தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தலையங்கம்


வீரப்பரின் வீர சாகசங்கள்

இரண்டு மாதங்களுக்கு முன், 5 மாநில சட்டமன்றத் தேர்தலிலும் படு தோல்வி அடைந்த பின், மத்திய அரசில் சூழல் மற்றும் வனத்துறையின் அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜன் பதவி நீக்கம் செய்யப்பட்டு, அவருடைய பொறுப்பு பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத் துறை அமைச்சரான வீர்ப்ப மொய்லிக்குக் கூடுதல் பொறுப்பாகக் கொடுக்கப் பட்டது. சூழல் அழிவை மிகவும் ஏற்படுத்தும் பெட்ரோலியத் துறையின் அமைச்சர் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பொறுப்பில் அமர்வது பூனையைப் பாலுக்குக் காவலாய்ப் போடுவது போலத்தான் என்று பொருளாதார மேதையான நம் பிரதமர் அறியாதது அல்ல. எனினும், மீண்டும் ஆட்சிக்கு வருவோமோ இல்லையோ, இருக்கும் காலத்தில் நம் முதலாளிகளுக்கு, முடிந்தவரை, நம்மாலானதை விசுவாசமாகச் செய்து விடுவோம் என்ற உந்துதலில்தான் இவ்வேற்பாடு செய்யப் பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.

வீரப்ப மொய்லியின் அரசியல் வரலாற்றைப் பார்த்தால் அவர் ஆதரவு அளித்த திட்டங்கள் அனைத்தும் சூழலையும், இயற்கை வளங்களையும் காவு கொடுப்பவையாகவே தெரிகிறது. சூழல் அமைச்சராய்ப் பதவி ஏற்ற 20 நாட்களுக்குள்ளாகவே, மறுபரிசீலனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 1.8 லட்சம் கோடிக்கு மேல் மதிப்புள்ள 73 திட்டப்பணிகளுக்குப் பெரும் அவசரத்துடன் ஒப்புதல் அளித்துள்ளார். இவற்றுள் பெரும்பாலானவை காடுகளையும், ஆதிவாசிகளையும், சூழலையும் மீட்க முடியாத அளவிற்கு முற்றிலும் அழிப்பவை. தென்கொரிய நிறுவனமான‌ போஸ்கோவின் எஃகு ஆலை (4700 ஏக்கர் வனப்பரப்பை அழிப்பது), சிக்கிமில் காங்செண்ஜோங்கா சரணாலயத்தையும், தீஸ்தா நதியையும், 14 கிராம‌ங்களையும் அழிக்கும் தீஸ்தா அணைத் திட்டம், கேரளாவின் கடற்கரையில் பல்லாயிரம் மீன‌வர்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடும் விழிஞ்சம் துறைமுகத் திட்டம் , யமுனையாற்றை நாசமாக்கும் லக்வார் நீர்மின் நிலையத் திட்டம் போன்று பற்பல இதில் அடங்கும். பல்லாயிரம் கோடி வருடங்களாக உருவான இயற்கை வளங்களை, அந்நிய முதலீட்டார் பொருள் ஈட்ட வேண்டும் என்பதற்காக் காவு கொடுக்கும் அதிகாரத்தை யார் இவர்களுக்கு அளித்தது? இது வரை சூழல் அமைச்சகத்தின் அதிகாரிகள் இத்திட்டங்களுக்கு அனுமதி அளிக்காதது ஏன்? வீரப்பர் வந்ததும் ஏன் 20 நாட்களில் 73 திட்டங்களுக்கு இடறியடித்து அனுமதி வழங்குகிறார்கள்? தேசிய பசுமை ஆணையத்தின் (National Green Tribunal) இத்தனை வருட‌ ஆட்சேபங்களும், பரிந்துரைகளும் எப்படி ஒரே நாளில் காணாமல் போயின?

இது ஒரு புறம் இருக்க, மரபீனிப் பயிர்களின் திறந்த வெளிப் பரிசோதனைகளை, உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு வந்ததும் பரிசீலிப்போம் என்று ஜெயந்தி நடராஜன் கூறியிருந்தார். வீரப்பர், அம்முடிவைத் தலைகீழாக மாற்றி, சூழல் அமைச்சகம் களப் பரிசோதனைகளை ஆதரிக்கும் என்று அதிரடி அறிவிப்புச் செய்தார். மன்சான்டோவின் பங்குகள் ஒரே நாளில் 17% உயர்ந்தன. பேயர் 8% உயர்ந்தது. பங்குச் சந்தையில் சூழல் அமைச்சருக்கு என்ன வேலை? இதே போல் இயற்கை எரிவாயுவின் விலையும் தற்போதுள்ள $4.2/mmBtu (ஏறத்தாழ 10'x10'x10' அளவு கன சதுரம்) என்ற விலையில் இருந்து இரட்டிப்பாகி $8.4/mmBtu என்ற விலையை ஏப்ரல் 2014 முதல் எட்டப் போகிறது. இதனால் மிகவும் லாபம் அடையப் போவது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமே. ( நம் அண்டை நாடான வங்க தேசத்தில் எரிவாயுவின் விலை $2/ mmBtu).

காடுகளில் உள்ள சந்தன மரங்களைக் கடத்திய வீரப்பனைத் தேசத் துரோகி என்று சுட்டுக் கொன்றோம். ஒட்டு மொத்தக் காடுகளையும் கும்பணிகளுக்கு விற்கும் நம் அமைச்சர் வீரப்ப மொய்லியை என்ன செய்வது ? பாரத ரத்னா கொடுத்து விடலாமா?

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org