தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

புதிய பொருளாதாரக் கொள்கை - உழவன் பாலா


பொருந்திய தொழில்நுட்பம்

[“உலக அரசுகள் வியாபாரிகளைக் காக்க வேண்டும்; பொருள் ஈட்டுவதே நவீன வாழ்வின் குறிக்கோள்” என்ற கருத்தை வலியுறித்தியவர் பிரபல பொருளாதார நிபுணரான கெய்ன்ஸ். அவரின் மாணவரான சூமாக்கர், இக்கருத்தை முற்றிலும் எதிர்த்ததோடன்றி “மக்களை முன்னிறுத்திய ஒரு பொருளியல் தேடல்” என்ற கருத்துடன் “சிறியதே அழகு” என்ற நூலை எழுதினார். இது இருபதாம் நூற்றாண்டில் மிகப்பெரும் தாக்கம் ஏற்படுத்திய நூல்களில் ஒன்றாகப் பரவலாகக் கருதப் படுகிறது. இந்நூலில் “மனித முகம் உள்ள‌ தொழில்நுட்பம்” என்றும் “பௌத்தப் பொருளியல்” என்றும் இரண்டு கட்டுரைகள் எழுதியுள்ளார் சூமாக்கர். பொருளியலும், அதன் கைப்பாவையாக்கப்பட்ட தொழில்நுட்பமும் லாபத்தை மட்டுமே குறியாகக் கொள்ளாமல், மனித உணர்வுகளையும், தேவைகளையும் மதிக்குமாறு இருக்க வேண்டும் என்று வாதிட்டார் சூமாக்கர்.

அதன் தொடர்ச்சியாக 'இடைப்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சிக் குழுமம்'(Intermediate Technology Development Group -ITDG) என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் பற்பல நாடுகளில் பல ல‌ட்சம் ஏழைகள் பயனுறுமாறு ஒரு புதிய தொழில்நுட்ப இயக்கத்தையே உருவாக்கினார். பின்னர் 'இடைப்பட்ட தொழில்நுட்பம்' என்ற பெயர் 'பொருந்திய தொழில்நுட்பம்' (Appropriate Technology) என்ற பெயரில் செயல்படலாயிற்று. இப்பொருந்திய தொழில்நுட்பத்தைப் பற்றி திரு.சூமாக்கர் அவர்களே எழுதிய அறிமுகத்தில் இருந்து தொகுப்பை மூன்று பகுதியாக வெளியிடுகிறோம். இது கடைசிப் பகுதி. இக்கட்டுரையில் நான் என்பது சூமாக்கரையும், நாங்கள் என்பது ITDGயையும் குறிக்கிறது - உழவன் பாலா ]

பாகிஸ்தானில் ஒரு நிகழ்வு ஏற்பட்டது. செங்கல் உற்பத்திக்காகப் பாகிஸ்தானியர்கள் மிகுந்த தேவையுடன் இருந்தனர். உலக வங்கியில் போய் ஒரு கடனையும் வாங்கினார்கள். ஓய்வு பெற்ற சிறந்த செங்கல் தயாரிப்பாளரான ஒரு வல்லுனரையும் அழைத்து வந்தனர். அவர் “ஒரு மிகச் சிறந்த செங்கல் காளவாய்க்கு நான் ஒரு வரைவு தருகிறேன். அதைக் கராச்சி நகருக்கு ஒட்டியபடிதான் அமைக்க முடியும் ; அங்குதான் உலகிலேயே மிகச் சிறந்த களிமண் உள்ளது. அதற்கு 50 லட்சம் பவுண்டுகள் செலவு ஆகும்; வாரம் 10 லட்சம் செங்கற்கள் சுடலாம் ; 150 பேருக்கு வேலை கிடைக்கும்” என்றார்.

ஆனால் பாகிஸ்தானுக்கு இது ஒத்துவரவில்லை. நாடெங்கும் யாரும் கவனிக்காமல் சிறு, சிறு செங்கல் காளவாய்கள் சிதறிக் கிடக்கின்றன . எனவே இது போன்ற ராட்சத ஆலையை நிறுவ பாகிஸ்தான் அரசு முன்வரவில்லை. எங்களை அழைத்தார்கள். நாங்கள் [கையால் கல் அறுப்பதற்கும், ராட்சத ஆலைக்கும்] இடைப்பட்ட ஒரு தொழில்நுட்ப அணுகுமுறையைப் பரிந்துரைத்தோம். அங்கிருந்த சிறு காளவாய்கள் சிதலமடைந்து உற்பத்தித் திறன் மிகவும் குறைந்து இருந்தன. நான் செங்கல் செய்வதில் சிறந்த ஒரு இளைஞரை அழைத்துக் கொண்டு, அவருடன் அங்குள்ள காளவாய்களைப் பார்வையிட்டோம். அவர், “ஒன்றும் பிரச்சினை இல்லை. இது, இது, இதைச் செய்யுங்கள் உங்கள் உற்பத்தி மூன்று மடங்கு ஆகும். இம்மாற்றங்களுக்குப் பெரிதாய் முதலீடு ஒன்றும் தேவையிருக்காது. யாருக்கும் வேலையும் போகாது” என்று தொழில்நுட்ப‌ ஆலோசனை அளித்தார். பாகிஸ்தானியர்கள் கேட்டது கிடைத்தது!

