தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

முல்லை பெரியாறு அணை - ஒரு ஆய்வு

முல்லைப் பெரியாறு அணைத் திட்டம் வரலாற்று அடிப்படையில் சரியானதே! ரா. சீனிவாசன், முனைவர் பட்ட ஆய்வாளர், சட்டக் கல்லூரி, வெச்ட்மின்ச்ட்டர் பல்கலைக்கழகம், லண்டன்

(R. Seenivasan, PhD candidate. School of Law, University of Westminster, London. r.seenivasan@gmail.com)

தமிழில் பரிதி (thiru.ramakrishnan@gmail.com)

மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள்:

(அ) ஆங்கில மூலக் கட்டுரை: R. Seenivasan, “Historical Validity of Mullaperiyar Project”, The Economic and Political Weekly, Vol. XLIX No. 4, January 25, 2014

(ஆ) கட்டுரையில் உள்ள அதிகம் புழக்கத்தில் இல்லாத தமிழ்ச் சொற்கள் குறித்த விளக்கமும் பிறமொழிப் பெயர்ச் சொற்களின் ஆங்கில வடிவமும் இறுதியில் தரப்பட்டுள்ளன.

(இ) மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள் [பகர அடைப்புக்குறிகளுக்குள்] தரப்பட்டுள்ளன.

பெரியாறு அணை வெவ்வேறு காலங்களில் பல்வேறு வகையான சர்ச்சைகளுக்கு இடந்தந்துள்ளது. அந்தப் பணித்திட்டம் தொடக்கத்திலிருந்தே சூழலுக்குத் தீங்கானதாக இருந்தது என்று இப்போது சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். அத்தகைய கருத்தை முன்வைப்பவர்களுள் ராமசாமி ஐயர் (இந்திய நடுவண் அரசின் நீர்வளத்துறைச் செயலராக இருந்து ஓய்வு பெற்றவர்) என்பவரும் ஒருவர். பெரியாறு அணைத்திட்டம் அற்பப்பெருமைக்காக நிறைவேற்றப்பட்ட பொறியியல் தீவிரவாதப் பணித்திட்டமாகவும் மோசமானதொரு எடுத்துக்காட்டாகவும் அவருக்குத் தெரிகிறது.

(i) அந்த அணைக்கான திட்டமிடல் மட்டுமின்றி அவ்வணையின் தேவையைக் குறித்தே அவர் சில அடிப்படை வினாக்களை எழுப்புகிறார்.

(ii) வடக்கு மற்றும் கிழக்கிந்திய வெள்ளச் சமவெளிகளை ஆராயும் வரலாற்றறிஞர்கள்

(iii) முன்வைக்கும் கருத்தியல்களுடன் இந்த வாதங்கள் பல வழிகளில் ஒத்துள்ளன.

இந்தக் கட்டுரை அந்த ஆய்வுகள் குறித்து எதனையும் கூறாமல் அவற்றில் இருப்பவற்றைப் போன்ற [ராமசாமி] ஐயருடைய வாதங்களைச் சோதனைக்குட்படுத்துகிறது.

பெரியாறு பணித்திட்ட ஆவணங்கள், அந்தக் காலத்திய மாவட்டக் கையேடுகள் மற்றும் அரசாணைகள், அந்தப் பணித்திட்டத்தில் பணியாற்றிய “பொறியாளர்கள்” எழுதிய பொறியியல் வரலாறுகள் ஆகியவற்றை இந்தக் கட்டுரை பயன்படுத்துகிறது. பிரித்தானியர்கள் வைகை, பெரியாறு பகுதிகளில் செய்தவை அனைத்தும் நீர்ப்பாசனப் பொறியியல் துறையில் அந்தக் காலகட்டத்தில் செய்திருக்கக்கூடியவற்றின் விரிவாக்கமே என்று இக்கட்டுரை வாதிடுகிறது. பொறியியல், திட்டமிடுதல் ஆகிய துறைகளில் அப்போதைய ஐரோப்பிய அறிவியல் தொழில்நுட்பப் போக்கு மட்டுமே இது போன்ற பெரிய பணித்திட்டங்களுக்குக் காரணம் என்று சொல்லமுடியாது. இப்போது முன்வைக்கப்படும் வாதங்கள் [குற்றச்சாட்டுகள்] எந்தளவுக்கு உண்மையானவை?

