தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

பாரம்பரிய நெல் ஒரு பணப்பயிரே - ஜெயக்குமார்


சென்ற ஆண்டு (2013 சம்பா) நம் பரிந்துரையை ஏற்று நண்பர் ஜெயக்குமார் 3 ஏக்கரில் பாரம்பரிய ரகமான கிச்சடிச் சம்பாவைப் பயிரிட்டார். மற்றுமுள்ள 13 ஏக்கர் நிலத்தில் செயற்கை விவசாயத்தில் ADT44 என்ற ஒட்டுரகத்தை நடவு செய்தார். அதைப் பற்றிய வரவு செலவு விவரங்களை நாம் சென்ற வருட பங்குனி இதழில் வெளியிட்டிருந்தோம். ( March 2014; வலைப்பூவில் : http://tmo.kaani.org/panguni2014/5.html ). கிச்சடி சம்பாவில் ஏக்கருக்கு 29500 நிகர லாபமும், ஒட்டு ரகத்தில் ஏக்கருக்கு 14060 நிகர லாபமும் கிடைத்தது. இதை நேரடியாக அனுபவித்து உணர்ந்தபின் ஜெயக்குமார் தன் மொத்தப் பண்ணையையும் இந்த ஆண்டு இயற்கை வேளாண்மைக்கு மாற்றி விட்டார்! இந்த ஆண்டு அவரது விளைச்சல் அனுபவங்களை வெளியிடுகிறோம். அவர் குறுவையே நடவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.ஜெயக்குமாரைத் தொடர்பு கொள்ள : 9962009302]

நான் எனது நஞ்சை நிலத்தில் இயற்கை முறையில் கிச்சலி சம்பா என்ற பாரம்பரிய நெல் ரகத்தை தேர்வு செய்து சாகுபடி செய்துள்ளது தாளாண்மை வாசகர்கள் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே. ஆனால் இந்த வருடம் (2014 சம்பா) சம்பா பருவத்தில் என்னுடைய 16 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் சாகுபடி செய்த அனுபவத்தை பார்க்கலாம்.

நாற்றங்காலில்

250 குழி (83 சென்ட்) நாற்றங்காலில் (ஜீன் 15 2014) 15 கிலோ தக்கை பூண்டு (daincha) 5 கிலோ சண‌ப்பை (sunnhemp) கலந்து விதைத்து 50 நாள் கழித்து (ஆகஸடு 5) சுமார் 6 அடி உயரமுள்ள தழைகளை மடக்கி உழுது, ஒரு வாரம் கழித்து 4 கிலோ அசோஸ்பைரில்ல‌ம், 4 கிலோ பாஸ்போபாக்டீரியா இரண்டையும் தொழு உரத்துடன் கலந்து இரண்டு நாட்கள் வைத்திருந்து நாற்றங்கால் சேற்றில் போடப்பட்டது. 25 நாட்கள் கை டிராக்டர் (power tiller) மூலம் உழவு செய்து சமன் செய்யப்பட்டது. 05/09/2014 அன்று விதை விதைக்கப்பட்டது. 03/09/2014 ம் தேதி மாலை 6 மணிக்கு 420 கிலோ நெல்லை சுடோமோனாஸ் கலந்த தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் மதியம் 2 மணியளவில் தண்ணீரை விட்டு கரையேற்றி (சுமார் 20 மணி நேரம்) வெளிச்சம் படாத இடத்தில் மூட்டமாக வைத்தோம். மறுநாள் மதியம் 2 மணிக்கு எடுக்கும் போது நல்ல முளைகட்டியிருந்தது. இந்த முறையை மூன்றாம் கொம்பு விதை என்று கூறுவார்கள். விதை விதைக்கும் போது நாற்றங்காலில் 3 செ.மீ அளவுக்குத் தண்ணீர் இருக்க வேண்டும். விதைக்கும் நாளன்று காலையில் நாற்றாங்கால் தண்ணீரை வடிகட்டி சேற்றை இறுகவிட்டு மாலை 2 மணிக்கு தண்ணீர் வைத்து விதைக்க வேண்டும். அப்போது தான் விதை நெல் சேற்றில் புதையாமல் இருக்கும். நாற்றுப்பறியின் போது நாற்று அறுபடாமல் வரும். விதைத்த மறுநாள் காலையில் தண்ணீரை வடிகட்டி நாற்றங்காலை உலர்த்த வேண்டும். அன்று மாலையோ அல்லது மறுநாள் மாலையோ தண்ணீர் விட்டால் போதுமானது அது மண்ணின் வகையைப் பொறுத்து மாறுபடும். விதைத்த 15ம் நாள் பஞ்சகவ்யா 3 லிட்டர் மற்றும் வேப்பெண்ணை கலந்து தெளிக்கப்பட்டு 22 ம் நாள் நாற்று பறிக்கப்பட்டது (27.09.2014).

