தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

உணவுப் பாதுகாப்பும், உளறல்களும் - உழவன் பாலா


சென்ற மாதம் (சனவரி 12) புவனகிரியில் தமிழக இயற்கை உழவர் இயக்கத்தைச் சேர்ந்த‌ நண்பர் சிவகுமார் அவர்களால் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த நம்மாழ்வார் மறைவிற்கான இரங்கல் கூட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதில் பற்பல விவசாயத் தலைவர்களுடன் மார்க்ஸிஸ்ட் கட்சியைச் சேர்ந்த புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் இந்திரா காங்கிரஸைச் சேர்ந்த‌ சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிய இரு அரசியல்வாதிகளும் பங்கேற்றனர். கூட்டத்தில் நம்மாழ்வாரின் பல பெருமைகளையும் பேசிப் பல விவசாயத் தலைவர்களும் நெகிழ்ந்தது மனதிற்கு ஆறுதலாக இருந்தது. எனினும் இறுதியில் பேசிய சட்ட மன்ற உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினரும் எந்த அறிவியல் அடிப்படையும் இன்றிப் பல கருத்துக்களைக் கூறியது மன வேதனை அளித்தது.

சட்டமன்ற உறுப்பினர் பேசும்பொழுது, “நீங்கள் எல்லாம் இயற்கை விவசாயத்தைக் கடைப்பிடித்தும், பரப்பியும் வருகிறீர்கள் . ஆனால் அரசாங்கத்தின் பார்வையில் இருந்து பார்க்கும் போது இயற்கை விவசாயத்தால் அனைவருக்கும் உணவு உற்பத்தி செய்ய இயலாது. நம் நாட்டின் மக்கள் தொகை 150 கோடி ஆகி விடும்; நாம் ஒரு எக்டரில் 5 டன் நெல் விளைவிக்கக் கடுமையாகப் போராடி வருகிறோம் ஆனால் நான் சீனா சென்றிருந்த போத் ஒரு எக்டரில் 12 டன் நெல் விளைவித்திருப்பதைக் கண்டேன். ஒரு குத்தில் கையால் பிடிக்க முடியாத அளவு அவ்வளவு தூர்கள் இருந்தன - அவ்வளவும் மரபணு மாற்றுப் பயிர்கள்” என்றும், “இன்றைக்கு மன்சான்டோ என்றொரு கம்பெனி இல்லையென்றால் நாம் அனைவரும் உண்ணவே இயலாது. நம்மிடம் உயர் விளைச்சல் தொழில்நுட்பமோ, விதைகளோ இல்லவே இல்லை” என்றும் தேவையற்ற துதி பாடினார். (ஆனால் அவருக்குப் பின்னாலேயே மேடையில் 158 பாரம்பரிய நெல்ரகங்களைக் காத்து வரும் கிரியேட் அமைப்பைச் சேர்ந்த நெல் ஜெயராமனை, அவர் மிக வசதியாக மறந்து விட்டார்! )

அதன் பின் பேசிய பாராளுமன்ற உறுப்பினர், “நாம் இயற்கை விவசாயம் செய்தால் உணவு உற்பத்தி குறைந்து விடும்; உணவுப் பாதுகாப்பு என்பது மிக ஆழமான, விரிவான ஒரு விடயம். அதைப்பற்றி நிறையப் பேச வேண்டி உள்ளது” என்றும், “நானும் சீனா பல முறை சென்றிருக்கிறேன். அங்கே எல்லாப் பயிர்களும் மரபணு மாற்றப் பட்டவையே” என்றும் கூறினார். நம் மரியாதைக்குரிய பொருளாதார மேதையான பிரதமர் திரு. மன்மோகன் சிங் அவர்களும் , தேசிய அறிவியல் கூட்டத்தில், மரபீனித் தொழில்நுட்பத்திற்கு எதிராய் ” அறிவியல் ஆதாரம் அற்ற காழ்ப்புணர்ச்சி” இருப்பதாய்ப் புலம்பினார். மேன்மை தங்கிய மாண்புமிகு வேளாண் அமைச்சர் சரத் பவார் அவர்களோ மரபீனித் தொழில்நுட்பம் இல்லையென்றால் இந்தியாவில் எல்லாரும் பட்டினிச் சாவுதான் என்ற அளவில் புலம்பி வருகிறார். ஆனால் உண்மை நிலவரம் என்ன?

இந்தியாவில் விவசாய விளைச்சல் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயம் 17% வகிக்கிறது. மொத்த ஏற்றுமதியில் வேளாண் பொருட்கள் 10% வகிக்கின்றன. உலக வேளாண் மற்றும் உணவுக் குழுமம் வெளியிட்ட ஒரு 2011 அறிக்கையின்படி, பால், பழங்கள், சிறு தானியங்கள், எண்ணை வித்துக்கள் போன்றவற்றின் உற்பத்தியில் உலகின் முதலிடமும், நெல், கோதுமை, பச்சைக் காய்கறிகள், கரும்பு, ஆட்டிறைச்சி போன்றவற்றில் உலகில் இரண்டாவது இடமும் இந்தியா வகிக்கிறது.

