தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

அடிசில் பார்வை - அனந்து


வெல்லும் வெல்லமும் கொல்லும் சீனியும்

கடந்த இதழில் சர்க்கரையின் இனிப்பு மற்றும் கசப்பான வரலாற்றைக் கண்டோம். இந்த மாத அடிசில் பார்வையில், வெள்ளைச்சீனியின் அழகான தோற்றத்திற்குள் ஒளிந்திருக்கும் தீமைகளைக் காண்போம்.

சமீபத்தில் ஒரு இருதய மருத்துவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது, இருதய மற்றும் சர்க்கரை நோய் கொண்ட எனது தந்தைக்கு இரும்பு சத்து கம்மியாக இருப்பதை பற்றியும் அவருக்கு மாத்திரை இல்லாமல் இரும்பு சத்தினை கூட்ட ஏதாவது இயற்கை உணவினை பரிந்துரை செய்யுமாறு கோரினேன். அதற்கு அவர் சில பழங்களை கூறத்தொடங்கியதும், சர்க்கரை நோய் உள்ளதை நினைவூட்டினேன். உடனே அவர் இரும்பு சத்து வேண்டுமென்றால் சர்க்கரை நோயாளிகளுக்குக் கீரையும், வெல்லமுமே சிறந்த இயற்கை உணவுகள் என்றார்! ஆம் வெல்லம்!!

சைவம் மட்டுமே உண்ணுபவர்களுக்கு வெல்லமும் கீரையும் இரும்புச் சத்துக்குச் சிறந்த மூலப்பொருட்கள் என்றும், எப்படி நமது இனிப்பு பதார்த்தங்கள் எல்லாம் வெல்லத்தினின்று இருந்தது என்றும் அங்கலாய்த்தார். இன்று எல்லா இனிப்புகளும் சர்க்கரையில் செய்யப்பட்டு அற‌வே சத்தற்று உள்ளன.

ஒரு சர்க்கரை நோயாளிக்கு கூட வெல்லத்தை பரிந்துரைக்கும் அளவிற்கு அதில் இரும்பு சத்து மற்றும் பல சத்துக்கள் உள்ளன. அது சர்க்கரைத்தன்மைக் குறியீடு ( Glycemic Index) குறைவான பொருள்! அதாவது கரும்பு, மற்றும் கரும்பு ஜூஸ் அதிகமாக குளுகோஸை நமது உடலுக்குள் ஏற்றாது. இதினின்று வரும் நாட்டு சர்க்கரை அதாவது வெல்லத்தூளும் (மண்டை வெல்லமும் தான்) மெதுவாகவே குளுகோஸை ஏற்றும். அதானால் தான் சர்க்கரை நோய் உள்ளவர் கூட இதனை உட்கொள்ளலாம் ( ஆனால் மிதமாக).

வெல்லம் முதலில் ஜீரணமாகும், ஜீரணத்திற்கு உதவும்; சீனி கடைசீயாக ஜீரணிக்கும். வெல்லம் காரத்தன்மையுடையது (alkaline) ஆனால் சீனி அமிலத்தன்மை கொண்டது. வெல்லம் ஆயுர்வேதாவில் தொண்டை மற்றும் நுரையீரல் நோய்களுக்கு மருந்தாக உதவுகிறது. ஒரே பொருளிலிருந்து வரும் இரு விஷயங்களுக்கும் தான் எவ்வளவு வித்தியாசம்! வெல்லமாக உண்டால், சில காலரிகள் தவிர புரதம், தாது, சுண்ணாம்பு (calcium), இரும்பு, எரியம் (phosphorus), கேரொடீன், தியாமின், ரிபொஃப்ளாவின், நியாசின் போன்ற பல சத்துக்கள் வந்தடையும். 99% மாவுச்சத்து மட்டுமே கொண்ட இந்த வெண்மையாக்கப்பட்ட சர்க்கரைக் கட்டிகள் கொண்ட‌ வெள்ளை சர்க்கரை ஒரு வெள்ளை நஞ்சே!