பெரியாறு அணையைப் போன்ற பொறியியல் பணிகள் அதற்கு முன்னர் நடைபெறவில்லை என்பதும் அந்தக் காலத்திற்கு அது [பெரியாறு அணை கட்டுதல்] அரிய பணியே என்பதும் உண்மை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் பொறியிலாளர்கள், நிலவியலாளர்கள், நிர்வாகிகள், அரசு வருவாய்த் துறை அதிகாரிகள் ஆகியோரிடையே அது பெருமளவு ஆர்வத்தைத் தூண்டியிருந்தது. அந்தப் பணித்திட்டம் தொடர்பாக நிறைய முன்னீடுகளும் திட்டங்களும் வரையப்பட்டன(iv) என்பதே இயற்கை வளங்களைப் பயன்படுத்துவது குறித்துத் தீவிரமும் ஆழமும் மிக்க வாத மோதல்கள் நிகழ்ந்தமைக்குச் சிறந்த அடையாளமாகும். அப்போதைய பணித்திட்டங்கள் பலவற்றைப் போலன்றி பெரியாறு அணைத்திட்டம் பல அரசு நிறுவனங்களின் ஒப்புதலைப் பெறவேண்டியிருந்தது; பிரித்தானிய அரசின் ஒப்புதல் பெறுவதற்கு ஏறக்குறைய பதினோறாண்டுகள் ஆயின. நில வருவாயை அதிகரிப்பது ஒரு பெரிய நோக்கமாக இருந்தது என்பதில் ஐயமில்லை. ஆனால், பஞ்சத்தைக் கட்டுப்படுத்துவதும் (v) குற்றப் பரம்பரையினர் என்று [தவறாக] வரையறுக்கப்பட்ட சில சாதிகளைச் சேர்ந்த மக்களுடைய குமுக மேம்பாடும் இந்தப் பணித்திட்டத்திற்குக் காரணங்களாக இருந்தன.

பெரியாறு அணைத்திட்டம் குறித்து உலகம் முழுதும் ஆர்வம் காணப்பட்டது. அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதைப் பலரும் கவனமாகப் பார்த்துவந்தனர். எடுத்துக்காட்டாக, [பிரித்தானிய] அரசிய நிலவியல் குழு இந்தப் பணித்திட்டத்தை எதிர்நோக்கிய தடங்கல்கள் மற்றும் அதன் பயன்கள் பற்றித் தன் மாத இதழில் பின்வருமாறு எழுதிற்று:

அப்பகுதியின் இயற்கையமைப்பு இந்தப் பணித்திட்டத்தின் சிக்கல்களை மேலும் அதிகரித்தது.

அடர்ந்த காடுகள், மலேரியா நோயைப் பரப்பும் கொசுக்கள், மனித வாசனை இல்லாத பகுதிகள்;

2800 அடி உயரத்திற்குக் கட்டடப் பொருள்களை இழுத்துச்செல்லவேண்டியிருத்தல்; 15-க்கு 1 என்ற அளவில் இருந்த முகட்டுப்பகுதிகளில் வேலை செய்யவேண்டிய நிலை;

அவ்விடத்திற்கு அருகில் இருந்த தொடர்வண்டி நிலையத்திலிருந்து அங்கு செல்வதற்குப் பாலங்கள் அமைக்கப்பெறாத நான்கு ஆறுகளைக் கடக்கவேண்டியிருத்தல்

ஆகிய பல சிக்கல்களை இத்திட்டம் எதிர்கொள்ளவேண்டியிருந்தது.

முடிந்தவரை புனலாற்றல் பயன்படுத்தப்பட்டது. மொத்தத்தில் ஆற்றல் சிக்கனமாகப் பயன்படுத்தப்பட்டது. ஆகவே, நன்மைபயக்கும் இத்திட்டத்தின் மொத்தச் செலவு இப்போதைய பண மதிப்பின்படி ஐந்து லட்சம் ச்டெர்லிங்-ஐக் காட்டிலும் சற்றுக் குறைவானதே. இந்தக் குறைந்த செலவுக்குப் பலனாக இதனால் கிடைக்கக்கூடிய நேரடி உபரி நல்ல வருவாய்க்கு வழிவகுக்கும். (குழு 1895;567)

அணை கட்டுவதற்குக் கல், சுண்ணாம்பு உள்ளிட்ட உள்ளூர்ப் பொருள்களே அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன. ஐரோப்பாவில் இருந்து மிகக் குறைந்த அளவிலேயே இயந்திரங்களும் இரும்புத் தளவாடங்களும் இறக்குமதி செய்யப்பட்டன. இந்தப் பணித்திட்டம் மூன்று பெரும் பகுதிகளைக் கொண்டது:

மலைகளில் அமைந்த அணை மற்றும் ஏரி;

நீரைக் கொண்டுசெல்வதற்கு ஒரு சுரங்க வழி;

வைகை வடிநிலத்தில் கால்வாய்கள்.