மரபீனித் தொழில்நுட்பம் என்பது விளைச்சலை எவ்விதத்திலும் அதிகரிப்பதில்லை என்று அமெரிக்க வேளாண் துறையே ஒத்துக் கொண்டுள்ளது. விளைச்சலை அதிகரிக்க எந்த வித மரபீனித் தொழில்நுட்பமும் இதுவரை கண்டு பிடிக்கப் படவில்லை. மேலும், மாறி வரும் பருவ நிலையில், மரபீனி மற்றும் வீரிய‌ ஒட்டு ரகங்களை விடப் பாரம்பரிய விதைகள் நன்றாகத் தாக்குப் பிடித்து வளர்வதால், தொழில்நுட்பத்தைப் புதியது என்பதற்காகக் கைக்கொண்டால் அத் தொழில்நுட்பமே உணவு உற்பத்திக்கு எதிரியாகி விடக் கூடும்.

இன்று இந்தியாவின் சராசரி நெல் விளைச்சல் 1 எக்டருக்கு 3300 கிலோ. 60 ஆண்டுகளாக பற்பல நவீனத் தொழில்நுட்பங்களுக்கு நம்மைப் பரிசோதனை எலிகளாக்கி நம் அரசாங்கம் சாதிக்க முடிந்தது ஒரு ஏக்கருக்கு 17 முதல் 18 மூட்டை நெல்லே! (75கிலோ மூட்டை). ஆனால் கிச்சடிச் சம்பா , குரங்குச் சம்பா , மாப்பிள்ளைச் சம்பா போன்ற பாரம்பரிய ரகங்கள் இயற்கை விவசாயத்திலேயே சாதாரணமாக 20 மூட்டை விளைகின்றன. 60 ஆண்டுகளாக வெல்லாத தொழில்நுட்பப் புதுமைகள், மன்சான்டோவின் விதை என்பதால் மட்டும் பலித்து விடுமா?

இதையெல்லாம் தாண்டி இன்னொரு அடிப்படை விடயத்தை நாம் யாருமே கவனிப்பதில்லை. உணவுப் பாதுகாப்பு என்பது ரசாயன உரங்களையும், பூச்சிக் கொல்லை நஞ்சுகளையும் அள்ளிக் கொட்டி, அதற்குப் பல லட்சம் கோடி ரூபாய் மானியம் கொடுத்து நிறையத் தானியங்களை விளைப்பது அல்ல. உணவுப் பாதுகாப்பு மற்றும் தன்னிறைவு என்பது ஒரு ஏக்கர், அல்லது எக்டரில் அதிகமான முழுமையான் கலோரிகளை (wholesome calories) விளைப்பதே. இதனால்தான் இவர்கள் பெரிதும் பாராட்டும் சீன அரசு மக்களைத் தங்கள் அன்றாட உணவில் பெருமளவு உருளைக் கிழங்கைச் சேர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்துகிறது. ஒரு ஏக்கரில் கோதுமை, அரிசியைப் போல் மூன்று மடங்கு கலோரிகளை உருளைக் கிழங்கு உற்பத்தி செய்கிறது.

முழுமையான கலோரி என்பது புரதம், மாவு, வைட்டமின், இரும்பு, சுண்ணாம்பு, நார்ச்சத்துக்கள் மற்றும் பிற தாதுக்கள் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியது. ரசாயனங்களால் விளைவிக்கப் பட்டு ராட்சத ஆலைகளில் பெரும் சூட்டில் தீட்டப்பட்டு சந்தையில் விற்கப்படும் அரிசி,கோதுமை தானியங்களில் வெறும் மாவுச்சத்து மட்டுமே அதிக அளவில் உள்ளது. எனவே உணவுப் பாதுகாப்பிற்கு தானியங்களின் உற்பத்தியைக் கூட்ட வேண்டும் என்ற வாதம் பொருளற்றது. முழுமையான கலோரிகளை உற்பத்தி செய்ய ஒருங்கிணைந்த உயிர்ச்சூழல் கொண்ட சிறு அங்ககப் பண்ணைகளால் மட்டுமே இயலும். நெல் , கடலை, கிழங்கு, மாடு, கோழி, ஆடு, பழ மரங்கள் போன்ற அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு ஏக்கர் நிலம் நாளொன்றுக்கு 40000 கலோரிகளை உற்பத்தி செய்ய இயலும். இதை 16 முதல் 20 பேர் நன்றாகச் சாப்பிடலாம்! ஓரினப் பயிர் செய்யும் ஒரு ஏக்கர் நிலத்திலோ நாளொன்றுக்கு மாவுச் சத்து மட்டுமே கொண்ட‌14000 கலோரிகளே உற்பத்தி செய்ய இயலும். இதைக் கொண்டு 7 முதல் 9 பேருக்கே உணவு அளிக்க முடியும். எனவே உணவுப் பாதுகாப்பிற்கு முக்கியம் சிறு, இயற்கை வேளாண் பண்ணைகளே. உணவு அண்மையில் உற்பத்தி ஆகி, அண்மையிலேயே விநியோகிக்கப் பட்டால் உணவுப் பற்றாக் குறை என்பதே இருக்காது.

இவற்றில் எதையுமே கருத்தில் கொள்ளாது, மன்சான்டோவும், மரபீனித் தொழில்நுட்பமும்தான் சோறுபோடும் என்று கூறுவதை உளறல் என்பதைத் தவிர என்ன சொல்வது!

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org