தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

குமரப்பாவிடம் கேட்போம்

கொள்கையில்லா நிலைமைபுரிதலும் புரட்சியும் - சாட்சி

எந்த ஒரு அரசுக்கும் தெளிவான ஒரு கொள்கை என்பது நங்கூரம் போல் இன்றியமையாதது; இக்கொள்கை ஒரு வாழ்க்கைத் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்திருந்தால் இன்னும் நலம். நம் தற்போதைய ஆட்சியில் இந்த அடிப்படைத் தேவையான கொள்கை முற்றிலும் இல்லவே இல்லை. இதன் விளைவு ஒரு வகையான “திரியும் கொள்கை” ஆகி ஒரு தவறிலிருந்து இன்னொரு தவறுக்குத் திரிந்து கொண்டிருக்கிறோம்.பெரும்பான்மையான நாடுகளில் ஒரு நிலைமையை படு மோசமாகக் கையாண்டால் அது ஆட்சி மாற்றத்தில் முடியும். ஆனால் மக்களிடையே, குறிப்பாக ஒரு பலம்வாய்ந்த பகுதியினரிடம், நற்பெயரைப் பெற்ற பிரதம மந்திரியை நாம் பெற்றிருப்பதனால், அரசாட்சிக்கு எந்த பாதிப்பும் இன்றி, ஒரு பெரும்தவறிலிருந்து இன்னொன்றிற்குத் தாவிக் கொண்டிருக்கிறோம். எந்த ஒரு நாட்டிற்கும் இது ஒரு தீவிரமான இடைஞ்சலே. இது போன்ற செல்வாக்குப் பெற்றவர்கள், நிர்வாகிகளிடம் மதிப்பைப் பெறுவதற்காக, எதிர்க்கட்சியில் இருக்கவேண்டும். அதை விட்டு சீர்கெட்ட நிர்வாகத்தின் ஊழல்களை வெள்ளையடித்து மறைக்கும் கருவிகளாகக் கூடாது.

இப்போது கூச் பெஹார் மற்றும் பீகாரில் பஞ்ச நிலைமையை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். பீகாரில் பட்டினி நடைபயணங்களும், கூச் பெஹாரில் போலீஸ் துப்பாக்கிச் சூடும் நடப்பதாகச் செய்திகள் வருகின்றன. நிலைமை தீவிரமானது; இது திடீரென உருவானதல்ல. பல வருடங்களாகத் தொடர்ந்த எச்சரிக்கை மணிகள் அடித்துக் கொண்டிருக்கின்றன. நம் திறமையற்ற நிர்வாகமோ உண்மைகளை சந்திக்காமல், மண்ணில் தலைபுதைக்கும் நெருப்புக் கோழியைப் போல, கண்களை மூடிக்கொண்டும் , அவற்றைப் பிடிவாதமாய் மறுத்தும் வருகிறது; இது போன்ற மூளை கலங்கிய மனிதர்களைப் பணியில் வைத்துக் கொண்டிருக்க முடியாது. பொறுப்பில் உள்ள அதிகாரிகளுக்கு நிலவரத்தின் தீவிரம் புரியவில்லை, அல்லது அமைச்சர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இது அரசாங்கத்தின் சீர்கெட்ட தன்மையைக் காட்டுகிறது.இது போன்ற தீவிர நிர்வாகச் சீர்கேடு பொதுவாய் சம்பந்தப் பட்டவர்களை அகற்றுவதில் முடியும். நம் அதிகாரிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க நம் அரசால் முடியவில்லை என்றால், அவர்களால் இயலாத விடயங்களில் அவர்கள் தலையிடக் கூடாது; அதிகாரிகளின் அவச்செயல்களைத் திரையிட்டு மறைப்பதும், நிலைமைக்கு வெண்சாயம் பூசுவதும் அறவே கூடாது.

உணவு (பற்றாக்குறை) நிலைமை என்பது தவறான விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் வந்தது. பரவலான மக்கள் எதிர்ப்பையும் மீறி, உணவுப் பொருட்களைத் தயாரிக்காமல், தொழிற்சாலைகளுக்கு மூலப் பொருட்கள் தயாரிப்பதால் உருவான பஞ்சம் இது. அதன் உறுப்பினர்கள் எவ்வளவுதான் மக்கள் செல்வாக்குப் பெற்றவர்களாய் இருந்தாலும், எந்த அரசும், எல்லா நேரமும் மக்களின் கருத்தை அலட்சியப்படுத்திக் கொண்டிருக்க முடியாது. இந்த அரசின் செயல்பாடுகள் ஒரு பெரும் புரட்சிக்கு இட்டுச் செல்கின்றன என்று நாம் பலமுறை கூறிவிட்டோம். நாம் எதிர்பார்த்ததை விட அந்நாள் விரைவிலேயே வந்து விடும்போல் இருக்கிறது. அரசு, இப்போதாவது இந்த அவசர நிலைமையின் உண்மைகளை உணர்ந்து பிரச்சினையைத் தீர்க்க முயலுமா?

கிராம உத்யோக் பத்திரிக்கை , மே, 1951

(அறுபது வருடம் முன் குமரப்பா அன்றைய நேரு அரசுக்கு எதிராய் எழுதிய விமர்சனம் அதன் பின் வந்த எல்லா அரசுகளுக்கும் அதைவிடப் பொருத்தமாக இருப்பது நம் நாட்டின் அரசியல் சீர்கேட்டைக் காட்டுகிறத்ன்றோ?)

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org