தமிழகத்தின் அண்டை மாவட்டங்களில் இருந்த உள்ளூர்த் தொழில்நுட்பப் பணியாளர்கள், கைவினைஞர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். (மெக்கென்சி 1899).

பெருமைக்காக நிறைவேற்றப்பட்ட பொறியியல் தீவிரவாதப் பணித்திட்டமா?

பெரியாற்றில் இருந்து வைகைக்குத் தண்ணீரைக் கொண்டுவருவதே இந்தப் பணித்திட்டத்தின் முதன்மைக் குறிக்கோளாக இருந்தது என்பது பென்னிக்விக் மற்றும் அவருக்கு முற்பட்டவர்கள் எழுதியவற்றை மேலோட்டமாகப் படித்தாலே தெரிகிறது. ஏற்கெனவே இருக்கும் ஆறு, அணைக்கட்டுகள், குளங்கள் ஆகியவற்றை இந்தப் பாசனத்திட்டத்திற்குப் பயன்படுத்தவேண்டும் என்பதை அவர்கள் அனைவருமே ஒப்புக்கொண்டிருந்தனர். இரண்டு ஆறுகளுமே மேற்கு மலைத் தொடரில் உற்பத்தியாகின்றன. பெரியாறு மேற்கு நோக்கி ஓடுகிறது; வைகை கிழக்கு நோக்கி வருகிறது; இதுதான் அவ்விரண்டுக்கும் இடையில் உள்ள வேறுபாடு. அனுமதிக்கப்பட்ட இறுதித் திட்டப்படி பெரியாற்றில் இருந்து வைகைக்கு நீரைக் கொணர்வதன் மூலம் அப்போதைய மதுரை மாவட்டத்தில் எழுபத்தையாயிரம் ஏக்கர் நிலத்துக்குப் பாசன வசதி தருவதுதான் இதன் நோக்கமாக இருந்தது. ஒரு பாசனத் திட்டத்தின்கீழ் அவ்வளவு பெரிய பரப்புக்குத் தண்ணீர் வழங்குவதைச் செயல்படுத்துவதற்காக வைகையாறு, ஆற்றுக் கால்வாய்கள், அணைக்கட்டுகள், பிற கால்வாய் வலையங்கள், குளங்கள் என ஏற்கெனவே இருந்த கட்டமைப்பைப் பயன்படுத்துதல் அந்தப் பணித்திட்டத்தில் முன்வைக்கப்பட்டது (பென்னிக்விக் 1886)

மூன்று மலைகளை இணைக்கும் விதத்தில் அணை வடிவமைக்கப்பட்டது. முதன்மை அணை 1,200 அடி நீளமுள்ளது. காரையால் கட்டப்பட்டவற்றில் அதிகப்படி உயரம் 162 அடி (பத்து மாடிக் கட்டட உயரம்); இது சுற்றுச் சுவரின் உயரத்தையும் உள்ளடக்கியது. வெள்ளக் காலங்களில் உடனடி நீர் வெளியேற்றத்திற்காக நீளமான கலிங்கு தேவைப்படும்; இதற்காகச் சிற்றணை ஒன்றும் கட்டப்பட்டது. அணையின் முழு உயரமான 152 அடி வரை நீர் நிற்கையில் 6,534 ஏக்கர் பரப்பு நிலம் நீரில் மூழ்கும். அந்நிலையில் அணையில் 1,556 கோடி கன அடி நீர் இருக்கும். அதில் 980 கோடி கன அடி நீர் பயன்பாட்டுக்குக் கிடைக்கும். 570 கோடி கன அடி நீர் அணையின் ஏரியிலேயே தங்கும். நீரை வைகையாற்றுக்குக் கொண்டுசெல்வதற்கென மலைகளூடே 5,700 அடி நீள சுரங்க வழி குடையப்பட்டது.

