தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

அருகி வரும் வரகு சாகுபடி

கடந்த 2011ம் வருடம் கல்வராயன் மலையில், கடற்பரப்பில் இருந்து 2500 அடி உயரத்தில், நானும் எனது நண்பர்களும் ஒரு விவசாய நிலத்தை வாங்கி அதில் விவசாயம் செய்து வருகிறோம். நான் அது வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சமவெளியில்தான் பயிர் செய்து அனுபவம். எனவே, மலைப்பகுதியில் செய்யும் சாகுபடி மிகவும் புதிய அனுபவமாக இருந்து வருகிறது. சாலை வசதிகள் ஏற்பட்ட பிறகு பெரும்பாலானோர் இம்மலையிலும் ஒரு வருடத்து பணப்பயிரான குச்சி கிழங்கை (மரவள்ளி) மானவாரி நிலங்களில் பயிரிட தொடங்கி பன்மயத்தை அழித்து வருகின்றனர். நாங்கள் இங்கு விளைந்து வந்த பாரம்பரிய பயிர்களான சாமை, வரகு, தினை முதலியவற்றை பயிர் செய்யலாம் என்று முடிவு செய்து இந்த வருடம் அவற்றோடு குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு போன்ற சிறு தானியங்களையும் மானவாரியில் பயிர் செய்தோம். இவற்றுள் வரகு சாகுபடி மிகவும் அரிதாகி வருகிறது.

உங்கள் நிலத்தில் என்ன பயிர் செய்துள்ளீர்கள் என்று என் நண்பர் ஒருவர் கேட்ட பொழுது நான் ‘வரகு’ என்று பதில் சொன்னேன். அவரோ ‘அப்படியென்றால்?’ என்றார். அவர் சென்னையை சேர்ந்தவராதலால் ‘ஆங்கிலத்தில் கோடோ மில்லெட் என்று அழைப்பார்கள்’ என்றேன். இதற்கு பதிலாக, அவர் புன்னகைத்தார். ‘என்ன?’ என்றேன். எனக்கு அதை ஆங்கிலத்திலும் தெரியவில்லை என்றார். என்னுடைய கல்லூரி நண்பர் ஒருவர் வீட்டில் இதைவிட சுவையான சம்பவம். நான் வரகு பயிர் செய்கிறேன் என்றதும் அவர் மனைவி ‘அப்படியென்றால்?’ என்றார். என் நண்பர் என்னை முந்திக்கொண்டு, ‘இதோ பார், கிராமங்களில் அடுப்புகளில் வைத்து எரிக்க விறகு வேண்டும் அல்லவா? அதனால் அதை பயிர் செய்கிறார்கள்’ என்று தனது அறியாமையை வெளிப்படுத்தினார். இப்படிப்பட்ட வரகை பயிர் செய்தது எனக்கு மட்டும் இல்லாமல் எங்கள் பண்ணையில் வேலை செய்த ஓரிருவரைத்தவிற மற்ற வேலையாட்களுக்கும் புது அனுபவமே!

வரகு மற்ற மானவாரி பயிர்களை விட மிகவும் வித்தியாசமான சாகுபடி நுட்பங்களை கொண்டுள்ளது. சென்னையில் சிறு தானியங்கள் கிடைக்கும் வெகு சில கடைகளில் வரகை வாங்கி எங்கள் வீட்டில் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம். அந்த அரை கிலோ வரகு பொட்டலத்தின் பின்னால் உள்ள கதையை தெரிந்து கொள்வது ஒரு ஆச்சரியமான பாடமாக இருந்தது.

வரகில் எத்தனை இரகங்கள் உள்ளன என்பது எங்களுக்கு தெரியவில்லை. இப்போதைக்கு இரண்டு இரகங்கள் தெரியும். ஒன்று உடுப்பு காலி மற்றொன்று கருவரகு. எங்கள் பகுதியில் பெரும்பாலும் கருவரகே சாகுபடியாகி வந்தது, அதனால் அந்த விதை தான் எங்களுக்கு கிடைத்தது. வரகின் வயது சுமார் 150 நாட்கள் என்று புத்தகங்கள் தெரிவிக்கும் நிலையிலும் இங்கு சாகுபடி செய்தவர்கள் 7 மாதத்து பயிர் என்றனர். மலைப்பகுதியில் பொதுவாகவே நெல்லுக்கு கூட வயது சிறிது கூடும். அதேபோல் வரகிலும் நாங்கள் இம்முறை பார்த்தபடி அதன் வயது சுமார் 200 நாட்களாகும்.

ஆனி மாதம் நடுவில் கோடை உழவு, புழுதிக்காலாக மாடுகளை வைத்து ஏர் ஒட்டினோம். எங்கள் பகுதியில் மரக்கலப்பையே பயன்படுத்தப்படுகிறது. தேர்ந்தெடுத்த வயல்கள் பல வருடங்கள் சாகுபடி செய்யாமல் இருந்ததால் புழுதி நன்றாக வராமல் ஆங்காங்கே கட்டிகளாகவே இருந்தன. இருப்பினும் வரகிற்கு பரவாயில்லை என்று விதைத்து விட்டு குறுக்கு சால் ஓட்டினோம். வரகு விதைக்க ஈரம் அவசியம் இல்லை என்பதாலும், விதை ஒரு மாதம் வரை மண்ணில் மக்காமல் இருக்கும், எறும்புகளும் இழுத்தச் செல்லாது என்பதாலும் நல்ல வர மண்ணில் விதைத்தோம். விதைத்த ஏழாம் நாள் முதல், ஆடி மாதம் முதல் வரை விட்டு விட்டு மழை பெய்தது. அதனால், மேலும் இரண்டு வாரங்களில், அதாவது ஆடி நடுப்பகுதியில் வரகு, வயலில் சீராக முளைத்திருந்தது. முளைப்பை பார்த்த போது எங்கள் விதை அளவு சற்று அதிகமாக இருந்ததை உணர்ந்தோம். நாங்கள் சுமார் ஒன்றேகால் ஏக்கர் பரப்பிற்கு 50 கிலோ விதை பயன்படுத்தினோம் (ஏக்கருக்கு 40 கிலோ). ஆனால், ஏக்கருக்கு 25 முதல் 30 கிலோ விதை சரியாக இருந்திருக்கும்.

