தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

பால் நினைந்து ஊட்டும் தாயினும் - பாபுஜி


சாண்டோஸ் (Sandoz) என்கிற சுவிஸ் பன்னாட்டு மருத்துவ நிறுவனம் 1981 இல் அமெரிக்க மருந்துக் கட்டுப்பாட்டு துறை (FDA) இடம் இருந்து பார்லோடேல்(Parlodel) என்கிற ஒரு மருந்தை சந்தைப்படுத்த அனுமதி பெற்றது. FDAவின் அனுமதி என்பது ஒரு மருந்தின் தரம் மற்றும் பயன்பாட்டை அங்கீகரிக்கும் ஒரு முத்திரை போன்றது. இது அமெரிக்காவில் மருந்துகளை விற்கும் எந்த ஒரு நிறுவனமும் கட்டயமாகப்பெற வேண்டிய ஒரு அனுமதி. பார்லோடேல் என்கிற மருந்து, குழந்தை பெற்றதும் தாய்ப்பால் கொடுக்க விருப்பமில்லாத அன்னைகளுக்கு, தாய்பால் சுரக்காமல் செய்கின்ற ஒரு மருந்து (எதற்குத்தான் மருந்து என்று இல்லை போலும்…). இந்த மருந்தினை அனேக அமெரிக்க தாய்மார்கள் தங்களுக்கு குழந்தை பிறந்ததும் உட்கொள்ள தொடங்கினர். ஆனால் அவர்கள் கூடிய சீக்கிரமே நீதிமன்றப்படிகள் ஏற வேண்டிய கட்டாயத்திட்குள்ளாகினர் (அதாவது அவர்கள் உயிரோடிருந்தால்!).

எடுத்துக்காட்டிற்கு சிலரின் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன:

அலபாமா மாகாணத்தில் 40 வயதான ரூபி க்யுன், அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட மறு வாரமே பார்லோடேல் உட்கொள்ளத்தொடங்கினார். ஒரே வாரத்தில் பக்கவாதத்தினால் படுத்தார். எலிசபெத் ப்ராசர் என்கிற 38 வயது பெண் சுகப்பிரசவத்தின் மூலம் குழந்தை பெற்றார். அவரும் ஒரு வாரம் கழித்து பார்லோடேல் உட்கொள்ளத்தொடங்கினார். ஆறே நாட்களில் அவரும் வாதத்தால் படுக்கையில் வீழ்ந்தார்.

அதே நேரத்தில் இல்லினாய்ஸ் மாகாணத்தின் எலிசா ஆன் காரகர், வயது 24, குழந்தை பெற்ற பின்னர் பார்லோடேல் உட்கொள்ளத்தொடங்கினார். விடாது கருப்பு என்பது போல் அவரும் கொடிய வாதம் வந்து படுக்கையில் வீழ்ந்தார்.

இவர்கள் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சிலரே. இவர்கள் மூவரும் நீதி மன்றப்படி விருப்பமில்லாது ஏறினர் தம் வழக்கறிஞர்கள் மூலமாக (அவர்கள்தான் வாதம் வந்து படுக்கையில் கிடந்தனரே!​) தொடுத்தது தற்போது நோவார்டிஸ்(Novartis) இன் ஒரு அங்கமான சாண்டோஸ் நிறுவனத்தின் மீது.

நீதி மன்றங்கள் குழப்பமான வாதங்களாலும் போதிய ஆதாரங்கள் இல்லாததாலும் (அறிவியல் பூர்வமாக இது நிரூபிக்கப்படவில்லை என்று சில வழக்குகளிலும், பாதிக்கப்பட்டோரின் வழக்கு நியாயமானதே என்று இன்னும் சில வழக்குகளிலும்) மாறி மாறி தீர்ப்பளித்து விவகாரத்தை ஊதி விட்டன. இதனால் மேலும் நிறைய (பாதிக்கப்பட்டோர்) பேர் நீதிமன்ற படியேறினர். சமாளிக்க முடியாத சாண்டோஸ் நிறுவனம் ( அப்போது அது நோவார்டிஸ் உடன் சேராத ஒரு தனி நிறுவனம்) அனேக வழக்குகளில், 'வாங்க, நமக்குள் பேசி தீர்த்துக்கலாம்…இதுக்கு போய் கோர்ட்டுக்கு போகலாமா என்கிற ரீதியில் பாதிக்கப்பட்டவர்களை சரிக்கட்ட ஆரம்பித்தது! ஒரு கட்டத்தில் அதனால் வழக்குகளை சமாளிக்க இயலாத நிலையில் அது நோவார்டிஸ் இனால் வாங்கப்பட்டது. சாண்டோஸ் சிறு மீனென்றால் நோவார்டிஸ் திமிங்கிலம்! அது சாண்டோஸ் இன் பார்லோடேல் வழக்குகள் தொடர்பான நிலைப்பாட்டை அதிரடியாக மாற்றி அமைத்தது.

