தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

குமரப்பாவிடம் கேட்போம் - தமிழில் அமரந்தா


கிராமத் தொழிற்சாலைகளும் திட்டமிட்ட பொருளாதாரமும்

’தேசத்திற்கான திட்டமிடல்’ கட்டுரையிலிருந்து - தமிழில் அம‌ரந்தா

(அந்நிய முதலீடு தேவை என்று மேலை நாடுகளில் போய்க் கையேந்தும் கேவல நிலைக்கு நம் நாட்டை ஆட்சியாளர்கள் த‌ள்ளி விட்டனர். ஆனால், இயந்திர மயமாக்கல், மையப் பொருளாதாரம் ஆகியவற்றின் தீமைகளைத் தெளிவாக 60 ஆண்டுகளுக்கு முன்னரே எடுத்துரைத்த ஒரு மாபெரும் பொருளாதார மேதையை நாம் பாடப் புத்தகங்களிலோ, ஊடகங்களிலோ அறிந்து கொள்ள முயற்சிப்பதே இல்லை. திட்டமிடுவோர் பிடிவாதமாகக் கண்ணை மூடிக்கொள்ளும் காலம் என்று மாறுமோ? - ஆர்)

தீர்மானிக்கப்பட்ட இலக்கை நோக்கி முன்னேற முயற்சிப்பதே , இலக்கு என்ன என்பதும் அதனை நாம் எவ்வாறு அடையப் போகிறோம் என்பதும் திட்டத்தின் விவரங்களையும் தீர்மானிக்கும். எனவே நமது திட்டங்களின் நோக்கங்களை தெளிவாக வரையறுத்துக் கொள்ள வேண்டும். இங்கு நாம் முன்வைக்கும் திட்டம் இரண்டு அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டது: முதலாவது பெரும்பான்மை மக்களின் நலவாழ்வு; இரண்டாவது இதனையடைய வேலை வாய்ப்பிற்குப் போதிய வாய்ப்புக்களை உருவாக்கி செல்வத்தை முறையாக பகிர்மானம் செய்வது. இவற்றையே நாம் அடைய வேண்டிய இலக்காகவும் அதற்கான வழிமுறையாகவும் எண்ணித் தொடங்கினால், இந்த அடிப்படைக் கொள்கைக்கு மாறாக இருக்கும் எல்லாத் திட்டங்களையும் நாம் மறுதலிக்க வேண்டும்.

மனிதர்களின் நலவாழ்விற்குத் தேவைப்படும் பெரும்பான்மையான தொழில்களுக்கான கச்சாப்பொருள்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் இந்தியா தொழிற்துறையில் அசைக்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளது. தொழில் வளர்ச்சியடைந்தவை என்று கருதப்படும் ஐரோப்பிய நாடுகளின் தொழிற்சாலைகள் கச்சாப் பொருட்களை நுகர்பொருள்களாக மாற்றுகின்றன. இந்தியாவில் கிடைக்கும் கச்சாப்பொருள்களினால் உருவாகும் வேலை வாய்ப்புக்கள் அனைத்தும் சட்டப்படி இந்தியாவிற்கே உரியது. நுகர்பொருள்களாக மாற்றாமல் கச்சாப்பொருட்களை நமது எல்லையைத் தாண்டிச் செல்ல அனுமதிக்கக் கூடாது. அப்போதுதான் நமது கச்சாப்பொருட்களில் பொதிந்திருக்கும் செல்வம் நம் நாட்டை வளமாக்கும். கச்சாப்பொருட்கள் நுகர்பொருட்களாக மாற்றப்படுவதே இயற்கையான செல்வ உற்பத்திமுறை. (கச்சாப்பொருள் ஏற்றுமதி போன்ற) செயற்கையான முறைகள் புகுத்தப்பட்டால், இந்த இயற்கை சுழற்சி முறை முறிந்து விடும். குறைவான லாபம் தரும் செயல் முறைகள் ஒரு சாராரிடம் கைமாற்றப்படும். கனிகளை வேறு சிலர் பறித்துக் கொள்வார்கள். இம்முறை குறைவான லாபம் தரும் முறைகளை பின்பற்றும் மக்களை வறியவர்களாக மாற்றும். அதிக லாபம் தரும் செயல்முறைகளை கைக்கொள்வோரிடம் மென்மேலும் செல்வம் குவியும். லாபவிகிதம் ஒன்றேயானாலும் கச்சாப்பொருளாக இருக்கும் நிலையைவிட நுகர்பொருளாக மாறினால் பொருளின் மதிப்பு அதிகரிக்கும். எனவே கச்சாப்பொருளாக கைமாற்றப்படும்போது கிடைக்கும் லாபத்தை விட நுகர்பொருளாக விற்கும் போது லாபம் அதிகமாக இருக்கும்.

