தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

நிகழ்வுகள்

சூழல் மாசு காரணமாக விளைச்சல் பாதியாகிறது!

காற்றில் புகை, துகள்கள் உள்ளிட்ட மாசுகள் அதிகரிப்பதால் இந்தியாவில் உணவு தானிய விளைச்சல் எதிர்பார்க்கப்பட்டதில் பாதியளவுதான் இருக்கும் என்று அண்மைக்கால ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. 1980 முதல் 2010 வரையான தரவுகளை வைத்து உருவாக்கப்பட்ட புள்ளியியல் மாதிரி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் கோதுமை விளைச்சல் 2010-இல் எதிர்பார்த்ததைவிடப் பாதியளவு குறைந்துள்ளது. கரி உள்ளிட்ட மாசுகள் நிறைந்த புகை மேற்படி வீழ்ச்சியில் தொண்ணூறு விழுக்காட்டுக்குக் காரணம் என்று கணிக்கப்பட்டுள்ளது. புவி வெப்பமடைதல், பருவகாலங்கள் மாறுதல் ஆகியன மீதமுள்ள பத்து விழுக்காட்டுக்குக் காரணங்களாகத் தெரிகிறது. பஞ்சாப், அரியானா மாநிலங்களில் நெல் விளைச்சல் குறைந்தது. ஆனால் கோதுமை விளைச்சல் பாதிக்கப்படவில்லை! உத்தரப் பிரதேசம், உத்தரக்காண்ட், பிகார், சார்க்கண்ட், மேற்கு வங்கம் முதலிய மாநிலங்களில் நெல் விளைச்சல் பதினைந்து விழுக்காடு அல்லது அதைக் காட்டிலும் அதிகம் வீழ்ச்சியடைந்துள்ளது. போக்குவரத்து, மின்னுற்பத்தி உள்ளிட்ட துறைகள் வெளியிடும் மாசுகளைக் குறைத்தல், ஊர்ப்புற மக்களுக்கு அதிக செயல்திறன் கொண்ட அடுப்புகளை வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் மாசுபடுதலைக் குறைக்கும்.

தகவல் உதவி

http://www.business-standard.com/article/reuters/air-pollution-slashes-india-s-potential-grain-yields-by-half-study-114110400209_1.html, http://www.thehindu.com/sci-tech/energy-and-environment/air-pollution-lowers-crop-yield-study/article6561733.ece

உணவு உற்பத்தியை அதிகரிப்பதால் சூழல் மாசு அதிகரிக்கிறது!

பெருகிவரும் உணவுத் தேவைகளை நிறைவு செய்வதற்காக உணவு உற்பத்தியைப் பெருமளவு அதிகரிக்கவேண்டியிருப்பதாகவும். அதனால் ஆண்டின் குறிப்பிட்ட பருவ காலங்களில் வளிமண்டலத்தில் கரியீருயிரகையின் (CO2 - கரியமிலவாயு ) அளவு கால் பங்கு வரை அதிகரிப்பதாகவும் புதிய ஆய்வொன்று தெரிவிக்கிறது. பசுமைப் புரட்சியின் விளைவாக ஆலைமயமாகிவிட்ட வேளாண் முறையே இதற்குக் காரணம்.

மாந்த இனம் பரந்த அளவில் செயல்படுவதன் விளைவாக இப்புவியின் இயற்கையைப் பெருமளவில் மாற்றுவதை இது தெளிவாகக் காட்டுகிறது.

உலக உணவு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு (ஆண்டுக்குச் சுமார் 1300 கோடி டன் (13 லட்சம் கோடி கிலோ - அதாவது, 13,00,000,00,00,000 கிலோ) உணவு வீணாவதாக அண்மையில் ஒரு தரவைப் பார்த்தோம், மேலும், உலகில் விளையும் உணவில் பெரும்பகுதி நேரடியாக மக்களுக்குப் போய்ச் சேர்வதில்லை. பெருந்தொழிலகப் பண்ணைகளில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் கால்நடைகளை விரைவில் கொழுக்கவைப்பதற்கும் செல்வந்தர்களின் ஊர்திகளுக்கு உயிரெரிபொருள் உற்பத்தி செய்வதற்கும் தானியங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் நம்மில் சிலரின் வசதியான வாழ்க்கை முறைகளுக்காக உலகின் சூழல் மாசுபடுத்தப்படுகிறது என்பது தெளிவு!