பல காரணங்கள் இருப்பினும் மிகச்சரியான காரணம், இது இயந்திரமயமாக்கலின் இன்னும் ஒரு பக்க விளைவாகும்.சுத்திகரித்தல் (refined) என்னும் லாப வெறியின் வெளிப்பாடு. ரீஃபைன்டு எண்ணையை போல் மைதாவை போல் இதுவும் ஒரு விஷமே. இதனை இதோடு விடுவதில்லை, மேலும் நஞ்சூட்டி இன்னும் கொடூரமாகவே நமக்கு அளிக்கின்றனர்.

ரசாயன முறையில் செய்யப் படும், extraction என்னும் பிரித்தெடுக்கும் வழி முறைகள், மிகத் தீங்கு விளைவிப்பவை. சர்க்கரை என்னும் தமிழ் வார்த்தையே ஷக்கர் என்று சமஸ்கிருதம் முதல், சுக்கர் என்று அரபியிலும் சுகர் என்று ஆங்கிலத்திலும் சொல்லப்படும் sucre என்ற மூலச்சொல். (லத்தீன், இத்தாலியன், செர்மன், பிரென்சு மொழிகளிலும் சுக்ரே என்றே வழங்கப்படுகிறது). அவ்வளவு பழமையான நமக்கு பழக்கமான ஒரு பொருளை இன்று இப்படிச் சீரழித்து விட்டோம். பல நூறு ஆண்டுகளாக வெல்லம் காய்ச்சி வரும் நம் முன்னோர், அதிலுள்ள சத்துக்கள் வெளியேறாமல் இருக்க, எந்த அளவிற்கு இந்தப் பிரித்தெடுத்தலைக் குறைவாக‌ வைத்திருக்க வேண்டும் என்று கூறி இருக்கின்றனர். ஆனால் இந்த வெள்ளைக்கார வியாபார வெறி நம்மை ஆட்கொண்டதிலிருந்து கொள்ளை லாபம் மட்டுமே குறிக்கோள் அல்லவா?

வெறும் கலோரிகள் மட்டுமே (empty calories) நிரம்பிய இந்த சீனியை நாம் தின்பதால், நம்மால் வெளியேற்றப்படும் ஆற்றலை விட உட்கொள்ளும் ஆற்றலே அதிகம் ஆகிறது. அவை கொழுப்பாக நம் உடம்பில் சேமிக்கப்பட்டு ( செலவாகாத வருவாய் வைப்புத் தொகையாய் மாறுவது போல!) பின்னர் இருதயக் கொழுப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகளாக வெளிப்படுகின்றன.

இப்படி கரும்பு மற்றும் அதன் சாறு மண் நிறத்திலிருப்பதை வெள்ளை வெளேரென்று பளீரிடவும், இயற்கைக்கு மாறாக துகள்களாகவும் மாற்றுவதற்கு அமோனியம் பை புளுயிடு, பாஸ்போரிக் அமிலம், சுண்ணாம்பு நீர், சல்ஃபர் டை ஆக்சைடு, பாலிஎலக்ல்ரோலைட், காஸ்டிக் சோடா, சலவை சோடா போன்ற பல ரசாயனங்கள் தாராளமாக உபயோகிக்கப்படுகின்றன. முன்னர் (மனித) எலும்புத்துகள்களை கூட உபயோகித்தனர் வெண்மைக்காக. இப்பொழுதும் சிலர் உபயோகிப்பதாக தகவல் உண்டு. இந்த சர்க்கரை (ஆலை) முதலாளிகள் எவ்வளவு பலம் படைத்தவர்கள் என்றால் பல இடங்களில் இன்றளவும் விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்கள் வெல்லம் காய்ச்ச தடை விதித்து போலீசு உதவியுடன் தடுத்தும் அந்த பெரிய ஆலைகளுக்கே கொடுக்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கிறார்கள்.

