப்பா?' என்று ஒரு அப்பாவிப் பையன் அப்பாவைக் கேட்பானே அந்த நுரைக்காகத்தான்!

மேலும் ஃப்ளூரைடு (fluoride) என்னும் கனிமம் பல பற்பசைகளில் உள்ளது. பற்கள் வெள்ளையாக இருக்க வேண்டுமா, அதுவே தவறு, ஆனால் அதற்காக பல்லின்பூச்சை அரிக்கும் உராய்வுப்பொருள், மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைட் அல்லது கால்சிய‌ம் பெராக்சைட் போன்ற பளிச்சிட வைக்கும் வேதிப் பொருட்கள் பயன்படுத்தப் படுகின்றன. வெண்மையாக இருப்பது சுகாதாரமோ ஆரோக்கியமோ இல்லை; இருந்தும் இந்த விளம்பர ஏய்ப்புக்கள் பித்தலாட்டங்கள் தொடர்கின்றன.. இந்த ஃப்ளூரைடு மற்றுள்ள‌ ரசாயனங்களை நாம் கொப்பளித்துத் துப்புவதால் சூழல் பெரிதும் மாசு படுகிறது. இவற்றில் ட்ரிக்ளோசான், சார்பிடால் போன்ற சர்ச்சைக்குரிய வேதிப் பொருட்களும் உண்டு.

நாகரிக வாழ்முறை என்று நாம் நெகிழிப் பல்துலக்கிகளில் தேய்த்து விட்டு மாதம் ஒருமுறை அவற்றைத் தூக்கி எறிந்தால் என்ன ஆகும்? 120 கோடிப் பேர் கொண்ட இந்தியாவில் ஓவ்வொரு இந்தியனும் வருடம் 12 நெகிழிப் பல்துலக்கியை எறிவதானால் எவ்வளவு டன் மக்க இயலாத மாசு உருவாகும்? நமது ஆரோக்கியம், சுற்று சூழல், என்று எப்படி நோக்கினும் நட்டமே.

போதுமா? இதற்கு மேல் பற்பசையில் என்ன இருக்க முடியும் என்று இன்னும் பார்த்தால், மேலும் பல திடுக்கிடும் விஷங்கள். உடல் பெருக்கும் ரசாயனங்கள் சிலவற்றில் உள்ளன. பிராக்டர் & காம்பல் கம்பனியின் சில பற்பசைகளில் microbeads என்னும் பாலி எதிலீன் அடங்கிய நெகிழி உருண்டைகள் உள்ளன. அவை புற்றுநோய் முதல் பல நோய்களை விளைவிப்பன. இதைப்பற்றி அந்த கம்பனி, எங்களது எல்லா பற்பசைகளிலும் அது இல்லை, சிலவற்றில் இருக்கின்றன, அவற்றை அடுத்த 2 வருடங்களுக்குள் எடுத்து விடுவோம் என்றனர். எப்படி நச்சு உள்ளது என்று நிரூபித்த பின்னர், சிலவற்றில் மட்டுமே உள்ளது என்று துணிவாகப் பொய் கூறி, மேலும் அது 18 மாதங்களுக்குள் எடுப்போம் என்கின்றனர்! நச்சை எடுக்க அவ்வளவு தயக்கம், லாப வெறி மட்டுமே நோக்கம்! இப்படி நீண்டு்கொண்டே செல்கிறது நச்சுப்பட்டியல் - இது வெறும் பற்பசையில், மற்றவற்றை நினைக்கவும் வேண்டுமா! உங்களில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நிச்சயம் ஞாபகம் இருக்கும். 20-25 ஆண்டுகளுக்கு முன் ஒரு விளம்பரத்தில் ” உங்கள் பற்பசையில் உப்பா? கரித்தூள் உபயோக்கிறீர்களா? அதனால் தான் உங்கள் பற்கள் பலமாக இல்லை என்று நகையாடியது. இன்று அதேகம்பனிக்கள் இன்று “உங்களது பற்பசையில் உப்பு இருக்கிறதா? சாம்பல்?” என்று கேட்டு தங்களதில் இருப்பதால் அதனையே பாவிக்குமாறு வெட்கமில்லாமல் கூறுகின்றனர்.

சரி இதற்கு என்ன தீர்வு என்று காண்போம்.