வசதியான நாடுகளில் முதலீட்டுக்குப் பஞ்சம் இல்லை; வேலை ஆட்களைக் குறைப்பதே அங்கு முக்கிய நோக்கம் [ஆள் பற்றக்குறையால்]; மேலும் 10 லட்சம் செங்கற்களை இடம்பெயர்ப்பது போன்ற செயல்களுக்கு அங்கு ஏற்கனவே ஆற்றல், வாகனம், சாலை போன்ற நல்ல கட்டமைப்பு உள்ளது. எனவே இம்மதிரி உதவி அளிப்பதற்குப் பணக்கார நாடுகளில் தாம் பெற்ற அனுபவ‌த்தில் இருந்து வெளியே சிந்திக்கும் திறன் உள்ளவர்கள் தேவை.

எங்கள் அமைப்பில் இரண்டு சிறப்பு உட்பிரிவுகள் உள்ளன. ஒன்று தொழிற்சாலைகளுடன் இணைந்து பணியாற்றும் தொழில் தொடர்புப் பிரிவு. இன்னொன்று பல்கலைக்கழகத் தொடர்புப் பிரிவு. தொழில் தொடர்புப் பிரிவு 200 விதமான தொழில்நுட்பங்களில் உற்பத்தி செய்யும் 500 தொழிற்சாலைகளுடன் தொடர்பில் உள்ளது. நாம் பொதுவாக எங்கள் பிரச்சினைகளைத் தொழிற்சாலைகளிடம் கொண்டு செய்ய இயலாது. அவை அன்புக்கு வேலை செய்வதில்லை - பொருள் ஈட்டவே செய்கின்றன! ஆனால் நாங்கள் அவர்களிடம் “இக்கருவியை வெற்றிகரமாகச் செய்து விட்டீர்களானால், உங்களுக்கு மிகப் பெரிய சந்தை இருக்கிறது” என்று விளக்கி எங்கள் வேலைகளைச் செய்து கொள்கிறோம்!

நாங்கள் உலகெங்கிலும் பொருத்தமான கருவிகளை உற்பத்தி செய்யத் தொழிற்சாலைகள் மிகுந்த உதவியாக இருக்கின்றன. களத்தில் தேவைப்படும் மாற்றங்களைச் செய்ய பல்கலைக்கழகங்களால் இயலாது. [அவை ஆராய்ச்சி நிறுவனங்கள்]. அது தொழிற்சாலைகளாலேயே இயலும் என்று நாங்கள் அனுபவப் பாடம் பெற்றோம். ஆனால் ஒரு சிந்தனையை, யோசனையைத் தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்லும் முன் அது சரியாக இருக்க வேண்டும். உறுதி செய்யப்பட்ட தொழில்நுட்பமாக இருக்க வேண்டும். நாங்கள் ஒரு கருவியின் தேவையைக் கண்டறிந்தால் முதலில் அது வேலை செய்யுமா என்று வெள்ளோட்டம் பார்க்க ஒரு மாதிரி செய்ய வேண்டும். இவ்வாராய்ச்சிகளுக்கு தொழிற்சாலைகளுக்கு நேரமோ அவாவோ இல்லை. அந்தப் பணியைத்தான் நம் பல்கலைக்கழகத் தொடர்புப் பிரிவு செய்கிறது. பல்கலைக்கழகம் என்றால் அவற்றில் பொறியியல் கல்லூரிகள், ஆய்வு மையங்கள் எல்லாம் அடங்கும்.