நடவு வயல்

நடவு வயல்களை லேசர் கருவி (laser land levelling) கொண்டு சமன்செய்யப்பட்ட பிறகு (daincha) தக்கை பூண்டு விதைத்து 50-55 நாட்கள் கழித்து உழவு செய்து சமன் செய்யப்பட்டது. குறுவைப் பயிர் செய்யாததால் உழவு செலவு சற்று கூடுதலே - காரணம் களைகள் முளைத்து விட்டன‌. அதனால் இரண்டு முறை ரோட்டவேட்டர் மூலமும், நடவு செய்யும் போது கை டிராக்டர் (power tiller) மூலமும் உழவு செய்யப்பட்டது. சுமார் 3000 ரூபாய் உழவு கூலியாக ஏக்கருக்கு செலவு செய்ய நேர்ந்தது. சமன் செய்தபிறகு ஏக்கருக்கு 4 கிலோ அசோஸ்பைரில்லம், 4 கிலோ பாஸ்போபாக்டிரியா இரண்டையும் தொழுஉரம் மற்றும் ஆட்டுப் புழுக்கைகளுடகன் ஒரு வாரம் கலந்து வைத்திருந்து பிறகு வயலில் தூவப்பட்டது. நாற்றுப்பறித்து நடவு வயலில் 5 முதல் 8 நாற்று வரையும் இடைவெளி வரிக்கு வரி 30 செ.மீ ,பயிருக்கு பயிர் 20 செ.மீ இருக்குமாறு நடப்பட்டது. இரண்டு ஏக்கர் இயந்திரம் மூலம் நடவு செய்யப்பட்டது. இயந்திரம் மூலம் நடப்பட்ட இரண்டு ஏக்கரும் மழையில் சற்று கரைந்து பின் பச்சைப் பிடித்தது. இயந்திரம் மூலம் நடப்பட்ட வயலில் மட்டும் இலைப்பேன் காணப்பட்டது. இயந்திரம் மூலம் நடப்பட்ட வயல்கள் மட்டும் நட்டு 50 நாள்கள் கடக்கும் போது வெளிர்நிறத்தில் மாற ஆரம்பித்தது. உடனே பஞ்சகவ்யம் ஏக்கருக்கு 3 லிட்டர் வீதம் தெளிக்கப்பட்டது. [குறிப்பு: 5 முதல் 8 நாற்றுக்கள் ஒரு குத்தில் நடுவது பரிந்துரைக்கப்பட்டதல்ல. பழைய நடவு முறைகளில் வயதான நாற்றுக்களை (45 நாள் மேற்பட்டு) நெருக்கியும் குத்துக்கு 10-15 நாற்றுக்களுமாக நடுவார்கள். செம்மை நெல் சாகுபடியெனும் ஒற்றை நாற்று முறையில் 22.5 முதல் 30 செ.மீ இடைவெளியில் ஒவ்வொரு நாற்றாக மிக இளம் நாற்றுக்களை (15 நாட்களுக்கு உட்பட்டு) நடப் பரிந்துரை செய்கிறார்கள். ஆனால் களிமண் மிக அதிகமானதும், ஒரு மழைக்கே நீர்தேங்கக் கூடிய வயல்களை உடையதும் ஆன‌ கடைமடைப் பகுதிகளில் ஒற்றை நாற்று முறை சற்று ஆபத்தானதுதான். இதற்கென இரண்டுக்கும் இடைப்பட்ட தொழில்நுட்பம் ஒன்றைக் கடைப் பிடிக்கிறோம். அது 20 நாள் ஆன நாற்றுக்களை 30 செ.மீ x 20 செ.மீ என்ற இடைவெளியில் குத்துக்கு 2 அல்லது 3 நாற்றாக நட வேண்டும். இதனால் நாற்று உயரமாய் வெள்ளத்தில் கரையாமலும், 20 நாட்களே ஆனதால் அதிகத் தூர் கட்டியும் ஒரு இடைப்பட்ட பாதையில் உழவன் பயணிக்க இயலும் - ஆசிரியர்]

