தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பது முன்னோர் மொழி. உழவர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்திருக்கும் தாளாண்மை வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் வணக்கங்களும் வாழ்த்துக்களும். கடந்த இரண்டு பருவங்களில் சிறுகிழங்கு பயிரிட்ட என் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்வு கொள்கின்றேன். சிறுகிழங்கு, உருளைக்கிழங்கு வகையைச் சார்ந்தது. இதை உணவில் உருளைக்கிழங்கை பயன்படுத்தும் முறைகளில் எல்லாம் பயன்படுத்தலாம். இதை “சைனிஸ் பொட்டட்டோ” என்கிறார்கள். சத்து மிகுந்த இக்கிழங்கு 6 மாத காலப் பயிர்.கேரளத்தில் இதனைக் கூர்க்கன் கிழங்கு என்று அழைக்கின்றனர்
பசுக்கள் கன்று ஈன்ற பிறகு, பொதுவாக மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு பிறகு மீண்டும் சினைக்கு வரும். அதாவது சினைத்தருண அறிகுறிகள் தென்படும். உடனே மீண்டும் சினைக்கு விடலாமா? கூடாதா? என்பதில் சில மாறுபட்ட கருத்துகள் உள்ளன. கன்று ஈன்று ஏழு அல்லது எட்டு மாதங்களுக்கு பின்னரே மீண்டும் சினையாக்க வேண்டும். இல்லையெனில், பிறந்த கன்றும், சினையில் உள்ள கன்றும், பால் கறவையும் பாதிக்கப்படும் என்பது ஒரு சாராரின் வாதம். முதல் அல்லது இரண்டாவது சினைத் தருணத்திற்குள் (அதாவது மூன்றாம், நான்காம் மாதத்தில்) சினையாக்கினால் சினை நிற்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்பது இன்னொரு சாரார் வாதம். இதில் எதை நாம் கைக்கொள்வது? மாடுகள் ஏழு மாத சினையாக இருக்கும்போது வயிற்றில் உள்ள கன்றின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதால் பால் கறவையை மற்றும் முன் பிறந்த கன்றிற்கு ஊட்டுவதையும் நிறுத்த வேண்டும் என்பதில் எந்தவித மாறுபட்ட கருத்தும் இல்லை.
சென்ற மாதம் (சனவரி 12) புவனகிரியில் தமிழக இயற்கை உழவர் இயக்கத்தைச் சேர்ந்த நண்பர் சிவகுமார் அவர்களால் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த நம்மாழ்வார் மறைவிற்கான இரங்கல் கூட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதில் பற்பல விவசாயத் தலைவர்களுடன் மார்க்ஸிஸ்ட் கட்சியைச் சேர்ந்த புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் இந்திரா காங்கிரஸைச் சேர்ந்த சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிய இரு அரசியல்வாதிகளும் பங்கேற்றனர். கூட்டத்தில் நம்மாழ்வாரின் பல பெருமைகளையும் பேசிப் பல விவசாயத் தலைவர்களும் நெகிழ்ந்தது மனதிற்கு ஆறுதலாக இருந்தது. எனினும் இறுதியில் பேசிய சட்ட மன்ற உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினரும் எந்த அறிவியல் அடிப்படையும் இன்றிப் பல கருத்துக்களைக் கூறியது மன வேதனை அளித்தது.