தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

போதை வந்த போது

மழையைப் பற்றி எழுதும்போது பாரதி தன் வசன கவிதையில் “உலர்ந்த தமிழன் மருந்துக்குக் கூட அகப்பட மாட்டான்” என்று எழுதுவார். இன்று அவர் இருந்தால், தமிழகத்தில் டாஸ்மாக் சாராய விற்பனையையும், அதன் இன்ப வெள்ளத்தில் நீந்திக் குளிக்கும் தமிழனையும் கண்டால், தான் எழுதியதன் தீர்க்க தரிசனத்தை உணருவார். பொதுவாகவே போதையில் மிதக்கும் அமெரிக்கர்கள் நம்மை எல்லாம் தாண்டிப் பல படி மேலே போய் ஒரு புதுமை செய்திருக்கிறார்கள். அதுதான் மரியுவானா (marijuvana),என்று அழைக்கப்படும் கஞ்சா விற்பனையில் செய்திருக்கும் நவீனம்!

நம் இளைஞர்களெல்லாம் போய்வாழத் துடிக்கும் நாகரிக நாடாம் அமெரிக்காவில், கொலொராடோ மாநிலம், 01 சனவரி 2014 முதல் மரியுவானா விற்பனையை சட்டபூர்வமாக‌ அனுமதித்திருக்கிறது. டென்வெர் நகரில் 24 கடைகள் திறந்திருக்கிறார்கள். முதல் நாள் விற்பனை மட்டும் மூச்சு முட்டும் 6 கோடி ரூபாய் (US$ 1,000,000)! இதுவரை கஞ்சா வைத்திருப்பதோ, பிறருக்கு விற்பதோ சட்டப்படி குற்றம். இதைச் சட்ட திருத்தம் மூலம் கொலராடோ மாநிலம், இவ்வாண்டு முதல், 21 வயதிற்கு மேற்பட்டோர், பொழுதுபோக்கிற்காக, கஞ்சா வாங்கவோ, புகைக்கவோ செய்யலாம் என்று அனுமதித்திருக்கிறது. 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் புகையிலையயும், சிகரெட்டுகளையும் பல பெரும் விளம்பர உத்திகளுடன் நாடு முழுதும் பிரபலப்படுத்தி 100 வருடங்களுக்கு மேல் கோடிக்கணக்கில் மக்களின் பணத்தை சம்பாதித்தனர் சிகரெட் கும்பணியினர். இப்போது அத‌ன் தீய பலன்க‌ள் எல்லோராலும் வெளிப்படையாக ஒத்துக் கொள்ளப்பட்டு, புகையிலைப் பயன்பாடு பல இடங்களில் தடை செய்யப்பட்டதும், அடுத்ததாக கஞ்சா விற்பனையில் இறங்கியுள்ளனர்.

இதில் ஏற்படக் கூடிய மிகப் பெரிய இழப்பு என்னவெனில், கஞ்சாவின் பயன்பாடு மூளை வளர்ச்சியைப் பெருமளவு பாதிக்கும். குறிப்பாக இளைஞர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் கஞ்சா புகைத்தால் மூளை வளர்ச்சி குன்றுவதோடு அன்றி, நரம்புத் தளர்ச்சி, இளமையில் மூப்பு போன்ற பல உடல்நலக் கேடுகள் வர வாய்ப்பாகும். நண்பர் ராமவேல் மரபீனி மாற்ற எதிர்ப்புக் கூட்டம் ஒன்றில் பேசுகையில் “உலகில் உள்ள எல்லா உயிரினங்களும் ஒன்றை ஒன்று அழித்து வாழ்கின்றன. மனிதன் மட்டுமே தன் இனத்தைத் தானே அழித்து வாழ்கின்றான்” என்று மிகுந்த வருத்தத்துடன் கூறினார். உலகின் மிகப் பெரிய சந்தைகளில் ஒன்றாக வளர்ந்து வரும் இந்தியாவிலும் அரசுப் பாதுகாப்புடன் கஞ்சா விற்பனை விரைவில் வரலாம். அப்போது உலர்ந்த தமிழன் மட்டுமல்ல, உணர்வுள்ள தமிழன் கூட மருந்துக்கும் அகப்பட மாட்டான்!

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org