இந்த வித்தியாசங்கள் நாட்டுக்குள்ளேயே எழுந்தால் சில தீய விளைவுகள் உண்டாகும். எனினும் செல்வம் நாட்டுக்குள்ளேயெ புழங்குவதால் இதைப் பெருமளவு கட்டுப்படுத்த முடியும். ஆனால் இத்தகைய வித்தியாசங்கள் அரசியல் பொருளாதார எல்லைகளைக் கடந்து ஏற்படுமானால் அவை விரிந்து பெருகும். ஆக செல்வத்தை சமமாக பகிந்தளிக்க விரும்பினால், முதலில் நாம் செல்வ உருவாக்கத்திற்கான அனைத்து நடைமுறைகளையும் நமது நாட்டிற்குள்ளேயே நடைபெறுமாறு திட்டமிடல் வேண்டும்; செயல் முறைகளில் அதிக வேறுபாடுகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு நாம் கச்சாப்பொருள் ஏற்றுமதிக்கு அதிக வரிகளை வசூலித்து, நுகர் பொருள் ஏற்றுமதிக்கே ஊக்கமளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நம் மக்களுக்கு வேலை வாய்ப்பு உறுதிப்படுவதோடு, கச்சாப்பொருட்கள் சொந்தமாக இருப்பதால் இயற்கை வளங்கள் அவர்களுக்கே உரிமையாக இருக்கும். ஆனால் இன்று நடப்பவை எல்லாமே இதற்கு நேர்மாறானவை.

இயற்கை வளங்களை பயன்படுத்தும் உரிமை நம்மிடமே இருக்கும்போது அவற்றை நுகர்பொருட்களாக மாற்றும் செயல்முறையை எவ்வாறு முடிவு செய்வது? நமக்கு இரண்டு வழிகள் இருக்கின்றன: ஒன்று மய்யப்படுத்தப்பட்ட உற்பத்திமுறை; மற்றது பரவலாக்கப்பட்ட உற்பத்தி நிலையங்கள். மை யப்படுத்தப்பட்ட உற்பத்தி முறையால் செல்வம் தனியார் வசம் குவியும்; அல்லது அதிகாரம் அரசின் கையில் குவியும். எனவே உற்பத்தி செயல்முறையை செல்வத்தைப் பகிர்ந்தளிக்கும் வழிமுறையாக ஆக்க வேண்டுமென்றால் மேற்சொன்ன செயல்முறையைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். மேலும் மையப்படுத்தப்பட்ட உற்பத்தி முறையை பின்வரும் தொழில்களுக்கு மட்டுமே உரியது என வரையறை செய்யலாம்

  • நீண்டகாலத் திட்டமிடல் தேவைப்படும் தொழில்கள்
  • பெரும் முதலீடு தேவைப்படும் தொழில்கள்
  • பொது சேவைகள் யாவும் லாப நோக்கமின்றி சேவை அடிப்படையிலேயே பயன்படவேண்டிய தொழில்கள்
  • இயற்கை வளங்களை அனைத்து மக்களுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்க வேண்டிய பொறுப்புள்ள தொழில்கள்

மற்ற எல்லாத் தொழில்களும் கிராம அல்லது குடிசைத் தொழில் நிறுவனங்களாக தத்தமது உற்பத்தித் திறனுக்கேற்ற லாப நோக்கோடு இயங்க வேண்டும். இது போன்ற சிறுதொழில் நிறுவனங்களில் உற்பத்திப் பொருட்களின் விலையில் மக்களின் உழைப்பே பெரும்பகுதியாக இருக்குமென்பதால் அந்த உற்பத்தி முறையிலேயே செல்வப் பகிர்வும் இயல்பாக நடந்துவிடும். இத்தகைய தொழில்களில் ஈடுபடும் கைவினைஞர்களின் மூலதனம் மிகக் குறைவாகவே இருக்குமென்பதால் அதிக முதலீடு தேவைப்படும் தொழில்கள் தாமாகவே இல்லாது போய்விடும்.