எடுத்துக்காட்டாக ஆப்பிரிக்காவில் மழைநீர் சேகரிக்கப் பெரிய நிலத்தடித் தொட்டிகள் தேவைப் பட்டன‌. அவை கட்டுவதற்கும் மிகப் பெரிய செலவு ஆகும். அங்கே சாலைபோட பிட்டுமன் என்னும் தார் பயன்படுத்துகிறார்கள். அதைத் தொட்டியின் அடிப்பகுதிக்குப் பயன்படுத்தலாமா என்றோம். 'ஓ தாராளமாக, ஆனால் அவை வலுவூட்டப் பட வேண்டும்; அதற்குக் கண்ணாடி இழைகளைப் பயன்படுத்தலாம். அவை ஒரு டன் 600 டாலர்கள் ஆகும் என்றனர்'. 'இது சரி வராதே. டான்சானியாவிலே சிசால் நார் சீப்பாய்ந்து கிடக்கிறது, என்ன செய்வதென்றே தெரிவதில்லை. சிசால் போன்ற இயற்கை நார்களை வலுவூட்டப் பயன்படுத்த முடியுமா' என்றோம். இதை யாருமே சிந்தித்ததில்லை. சரி இம்பீரியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இதற்கென ஒரு அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டோம். இப்போது அவர்கள் இயற்கை நாரால் என்ன செய்ய இயலும், என்ன செய்ய இயலாது என்று அறிவியல் பூர்வமாகக் கண்டறிந்துள்ளனர். இனி நாங்கள் தொழிற்சாலைகளை அணுக‌லாம்.

தொழில் மற்றும் பல்கலைக்கழகத் தொடர்புப் பிரிவுகளான இவ்விரண்டும் பிரிட்டனில் பற்பல ஆய்வு மையங்களுடன் தொடர்பில் உள்ளன. ஏறத்தாழ 200 மாணவர் ஆராய்ச்சிப் பணிகளை நாங்கள் தொடங்கி விட்டுள்ளோம். அவற்றின் கேள்விகளும், விடைகளும் மிகவும் பிரமிப்பூட்டக் கூடியவை.

எங்களுக்கு அடுத்த‌தாக இன்னொரு பிரச்சினை இருக்கிறது. இவ்வளவு தொழில்நுட்பப் புரிதலையும் எப்படி நாங்கள் பல்வேறு வளரும் நாடுகளுக்கு எடுத்துச் செல்வது? இப்போது நாங்கள் ஏறத்தாழ 24 வளரும் நாடுகளில் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். அவ்வளவு நாடுகளில் அத்தனை பேருடன் எப்படித் தகவல் பகிர்ந்து கொள்வது, தொடர்பு கொள்வது? எனவே நாங்கள் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு தொடர்பு மையம் வேண்டும் என்று ஒவ்வொரு நாட்டையும் ஒரு தொடங்கும்படி கேட்டுக் கொள்ளுகிறோம். தற்போது 8 நாடுகளில் தொடங்கி உள்ளனர். இத்தகவல் பரிமாற்றங்களை எளிதாக்க பொருந்திய தொழில்நுட்பம் (appropriate technology) என்று ஒரு பத்திரிக்கை நடத்துகிறோம். அதில் நாங்கள் எங்கள் தற்பெருமையைப் பீற்றிக் கொள்வதில்லை. அது ஒரு திறந்த புத்தகம். யார், எங்கே, என்ன, எந்தத் தொழில்நுட்பத்தில் வேலை செய்கிறார்கள் என்ற தெளிவான தகவலைத் தருகிறோம். ஒரு பிரச்சினை எவ்வளவு கடினமானது, தீர்க்க இயலாதது என்ற வியாக்கியான்ம் எங்களுக்குத் தேவையில்லை; ஒவ்வொருவரும் அவரவர் நிலையில் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள நாங்கள் என்ன செய்ய இயலும் என்பதே எங்கள் தேடல். லண்டனில் கண்டறியப்பட்ட தீர்வுகளை எப்படி அவை தேவைப்படும் 20 லட்சம் கிராமங்களுக்கு எடுத்துச் செல்வது என்பதே எங்க‌ள்முன் நிற்கும் பெரிய கேள்வி.

இன்னொரு மிகப்பெரிய சிக்கல் இந்த இயக்கத்தின் செலவுகளை எப்படிச் சமாளிப்பது என்பது. எங்கள் வெளிநாட்டுப் பணிகளைச் சமாளிப்பது எளிதாக இருக்கிறது. ஏனெனில் அப்பணிகள் மக்கள் சேவையைக் கட்டி இழுப்பது அல்ல - மாறாக தொழில்நுட்பத்தை உறுதி செய்வது, பயிற்சி அளிப்பது மற்றும் இவ்விடைப்பட்ட தொழில்நுட்பங்கள் அர்த்தமுள்ளதாகவும், அவ்வச் சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருப்பதை உறுதி செய்வதுமே. ஆனால் தலைமை அலுவலகத்தில் உள்ள சிந்தனை/ஆராய்ச்சிப் பணிகளுக்கு நிதி திரட்டுவது மிகவும் கடினமானது. இதெற்கென நாங்கள் ITDGயை லாப நோக்கற்ற ஒரு தொண்டு நிறுவனமாகப் பதிவு செய்துள்ளோம். அதன் அங்கங்களாக நான்கு கிளை நிறுவனங்களை நிறுவியுள்ளோம். அவை அனைத்தும் லாபநோக்குள்ள நிறுவனங்கள்.