பார்லோடேல் தொடர்பான வழக்குகளில் 'பேசி தீர்த்துக்கலாம்' நிலைப்பாட்டை விட்டு விட்டு அது அதிரடியாக வழக்கு தொடர்ந்தவர்கள் முன் வைத்த 'ஆராய்சிகளின் அடிப்படையிலான' வாதங்களை அடித்து நொறுக்க வேண்டும் என்கிற முனைப்புடன் அந்த ஆராய்சிகளையே சந்தேகப்படவைக்கும் வண்ணம் தன வாதங்களை முன்னிறுத்தலாயிற்று. இங்கொன்றும் அங்கொன்றுமாக பக்கவாதங்களும் மாரடைப்புகளும் பார்லோடேல் பயன்படுத்துவோரை தாக்கின என்று செய்திகள் வெளியான போதும் பார்லோடேலினை பயன்படுத்தியதால்தான் அவர்களுக்கு அந்த பாதிப்புகள் ஏற்பட்டன என்று நிரூபிக்கும் வண்ணம் எந்த அறிவியல் ஆய்வுகளும் முடிவுகள் தெரிவிக்கவில்லை என்பதே அதன் தலையாய வாதம்!

அதாவது உலகளாவிய அளவில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பார்லோடேல் உட்கொள்பவர்கள் அந்த மருந்தினால்தான் வாதமும் மாரடைப்பும் வந்து படுக்கையில் வீழ்கிறார்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டால்தான் அந்த மருந்து கெடுதல் செய்கிறது என்பதை நீதிமன்றம் ஏற்க வேண்டுமாம். அவ்வாறு ஒரு ஆய்வு செய்ய வேண்டுமானால் அதற்கு field trial எனப்படும் களப்பரிசோதனை செய்யப்பட வேண்டும். அதற்கு தன்னார்வலர்கள் முன்வந்து அந்த மருந்தை தம் மீது செலுத்தி சோதனை செய்ய மருந்து நிறுவனத்திற்கு ஒப்புதல் வழங்கி அந்த மருந்தினை ஒரு குறிப்பிட்ட காலம் உட்கொள்ளவேண்டும். அவ்வாறு உட்கொள்வோருக்கு வாதமும் மாரடைப்பும் வரும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால் (விலங்குகள் மீது செய்யப்பட்ட சோதனையின் முடிவு ஏற்கனவே இதை உறுதி செய்திருந்த போதும் - FDA அனுமதி வழங்கிவிட்டதே; சாண்டோஸ் தன் மருந்து இத்தகைய பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று ஒரு எச்சரிக்கையை தம் மருந்து பெட்டியின் கையேட்டில் பதிப்பித்ததால் FDA அனுமதி வழங்கியதாம்!)

எவரையும் இத்தகையதொரு ஆபத்துக்கு உட்படுத்தக்கூடாது என்று நோவார்டிஸ் இன் வழக்கறிஞர்கள் வாதம் செய்தனர். அதை நீதி மன்றங்களும் ஏற்றுக்கொண்டு வழக்கு தொடுத்தவர்கள் போதிய ஆதாரங்களுடன் வழக்கினை சமர்ப்பிக்க வில்லை என்றும் அவர்களது குற்றச்சாட்டுகள் வெறும் கற்பனைகளே என்றும் நீதி வழங்க ஆரம்பித்தன. வழக்கு தொடுத்தவர்களே கூட 'ஆமாம்…இது மாதிரி உலகளாவிய ஒரு சோதனை நடந்த மாதிரி புள்ளி விபரங்கள் எதுவும் இல்லைதான்' என்று ஒப்புக்கொண்டு வழக்கினை திரும்பப்பெறும் அவலமும் நடந்தேறியது!

இதே நேரத்தில் இல்லினாய்ஸ் மாகணத்தில் ஒரு பார்லோடேல் வழக்கில் குற்றம் சாட்டியவர்கள் தம் தரப்பில் சாட்சிகளாக (பார்லோடேல் பற்றி அறிவியல் சோதனை செய்த), நீதி மன்றத்தாலும் அனுமதிக்கப்பட இரு வல்லுனர்களை, வழக்கினை சாட்சி கூண்டில் ஏற்றவே அனுமதி அளிக்காமல் அந்த வழக்கினை தள்ளுபடி செய்தார்.அவர் அந்த வழக்கினை என்ன கூறி தள்ளுபடி செய்தார் தெரியுமா? 'பார்லோடேல் உட்கொள்வதால் வாதமும் மாரடைப்பும் வர வாய்ப்பிருந்தாலும், பார்லோடேல் உட்கொண்டதால்தான் வாதமும் மாரடைப்பும் வந்தது என்று நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லாததால் இந்த வழக்கினை தள்ளுபடி செய்கிறேன்'.

ஆக, நீதி வழங்குபர்களின் மனதையே குழப்பும் அளவுக்கு புதிசாளித்தனமாக வாதங்களை முன்வைத்தால் எத்தனை பேர் ஒரு மருந்தினால் பாதிக்கப்படிருந்தாலும் அவர்களுக்கு நீதி கிட்டாமல் செய்ய ஒரு மருந்து நிறுவனத்தினால் முடியும் என்பதையே இது உறுதிப்படுத்துகிறது. (அவ்வாறில்லாமல் நீதிபதிகள் அந்த மருந்தினை தடை செய்து விட்டால் பல்லாயிரக்கணக்கான கோடிகள் கொட்டி அறிவியல் ஆய்வுகள் செய்து சந்தைப்படுத்துதலுக்குண்டான செலவினங்களையும் செய்த அந்த நிறுவனம் ஏராளமான பொருளாதார இழப்பினை சந்திக்க வேண்டியிருக்குமே, சும்மா விடுமா அது! அதுவும் நோவார்டிஸ் என்கிற பெரிய நிறுவனம் என்றால் கேட்கவும் வேண்டுமா அதன் முயற்சிகளை?).

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org