மேற்சொன்ன அடிப்படை வேலைகளை செய்துவிட்டால் மீதமுள்ளது ஒன்றும் கடினமானதல்ல. அனைத்துப் பெரிய தொழிற்சாலைகளும் லாப நோக்கமின்றி அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கினால், அவை நுகர்பொருட்களைத் தயாரிக்கும் கிராமத் தொழிற்சாலைகளின் லாபத்தை அபகரிக்காது. இத்தகைய முறையில் நாம் செயல் படுவோமானால் இப்போதைக்கு பொருட்களின் விலை அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. காரணம் பொருட்களின் விலை உற்பத்தி செய்வோரின் தேவையை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படுகின்றது. ஆனால் பெரும்பான்மை மக்களின் நலன்களை கருத்தில் கொண்டே நாம் செயல்படுவதால் இதனைத் தவிர்க்க முடியாது. வாங்கும் திறனை சிறந்த முறையில் பகிர்ந்தளிப்பதன் அடையாளமே இந்தக் கூடுதல் விலை. உழைப்பிற்கானக் கூலியைக் குறைத்துப் பொருட்களின் விலையைக் குறைப்பது என்பது பெரும்பான்மையினரின் வாங்கும் திறனைக் குறைப்பது என்றே பொருள்படும். இந்த வகையில் தேவைக்கு அதிகமான பொருட்கள் மிகுந்திருக்கும் நிலையே உருவாகும். இதுதான் மிகை உற்பத்தி என்ற நிலைக்கு இட்டுச் செல்லும். இந்த நிலைமையைத் தவிர்க்க வேண்டுமானால் மனித உழைப்பைக் குறைக்கும் இயந்திரப் பயன்பாட்டைக் கைவிட வேண்டும்.

மனித உழைப்பைக் குறைக்கும் இயந்திரங்களையும் உற்பத்தியாளர்களின் செயல்திறனை அதிகரிக்க உதவும் கண்டுபிடிப்புகளையும் நாம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். முதலாவது பெருபான்மை மக்களை சுரண்ட உதவுகிறது. இரண்டாவது மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கிறது. இங்கு உற்பத்தி எந்த அளவிற்கு அதிகரித்துள்ளது என்பதல்ல கேள்வி; இயந்திரங்களின் பயன்பாட்டால் உருவான கூடுதல் செல்வம் யாரைச் சென்றடைகிறது என்பதே கேள்வி. கூடுதல் செல்வம் உழைப்பாளிக்கே சேருமானால் அதனை வரவேற்கலாம். ஒரு தையல் கலைஞர் கையால் தைத்தால் ஒரு நாளில் ஒரு சட்டைதான் தைக்க முடியும். ஆனால் தையல் பொறியின் உதவியுடன் ஒரு நாளில் பத்து சட்டைகள் தைக்க முடியும். தையல் பொறி அவரது செயல் திறனை அதிகரிப்பதோடு, அவரது வாங்கும் திறனையும் அதிகரிக்கிறது. இதற்கு நேர்மாறாக ஒரு ஆலை முதலாளி பத்து ஆட்கள் செய்ய வேண்டிய வேலையை ஒரு இயந்திரத்தையும் 5 ஆட்களையும் கொண்டு செய்வாரானால், ஆட்களின் சம்பளத்தை 50 சதவிகிதம் உயர்த்தினால் கூட ஏழரை ஆட்களுக்கு மட்டுமே வேலை கொடுப்பதாகப் பொருள். இதனால் இரண்டு தீமைகள் விளைகின்றன:

  • முதலாளியின் கையில் செல்வம் குவிகிறது
  • ஒரு சில தொழிலாளர்களிடம் பணப் புழக்கம் அதிகரிக்கின்றது.

இவ்விரு நிகழ்வுகளும் நாட்டிலுள்ள வாங்கும் திறனின் பயன்பாட்டை மிக மோசமாக பாதிக்கும். இதன் விளைவாக இறுதியில் மிகை உற்பத்தி என்ற பிரச்சினை உருவாகும்.

எனவேதான் உருப்படியான திட்டங்கள் என்றால் மூன்று அடிப்படைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்:

  • இருப்பிலுள்ள கச்சாப்பொருட்களை அரசு உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும்
  • இயற்கை வளங்களையும் முக்கியமான தொழிற்சாலைகளையும் பொது சேவைகளையும் தேவையின் அடிப்படையில் பயன்படுத்தும் வகையில் அரசு தனது கட்டுபாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்
  • தேவையான ஆய்வுகளைச் செய்து கிராம மற்றும் குடிசைத் தொழில்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் நாட்டு மக்கள் வளம் பெற முடியும்

தேசிய அளவில் பெரும் தொழிற்சாலைகளை ஊக்குவிக்கும் மற்றெல்லா திட்டங்களும் தற்போதுள்ள தீமைகளை மேலும் அதிகரித்து பெருந்துயரங்களை ஏற்படுத்திவிடும். இத்தகைய பெரும் தொழிற்சாலைகள் ஒரு சில கோடீஸ்வரர்களை வேண்டுமானால் உருவாக்கலாம்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org