கால்வாய் உடைப்பால் பயிர்கள் சேதமானதற்கு நிர்வாகம் இழப்பீடு!

கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் மாவட்டத்தில் புத்தம் புதிய பாசனக் கால்வாய் ஒன்று உடைந்ததால் 344 ஏக்கர் பரப்பில் பயிர்கள் சேதமடைந்தன. அதனால் 320 உழவர்கள் சுமார் 95 லட்ச ரூபாய் இழப்பைச் சந்தித்தனர்.

பல வட்டாரங்களில் வாழும் மக்களுக்குக் குடிநீரும் 15,250 எக்ட்டேர் பரப்புக்குப் பாசன வசதியும் தருவதற்காக அந்தக் கால்வாய் கட்டப்பட்டது. அந்தக் கால்வாயின் கட்டுமானத் தரத்தையும் இந்த உடைப்பு கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.

'இது இயற்கைச் சீற்றமன்று. ஆகவே இதற்கான இழப்பீட்டை அந்தக் கால்வாய் நிர்வாகமே பாதிக்கப்பட்டவர்களுக்குத் தரவேண்டும்' என்று ரெய்ச்சூர் துணை ஆணையர் சசிகாந்த் செந்தில் ஆணையிட்டுள்ளார். கட்டுமானத் தர ஆய்வு நடத்துமாறு செயற்பொறியாளருக்கு ஆணையிட்டுள்ளார். தரக் குறைவான பணி செய்யப்பட்டிருப்பது தெரியவந்தால் அந்த ப் பணியின் ஒப்பந்ததாரர் மீது வழக்குத் தொடுக்கப்படும் என்றும் துணை ஆணையர் அறிவித்துள்ளார்.

தகவல் உதவி

http://www.thehindu.com/news/national/karnataka/nrbc-9a-canal-breach-kbjnl-md-asked-to-pay-compensation-to-farmers/article6683012.ece

பழங்குடி மக்களின் முப்பதாண்டுக்கால அறப்போராட்டம் வென்றது!

சார்க்கண்ட் மாநிலத்தில் கோயெல் மற்றும் கரோ ஆறுகளின் குறுக்கே அணை கட்டும் திட்டம் சுமார் முப்பதாண்டுகளுக்கு முன்னர் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டது. அந்த அணை கட்டப்பட்டால் தங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்துவிடும் என்பதை உணர்ந்த அப்பகுதி மக்கள் ஒன்றுபட்டு உறுதியுடன் போராடி வென்றுள்ளனர். ஓராண்டு, இரண்டு ஆண்டுகள் அல்ல, முப்பதாண்டுகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர் முண்டா எனும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த அம்மக்கள்.

1984-ஆம் ஆண்டு முதல் அணை எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கென இந்திய ராணுவம் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது. 2001-ஆம் ஆண்டு போராளிகள் மீது காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்திற்று. இருப்பினும், போராளிகள் ஒரு முறை கூட வன்முறையில் ஈடுபடவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொடர் போராட்டத்தின் விளைவாக இப்போது அவ்விரு ஆறுகளும் தளைப்படாமல் ஓடிக்கொண்டிருக்கின்றன. மக்கள் ஒன்றுபட்டால் வலுவான அரசுகளின் அடக்குமுறைகளையும் மீறி வெல்லமுடியும் என்பதை இந்த எளிய, ஏழைப் பழங்குடி மக்கள் நமக்கு உணர்த்தியுள்ளனர்.

தகவல் உதவி

http://indiawaterportal.us2.list-manage2.com/track/click?u=b83d0c36847c863af2ad88a22&id=d88e3a383c&e=b9ed7841dc

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org