ஆற்றின் பெயரை அடிப்படையாகக் கொண்டு அணைக்குப் பெரியாறு ஏரி என்று பெயரிடப்பட்டது. இப்பணித்திட்டத்திற்கு ஆதரவாக இருந்தவர்களில் ஆர்த்தர் காட்டன் என்பவரும் ஒருவர். இந்தியாவில் அப்போதிருந்த பெரிய பாசனத் திட்டங்களின் பட்டியலை அவர் வகுத்திருந்தார். (காட்டன் 1900) அதில் இடம்பெற்ற இத்திட்டத்திற்குப் பெரியாறு ஏரி என அவர் பெயரிட்டார். சுரங்கத்தில் இருந்து வெளிப்படும் நீர் நேரடியாக வைகையாற்றை அடைந்தது. 138 கி.மீ. தொலைவு சென்றபின் அந்த நீர் பேரணையில் அளந்து பெற்றுக்கொள்ளப்பட்டது. அந்த அணைக்கட்டு பத்தாம் நூற்றாண்டுக்கு முன்னரே கட்டப்பட்டது.

புதிதாகத் தோண்டப்பட்ட பெரியாறு முதன்மைக் கால்வாய் பெரியாற்றின் நீரை அடுத்த 61 கி.மீ. தொலைவுக்குக் கொண்டு சென்று 12 கிளை வாய்க்கால்களுக்கும் பல கிளை ஆறுகளுக்கும் வழங்கிற்று. இந்தக் கிளை ஆறுகளில் பெரும்பாலானவை ஏற்கெனவே இருந்தவை. அவற்றால் பயனடைந்துவந்த பகுதிகளுக்குக் குறிப்பிட்ட அளவு நீரைக் கொண்டு சேர்ப்பதற்கேற்ப இந்தப் பணித்திட்டம் அவற்றின் கொள்திறனையும் வரிசைச் சீரமைவையும் சரி செய்தது. ஒவ்வொரு கிளை வாய்க்காலும் ஒரு பெரிய ஏரியில் முடிந்தது; அளவுக்கு மீறிய வெள்ளம் வந்தால் அந்த உபரி நீரை வைகைக்குக் கொண்டுசென்றது. இந்த ஏரிகள் அனைத்துமே நூற்றுக்கணக்கான ஆண்டுப் பழமை வாய்ந்தவை. இந்தப் பணித்திட்டத்திற்கும் அவற்றுக்கும் தொடர்பில்லை. பெரியாறு-வைகை மொத்தப் பாசனப் பரப்பில் அறுபத்தைந்து விழுக்காடு இந்த ஏரிகளால் பாசனமடையும் பகுதிகள். (தொடர்ச்சி அடுத்த இதழில்…)

சொல்லகராதி

 • அரசிய நிலவியல் குழு the royal geographic society
 • ஐரோப்பியப் பழஞ்சிந்தனையாளர்கள் victorians
 • கருத்தியல் theory
 • கருத்துப்படிவம் concept
 • கலிங்கு, கலிங்கல் weir
 • ச்டெர்லிங் (பிரித்தானியப் பணம்) sterling
 • சருகணி sarugani
 • செய்ன் seine
 • தண்டுநர் வசூல் செய்பவர்
 • தகைதிறன் efficiency
 • திட்டம் plan
 • தெளிவான கருத்துப்படிவம் paradigm
 • பணித்திட்டம் project
 • பிரித்தானியர் the british
 • பேரணை ஒழுங்கமைப்பு peranai regulator
 • முன்னீடு proposal
 • விழுக்காடு percent ('சதவீதம்' என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்)

மேற்கோள்கள் (எழுத்தாளர் பெயர்கள் ஆங்கில அகர வரிசையில்):

