தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

மாடல்ல மற்றையவை - ஜெய்சங்கர்

கன்றுகள் பராமரிப்பு

பசுக்கள் கன்று ஈன்ற பிறகு, பொதுவாக மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு பிறகு மீண்டும் சினைக்கு வரும். அதாவது சினைத்தருண அறிகுறிகள் தென்படும். உடனே மீண்டும் சினைக்கு விடலாமா? கூடாதா? என்பதில் சில மாறுபட்ட கருத்துகள் உள்ளன. கன்று ஈன்று ஏழு அல்லது எட்டு மாதங்களுக்கு பின்னரே மீண்டும் சினையாக்க வேண்டும். இல்லையெனில், பிறந்த கன்றும், சினையில் உள்ள கன்றும், பால் கறவையும் பாதிக்கப்படும் என்பது ஒரு சாராரின் வாதம். முதல் அல்லது இரண்டாவது சினைத் தருணத்திற்குள் (அதாவது மூன்றாம், நான்காம் மாதத்தில்) சினையாக்கினால் சினை நிற்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்பது இன்னொரு சாரார் வாதம். இதில் எதை நாம் கைக்கொள்வது? மாடுகள் ஏழு மாத சினையாக இருக்கும்போது வயிற்றில் உள்ள கன்றின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதால் பால் கறவையை மற்றும் முன் பிறந்த கன்றிற்கு ஊட்டுவதையும் நிறுத்த வேண்டும் என்பதில் எந்தவித மாறுபட்ட கருத்தும் இல்லை. எனவே, நம்மிடம் உள்ள மாடு நான்காம் மாதம் சினை நின்றால் ஏழு மாதம் தாண்டி அதாவது கன்று ஈன்று பதினொன்றாவது மாதம் கறவையை நிறுத்த வேண்டும். கன்றிற்கு பதினோரு மாதம் பால் குடிப்பது போதுமானது. ஆனால், நமக்கு ஒரு கன்றில் பதினோரு மாதம் பால் கறவை போதுமா என்பதே கேள்வி. நாட்டு மாடாக இருந்தால் பனிரெண்டு மாதங்கள் வரை மட்டுமே பொதுவாக கறவை இருக்கும். கலப்பின மாடுகள் சில இரண்டு வருடம் வரை கூட கறக்கும். எனவே, நாட்டு மாடாக இருந்தால், முதல் அல்லது இரண்டாவது சினைத்தருணத்திலேயே சினைக்கு விடலாம். இது, பால் உற்பத்தி அல்ல - மாடு உற்பத்தி என்ற நம் சித்தாந்தத்திற்கும் இசைவானதாக இருக்கும். கலப்பின பசுக்களையும் அவ்வாறே பழக்கலாம்.

சரி… இந்தக் கேள்வியெல்லாம் மீண்டும் மாடு மூன்று அல்லது நான்கு மாதங்களில் சினைக்கு வந்தால் தானே! அவ்வாறு நான்கு மாதங்கள் ஆகியும் சினைத்தருண அறிகுறிகள் தென்படவில்லையானால் என்ன செய்வது? இதற்கு ஊட்டச் சத்து குறைபாடு அல்லது வயிற்றில் பூச்சி ஆகியவை காரணமாக இருக்கலாம். முதலில் சினைப்பருவத்திற்கு வருவதும் இதனால் பாதிக்கப்படலாம். அம்மாதிரி தருணங்களில், முளை கட்டிய பயறு வகை எதுவானாலும் (பச்சைப் பயறு, கொண்டைக்கடலை போன்றவை) அல்லது முளை கட்டிய கம்பு ஆகியவற்றை தீவனத்துடன் கலந்து பத்து நாட்களுக்கு அளிக்கலாம். பிறகு, முற்றிய வெண்டைக்காய் அல்லது சோற்றுக் கற்றாழை மடல் சில நாட்களுக்கு அளிக்கவும். இதைத் தவிர குடல் புழு அல்லது வயிற்றுப் பூச்சிகளுக்கு கசப்பான பொருட்களை மருந்தாக அளிக்கலாம். வேப்பெண்ணெய் சிறிது கொடுக்கலாம், வேப்ப இலையை உண்ண கொடுக்கலாம்.

