தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

இயற்கை வழியில் சிறுகிழங்கு சாகுபடி - விஜயராணி


முன்னுரை

“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பது முன்னோர் மொழி. உழவர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்திருக்கும் தாளாண்மை வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் வணக்கங்களும் வாழ்த்துக்களும். கடந்த இரண்டு பருவங்களில் சிறுகிழங்கு பயிரிட்ட என் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்வு கொள்கின்றேன். சிறுகிழங்கு, உருளைக்கிழங்கு வகையைச் சார்ந்தது. இதை உணவில் உருளைக்கிழங்கை பயன்படுத்தும் முறைகளில் எல்லாம் பயன்படுத்தலாம். இதை “சைனிஸ் பொட்டட்டோ” என்கிறார்கள். சத்து மிகுந்த இக்கிழங்கு 6 மாத காலப் பயிர்.கேரளத்தில் இதனைக் கூர்க்கன் கிழங்கு என்று அழைக்கின்றனர்.

சாதாரணமாகப் பொரியல் போல் இதை உட்கொண்டால், நம் உடலுக்குத் தேவையான தினப்படி கால்சியம், வைட்டமின் ஏ ( பீட்டா கரோடின்) இரண்டும் கிட்டும் - அது மட்டுமன்றி அதிகமான இரும்புச் சத்தும் கொண்டது. உருளைக் கிழங்கில் அதன் எடையில் 5 சதம் மட்டுமே புரதம் உள்ளது, சிறு கிழங்கில் 5 முதல் 13 சதம் புரதம் உள்ளது. எனவே இயற்கையில் விளைவித்த சிறு கிழங்கு மிக ஆரோக்கியமானது.

நிலக்கடலை வளரும் நிலங்களில் சிறுகிழங்கும் ந‌ன்றாக வளரும். நன்றாகப் பராமரித்தால் ஒரு ஏக்கரில் 4000 முதல் 5000 கிலோ விளைச்சல் எடுக்கலாம். கேரளத்திலும், தென்மாவட்டங்களிலும் இதற்கு நல்ல ச‌ந்தை இருக்கிறது. எனினும் இந்த வருட‌ சில்லறை விற்பனை விலையான கிலோ ரூ.50 - ரூ.60 ல் , உழவனுக்கு வியாபாரிகள் கொடுப்பது 15 முதல் 20 ருபாய் மட்டுமே. எனவே காணி நாயகர்கள், இதை இயற்கை முறையில் சிறு அளவில் (10-25 சென்ட்) சாகுபடி செய்து நேரடியாக இயற்கை அங்காடிகளுக்கு கிலோ 35 ரூபாய்க்கு அனுப்புவது நல்லது.

பயிரிடும் முறை

முதலில் நாற்றங்காலில் நாற்றுக்களை உருவாக்கிப் பின் அவற்றை வயலில் பாத்திகளில் நட வேண்டும். 40ம் நாளுக்கு மேல் நாற்று பிடுங்கி பாத்திகளில் நடுவதற்கு பயன்படுத்த வேண்டும்