 • காட்டன் Cotton, Elizabeth Reid (1900): General Sir Arthur Cotton, RE, KCSI, His Life and Work. By His Daughter Lady Hope. With Some Famine Prevention Studies by William Digby. Portraits, Maps and Illustrations (London: Hodder & Stoughton).
 • ரோகன் டிசௌசா D’Souza, Rohan (2006): “Water in British India: The Making of a ‘Colonial Hydrology’”, History Compass, 4(4): 621-28.
 • பிரான்சிச் Francis, W (1906): Madras District Gazetteers: Madura, Volume 1 (Madras: Superintendent, Government Press), http://ia600300.us.archive.org/8/items/madurafrancis01madr/madurafrancis01madr.pdf
 • கில்மார்ட்டின் Gilmartin, David (2003): “Water and Waste: Nature, Productivity and Colonialism in the Indus Basin”, Economic & Political Weekly, 38(48): 5057-65.
 • ஐயர் Iyer, Ramaswamy R (2007): “Towards Good Sense on Mullapperiyar”, Economic & Political Weekly, 42(1): 13-15.
 • – (2011): “Mullaperiyar: A Plea for Sanity”, Economic & Political Weekly, 46(51): 12-13.
 • மெக்கென்சி Mackenzie, Archibald Thomas (1899): History of the Periyar Project Compiled by A T Mackenzie [With Plans] (Madras: Superintendent, Government Press).
 • மாச் Mosse, David (2003): The Rule of Water: Statecraft, Ecology and Collective Action in South India (New Delhi: Oxford University Press).
 • நெல்சன் Nelson, J H (1868): The Madura Country (Madras: Asylum Press).
 • பென்னிக்விக் Pennycuick, J (1886): “Papers Connected with the Periar Irrigation Project in Madras”, Public Works Department Serial No 2, Superintendent of Government Printing, Calcutta.
 • ராகவையங்கார் Raghavaiyangar, Srinivasa S (1898): Memorandum on the Progress of the Madras Presidency during the Last Forty Years of British Administration (Madras: Government Press).
 • சாரங்கபாணி Sarangapani, R (1984): A Critical Study of Paripatal (Madurai: Madurai Kamaraj University).
 • ச்ரீதர் Sridhar, T S, D Thulsiraman, S Selvaraj and S Vasanthi, ed. (2005): Alagankulam: An Ancient Roman Port City of Tamil Nadu (Chennai: Department of Archaeology, Government of Tamil Nadu).
 • ச்ரீனிவாசன் Srinivasan, T M (1992): Irrigation and Water Supply: South India, 200 BC-1600 AD (Madras: South Asia Books).
 • குழு The Society (1895): “The Monthly Record”, The Geographical Journal, 6(6): 564-76.

குறிப்புகள்

i)“… பெருமைக்காகச் செயல்படுத்தப்படும் பொறியியல் பணித்திட்டங்களுக்கு இத்தகையவை சிறந்த எடுத்துக்காட்டுகள். இவை தற்காலத்தில் மதிப்பிழந்துவிட்டன. இப்போது பணித்திட்டங்களை மதிப்பிடுகையில் மிகக்குறைந்த குறுக்கீடு, சூழல் மீது மிகக்குறைந்த தாக்கம் செலுத்துதல் ஆகியவற்றிற்கு முதன்மை தரப்படுகிறது. ஆனால், இந்த இரு பணித்திட்டங்களும் அளவுகடந்த குறுக்கீடுகளுக்கு எடுத்துக்காட்டுகள். அவை ஆறுகளை அக்கறைக் குறைவாக நடத்தின: ஆறுகளைக் குழாய்கள் போல வளைத்தல், திசை திருப்புதல், துண்டாடுதல், இணைத்தல் ஆகியவற்றைச் செயல்படுத்தின. சூழலுக்கு அவை எத்தகைய தீங்கு விளைவித்தன, கானுயிர்களுக்கு எவ்வளவு அவலத்தை உருவாக்கின, அப்பகுதில் வாழ்ந்திருக்கக்கூடிய மக்களுடைய வாழ்க்கை மீது எத்தகைய தாக்கம் செலுத்தின ஆகியவற்றை இப்போது உறுதிப்பட நிறுவமுடியாது. ஏனெனில் அந்தக் காலத்தில் அத்தகைய அக்கறைகள், ஆய்வுகள் போன்றவை அறிந்திருக்கப்படவில்லை. ஆறுகளுக்கிடையில் தண்ணீர்ப் பரிமாற்றத்திற்கு இவை வெற்றிகரமான எடுத்துக்காட்டுகளாகப் பரவலாக முன்வைக்கப்படுகின்றன; ஆறுகளை இணைப்பதற்கு இவை மிக வலுவான சான்றுகளாகக் கூறப்படுகின்றன. ஆனால், எதிர்காலத்தில் இத்தகைய பணித்திட்டங்கள் குறித்து நம்மை எச்சரிப்பதற்கு உகந்த எடுத்துக்காட்டுகளாக இவற்றைக் கொள்வதுதான் மிகச் சரியானதாக இருக்கும். அனுமதிக்காக இப்போது முன்வைக்கப்படும் புதுப் பணித்திட்டங்களாக இவை இருந்தால் இவற்றுக்கு அநேகமாக அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் என்பது இந்தக் கட்டுரையாளருக்குத் தெளிவாகத் தெரிகிறது.” (ஐயர், 2007: 13)