சீதாப்பழ விதைப் பருப்பை தீவனத்துடன் கலந்து அளிக்கலாம். வயிற்றுப் பூச்சிக்கானவற்றை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் இரண்டு மாத இடைவெளியில் அளிக்கலாம். வயிற்றுப் பூச்சி அதிகம் இருந்தால் சில ஆங்கில மருந்துகளையும் நாடலாம். வயிற்றில் பூச்சி உள்ளதா என்பதை எவ்வாறு அறிவது? மிக அதிகமாக பூச்சி இருந்தால் மாட்டின் சாணி கெட்டியாக இல்லாமல் கழிவது போல் இருக்கும். மேலும், வயிறு மட்டும் பந்து போல் பருத்து காணப்படும். மாடும், கன்றும் நன்றாக உண்ட பிறகு வயிறு உப்பலாக தெரியும். ஆனால், பூச்சி இருந்தால் எப்போதுமே வயிறு பருத்தது போல் காணப்படும். அவ்வாறு இருந்தால், வயிற்றுப் பூச்சியை கட்டுப்படுத்துவது மிகவும் இன்றியமையாதது. பொதுவாக, இந்த தொல்லை இளம் கன்றுகளை பீடித்து அதன் வளர்ச்சியை வெகுவாக பாதிக்கும். எனவே, கன்றுகளை பராமரிக்கும் போது அதன் வயிற்றின் அமைப்பை கவனிப்பது முக்கியம். சரி.. சினைக்கு வந்தும், சினையாக்கியும் (உடலுறவோ அல்லது ஊசியோ) மாடுகளுக்கு பல முறை சினை நிற்காமல் போனால் என்ன செய்வது? மூன்று அல்லது நான்கு முறை சினையாக்க முயற்சி செய்தும் சினை நிற்கவில்லையானால் மாடு உற்பத்தி என்ற நமது கொள்கை பாதிக்கப்படும். எனவே, நாம் அந்த நிலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். சினை நிற்காமல் போக (கருவுறாமை) பொதுவான காரணங்கள்:

போதுமான உடற்பயிற்சி இல்லாதது, உடல் பருமன் அதிகமாக இருப்பது (Obesity), தேவையான ஊட்டச்சத்துகள் இல்லாதது மற்றும் தேவைக்கு அதிகமாக சில சத்துகள் மட்டும் இருப்பது (Imbalanced nutrition), அவை உட்கொள்ளும் உணவில் அதிகமாக இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் எச்சம் (Synthetic residues) இருப்பது. மனிதர்களுக்கு கருவுறாமை பிரச்சனைகளுக்கு உள்ள பொதுவான காரணங்களே மாடுகளுக்கும் பொருந்தும். அப்படியானால் மனிதர்களைப்போல் மாடுகளுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும் அல்லது அவற்றிற்கும் சோதனைக்குழாய் குழந்தை (Test tube baby) போல் ஏதாவது செய்ய வேண்டும் என்பதில்லை. வெகு சில மாடுகளுக்கு வேறு உடல் ரீதியான தொல்லைகள் இருக்கலாம். அந்த மாதிரி மாடுகளுக்கு மட்டும் மருத்துவரை அணுகினால் போதும். பொதுவான காரணங்களை நாமே சரி செய்யலாம். ஏனெனில், மனிதர்களைப்போல் அல்லாமல் மாடுகள் வாழ்க்கை முறை மாற்றங்களை (Lifestyle changes) நன்றாக ஏற்றுக் கொள்ளும். முதல் பிரச்சனை கட்டுத்தறியிலேயே உள்ள மாடுகளுக்கு அதிகம் காணப்படும். மேலும், தேவைக்கு அதிகமாக, அதாவது பால் உற்பத்திக்கு மேலும் அடர் தீவனம் அளிப்பதும் காரணம். நன்றாக அவற்றை வெளியே மேய விடுவதும், தேவையான அளவே தீவனம் அளிப்பதும் உடல் பருமனைக் குறைக்க உதவும். பொதுவான ஆரோக்கியமும் பெருகும். இதை ஏற்கனவே குறிப்பிட்டது போல் படிப்படியாக மாற்ற வேண்டும். இரண்டாவது காரணமும் தீவனத்தைப் பொறுத்ததே. முன்பே சொன்னது போல், பசுந்தீவனம், உலர் தீவனம் மற்றும் அடர் தீவனம் சரியான விகிதத்தில் அளித்தால் இந்த பிரச்சனை வராது. மூன்றாவது காரணமும் தீவனத்தைப் பொறுத்ததே. எல்லா தீவனங்களையும் நாம் வெளியிலிருந்து வாங்கும் போது அதில் உள்ள இரசாயன எச்சம் (residue) மாடுகளை வெகுவாக பாதிக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில், மாடுகளுக்கு நாம் அளிக்கும் உணவு பெரும்பாலும் சமைக்காதது. எனவே, எச்சங்கள் அதன் உடலை பாதிப்பது அதிகம். எனவே, இயன்றவரை நாமே மாடுகளின் உணவை இயற்கையாக தயார் செய்வது முக்கியம். நமது பண்ணையின் ஆரம்ப வடிவமைப்பிலேயே மாடுகளின் சரியான வாழ்க்கை முறையை நாம் உள்ளடக்கினால் கருவுறாமை நமக்கு பிரச்சனையாகவே இருக்காது என்பது நிச்சயம்.