களைக்கட்டுப்பாடு

நடவு செய்த 25 ம் நாள் களைஎடுக்க ஆரம்பித்து கை நடவு செய்த வயல்களில் ஏக்கருக்கு 4 ஆட்களும் இயந்திரம் மூலம் நட்ட வயலில் ஏக்கருக்கு 20 ஆட்களும் களை எடுத்தார்கள்.

பூச்சி நிர்வாகம்

கை நடவு நட்ட வயலில் எந்தவொரு பூச்சி தாக்குதலும் இல்லாமல் நன்றாக இருந்தது. இயந்திர நடவில், நட்ட 15 ம் நாள் இலைப்பேன் காணப்பட்டது. அதற்கு மாட்டு கோமியத்தில் வேப்பம் பருப்பை இடித்து ஊறவைத்து (24 மணிநேரம்) பிறகு வடிகட்டி கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கப்பட்டது.

குறிப்பு

நெல் வயலைப் பொறுத்தவரை பூச்சிகளைக் கட்டுப்படுத்த இயற்கை முறை பூச்சி விரட்டிகளை சோதனை செய்ததில் கோமியத்தில் வேப்பம்பருப்பை ஊறவைத்து வடிகட்டி தெளிப்பதும், மிக அதிகமான பூச்சிகள் தென்பட்டால் அதனுடன் 200கிராம் சுருட்டுப் புகையிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து அதனுடன் சேர்த்து தெளிப்பதும் மிகச்சிறந்த கட்டுப்பாடாக்க நான் உணர்ந்தேன்.

நீர் மேலாண்மை

நடவு வயலைப் பொருத்தமட்டில் நடவு செய்த பின் இரண்டு முறை மட்டும் தண்ணீர் வைக்கப்பட்டது. அக்டோபர் 15 முதல் அறுவடை வரை 90 நாட்களுக்கு மோட்டார் மூலம் நீர்பாய்ச்சவில்லை - , காரணம் மழை விட்டு விட்டு பெய்ததில் இறவைப் பாசனம் தேவைப் படவேயில்லை. 4 மாதப் பயிரில் 3 மாதம் நிலத்தடி நீர் பயன்படுத்தவே இல்லை என்பது மற்றொரு மகிழ்ச்சியான நிகழ்வு! இயந்திர நடவு மட்டும் மழையில் சற்று கரைந்ததால் அறுவடை 10 நாட்கள் பின் தங்கிவிட்டது. ஆகையால் அதற்கு மட்டும் ஜனவரி மாதம் இரண்டு தண்ணீர் வைக்கப்பட்டது.

