தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

பீடை இலாததோர் கூடு - ஜெய்சங்கர்


[ பீடை இல்லாததோர் கூடு கட்டிக் கொண்டு , சிட்டுக் குருவியைப் போலே விட்டு விடுதலை ஆகி நிற்கச் சொன்னான் பாரதி. தற்சார்பு வாழ்வியலில் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றான இருப்பிடத்தைப் பற்றி ஆராய்ந்து குறைந்த அளவு சிமென்ட், கம்பி போன்ற பொருட்களைப் பயன்படுத்திக் கவின்மிகு வீடு கட்டியுள்ள அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார் ஜெய்சங்கர். ஜெய்சங்கரைத் தொடர்பு கொள்ள : 9043260688 ]

சென்ற மாதம் கூரை இல்லாமல் வீட்டை விட்டு வைத்தோமல்லவா! முக்கோணம், வில்வளைவு அல்லது தலைகீழ்வசிவு கூரை (Arch or Vault), சம தளம் என்று மூன்று வடிவமைப்புகளில் கூரைகளை அமைக்கலாம். இவற்றில் எது நமக்கு பொருந்தும் என்று முடிவு செய்வது குழப்பமான கட்டம். அதிக வாய்ப்புகள் இருந்தாலே மனம் இதுவா, அதுவா என்று அலை பாய்வது இயல்பு.

சாதாரணமாக, வீடுகளில் கூரை அமைக்க இப்போது தளம் அமைக்கிறார்களல்லவா… அது இரும்பு கம்பிகளின் ஊடே, சிமெண்ட்- கருங்கல் ஜல்லி-மணல் ஆகியவற்றால் உண்டான கலவையை வைத்து செய்வது. இதற்கு வலுவூட்டப்பட்ட சிமெண்ட் காங்கிரீட் (Reinforced Cement Concrete - RCC) என்று பெயர். இதற்குப் பயன்படுத்தப்படும் கம்பியும், சிமெண்டும் மிக அதிகம். கட்டிய பிறகும் இருபத்தோரு நாட்களுக்குத் தண்ணீர் நிறுத்தி ஈரத்தன்மையை பாதுகாக்க வேண்டும் (Curing). எனவே, வழக்கமான தளம் நமக்கு ஆகாது.

முக்கோணக் கூரைகளில் மண்களால் ஆன, நாட்டு ஓடு அல்லது சீமை ஓடு எனப்படும் மங்களூர் ஓடு, ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள் அல்லது கலாய் தகடுகள் (Galvanised Iron Sheets), தற்போது புதியதாக வந்துள்ள வண்ண வண்ண இரும்புத் தகடுகள் (Powder coated Iron sheets) ஆகியவை பொதுவாக காணப்படுவது. ஆஸ்பெஸ்டாஸ் மலிவாக இருக்கும்…இயற்கையில் கிடைப்பதே. ஆனால், அவை புற்று நோயை உருவாக்கும் காரணிகளை (Carcinogens) உமிழக் கூடியது. இரண்டு வகை இரும்புத் தகடுகளுமே மழை வரும்போது வீட்டினுள் பலத்த ஓசையை ஏற்”படுத்தும்”. வெயில் அதிகம் இருக்கும் போது வீட்டினுள் வெப்பமும் அதிகமாக இருக்கும். சத்தம் வராமல் இருக்க மற்றும் வெயிலின் தாக்கத்தை குறைக்க இரும்புத் தகட்டின் மேல் தென்னை ஓலைகளைப் பரப்பலாம். ஆனால், அவற்றை சில வருடங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டி வரும். அதையே மாற்றி, தென்னை ஓலைகளை வேய்ந்து அதன் மேல் இந்த இரும்பு தகடுகளை வைத்தால் சூடு, மழைச் சத்தம், பராமரிப்பு ஆகியவற்றிலிருந்து தப்பலாம். ஆனால், ஓலைகளுக்கும் தகடுகளுக்கும் இடையில் முகட்டு எலிகள் மற்றும் சுண்டெலிகள் வாசம் செய்வது தவிர்க்க இயலாதது. அதனால், அவை வீட்டினுள் வராமல் இருக்க நாம் தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும். தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என்று ஏன் சொல்கிறேனென்றால், எலிகள் மிகவும் புத்திக் கூர்மை உடையவை. ஒரு விதமாக வழியை அடைத்தால் அந்த அடைப்பை தாண்டி வரவோ அல்லது அடைக்காத இடத்தையோ சீக்கிரம் கண்டுபிடித்து விடும். தற்போது நாங்கள் பண்ணையில் வசித்து வரும் வீட்டில், கடந்த மூன்று வருடங்களாக, எனக்கும் எலி, சுண்டெலிகளுக்கும் இடையில் ஒரு புத்திக்கூர்மைப் போர் (Intellectual War) நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் போரில் நிரந்தர வெற்றி பெற்றாலும், இரவில் அவை கூரையில், ஓடும் சத்தம் மற்றும் ஓலைகளை கடிக்கும் சத்தம் ஆழ்ந்த உறக்கத்திற்கு இடையூறாக இருக்கும்.