சரி, கன்று பிறந்தாகி விட்டது. பின்னர் என்ன செய்ய வேண்டும்? கன்றுக்கு என்ன மாதிரி உணவு அளிக்க வேண்டும்? எப்போது அளிக்க வேண்டும்? ஏதாவது சிறப்பு பராமரிப்பு தேவையா? என்பது போன்ற பல கேள்விகள் உதிக்கக்கூடும். இரண்டு மாதங்களுக்கு முன்பு சீம்பால் பற்றி பார்த்தோம். மனிதர்களைப் போலவே சீம்பால் கன்றுக்கு மிகவும் முக்கியமானது. சீம்பாலில் எல்லா நோய்க்கும் எதிர்ப்பு சக்தி உள்ளது. எனவே, கன்றின் நெடுங்கால ஆரோக்கியத்திற்கும், சிறந்த வளர்ச்சிக்கும் சீம்பால் முழுமையாக கன்றுக்கு அளிப்பது இன்றியமையாதது. கன்று பிறந்ததும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பாலூட்டவும். கன்று பிறந்து இரண்டு நாட்களுக்கு தாயிடமிருந்து பிரிக்காமல் எல்லா பாலையும் கன்றுக்கே அளிக்கவும். தாயை மேய்ச்சலுக்கு அனுப்பாமல் முன் சொன்னது போல் அரிசிக் கஞ்சி, கம்பு மாவுக்கஞ்சி போன்ற எளிதில் செரிக்கக்கூடிய உணவையும், சிறிது புல் மற்றும் வைக்கோலையும் அளிக்கவும். அடர் தீவனம் அளிக்க வேண்டாம். கன்றை கட்டியிருக்கும் கொட்டகைக்கு நாய்கள் ஈர்க்கப்படும். கன்றின் கழிவை உண்பதற்கென வரும். எனவே, பகல், இரவு இரண்டு நேரமும் கன்றும் தாயும் இருக்கும் கொட்டகையின் கதவை மூடியே வைக்கவும். கன்றின் கழிவு சில நாட்களுக்கு மஞ்சள் நிறத்தில் துர் நாற்றத்துடன் இருப்பது இயல்பே. இரண்டு நாட்களுக்கு பிறகு கன்றையும் தாயையும் சிறிது சிறிதாக பிரிக்க ஆரம்பிக்கலாம். தாயை மேய்ச்சலுக்கு வெளியே ஓட்டிச் செல்லலாம். ஆனால், வெகு தூரம் செல்ல வேண்டாம். தாய், கன்று உள்ள கொட்டகையை பார்க்க முடியும்படி மெய்க்கலாம். சிறிது சிறிதாக தாய்க்கு கன்றுடைய பாதுகாப்பின் மீது நம்பிக்கை வளர வளர தூரத்தை கூட்டிக் கொள்ளலாம். அதேபோல், பால் ஊட்டும் நேரத்தையும் இரண்டு நாட்களுக்கு பிறகு சிறிது சிறிதாக சீராக்கலாம். ஒரு வாரத்திற்குள் வழக்கமான பால் கறக்கும் நேரத்திற்கு மட்டுமே பால் ஊட்டுவதை பழக்கப்படுத்தி விடலாம்.

ஒரு வாரத்திற்கு பிறகு கன்றையும் படிப்படியாக வெளியே கட்டலாம். கன்றை முதலில் கட்டும் போது விறைப்பான புதுக் கயிறு வேண்டாம். பண்ணையில் உள்ள நெகிழ்ந்த, பழைய சிறிய கயிறை பயன்படுத்தி, ஏதாவது ஒரு முன்னங்காலில், முழங்காலில் கட்டலாம். கயிறை நீளம் இல்லாமல் கட்டவேண்டும். நீளம் இருந்தால் காலில் முறுக்கிக் கொண்டு கன்று கீழே விழுந்து விடும். பால் ஊட்டியவுடன் தாய்க்கு அருகில், வெளியில் சிறிது நேரம் கன்றை கட்டினால், தாயை பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக கன்றும் புற்களை கடிக்க ஆரம்பிக்கும். பாலை விட, புல் உணவு அதிகரிக்கும் போது மட்டுமே கன்றின் கழிவு மஞ்சள் நிறத்திலிருந்து மாறும்.