எலிக்கட்டுப்பாடு

எலியைப் பொறுத்தவரை நடவு செய்வதற்கு ஒரு வாரம் முன்பாக வரப்புகளை வெட்டி எலிகளைப் பிடித்தோம். அதன் பிறகு நடவு வயல்களில் பெரிய அளவில் சேதம் எதுவும் இல்லை. கடந்த பத்து ஆண்டுகளில் இந்த வருடம் மட்டும்தான் எலியின் சேதம் இல்லாமல் அறுவடை செய்துள்ளோம். எனது வயலில் மட்டுமல்ல பொதுவாக எல்லோருக்குமே இந்த ஆண்டு எலிகளின் தொல்லை மிகவும் குறைவே. மழை தொடர்ந்து பெய்ததால் இருக்கலாம் என்பது எனது கருத்து.

குறுவை நடாமல் இருந்தாலும் எலியின் தொல்லை குறையும் - காரணம் அதற்குப் போதுமான உணவு கோடை காலங்களில் கிடைக்காமல் அதன் இனப்பெருக்கம் குறைந்துவிடும். அறுவடையைப் பொறுத்தவரையில் இயந்திரம் மூலம் செய்யும் போது ஏக்கருக்கு 1.25 மணிநேரத்திற்கு ரூ.2750 செலவானது. மற்ற ரகங்களை பார்க்கும் போது அறுவடைக்கான செலவும் கிச்சலிசம்பாவிற்கு மிகவும் குறைவே. கிச்சலிசம்பா ரகம் உயரமாக வளர்ந்து சாய்ந்து விடுவதால் இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் பொழுது 2750 ரூபாய் செலவாகிறது. இதுவே சாயாமல் நின்றிருந்தால் 2000 ரூபாய்க்கும் குறைவாகத்தான் செலவு ஆகியிருக்கும்.

மகசூல்

இந்த ஆண்டைப் பொறுத்தவரையில் மழை பரவலாகப் பெய்தாலும், வானம் மேகமூட்டமாக தொடர்ந்து ஒரு மாத காலம் இருந்துள்ளதால் பயிரின் ஒளிச்சேர்க்கையின் (Photosynthesis) அளவு மிகவும் குறைந்துவிட்டது. ஆகவே சென்ற ஆண்டை விட 20 - 25% மகசூல் எல்லோருக்கும் எல்லா ரகத்திற்கும் மகசூல் குறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் புகையான் பூச்சி தாக்குதலும் இந்த ஆண்டு மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால் கிச்சிலி சம்பாவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

எனது கிச்சிலிசம்பா சராசரியாக ஒரு ஏக்கருக்கு 1425 கிலோ நெல் மகசூல் கிடைத்துள்ளது. இந்த மகசூல் சென்ற ஆண்டை விட ஏக்கருக்கு 375 கிலோ குறைந்துள்ளது. இந்த ஆண்டு BPT போன்ற மற்ற ரகங்களின் மகசூலை விட கிச்சிலிசம்பா சற்றுக் கூடுதலாகவும், பூச்சி நோய் தாக்குதல் இல்லாமலும் இருப்பதால் எனக்கு லாபகரமாக இருந்தது.

குறிப்பு ஒரு ஏக்கருக்கு உண்டான வரவு – செலவு கணக்கு

விதை 25 கிலோ (சொந்த விதை) 1250.00
நாற்றங்கால் செலவு ஏக்கருக்கு 300.00
எரு எடுத்தல் 2000.00
பசுந்தாள் விதை 600.00
உழவு (நடவு வயல்) 3000.00
நாற்றடி + நடவு 4200.00
களைபறிப்பு 600.00
இதரசெலவு 500.00
அறுவடை 3100.00

ஏக்கருக்கு 1425 கிலோ ரூபாய் 25 வீதம் 35,625 ரூபாயில் செலவு தொகை போக (35625 - 15800) ரூ. 19825 கிடைத்துள்ளது. இந்த ஆண்டின் சம்பா பருவத்தின் தட்ப வெட்ப நிலைக்கு இந்த லாபம் மிகவும் அதிகமே. நான் வேறு எந்த ரகத்தைத் தேர்வு செய்திருந்தாலும் செலவு செய்த தொகை வருமா என்பது சந்தேகமே!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org