அ.நாற்று உண்டாக்கும் முறை:
 • நாற்றங்கால் உழுது தயாரிக்க வேண்டும்.
 • அகலம் 1அடி x உயரம் 1அடி அளவில் பாத்தி பிடிக்க வேண்டும்
 • பாத்திகளுக்கு இடையில் நீர் பாய்ச்ச வசதியாக அமைக்க வேண்டும்
 • 1 கிலோ விதை கிழங்கில் வளரும் நாற்று 2 சென்ட் முதல் 3 சென்ட் வரை நட பயன்படுத்தலாம்.
 • பாத்திகளுக்கு இடையில் உள்ள வாய்க்கால்களில் நீர் நிரப்ப வேண்டும். இது ஒவ்வொரு பாத்தியும் முழுவதுமாக நனையும் அளவுக்கு இருக்க வேண்டும்.
 • 4 - 6 அங்குலம் ஒவ்வொரு விதை கிழங்கிற்கும் இடைவெளி இருக்க வேண்டும்
 • விதை ஊன்றியதில் இருந்து 1 நாள் விட்டு 1 நாள் 2 முறையும் அதன் பிறகு 3,4 நாட்களுக்கு 1 முறையும் தண்ணீர் பாய்ச்சினால் போதும்
 • 15 ம் நாளுக்கு மேல் களை எடுத்து உரம் வைக்க வேண்டும் (அடி/மேல் உரமாக மண்புழு உரம் பயன்படுத்தலாம்)
 • நோய் வராமல் தடுக்க‌, ஐந்திலை கரைசல் விசைத் தெளிப்பானிலோ, கைத் தெளிப்பானிலோ தெளிக்க வேண்டும்
ஆ. நடவு செய்யும் முறை
 • பயிர் செய்ய வேண்டிய நிலத்தை புழுதியாக‌ உழுது பண்படுத்த வேண்டும்
 • அடி உரமாக தொழுஉரம் அல்லது மண்புழு உரம் இடலாம். தொழு உரமானால் ஒரு சென்ட் பரப்பிற்கு 10 கிலோவும், மண்புழு உரமானால் ஒருசென்ட் பரப்பிற்கு 5 கிலோவும் அடி உரமாக இடலாம்.
 • நாற்றங்காலில் செய் முறைகளை பின்பற்ற வேண்டும்
 • விதை கிழங்கிற்கு பதிலாக நாற்று நட வேண்டும்
 • ஒவ்வொரு நாற்றிலும் உள்ள கணுப்பகுதியை மண்ணில் ஊன்றி வைக்கவும்
 • 2 முறை களை எடுத்து மேல் உரம் வைக்கலாம்
 • பூக்கும் வரை 3 முதல் 4 நாட்களுக்கு அல்லது தேவையை பொறுத்து நீர் பாய்ச்சினால் போதும், பாத்தியில் ஈரம் இருக்க வேண்டும். செடி வாட வாட பாய்ச்ச வேண்டும். அவ்வளவுதான்
 • முதல் மாதம் களை, 2ம் மாதம் களை எடுத்துவிட்டு 2-ம் களை முடிந்தவுடன் மண் அணைக்க வேண்டும்.
 • தேவையை பொறுத்து ஐந்திலை கரைசல் நோய்க்கட்டுப்பாட்டு கரைசல் பயன்படுத்த வேண்டும்
 • கிழங்கு வீரியமாக வருவதற்காக ஊட்டச்சத்து கரைசல்களை நீரில் சேர்த்து பாய்ச்சவேண்டும்

அறுவடை

கடந்த முறை 10 சென்ட் நிலத்தில் 400 கிலோ கிழங்கு கிடைத்தது. இம் முறை 25 சென்ட் நிலத்தில் 1000 கிலோ கிழங்கு கிடைத்துள்ளது.

வரவு

1 கிலோவுக்கு 35ரூ x 1000 கிலோ = 35000/-

செலவு : 25 சென்ட்
 • நாற்றங்கால் உழவு : 300.00
 • விதை (தன்) :
 • பாத்தி பிடிக்க 1 ஆண் ஆள் : 350.00
 • நடுவை (பெண்-1) : 150.00
 • களை எடுக்க 2 பெண் : 300.00
 • மண்புழு உரம் (தன்) :
 • கரைசல் (தன்) :
 • பராமரிப்பு நீர் (தன்) :
 • மொத்தம் - நாற்றங்கால் செலவு : 1100.00

