தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

அயல்நாட்டு வாணிபத்தின் உண்மை நிறம்


கிராம் உத்யோக் பத்ரிக்கா மே 1948

நம் அயல்நாட்டு வாணிபம் (அடித்தளமற்ற‌) ஒரு ஆட்டம் காணும் சமநிலையில் இருக்கிறது. ஏற்றுமதிக்கென‌ நாம் உற்பத்தி செய்யும் பொருட்களைத் தயாரிக்க, மிகப்பல இடைப்பட்ட பொருட்களை நாம் இறக்குமதி செய்கிறோம். இவ்வாறு உருவாக்கிய பொருட்களை ஏற்றுமதி செய்து நமக்கு உணவை இறக்குமதி செய்கிறோம். இது மிகவும் விரும்பத் தகாத‌ ஒரு நிலைமை. பிரிட்டானிய அரசின் இரண்டாவது பெரிய சந்தையாக இந்தியா இருக்கிறது. வேறு எந்த ஒரு நாட்டையும் விட இரண்டு மடங்கு அதிகமான இயந்திரங்களை இந்தியா இறக்குமதி செய்கிறது - இயந்திர இறக்குமதியில் மிகப் பெரிய நுகர்வோராகவும் இருக்கிறது. நெசவாலை இயந்திரங்களைப் பொருத்தமட்டில் பிரிட்டனின் மொத்த வாணிபத்தில் 30 விழுக்காடு நாமே வாங்குகிறோம் - நமக்கு அடுத்துள்ள நாட்டை விட மூன்று மடங்கு அதிகமாக நம் கொள்முதல் இருக்கிறது.

நம் தேவைகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதை நாம் ஆட்சேபிக்கவில்லை ; எனினும் அகில இந்திய தொழிற்சாலை முதலாளிகளின் சங்கத் தலைவர், நாம் இறக்குமதி செய்வதைச் சமன் செய்ய நாம் உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்னும்போது, நாம் மிகுந்த ஆபத்தான‌ களத்தில் இருப்பதாகப் படுகிறது - அதிலும் அவ்விறக்குமதிகள் உணவுப் பொருட்களாய் இருக்கையில். ஏனெனில் இத்தகைய இறக்குமதிகளே நாடுகள் இடையில் பூசலை ஏற்படுத்துகின்றன. நம் நாட்டின் பொருளாதாரத் தன்மை தேசிய அரசின் கீழ் மிகவும் வேக‌மாக மாறிவருகிறது; ஆனால் அம்மாற்றம் அழிவை நோக்கிப் போகிறதோ என்றே அச்சம் ஏற்படுகிறது. சமச்சீரான ஒரு பொருளாதாரம் அடிப்படைத் தேவைகளைப் பொருத்தவரை (அனைவரையும் உள்ளடக்கிய) ஒரு பரந்த கொள்கையுடன் இருக்கவேண்டும். நம் உள்நாட்டு உற்பத்தியானது குறிப்பாக‌ உணவுக்கும் உடைக்கும் அயல்நாட்டு இறக்குமதியை நம்பி இருக்கல் ஆகாது. துணி, ஆடை மற்றும் நூல் போன்றவற்றை ஏற்றுமதி செய்து உணவை இறக்குமதி செய்து கொள்ளலாம் என்பது சரியான வாதம் அல்ல. அத்தகைய ஒரு பாதையின் விளைவுகளை நாம் கருதவேண்டும்.

அதிக உணவை உற்பத்தி செய்வதற்கு அரசு எடுக்கும் முயற்சிகளை நாங்கள் வரவேற்கிறோம், எனினும் இம்முனைவுகள் கச்சா எண்ணை, கன்னெய்யம் (பெட்ரோல்), ட்ராக்டர்கள், வேதி உரங்கள் போன்ற இறக்குமதிப் பொருட்களைச் சாராமல் இருக்க வெண்டும். ஏனெனில் அவையும் நம்மை சர்வதேசப் பூசல்களில் நம்மை ஒரு பகடைக் காயாக்கும் பொருளாதாரத்திற்கே இட்டுச் செல்லும். ஆறுகளின் மேலாண்மை, தரிசு நிலங்களில் சாகுபடி போன்ற முனைவுகள் நல்லவையே - அதே நேரத்தில் உணவை உற்பத்தி செய்யக் கூடிய நம் விளை நிலங்கள் ஏற்றுமதிக்கான பணப்பயிர்களுக்குப் பயன்படுத்தப்ப‌ட்டு உணவு தானியங்களை இறக்குமதி செய்வது கூடாது. இது பிரச்சினைக்கு ஒரு தவறான அணுகுமுறை ஆகும். நம் மேய்ச்சல் நிலங்களில் பெரும்பகுதி குறைந்து இப்போது கால்நடைகளைக் கட்டி வைத்து தீவன‌ப் பயிர்களை விளைக்கிறோம். இதுவும் உணவு விளைநிலங்களின் மேல் ஒரு அழுத்தததை ஏற்படுத்துகிறது. பணப்பயிர்களை விட உணவுப் பயிர்களுக்கே முக்கியத்துவம் தர வேண்டும்.

நம் உணவு வளங்களைப் பாதுகாக்கும் முயற்சியாக‌ அரிசி ஆலை, சர்க்கரை ஆலை, வனஸ்பதி எண்ணை ஆலை ஆகியவற்றை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும். இவை உணவில் உள்ள சத்தை அழிப்பதால், இத்தகைய ஆலைகளை அதிகரிப்பது அதிக உணவை விளைக்கும் கொள்கைக்கு எதிரானதே. ஒரு புறம் மக்களை உணவை விளைவிக்கச் சொல்லிப் பெரிதும் ஊக்குவித்து விட்டு மற்றொரு புறம் உணவின் சத்தை அழிப்பதை ஊக்குவிக்கலாகாது.

நம் பொருளாதார அமைப்புக்குத் தேவை என்னவென்றால், உற்பத்தியில் உள்ள பல்வேறு கூறுகளையும் ஒருங்கிணைத்துப் பாமர மக்களின் நல்வாழ்விற்குப் பய‌ன்படுமாறு திட்டமிட வேண்டும் - அன்றி மிகச் சில மனிதர்களைப் பணக்காரர்கள் ஆக்குவது அல்ல. அயல்நாட்டுத் தொழில்நுட்ப இறக்குமதியால் ஏற்றுமதிக்குப் பொருட்களை உற்பத்தி செய்து, அவ்வேற்றுமதியால் உணவை இறக்குமதி செய்யும் தற்போதைய தொழில்மயமாக்கும் முயற்சி ஒரு விதப் பொருளாதாரக் கயிற்றில் நடனமாடுவ‌து போன்றதே. அவை பார்வையாளார்களுக்கு சிலகாலம் சிலிர்ப்பூட்டலாம் - ஆனால் கூத்தாடிக்குக் கேடாக விளையும். நம் நாடு இது போன்ற வித்தைகளில் ஈடுபட வேண்டாமே!

[தமிழில் பயணி]

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org