(ii) இந்தப் பணிக்குத் திட்டமிடப்பட்டபோதும் இப்போதும் கீழ்க்கண்ட வினாக்கள் குறித்து கவனமாக ஆராயப்படாததைப்போல ஐயர் இவற்றை எழுப்புகிறார்: “… [இந்த அணைத் திட்டத்துடன்] தொடர்புள்ள தமிழகப் பகுதிகளில் தண்ணீர்ப் பயன்பாடு இதற்கு மேல் மேம்படுத்த முடியாது எனுமளவுக்குச் சரியான தகைதிறனுக்கேற்ப உள்ளதா? இப்போதை விடக் குறைந்த அளவு தண்ணீரைக் கொண்டு இதே அளவு பொருளாதரச் செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த முடியாதா? தண்ணீர் குறைவாகத் தேவைப்படும் செயல்பாடுகளுக்கு மாறமுடியுமா? முல்லைப்பெரியாறு நீர் அளவை அதிகரித்தேயாகவேண்டுமெனில் வேறு வழிகள் உள்ளனவா, அவை ஆராயப்பட்டனவா? (ஐயர் 2011: 13)

(iii) [தம்] பொருளாதார நலன்களுக்கு உகந்தவாறு இயற்கையைக் கட்டுப்படுத்திப் பலனடைவதற்காக அறிவியலைப் பயன்படுத்தும் ஐரோப்பியச் சிந்தனையின் விளைவுகளே இத்தகைய பிரித்தானியக் குறுக்கீடுகள் என்று இந்த ஆய்வுகள் கூறுகின்றன. காட்டாக, “பஞ்சாபில் காலனிய கால நீர்ப் பொறியியல் [திட்டங்கள்] அறிவியலுக்கும் அரசியல் பொருளாதாரத்துக்கும் இடையிலுள்ள பரந்துபட்ட உறவு குறித்துப் பத்தாம் நூற்றாண்டு தொடங்கி ஐரோப்பியரிடையே நிலவிய சிந்தனைகளின் விளைவே ” என்று கில்மார்ட்டின் வாதிட்டார். (2003:5057) அதுபோலவே, வெள்ளத் தடுப்பு, பாசனம் ஆகியவை தொடர்பான குறுக்கீடுகளில் பிரித்தானியர்கள் பெற்ற பட்டாங்குகள் “காலனிய நீரியல்” என்ற முடிவுக்கு ரோகன் டிசௌசா வந்தார்; அத்தோடு நில்லாமல், அந்தக் குறுக்கீடுகள் “தெற்காசியாவில் நீரியல் குறுக்கீடுகளுக்கான தெளிவான கருத்துப்படிவங்களைக் கொண்டிருந்ததாகவும்” அவர் கருதினார். (2006:621)

(iv) அணைத்திட்டப் பணிகள் முடிவுற்ற பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கைகள் சிலவற்றையாவது குறிப்பிடுகின்றன.

(v)1876-77 ஆண்டுகளில் நிலவிய பஞ்சத்தின்போது மதுரை மாவட்டத்தில் துயர்தணிப்புப் பணிகளுக்கென ரூ. 4,32,170-உம் இடருதவியாக ரூ. 7,92,047-உம் ஒதுக்கப்பட்டது (பென்னிக்விக் 1886: 2, 5-ஆம் புள்ளி). (vi) பத்தாம் நூற்றாண்டுக்கும் முன்னரே அணை கட்டப்பட்டிருக்கவேண்டும் என்று அதற்கு அருகில் உள்ள சிற்றூரில் கிடைத்த கல்வெட்டுச் சான்றின் அடிப்படையில் ச்ரீனிவாசன் அனுமானிக்கிறார்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org