நாம் முன்பே ஒரு முறை தாளாண்மையில் கூறியது போல், பல்வேறு நிலைகளில் கரும்புச்சாறுடன் சேர்ந்து வினை புரிகிற இந்த நச்சு பொருட்கள்பலவும் கடைசி வரை இருந்து நம்மை எல்லாம் சந்த்தித்து சில பல நோய்களை கொடுக்க கூடவே தங்கி வருகின்றன (residue). ஆர்சனிக் முதல் பல வேதி பொருட்கள் வருகின்றன. நாளடைவில் இந்த வெள்ளை சர்க்கரை மஞ்சளானால், இந்த கொடிய விஷங்களின் வேலையே என்பதை புரிந்து கொண்டு தூர இருக்கவும். இன்றைய உணவு வணிகம் பற்பசை முதல் எல்லாவற்றிலும் வெண்சீனியையும் செயற்கை இனிப்புக்களையும் மிகவும் அதிகமாக கலந்து அளிப்பதால் உணவு வகைகளை கூர்ந்து கவனித்தே உட்கொள்ள வேண்டும். இல்லையேல், அளவிற்கு அதிகமாக இந்த வெள்ளை நஞ்சு மேலே கூறியது போல் வெத்து ஆற்றலாக வந்து பல பிரச்சினைகளுக்கும் நோய்களுக்கும் வழி வகுக்கும்.

வெல்லத்தை விட்டு வைத்தார்களா இவர்கள்? என் நண்பர் தனது பண்ணயில் ஒரு முறை அவரது பணி ஆட்களிடம் “நாமும் இங்கயே வெல்லம் ஆடலாமா இந்த வருடம்” என்றார். உடனே அங்கிருந்த ஆட்கள் “ஹைட்ரொசு மற்றும் ஏரியல் வாங்கி வந்து விடலாமா?” என்றனர். பின் என்ன? வெல்லத்தை மட்டும் விட்டு வைக்க முடியுமா? அது வெள்ளையாக இருக்க வேண்டாமா? அதற்கு தான் டிடெர்ஜென்டான ஏரியலை அல்லது வேறு ஏதேனும் வெளுக்கும் பொடிகளை உபயோகிக்கிறார்கள் இன்று!

வெல்லம் hygroscopic என்று வழங்கப்படும், ஈரப்பதத்தில் நீர்த்துக்கொண்டு கெட்டு விடும். அதனால் பென்ஸீன் என்னும் கொடிய புற்று நோய் பயக்ககூடியது என்று நிரூபிக்கப்பட்ட வேதிப்பொருளை உபயோகிக்கின்றனர். ஹைட்ரொசு? சோடியம் ஹைட்ரோ சல்ஃபேட் என்னும் இந்த ரசாயனத்தை அந்த வெல்லம் காய்ச்சும் போது வெளுப்பதற்கு உபயோகிக்கிறார்கள். மேலும் வெண்மைக்கே ஏரியல் போன்ற டிடெர்ஜென்டுகள், ஆக்ஸலிக் அமிலம் போன்றவையும் உபயோகிக்கப்படுகின்றன. ஆக்ஸலிக் அமிலம் நம் ரத்தத்திலிருந்து கால்சியத்தை உறிஞ்சி சிறு நீரகத்தில் கல் மற்றும் பல உபாதைகளை தரும்.

கோபமாக இருக்கிறதா? யார் மேல்? நம் அறியாமை மேல் என்றால் சரி. நமக்கு வந்துள்ள இந்த வெள்ளை மோகத்தின் மேல் என்றால் மிக சரி.

நாம் என்ன செய்யலாம்?

சர்க்கரையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தவிர்க்கலாம். வெல்லத்தையே அதுவும் ரசாயன விஷங்களற்று விளைவிக்கப்பட்ட கரும்பிலிருந்து காய்ச்சப்பட்ட வெல்லத்தையே வாங்கி உண்போம். அதுவும் இயற்கையாக பதப்படுத்தப்பட்ட வெல்லமாக ரீஸ்டோர் போன்ற இயற்கை அங்காடிகளிலிருந்து பெறலாம்.