முதலில் பல்தேய்ப்பதன் நோக்கமும் அவசியமும் என்ன? பல் விழுந்து முளைத்த பின்னர் அதன் ஆயுள் மிக அதிகம். நன்றாய்ப் பராமரித்தால் பல்லானது நூறு ஆண்டு வரை தன் வேலையைச் செய்யும். உணவைக் கடித்து உமிழ்நீருடன் கலந்து வயிற்றுக்குள் செலுத்துவது பல்லின் வேலை. ஒரு விதத்தில் இதை முதற்கட்ட செரிமானம் என்று கொள்ளலாம்.

பல்லுக்கு எதிரி நம் உணவுதான். இயற்கையான சமைக்காத உணவை உண்டால் பல்லே தேய்க்க வேண்டியது இல்லை. காட்டு விலங்குகளைக் கண்டு நாம் இதை அறியலாம். ஆனால் நாம் இயற்கையை விட்டு மிகவும் விலகி விட்டதால் உடல்நலம் பேணுதல் என்பதே ஒரு பெரிய ஆய்வுக்கு உட்பட்ட பாடமாகவும், பல லட்சம் கோடி பெறுமானமுள்ள வியாபாராமாகவும் ஆகி விட்டது. இதில் பல்லும் தப்பவில்லை!

இயற்கை உணவு சாப்பிட முடியவில்லையெனில் ஒவ்வொரு உணவிற்குப் பின்னும் நன்றாக வாய் கொப்பளித்தல் பற்சிதைவைப் பெருமளவு பாதுகாக்கும். பல்லை இரண்டு விதங்களில் பாதுகாக்க வேண்டும். ஒன்று உண்ட உணவின் மீதங்கள் பல்லில் தங்காமல் (குறிப்பாக உறாங்கும் போது) பார்த்துக் கொள்ள வேண்டும். இரண்டு பல்லின் மேல்பூச்சில் plaque எனப்படும் கறை படியாமல் பாதுகாக்க வேண்டும். இவை இரண்டையுமே பல்துலக்கி (brush) மிக நன்றாய்ச் செய்கிறது. எனவே இரவில் உறங்கப் போகும் முன் பல்துலக்கியால் தேய்ப்பது நன்று. ஆனால், பல்துலக்கியால் விளக்குவது பல்லை சுத்தம் செய்தாலும் ஈறுகளை மிகவும் பலவீனப் படுத்தி விடும். எனவே காலை எழுந்ததும் விரலால் பல் துலக்கி, ஈறுகளை விரல்களால் அழுத்தி விட வேண்டும். இந்த மூன்று கூறுகளையும் (கொப்பளித்தல், இரவில் பல்துலக்கி, காலை விரல் அழுத்தம்) தொடர்ந்து செய்தால் தற்போது உள்ள பல்நலனை அப்படியே பாதுகாக்கலாம்.

ஆகப் பல்துலக்கி தேவையே தவிர, பற்பசை முற்றிலும் தேவையற்ற ஒன்று! அதுவும் இவ்வளவு வேதிப் பொருட்களையும், புற்றுநோய்க் காரணிகளையும், சூழ்ச்சியுடன் கலக்கப்பட்ட போதைப் பொருட்களையும் கொண்ட விளம்பரப் பற்பசைகள் முற்றிலும் தீமையே.

இதற்குப் பல மாற்றுக்கள் உள்ளன:

  1. 1. சமையல் சோடா உப்பு 2 மேசைக் கரண்டியில், 1/2 தேக்கரண்டி நன்றாய்ப் பொடி செய்த கல் உப்பைக் கலந்து நல்ல குடிநீர் தேவைப் படும் அளவு கலந்தால் ஒரு பசை போல் வரும். இது ஒரு மிகச் சிறந்த இயற்கைப் பற்பசை. அளவை அவரவர் தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம். இது காரமாகவோ உப்புக் கரிப்பது போலவோ இருந்தால் எலுமிச்சை, சாத்துக்குடி அல்லது ஆரஞ்சுப் பழச்சாறு 1 தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளலாம்
  2. 2. சுத்தமான செக்குத் தேங்காய் எண்ணையுடன் சம அளவு சமையல் சோடா உப்பைக் கலந்து பற்பசையாகப் பயன் படுத்தலாம்.
  3. 3. நல்ல இயற்கைப் பற்பொடியை நீரில் நனைத்துப் பசையாக்கிப் பல்துலக்கியால் எடுத்துப் பல் துலக்கலாம்.

