தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வானத்துப் பறவைகளைப் பாருங்கள்

குட்டு கரிச்சான் - சகி

மழைக்காலம் மிக இனிதானது. திக்குகள் எட்டும் சிதறிப் பாயும் மழை இவ்வருடம் ஏமாற்றி விட்டது. எனினும் மாசி மாதம் வந்ததும் காலைப் பனியின் பொழிவில், புல்லின் இதழ்களில் பூக்கும் பனித்துளியையும், விடிந்தும் விடியாத காலைப் பொழுதையும் மனம் ரசிக்க ஆரம்பித்தது. அதிகாலை, ஒரு நான்கு மணிபோல மிக இனிமையான இசை ஒன்று நம் காதில் விழுகிறது. “வைகறையாகுமுன் பாடி விழிப்புற்று” என்று பாரதி பாடிய வரிகள் நினைவுக்கு வருகின்றன. அந்த இனிய இசைக்குரிய நம் கலைநாயகன்தான் இன்றைய கதைநாயகன். குட்டு கரிச்சான், வண்ணாத்திக் குருவி,வீட்டுக் காகம், கறுப்பு வெள்ளைக் குருவி என்றெல்லாம் அடைமொழிகளை உடைய இச் சிறுபறவை, வசந்தம் பிறந்ததும் பாடத் துவங்கி விடும். நம் வீட்டுக் கொல்லையில் சிறகாற்றும் இப்பறவை வங்க தேசத்தின் தேசியப் பறவை என்னும் சிறப்பைப் பெற்றது. டோயல் என்று அங்கு அழைக்கப்படும் நம் கதாநாயகன், அங்கு ரூபாய் நோட்டுக்களிலெல்லாம் இடம் பெற்றுள்ளார்; தாகா நகரில் டோயல் சதுக்கம் என்று ஒரு இடமே இவருக்கு உண்டு!

பெயருடைய இப்பறவை வழக்கமான, வாயில் நுழையாத Copsychus saularis என்னும் விஞ்ஞானப் பெயர் பெற்றது. வசந்த காலம் வந்ததை இதன் பாட்டு மூலம் அறியலாம். அவை பல குரல்களில் பாடக்கூடியவை. கெஞ்சுதல், கொஞ்சுதல் போன்ற ஒவ்வொன்றிற்கும் ஒரு குரல் கொடுக்கும். ஆபத்து வந்துவிட்டால் காக்கையைப் போல ஆனால் சற்று சிறிய குரலில் கத்தும். இதன் உறவினரான‌ அமெரிக்க ராபின் பறவை பூச்சிக்கொல்லிகளால் அழிந்துவிட்டால் பாடாமல் வசந்தம் மௌனமாகி விடும் என்று ராஷெல் கார்சன் எழுதிய “மௌன வசந்தம்” என்ற நூல் உலகில் சூழல் இயல் காப்பு இயக்கங்களுக்கு வித்திட்ட நூலாகக் கருதப் படுகிறது.

உடல் அமைப்பு:

சிட்டுக் குருவியை விடச் சற்றுப் பெரியதாகவும், மைனாவிடச் சிறியதாகவும் இருக்கும். உடல் மேற்பகுதியில் கருப்பு நிறத்துடன் வெள்ளைக் கோடுகள் அமைந்திருக்கும். மற்ற பகுதிகள் வெள்ளை நிறத்துடன் இருக்கும். பெண்பறவையின் தலை, கழுத்துப் பகுதி சற்று மங்கலான பழுப்பு நிறமாய் இருக்கும். ஆண் பறவை மையில் எண்ணை கலந்தது போல் மிளிரும் கருப்பு வண்ணத்தில் அமைந்திருக்கும். பெரும்பாலும் ஆண்தான் இசைபாடும்; பாடும் பொழுது வால் தூக்கி உரக்கப் பாடுவது அதன் அழகு.

வசிக்கும் இடம்:

வங்க தேசம், மியன்மர், இலங்கை, இந்தியா, கிழக்கு பாகிஸ்தான், தென் சீனா, மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ்

உணவு:

பெரும்பாலும் பூச்சிகள், புழுக்கள் மற்ற ஊர்வன. கொசுக்களிண் பரம எதிரி! பறக்கும் கொசுக்களை லாகவமாய்ப் பிடித்து உண்ணும்.

கூடு:

மனிதர்களுடன் இணைந்து வாழுமிப் பறவை மனிதர்கள் வாழும் வீட்டிற்குள், அட்டத்தில், அட்டைப் பெட்டிகளில், மின்சாரப் பெட்டிக்குள், எல்லாம் கூடு கட்டும். தென்னை மரத்தில் அதன் நார்கொண்டு கூடு கட்டும்.மனிதர்கள் இதனைத் தொந்தரவு செய்வதில்லை. மைனாதான் இதற்கு முதல் எதிரி. வசந்த மற்றும் கோடை காலத்தில் கூடு கட்டி இனப் பெருக்கம் செய்யும் (மாசி-வைகாசி). பெண்களே அடைகாக்கும். ஆண்கள் கூட்டைக்கட்டி காவல் காக்கும். மூன்று முதல், நான்கு முட்டைகள் மங்கலான நீல நிறத்தில் இடும்.கூட்டைக்கட்டி விட்டு ஆண்பறவை பெண்ணை அழைத்து சரிபார்க்கச் சொல்லும். பெண் அவ்வளவு எளிதில் திருப்தி அடையாது. பாவம் கதாநாயகன் - நம்மைப் போலத்தான்!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org