சீமை ஓடுகள் அல்லது நாட்டு ஓடுகள் மண்ணாலானதால் இவை இரண்டும் எந்தப் பக்க விளைவையும் உண்டாக்காது. நல்ல நாட்டு ஓடுகள் கிடைப்பதே இப்போது சிரமம். நண்பர் ஒருவரின் பண்ணையில் கலாய் தகடுகளின் மேல் அதன் அலை அலையான அமைப்பை பயன்படுத்தியே நாட்டு ஓடுகள் வேய்ந்துள்ளனர். சீமை ஓடுகளை மரம் அல்லது இரும்பு சட்டங்களை குறுக்கும் நெடுக்குமாக வைத்து பின்னர் போடலாம். இவை இரண்டுமே கூரைக்கு நல்லவை என்றாலும் முக்கோணமாக இருப்பதால் அறையின் அகலத்தை பொறுத்து நடுப்பாகம் உயரமாக ஆகி விடும். அதிக உயரம் இருந்தால் சம வெளியில் நல்லது. ஆனால் மலைப் பகுதியில் குளிர் காலத்தில் அறையின் வெப்பநிலை வெகுவாக குறைந்து விடும்.

அடுத்ததாக, வளைந்த கூரைக்கு செங்கற்களைக் கொண்டே வில்வளைவு அல்லது தலைகீழ்வசிவு கூரை அமைக்கலாம். அதற்கு அகலம் பத்து அல்லது பனிரெண்டு அடிகளுக்கு மேல் இருந்தால் இரண்டாக பிரித்து செய்ய வேண்டும். எங்கள் வீட்டின் வடிவமைப்பு ஓரளவிற்கு சதுரமாக அமைந்திருப்பதால் வில்வளைவு அல்லது தலைகீழ்வசிவு கூரை அமைப்பது இயலும். ஆனால் கடினம். டோம் (Dome) என்ற வட்ட வடிவ கூரை அமைக்கலாம். அது வீட்டை விட பொது இடங்களுக்கு நன்றாக இருக்கும்.

மீதம் இருப்பது சம தள கூரை மட்டும் தான். அதில் வலுவூட்டப்பட்ட சிமெண்ட் காங்கிரீட்டை ஏற்கனவே பார்த்து ஒதுக்கியாகி விட்டது. மற்ற தெரிவுகள் என்ன என்று பார்த்ததில் கீழ்க்கண்ட தெரிவுகளை ஆராய்ந்தோம்.

1. இடைவெளிப் பலகை (Filler Slab)

இடைவெளிப் பலகை என்பது வலுவூட்டப்பட்ட சிமெண்ட் காங்கிரீட்டை போலவே கம்பி கட்டி காங்கிரீட் போட வேண்டும். ஆனால் இடையில் சீமை ஓடுகளையோ, மண் குப்பிகளையோ வைத்து கம்பி, சிமெண்ட் இரண்டின் பயன்பாட்டை பாதியாக குறைக்கலாம்.

2 கோழிவலைப் பலகை (Ferrocement Sheets)

கோழிவலைப் பலகை என்பது மெல்லிய இரும்பு கம்பி, கோழி வலை ஆகியவற்றுடன் சிமெண்ட் மற்றும் சிறுகருங்கல் (சிப்ஸ்) கலவையை வைத்துச் செய்வது. சிமெண்ட் மற்றும் கம்பியின் பயன்பாடு குறையும். ஆனால் காங்கிரீட்டை போல் அது முழுவதும் கம்பி மற்றும் சிமெண்ட்டால் ஆனது.