25 சென்டிற்கான செலவு

1. நடவு
 • தொழுஉரம் 1 யூனிட் : 600.00
 • உழவு : 1200.00
 • வரப்பு வெட்ட (3×350) : 1050.00
 • பாத்தி பிடிக்க (4×350) : 1400.00
 • நடவு (பெண்4×150) : 600.00
 • மொத்தம் : 4850.00
2. பராமரிப்பு
 • களை 12 x 150 : 1800.00
 • 2வது களை (14 x 150) : 2100.00
 • மண் அணைக்க & வரப்பு
 • சுத்தம் செய் 4 ஆள் : 1400.00
 • கரைசல் தயாரிக்க பொருள்கள் : 500.00
 • மண்புழு உரம் (தன்) :
 • பராமரிப்பு நீர்பாய்ச்சுதல்(தன்) :
 • மொத்தம் - பராமரிப்பு செலவு : 5800.00

அறுவடை செலவு

 • 18 பெண் x 150 : 2700.00
 • 6 ஆண் x 350 : 2100.00
 • மொத்த செலவு : 4800.00

மொத்த செலவினங்கள்

 • நாற்றங்கால் - 1100
 • நடவு - 4850
 • பராமரிப்பு - 5800
 • அறுவடை - 4800
 • மொத்தம் - 16550
நிகர லாபம் 25 சென்ட் நிலப் பரப்பில் : 35000 - 16550 = 18450/

இந்த செலவான 16550ல் 13150 ஆட்கூலிக்கு ஆனதே என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்கூலிக்குச் செலவான தொகையில் பெருமடங்கு கணவன் மனைவி இருவரும் வேலை செய்தால் குறைக்கலாம். மண்புழு உரம் எங்கள் பண்ணையிலேயே தயாரித்துக் கொண்டோம் - அதை வெளியில் வாங்கினாலும் 1 சென்டிற்கு 10 கிலோ என்ற கணக்கில் 25 சென்டிற்கு, 250 x 7 = 1750 கூடுதல் செலவாகும். இந்த லாபம் கிடைப்பது நல்ல விலையால் மட்டுமே என்பதை விவசாயிகள் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே , இப்பயிரைச் சாகுபடி செய்யுமுன் இயற்கை அங்காடிகளில் தொடர்பு கொண்டு விற்பனைக்கு ஏற்பாடு செய்து கொள்வது நல்லது.

பரிந்துரை:

இதில் நான் கற்றுக் கொண்டது என்னவென்றால் பணப்பயிர் போன்ற இந்த சிறு கிழங்கையும் ஆண்டுக்கு 1 முறை பயிர் செய்து வெளியில் இருந்து வேலைக்கு ஆள்கூப்பிடாமல் கணவன் மனைவி குடும்பம் என வீட்டு ஆட்களே பார்த்துக்கொண்டோமானால் ஆண்டுக்கு ஒரு முறை குறைந்த செலவில் மொத்த தொகை கிடைக்கும். மேலும் இந்த கிழங்கை அறுவடை செய்த உடனே 'அவசரமாக சந்தைப்படுத்த வேண்டும், கெட்டுவிடும்' என்று கவலைப்படவும் வேண்டாம். 2 மாதத்திற்கு காற்றோட்டமாக போட்டு வைத்திருந்து தேவைக்கு ஏற்றாற்போல் விற்பனை செய்து கொள்ளலாம்.

இன்னொரு தகவல்:

எனது தோழி சூர்யா சொன்னது : “கடந்த முறை வீட்டுத் தேவைக்காக வாங்கிய கிழங்கில் மீதி ஒரு 20 கிழங்கு தளிர்விட தொடங்கிய நிலையில் வீட்டில் இருந்தது. எனவே அதை எடுதது ஒரு இடத்தில் ஊன்றி வைத்தேன். மேற்கண்ட முறைகளில் பராமரிப்பு செய்யவில்லை. எனினும் 20 கிலோ அறுவடை செய்தேன்”. எனவே வீட்டுத் தோட்டம் வைத்திருப்பவர்க்ள கூட தங்களின் வீட்டுக்குத் தேவையான கிழங்கை வீட்டின் அருகிலேயே பயிர்செய்து 6 மாதத்திற்கு மேலாகவே காற்றோட்டமாக வைத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org