சிலர் வெல்லத்தில் மண் இருக்கிறது என்று சாக்கு சொல்வர். அவ்வாறு மண் இல்லாமல் பார்த்து தயாரிப்பவர்கள் இருக்கிறார்கள். மேலும் இது சிறு தொழில்களாக வெளியில் காய்ச்சி செய்யப்படுவதால் கொஞ்சம் மண் கலக்க வாய்ப்பு உள்ளது. அப்படி இருந்தால் கேடு எதுவும் இல்லை, இதை போன்ற கல் மண் முதலியன நமது மலக்கழிவுகளில் வந்து விடும். இல்லையேல் நாம் இந்த வெல்லத்தினை காய்ச்சி, நீர்மக்கரைசலாக எடுத்து வடிகட்டி பல நாட்களுக்கு சேமித்து வைத்து உபயோகித்து வர‌லாம். (1 முதல் 1.5 கப் தண்ணீர் அரை கிலோ வெல்லதிற்கு) விவசாயியாக இருந்தால், வருடா வருடம் அரசிடமும் தனியாரிடமும் ' நியாய/ நல்ல விலைக்காக போராடி கஷ்டப்படுவதை விட, நாமே இயற்கை முறையில் கரும்பு விளைவித்து அதனை இயன்றால் கரும்பு சாறாகவும், வெல்லமாகவுமே விற்று பயன் பெறுவோம். மேலும், பனையிலிருந்தும் தென்னையிலிருந்தும் எடுக்கப்படும் கருப்பட்டி வெல்லம் மற்றும் அதன் சக்கரையிலும் பல ந‌ற்குணங்கள் உண்டு. அவற்றையும் இனிப்புகளுக்கு சேர்ப்பது நன்றே.

செயற்கை இனிப்பூட்டிகள்

தற்காலத்தில் சாதாரணமாக திருமணம் போன்ற‌ விசேடங்களில் கேட்கும் உரையாடல்: “ஒ! உங்களுக்கு சர்க்கரை நோயா? அப்படி என்றால் 'சுகர் ஃப்ரீ' அல்லது 'ஈக்குவல்' போடவா?” . இதெற்கெல்லாம் மயங்கி விடாதீர் நண்பர்களே. செயற்கை இனிப்பூட்டிகள் மிகவும் உடல் நலக் கேடு விளைவிப்பவை.எப்படியெல்லாம் பெயரிட்டு நம்மை ஏமாற்றுகிறார்கள்! இது போல் விற்கப்படும் எல்லா செயற்கை இனிப்பூட்டிகளும் கெடுதலே, இயற்கைக்கு மாறாக தயாரிக்கப்பட்டு சந்தை சூழ்ச்சியாக மட்டுமே வந்தவை. மக்கள் நலனின் முதல் எதிரி மொன்சான்டோவின் முதல் தயாரிப்பு 'சாக்கரைன்' (Saccharine), பின்னர் அஸ்ஃபார்டமே (aspartame) போன்ற இன்னும் கொடிய இனிப்புகளையும் கொண்டு வந்தனர். இந்த அஸ்ஃபார்டமே நிரூபிக்கப்பட்ட புற்று நோய் காரணி!

இயற்கையில் தேன், வெல்லம், பனை வெல்லம், தென்னை கருப்பட்டி போன்ற சிறந்த இனிப்பூட்டிகள் உண்டு. மேலும் இலுப்பை பூ, ஸ்டீவியா (இனிப்பு துளசி), அகாவே போன்ற பல உள்ளன இயற்கையில். இந்த செயற்கை இனிப்பூட்டிகள் எல்லாம் சர்க்கரையை விட பன்மடங்கு இனிப்பு கொண்டவை. மிகவும் கேடு விளைவிக்கும் ரசாயனங்கள் கொண்டவை. நரம்பு மண்டலங்கள், மூளையின் செயல்பாடு, மரபணு, என்று எல்லாவற்றையும் பாதிக்கும் மிக கொடிய ரசாயனங்கள் கொண்டவை இவை. சூயிங்கம், ஜாம் வகைகள், ஜூஸ் மற்றும் இனிப்பு பலகாரங்கள் எல்லாம் இந்த செயற்கை இனிப்புகளை கொண்டவை. குறைந்த கலோரிகள், டயட் உணவு, சர்க்கரை அற்றது, சர்க்கரை சேர்க்கப் படாதது என்று பெயரிட்ட அனைத்தும் உடனடியாகத் தவிர்க்கப் பட வேண்டியவை. அவை எல்லாம் இந்த கொடிய ரசயான இனிப்பூட்டிகள் அடங்கியவையே.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org