3. சிமென்ட் அட்டை (Madras Terrace)

சிமென்ட் அட்டை என்பது நகரத்தில் கூட பழைய வீடுகளில் காணலாம். அப்போது, மரச் சட்டங்களை சுவர்களுக்கு இடையில் இரண்டு அல்லது இரண்டரை அடி அகலத்தில் வைத்து அதன் இடையில் கண்டிக்கல்லை சுண்ணாம்புக் கலவையில் வைத்து குறுக்குவாட்டில் ஒட்டிக்கொண்டே வர வேண்டும். இப்படியே ஒவ்வொரு மரச் சட்டங்களுக்கும் இடையில் செய்து தளத்தை தயார் செய்ய வேண்டும். பின்னர் கீழ் பகுதியில் சுண்ணாம்புக் கலவை கொண்டு பூசி முடிக்கலாம். மேல் பகுதியில் செங்கல் ஜல்லி, சுண்ணாம்பு, மணல் கலவையில் கடுக்காய் தண்ணீர் சேர்த்து தரை போல் அமைத்து நன்றாக தட்டி முடிக்கலாம். அதற்கு மேல் செருகோடு என்று வழக்கில் சொல்வது போல் கண்டிக்கல் அல்லது மண்ணால் ஆன சம ஓடுகளை (Terracotta Tiles) பதித்து மழைத் தண்ணீர் ஊறாமல் பாதுகாக்கலாம். இப்போது மரச் சட்டங்களுக்கு பதிலாக வலுவூட்டப்பட்ட சிமெண்ட் காங்கிரீட் சட்டங்களை வைத்தும் இதே தளத்தை அமைக்கலாம்.

4. ஜாக் வில்வளைவு (Jack Arch)

ஜாக் வில்வளைவு என்பதற்கு சட்டங்களுக்கு இடையில் மூன்று அடி அகலம் இருக்கலாம். செங்கல் பேனலுக்கு இரண்டரை அடி அகலம் மட்டுமே இருக்கலாம். இவை இரண்டிலுமே பனிரெண்டு முதல் பதினைந்து அடி அகலமுள்ள அறைகள் அமைப்பது சாத்தியம். சிமெண்ட் காங்கிரீட்டின் பயன்பாடு கால் வாசியாக குறையும். ஜாக் வில்வளைவிற்கு மூன்று அடி சட்டங்களுக்கு இடையில் செங்கற்களை வைத்து நாம் சாளரங்களுக்கு மேலே வில்வளைவு அமைத்தோமே… அதே போல் வில்வளைவு அமைக்க வேண்டும். வித்தியாசம் என்னவென்றால் வில்வளைவின் அகலம்- சாளரங்களுக்கு, சுவரின் அகலமாக இருக்கும். ஆனால் தளத்திற்கு, அறையின் அகலமாக இருக்கும். எனவே, இதை வேகமாக செய்ய இரும்பில் வளைந்த அச்சு ஒன்றை செய்து வைத்துக் கொண்டால் அதன் மேல் வில்வளைவு செய்து நகர்த்திக் கொண்டே போகலாம். வலுவூட்டப்பட்ட சிமெண்ட் காங்கிரீட் சட்டங்களை தனியாக கீழேயே செய்து கொண்டு, பின்னர் சுவர்களின் மேல் வைத்து ஜாக் வில்வளைவை மேலேயே செய்து விடலாம். வில்வளைவு என்பதால் இதற்கு கலவையாக, சிமெண்ட் கலவையும் பயன்படுத்தலாம் அல்லது நாம் சுவற்றிற்கு பயன்படுத்திய அதே சேற்றுக் கலவையும் பயன்படுத்தலாம். பிறகு அடிப்பகுதியில் சந்துகளை மட்டும் சமமாக அடைத்து (Pointing) செங்கல் வில்வளைவு தெரிவது போல் விட்டு விடலாம்.

5. செங்கல் தகடு (Brick Panel)