முதலாவது ஆலோசனை மையம். இப்போது டான்சானியாவில் இருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தால், அவர்கள் பயணச் செலவு குடுத்தால் போதும், நான் இலவசமாகப் போய்விட்டு வருவேன். ஆனால் அரபு நாடுகளில் இருந்து அழைப்பு வந்தால் என் செலவைத் தவிர என் நேரத்திற்கும், யோசனைகளுக்கும் அவர்கள் பணம் தர வேண்டும். இலவசமாகப் போவது படு முட்டாள்தனமாய் முடியும். அவர்களுக்கு அது மிகச்சொற்ப காசே - ஆனால் எங்கள் செலவுகளுக்குப் பெரிதும் உதவும்.

இரண்டாவது ஒரு வாணிப நிறுவனம். அது எங்கள் வரைவுகள், கருவிகள், இயந்திரங்கள், மற்றும் உலோகத்தை வளைக்கும் இயந்திரம் போன்ற எங்கள் கண்டுபிடிப்புக்களை விற்பனை செய்கிறது. அதுவும் லாபகர‌மாகவே இயங்குகிறது.

மூன்றாவது நிறுவனம் லண்டனில் நாங்கள் திறந்துள்ள ஒரு கடை. வளரும் நாடுகளில் உள்ளோர் மிகப்பல பொருட்களை உருவாக்குகிறார்கள். ஆனால் அவற்றை சந்தைப் படுத்துவது பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரிவதில்லை. அதற்காக ஆப்பிரிக்கக் கலைகள் (Afro Arts Limited) என்ற பெயரில் இக்கடையை நடத்துகிறோம். இதில் கொள்ளை விலையில் பொருட்களைப் பணக்காரர்களுக்கு விற்கிறோம். அந்த வருவாய் எங்கள் ஆராய்ச்சிப் பணிகளுக்கு உதவுகிறது.

நான்காவது ஒரு பதிப்பகம், Intermediate Technology Publication Limited என்ற பெயரில் இயங்கும் இது எங்கள் பத்திரிக்கையை வெளியிட்டது. இப்போது நாங்கள் பற்பல நூல்களை விறுவிறுப்பான விற்பனையில் வெளியிடுகிறோம். நாங்கள் வாரம் 500 பவுண்டு அளவிற்கு நூல்களை விற்கிறோம். இது மிகச் சிறியது போல் தோன்றினாலும் இவை எல்லாம் மிக நுணுக்கமானவை; ஏழைகளுக்குப் பயன்படுமாறு மிக எளிய செலவில் அச்சிடப்படுபவை. இதிலிருந்தும் ஒரு வருவாய் வருகிறது. இந்நான்கு நிறுவனங்களின் வருவாயும் தலைமை அலுவலகத்தை நடத்துகிறது.

நிறைவாக ஒன்றைக் கூறி முடிக்கிறேன். வளரும் நாடுகளில் உள்ளவர்களை நாம் இன்னும் சற்று அலட்சியப்படுத்தாமல் நடத்துவோம்.. அவர்கள் மிகுந்த புத்திக்கூர்மை உடையவர்கள். மிக எளிமையான தேவைகளுடன் நிறைவாக எப்படி வாழ்வது என்று அறிந்தவர்கள். நாம் எல்லா நவீன‌ வசதிகளும் உள்ள சூழலில் எப்படி வாழ்வது என்று அறிந்தவர்கள். ஆனால் நம் அனுபத்தில் இருந்து வெளியேறி அவர்கள் நிலைமையில் நம்மை வைத்துப் பார்த்துப் புரிந்து கொள்ள மிகப் பெரும் முயற்சி ஒன்று தேவை. நம் அனுபவம் அவர்களுக்குப் பொருந்தும் என்று நினைக்க வேண்டாம். அதில் நாம் முட்டாள்கள் ஆகி விட வேண்டாம்!

[அடுத்த கட்டுரையில், சூமாக்கரின் எண்ணங்களை நாம் எவ்வளவு தூரம் நம் நாட்டின் தற்போதைய சூழலுக்குப் பயன்படுத்தலாம், நம் தமிழ்நாட்டிற்குப் பொருந்திய தொழில்நுட்பங்கள் என்ன என்று பார்ப்போம்]

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org