நாம் பால் கறக்கும் போது, கன்று புல் கடிக்கும் அளவை பார்த்து படிப்படியாக, கன்றுக்கு பாலைக் குறைக்கலாம். கன்று பிறந்து சுமார் மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு பிறகு பால் கறப்பதை வழக்கம் போல் செய்யலாம். அதன் பிறகு கன்றுக்கும் படிப்படியாக தண்ணீர் அளிக்கலாம். கன்றையும் மற்ற மாடுகளைப் போல் வெளியில் மேய்க்க கட்டலாம். இப்போது, கன்றுக்கு கழுத்தில் கயிறு கட்டலாம். சில மாதங்களுக்கு பிறகு கன்றை நம்மால் இழுக்க இயலாமல் போகும் போது முதலில், முகறைக் கயிறு கட்டலாம். முகறைக் கயிறு கடைகளில் தயார் நிலையில் முடிச்சுடன் கிடைக்கும். அதை முகத்தில் வாய்க்கு பின்னால் கண்களில் படாமல் இருக்குமாறு வைத்து காதுக்கு பின்னால் கழுத்துக் கயிறுடன் இணைத்து கட்டலாம். இரும்பு வளையம் வைத்து கட்டுவது, கயிறு முறுக்கிக் கொள்ளாமல் இருக்க உதவும். பூட்டு வைத்து கட்டுவதாயிருந்தால், பூட்டு காலில் மாட்டிக் கொள்ளாத அளவிற்கு சிறியதாக முறுக்கிக் கட்டவும்.

கன்றுகளும் குழந்தைகளைப் போல மண் சாப்பிடும். நாம் அருகில் சென்று நின்றால், நம்மை நக்க ஆரம்பிக்கும். இது, அதற்கு அதிகமான தாது உப்புகள் தேவை என்பதற்கு அறிகுறி. கன்றிற்கு தேவையான அளவு புல் மேய்ச்சல் இருந்தால் தனித் தீவனம் தேவை இல்லை. மேலும், தாது உப்பு தேவைக்கு, தண்ணீருடன் சிறிது கல் உப்பையும், வெல்லத்தையும் கரைத்து கொடுக்கலாம். எட்டு, பத்து மாதங்களுக்கு பிறகு சிறிய அளவில் மற்ற மாடுகளுக்கு அளிக்கும் தீவனத்தையே அளிக்க ஆரம்பிக்கலாம். பின், அதன் உடல் எடைக்கேற்பவும், மற்ற பசுந்தீவனம், உலர் தீவனத்தின் அளவைப் பொறுத்தும் அடர் தீவனம் அளிக்க ஆரம்பிக்கலாம். கன்றுக்கென தனி கம்பெனித் தீவனம் உள்ளது. சால்ட் லிக் (Salt Lick) என்று அழைக்கப்படும் தனி உப்புக் கட்டிகள் கடைகளில் கிடைக்கும். இவை, அத்தியாவசியமில்லை. சாதாரண உப்பு, சாதாரண தீவனம் பெரும்பாலான கன்றுகளுக்கு போதும். பசும்புல் மேய்ச்சல் மட்டும் முக்கியம். கன்றுக்கு, முன் சொன்னது போல் வயிற்றில் பூச்சி இல்லாமல் பார்த்துக் கொள்வதும் ஆரோக்கியத்திற்கு வெகு முக்கியம். இவ்வாறே, கன்று பெரிய பருவம் அடையும் வரை பராமரித்தால் போதுமானது. இது வரை நாம், மாடு உற்பத்திக்கு தேவையான, மாடுகள் தேர்வு, கொட்டகை, உணவு, இனப்பெருக்கம் ஆகியவற்றுக்கு தேவையான நுட்பங்களை பார்த்தோம். ஆனால், மாடுகளை பராமரிக்கும் போது அதன் ஆரோக்கியம் பற்றிய கவனமும் மிகவும் முக்கியம். எவ்வளவு நன்றாக பராமரித்தாலும், சில சமயங்களில் ஆரோக்கியக் குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சாதாரண, பொதுவான உடல் உபாதைகளைப் பற்றியும் அவற்றை எவ்வாறு சமாளிப்பது என்பதைப் பற்றி வரும் மாதங்களில் பார்க்கலாம்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org