செங்கல் தகடு , வலுவூட்டப்பட்ட சிமெண்ட் காங்கிரீட் சட்டங்களை தனியாகத் தரையிலேயே செய்து சுவர்களின் மேல் ஏற்றி வைக்க வேண்டும். பின்னர், இரண்டரை அடிக்கு இரண்டரை அடி சதுரமாக செங்கற்களைக் கொண்டு காங்கிரீட் மூடி அறுப்பது போல் செய்து கொள்ள வேண்டும். செங்கற்களுக்கு இடையில் குறுக்கும் நெடுக்குமாக இரண்டிரண்டு கம்பிகளை வைத்து அவை எல்லாவற்றையும் சிமெண்ட் மணல் கலவை மூலம் சேர்க்கலாம். வில்வளைவாக இல்லாமல் சமமாக இருக்கும் என்பதால் இதில் சேற்றுக் கலவை பயன்படுத்த இயலாது. சிமெண்ட் கலவை தான் பயன்படுத்த வேண்டும். இதைப் போல் நமக்கு தேவையான அளவு செங்கல் தகடுகளை தரையில் அறுத்து வைத்துக் கொண்ட பிறகு அவற்றை ஒன்றொன்றாக கான்கிரீட் சட்டங்களுக்கு இடையில் வைத்து நீட்டி விட்ட கம்பியின் மேல் சிமெண்ட் கலவை இட்டு பிணைத்துக் கொண்டே போக வேண்டும். இந்த வித தளத்தில் அடிப்பகுதியை அப்படியே செங்கல் தெரிவது போல் சந்துகளை மட்டும் சமமாக அடைத்து விட்டு விடலாம். ஜாக் வில்வளைவு, செங்கல் தகடு இரண்டுக்குமே மேல் பகுதியில் சிமென்ட் அட்டை போலவே செங்கல் ஜல்லி, சுண்ணாம்புக் கலவை இட்டு தளம் அமைத்து ஓடு ஒட்ட வேண்டும். ஜாக் வில்வளைவில் மேல்புறம் உள்ள வளைவில் எல்லாம் செங்கல் ஜல்லி, சுண்ணாம்புக் கலவை இட்டு சமமாக செய்து விட வேண்டும். மேல் பகுதியில் இரண்டுக்கும் தளம் முடிந்த பிறகு எந்த வித்தியாசமும் தெரியாது. [பார்க்க படங்கள்]

அப்பாடி… எளிமை என்பதிலிருந்து வெகு தொலைவு வந்து விட்டது போல் உள்ளதல்லவா! உண்மைதான். சம தளக் கூரைகள் எளிமையானவை அல்ல. சமமாக வேண்டுமென்றால் சற்று மெனெக்கெடத்தான் வேண்டியிருக்கிறது. இவை எல்லாவற்றையும் படித்து, பார்த்து, ஆராய்ந்து, சீர் தூக்கி எந்த விதமான கூரை அமைக்கலாம் என்று முடிவு செய்தது எப்படியோ நடந்து முடிந்தது. இவை எல்லாவற்றிலும், எங்களது தேர்வு ஜாக் வில்வளைவு. காரணம் கதவு, சாளரங்களின் மேல் செங்கல் வில்வளைவு இருக்கும் என்பதால் இதுவும் அதனுடன் ஒத்து இருக்கும். மேலும், ஜாக் வில்வளைவில் மட்டும் தான் சேற்றுக் கலவை பயன்படுத்த இயலும்.

ஜாக் வில்வளைவு கூரைக்கு காங்கிரீட் சட்டங்களை சுவற்றின் மேல் அமர்த்த வேண்டும் என்பதால் சுவற்றின் கடைசி வரிக்கு மேலே ஒரு பெல்ட் காங்கிரீட் அமைப்பது என்று முடிவானது. இது கீழே கரையான்களுக்கு அமைத்ததை விட சிறியதே. ஏனெனில், “ஒரு அடி” சுவற்றின் அகலத்திற்குள் மூன்றும் மூன்றும் ஆறு அங்குலம் செங்கல் போக ஆறு அங்குலம் அகலத்திற்கு மட்டுமே கம்பி மற்றும் சிமெண்ட் தேவைப்படும்.

சரி… கூரை அமைத்தாகி விட்டது. பின்னர்? மொட்டை மாடி. அது எப்போதும், மழையில் நனையும் படி இருக்கும் என்பதால் கைப்பிடி சுவர்கள் எல்லாம் செங்கற்களாலேயே சந்து விட்டு ஜாலி போல் சிமெண்ட் கலவை கொண்டு கட்டியுள்ளோம்.

இந்த வீட்டில் அமைந்துள்ள குளியலறை மற்றும் கழிவறை பற்றி இன்னும் பார்க்கவில்லை அல்லவா… அவற்றுக்கு ஜாக் வில்வளைவு அமைப்பது தேவையில்லாதது. மேலும், சம தள கூரையிலிருந்து மழை நீர் அறுவடை எவ்வாறு செய்வது என்பதைப் பற்றி அடுத்த இதழில் காண்போம்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org