சில நாட்டு மருந்துக்கடைகளிலும், பாரம்பரிய அங்காடிகளில் கிடைக்கும் பற்பொடிகள் நலம். இல்லையேல் ஆயுர்வேத ம‌ருந்து கடைகளில் கிடைக்கும் பற்பொடிகள் உகந்தவை. இல்லையேல், நாமே எளிதாக நம் வீட்டில் செய்யலாம்!

வேப்பை இலை (கெட்ட நுண்ணுயிரி எதிர்ப்பிற்கு), உப்பு (வெண்மை படுத்தும், கிருமி நாசினி), மஞ்சள் பொடி (புண் ஆற்றும், எதிர்ப்பு சக்தி), லவங்க தூள் (புத்துணர்வு, புண் ஆற்றும்) பட்டை தூள், ஏலக்காய், காய்ந்த‌ நெல்லி பொடி, வேறு சில் மூலிகைகள் (எல்லம் ஒரு பங்கு, ஏலக்காய் மட்டும் அரை பங்கு) அரைத்து சிறிதளவு பச்சை கற்பூரமும் சேர்த்தால் மிக பிரமாதமான பற்பொடி ரெடி. இதில் சிலவற்றைக் குறைக்கலாம் அல்லது நீக்கலாம்; ஆலம், வேல், கொய்யா இலை, என்று பலவற்றையும் சேர்க்கலாம். நல்ல தூளாக அரைத்து ஆள் காட்டி விரலால் பல் துவக்கவும்.

பல் துலக்கும் செயல்பாடு மிகவும் முக்கியம்; ஆனால் அது நெகிழிப் பல்துலக்கிகளால் தான் என்று இல்லை. வேம்பு, ஆல், கருவேல், உகா என்னும் மெஸ்வாக் போன்ற குச்சிகளை உபயோகிக்கலாம். கிராமங்களில் வேப்ப மரங்களுக்குப் பஞ்சமே இல்லை. 1 அடி வேப்பங் குச்சியை ஒடித்து வைத்துக் கொண்டு கடித்துப் பல்துலக்கி போல் ஆக்கிப் பல்துலக்கலாம். தினம் 1 இன்ச் உபயோகித்துத் தேய்த்தவுடன் அதைக் கழுவி அந்த ஒரு இன்ச் பாகத்தை வெட்டி எறிந்துவிட்டு அடுத்த நாள் பயன்படுத்தலாம் (இது குமரப்பாவின் பரிந்துரை! தினம் ஒரு குச்சி ஒடித்தால் மரம் மொட்டையாகிவிடும் என்று சாடுவாராம் அவர்). வேப்பங்குச்சி (அல்லது ஆல், வேலம்,மா) கொண்டு பற்களை நன்றாக துலக்கவும். இது பற்களுக்கிடையே உள்ள பொருட்களையும், அதன் மேல் படியும் கரைகளையும் அகற்றும்.

முதலில் நாம் எழுந்தவுடன் பல் விளக்கத்தேவை இல்லை என்கின்றனர் பல பாரம்பரிய மருத்துவர்கள். அவர்கள் கூறுவது, நமது உடலில் இரவு பல வளர்சிதைமாற்றம் நடக்கும். நமது உடலுக்கு (முக்கியமாக வயிற்றுக்கு!) தேவையான பல சுரப்பிகளையும் நொதிகளையும் உற்பத்தி செய்து நமது வாயில் நிறுத்தி வைக்கும். ஆகவே காலையில் முதலில் வாய் கொப்பளிக்காமல் தண்ணீர் குடிப்பது நல்லது என்கின்றனர். அதன் பின்னர் பல் விளக்கலாம்.

அதற்கு மேற்கூறிய இயற்கைப் பொருட்களை உபயோகித்தால் இன்னமும் நலம்.

எல்லவற்றிலும் எளிமையானது இயற்கை உணவைச் சாப்பிடுவதே. நாம் அடிமையாகி விட்ட புளிப்பு, காரம், எண்ணை, இனிப்பு ஆகிய நான்குமே பற்களுக்கு எமன். எனவே ஒரு புதுக்குறள் விடுவதானால்


யாகாவா ராயினும் நாகாக்க, காவாக்கால்
சோகாப்பர் பல்லிழுக்குப் பட்டு !

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org