1. தாய்மைப் பொருளாதாரம்
காந்திய பொருளியல் அறிஞர், ஜே.சி. குமரப்பா கட்டுரைகள், தமிழில் ஜீவா பனுவல் சோலை வெளியீட்டகம், டிசெம்பர், 2013, விலை ரு. 150/- இன்றய பொருளாதார சூழல், ‘எத்தத் தின்னா பித்தம் தெளியும்’ என்கின்ற நிலையில் உள்ளது நாம் அறிந்ததே. உலக வர்த்தகம் சார்ந்த, நிலையில்லா, நிரந்தரத் தன்மையில்லா, ஏதிர்காலமில்லாத பொருளாதார ஏற்பாடு வெறும் ஊடகங்களை கொண்டும், ராணுவ உதவியுடனும், உலகமெல்லாம் பரவி உள்ளது. ஜனநாயகமில்லாத நாடுகளில் இது நேரடியாகவும், ஜனநாயக நாடுகளில் மறைமுகவாகவும் செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில், உலக அளவில், மாற்றுப் பொருளியல் கோட்பாடுகளை சில அறிஞர்களும், அரசாங்கங்களும் தேடி வருகின்றன. தமிழகத்தின் இருபதாம் நுற்றாண்டில் தோன்றிய சிந்தனயாளர்களில், தலைசிறந்த பொருளியல் வல்லுநர் - காந்தியால், “நமது கிராமப்புற தொழில்களின் முனைவர்” (Doctor of Village Industries) என்று வருணிக்கபட்டவர் - திரு. குமரப்பா ஆவார். இவரது எழுத்துக்களில் உள்ள எளிய ஆனால் ஆழ்ந்த பொருளியல் கோட்பாட்டினை, இந்தப் புத்தகம் பல கட்டுரைகளின் வாயிலாக வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
சுதந்திர இந்தியாவில் காந்தி இறந்த பிறகு அவர்வழி தவறிய ஆட்சியாளர்களை கடுமையாகவும், உறுதியுடனும், மாற்று வழி அறிந்தும் சாடிய சிந்தனைவாதிகளில் முக்கியமானவர் குமரப்பா. இதனாலேயே குமரப்பாவின் எழுத்துக்களில், பல முறை கோபமும், ஆதங்கமும், ஆக்கபூர்வமான முயற்சிகளின் சிந்தனைகளும் கலந்து வெளிப்படும். இந்த மொழிபெயர்ப்பு, இத்தகைய உணர்ச்சிகளை மிக அருமையாகவும், நுணுக்கத்துடனும் வெளிக்கொணர்ந்துள்ளது, மிகவும் பாராட்டதக்கது.
குமரப்பா மையப் பொருளாதாரத்தைச் சாடியது மட்டுமன்றி, அண்மைப் பொருளாதாரங்களால் எவ்வாறு அனைவருக்கும் தேவையானவற்றை உற்பத்தி செய்து நிறைவு அடைய முடியும் என்று தெளிவாக விளக்கியுள்ளார். விடைகளையும் விளக்கும் விமர்சனங்கள் மிகச்சிலவே.
மிகவும் அழகான வினைஞர்களால் உருவாக்கப்பட்ட காகித்தைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்தப் புத்தகம், இயற்கை விவசாய முயற்சிக்கான ஒரு விதையாக உருவாக்கப்பட்டுள்ளது மேலும் பாராட்டப்படவேண்டியது.
2. ஆறாம் திணை - மருத்துவர் கு. சிவராமன், விகடன் பிரசுரம், டிசெம்பர், 2013, விலை ரு. 125/-
மருத்துவர். திரு. சிவராமன் அவர்களால், ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடராக வெளிவந்த ‘ஆறாம் திணை’ இப்போது அழகிய நூல் வடிவில் வந்துள்ளது. ‘உணவெனப்படுவது, நிலத்தொடு நீரே’ என்னும் தொல்காப்பியத்தின் சொல்லுக்கு பங்கம் விளைவிக்கும் அளவிற்கு நிலமும், நீரும் மாசுபட்டுள்ள இன்றைய சூழலில், பாரம்பரிய உணவு, இயற்கை உணவு, உணவின் கலாசாரத்தை முன்னிறுத்தி எழுதப்பட்டுள்ள ஒரு புத்தகம். இது மிகவும் பிரபலமாக, சாமானிய மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டு, பரவலாக விற்பனை ஆகிவருவது, நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.
ஐம்பது தனிக் கட்டுரைகள் கொண்ட இந்நூல், இந்த வருடம் சனவரி மாதம் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் மிகவும் அதிகம் விற்பனையான நூல்களில் ஒன்றாகும்.
3. காந்தி தேசம் – பா. திருமலை, புதிய தரிசனம் பதிப்பகம், 2013, விலை ரு. 200/-
சிந்தனைகளைக் கொண்டு, நாட்டு நிகழ்வுகளை ஆராய்ந்து, மிகவும் ஆழாமாக, புள்ளி விவரங்களுடன் ‘புதிய தரிசனம்’ பத்திரிகையில் வெளிவந்த 14 கட்டுரைகளின் தொகுப்பு. தமிழகத்தில் அருகிவரும் இயற்கை வாழ்வாதாரங்களையும், அவற்றின் சிதைவுகளையும், சமூக சீர்கேடுகளையும் மிகவும் வேதனையுடனும், அவற்றின் பல பரிமாணங்களை எளிதில் புரிந்து கொள்ளும் விதத்திலும் இந்த தொகுப்பு அமைந்துள்ளது.
4. நூற்றாண்டின் காலச் சக்கரம்- காந்தி கீதா (ஹிந்த் ஸ்வராஜ்)
மூலம் குஜராத்தியில் திரு. திங்கர் ஜோஷி, தமிழாக்கம், திருமதி. அலமேலு கிருஷ்ணன், Unique Media Integrators பதிப்பகம், மார்ச் 2013, விலை ரு. 160/- காந்திய சித்தாந்தத்தை நன்கு அறிந்தவர்கள், ‘இந்திய சுயராஜ்ஜியம்’ என்று அவர் 1909 ஆம் ஆண்டு எழுதிய சிறிய நூலை நன்கு அறிந்திருப்பர். அவர் சிந்தனைகளை முழுமையாகப் புரிந்துகொள்ள இந்த சிறிய புத்தகம் மிக முக்கியம் என்பதையும் அறிவர். திபெத்திய அறிஞர் மற்றும் பௌத்த துறவி, மேதகு. சாம்தொங்கு ரிம்பொச்செ, இந்த புத்தகத்தை இன்றய காலகட்டத்தில், புத்தரின், ‘தம்மபாத’த்திறக்கு நிகராகவும், அதனைவிட இன்றியமையாததாகவும் குறிப்பிடுகின்றார்.
இந்திய கலாசாரத்தில், ஒரு மூல புத்தகத்தைக் குறித்துப் பலரும் விளக்க உரைகள் எழுதுவது தொன்றுதொட்டு நிலவிவரும் ஒரு வழக்கு. இந்தப் பாரம்பரியத்தில், ‘இந்திய சுயராஜ்ஜியம்’ புத்தகத்திற்க்கு ஒரு விளக்க உரையாகவே, திரு. தினகர் ஜோஷி அவர்களால் 15 கட்டுரைகளாக இந்த புத்தகம் வெளிவந்துள்ளது. பொதுவாகவே இத்தகைய விளக்க புத்தகங்கள், மூலத்தின் நிகழ்கால முக்கியத்துவத்தினை உணர்த்துவதாகவே அமைந்துள்ளன.