தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தலையங்கம்


மக்களின் வெற்றி

தில்லி சட்டசபைத் தேர்தல் முடிந்து வரலாறு காணாத வெற்றியாக 95 % இடங்களை ஆம் ஆத்மி கட்சி வென்றுள்ளது. கிரண் பேடி, ஜகதீஷ் முகி, ஜனாதிபதியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி போன்றோர் தோல்வி அடைந்தனர். மாற்றமாம் வையகத்தில் மக்கள் மாற்றத்தை விரும்பியுள்ளனர் என்று தெளிவாகிறது. இது ஆம் ஆத்மியின் வெற்றி என்பதை விட பி.ஜே.பியின் தோல்வி என்பதே சரியாகும். பி.ஜே.பியின் இந்தக் கடுமையான பின்னடைவின் காரணங்கள் பல. மேலோட்டமாகக் கூறப்படுபவை, உணரப்படுபவை : கிரண்பேடியை முதலமைச்சராக அறிவித்தது கட்சித் தொண்டர்களுக்குக் கசப்புணர்ச்சியை ஏற்படுத்தி விட்டது; ஆம் ஆத்மி கட்சி மக்களின் நாடித்துடிப்பை ந‌ன்றாக உணர்ந்துள்ளனர் போன்றவை. ஆனால் இதன் உண்மைக் காரணங்கள் இன்னும் ஆழமானவை. 8 மாதங்களுக்கு முன் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையுடன் பி.ஜே.பி வென்று, அதன் பின்னர் நடந்த பல மாநிலத் தேர்தல்களில் பல இடங்கள் வென்றதும் பி.ஜே.பி பெரும் தன்னம்பிக்கை பெற்று விட்டது. மோடி அரசை மக்கள் விரும்புகிறார்கள், நாமே நாடாளப் போகிறோம் என்று நாளுக்கு நாள் இத் தன்னம்பிக்கை வளர்ந்து ஆணவம் ஆகி விட்டது.

ஏழைகளுக்கு இவர் நல்லது செய்வார் என்ற எதிர்பார்ப்புடன் அவருக்கு வாக்களித்த மக்களுக்கு மத்திய அரசின் பல நடவடிக்கைகள் (கறுப்புப் பணக்காரர் பட்டியல், நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டம், மர‌பீனிப் பயிர்களுக்குத் திறந்த வெளி ஆய்வு அனுமதி போன்று) ஏமாற்றத்தையே அளித்தன. 70% மக்கள் வாழும் கிராமங்களுக்கு ஏதும் செய்யாமல் வெளிநாட்டுப் பயணம், ஹெலிகாப்டரில் சுற்றுதல், ஒபாமாவை அழைத்து வருதல் போன்ற “வளர்ச்சிப் பணிகள்” ஊடகங்களுக்குச் சுவையாய் இருந்தாலும் கவைக்கு உதவவில்லை.

எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக மோடி அணிந்த 10 லட்ச ரூபாய் மேற்கத்திய உடை பாமர மக்களைப் பெரும் சினத்திற்கு உள்ளாக்கியது. 1995ல் ஜெயலலிதா ஆறு கோடி ரூபாய் செலவில் ஒன்றரை லட்சம் விருந்தாளிகள் கொண்ட திருமணம் நடத்தி 1996ல் நான்கு இடங்களுடன் படுதோல்வி அடைந்தார். ஆந்திராவின் கிராமங்களைக் கருத்தில் கொள்ளாது நவீனப் படுத்துகிறேன் என்று மடிக்கணினியால் ஆட்சி செய்த சந்திரபாபு நாயுடு 2004ல் படு தோல்வி அடைந்தார். மோடியும் ஜெயலலிதாவும் பிடிவாதம், ஆணவம், யதேச்சாதிகாரம், எதிர்ப்போரை நசுக்குவது, ஆடம்பர இச்சை, ஒற்றை மனிதர் ஆட்சி போன்று பல விதங்களில் ஒத்துப்போகிறார்கள்.

வெற்றிக் களிப்பில் பெரும் ஆணவத்துடன் நடந்து கொண்டிருந்த மோடிக்கு இப்படுதோல்வி ஒரு நல்மருந்தே. ஆனால் மருந்து நோயைத் தீர்க்குமா என்பது நாட்படத்தான் தெரியும். பாரதிய ஜனதா கட்சி என்பது , மோடி சர்க்காராக மாறி, அமித் ஷா - மோடி கூட்டணியின் தன்னிச்சையான ஆட்சியாகியது. இது கூட்டணிக் கட்சிகளுக்கும், சங் பரிவார் அமைப்பிற்கும், கட்சியின் ஒதுக்கப்பட்ட மற்ற பெரும் தலைவர்களுக்கும் பெரும் கசப்பாயிருந்த போதிலும், இவர்கள் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும் வரையில் ஒன்றும் செய்ய இயலவில்லை. இப்போது காஷ்மீரின் பி.டி.பி, மராட்டியத்தின் சிவசேனா ஆகியவை மோடியை வெளிப்படையாக விமர்சிக்கின்றனர்.

இது எல்லாவற்றிலும் ஒரு நல்ல விடயம், ஆம் ஆத்மிக் கட்சி மிக அரசியல் கண்ணியத்துடன் நடந்து கொண்டதுதான். கேஜரிவாலை மிகத் தரக் குறைவாக திருடன், நக்சலைட், கோழை, விஷமி, ஓடிப்போபவர் என்றெல்லாம் பி.ஜே.பி தாக்கியபோதும் மோடியையோ, பேடியையோ தனிப்பட்ட முறையில் எதுவும் ஏசாமல், மக்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தி வென்றிருக்கிறது ஆம் ஆத்மி கட்சி.

“நாம் ஆணவத்துடன் நடந்தோமானால் இன்னும் ஐந்து வருடத்தில் மக்கள் நம்மையும் தூக்கி எறிந்துவிடுவார்கள்” என்றும் “சேவைதான் நம் குறிக்கோளாய் இருக்க வேண்டும்” என்றும் கேஜரிவால் கூறியிருப்பது மிகப் பெரிய ஆறுதல். ஆம் ஆத்மி கட்சி முதிர்ச்சி பெற்று வருவதாகத் தெரிகிறது. பொறுமையுடன் நல்லாட்சி நடத்தினால் நல்ல எதிர்காலம் இருக்கிறது.

இத்தேர்தலின் மிகப் பெரிய வெற்றி மக்களுடையதே. கிராமப்புற வாழ்வாதாரங்களையும், விவசாயத்தையும் புறக்கணிக்கும் வளர்ச்சி வெறும் புற்றுநோய் வளர்ச்சியே என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது. காசும், கள்ளும் கொடுத்து எளிய மக்களை ஏய்த்து ஓட்டு வாங்கி விடலாம் என்பது இனிச் செல்லாது. ஆள்வோர் பாடம் கற்பாரா?

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org