பிறகு, பயிர் சுமார் முக்கால் அடி உயரம் இருக்கும் போது வயலில் மாடுகளை கட்டி மேய்ப்பது வழக்கம் என்று அனுபவமுள்ள பெரியவர்கள் கூறினர். நான் இதை கேலியோ என்று ஐயப்பட்டு அதன் பின் ஆச்சரியத்தில் இருந்து வெளி வருவதற்குள் பயிர் ஒரு அடிக்கு மேல் வளர்ந்து விட்டது. மாட்டை கட்டி மேய்த்தால்தான் வரகு நன்றாக கிளைத்து வரும், மகசூல் கூடும் என்பது அதன் பின்னணி. ஆனால், நாங்கள் மாட்டை கட்டி மேய்க்க முற்படும்போது சற்றே பயிர் முற்றி விட்டபடியால், அடுத்த ஆச்சரிம், மாடுகள் மேய மறுத்தன. பயிர் முற்றியதால் ஏற்பட்ட சுணை அதற்கு காரணம் என்று அறிந்தோம். அதனால் ஒரு முறை பயிர் களை எடுத்தோம். அதன் பிறகு பயிர் ஓரளவு வாளிப்பாக வர ஆரம்பித்தது.

கதிர் பிடிக்கும் பருவத்தில் மழை பெய்தால் நல்லது என்று அனுபவம் உள்ளவர்கள் தெரிவித்ததால் மழையை ஆவலுடன் எதிர்பார்த்தோம். ஆனால் இந்த வருடம் சொல்லும்படியான அளவு மழை இல்லை. இருப்பினும், 150 நாள் வயது ஆனதும் எல்லா பயிரும் கதிர் பிடித்து இரண்டரை அடி உயரம் இருந்தது. பயிர் போக போக நன்றாக காய ஆரம்பித்தது. நெல் வயல்களையே பார்த்து பழக்கப்பட்ட எனக்கு தூரத்தில் இருந்து பார்த்தால் வயலே காய்ந்தது போலவும் உடனே அறுவடை செய்ய வேண்டும் என்றும் தோன்றியது, ஆனால், அருகில் நெருங்கி பார்த்தால் பயிர் தான் காய்ந்திருந்ததே தவிர கதிர் பச்சையாகவே இருந்தது. எனவே, இன்னும் 40 முதல் 50 நாட்கள் வரை கதிர் முற்றுவதற்கு காத்திருந்தோம்.

தை மாதம் 6ம் தேதி அறுவடையை ஆரம்பித்தோம். பயிர் முழுக்க காய்ந்து இருந்தபடியால் அறுத்த அரிகளின் எடை மிகவும் குறைவு. எனவே நெல் போல அரியை கட்டி எடுத்து வருவது நீண்ட நேரம் பிடிக்கும். பெரிய மூங்கில் கூடைகளில் கொண்டு வருவது வழக்கம். ஆனால், நாங்கள் பழைய சிமெண்ட் சாக்குகளை கிழித்து சணலால் தைத்து சிறிய தார்பாய் போல செய்து அவற்றினுள் கதிரை வைத்து அடுக்கி, கட்டி எடுத்து வந்தோம்.

சாலை வசதி இருக்கும் இடங்களில் சாலையில் உதறி ஒப்பிடி செய்வது வழக்கம். இதனால் செலவு குறையும் அனால் கல், மண் அதிகம் சேரும். எங்கள் பண்ணை அருகில் சாலை போக்குவரத்து அதிகம் இல்லை. எனவே சிமெண்ட் களத்தில்தான் மாடுகளை வைத்து பிணை ஓட்டி ஒப்பிடி செய்தோம்.

வரகு பயிர் நன்றாக காய்ந்தபிறகு அறுவடை செய்வதால் வைக்கோல் மொட மொடவென்று தூளாகும். பிணை ஓட்டும் போது கரும் பொடியாக நிறைய தூசி தும்பு பறக்கும் என்பதால் இரவில் பனி ஈரத்தில் தான் பிணை ஓட்டினோம். இதனால் சற்று செலவு அதிகம் ஆகும். இரவில் பிணை ஓட்டி, உதறி கூட்டி வைத்த பிறகு காலையில் காற்றில் விட்டு புல் தும்பு இல்லாமல் தூற்றி, புடைத்து சுத்தம் செய்து மூட்டை கட்டி வைத்தோம். இரவில் வேலை செய்தும் ஆட்கள், மாடுகள், களம் எல்லாமே கரியில் வேலை செய்தது போல் கருப்பாக பொடி தூவியது போல் ஆகி ஒருவர் நிலையை மற்றொருவர் பார்த்து கிண்டல் செய்து கொண்டு இருந்தது அலுப்பு தட்டாமல் இருக்க உதவியது. இனி வரகு காய வைத்து மரத் திருகில் அரைத்து அரிசியாக்க தயார்.

இந்த வருடம் சரசரியாக ஒரு ஏக்கருக்கு 600 கிலோ வரகு சாகுபடி ஆனது. விதை அளவு அதிகமாக ஆனது, மாடு கட்டி மேய்க்காதது, மழை சரியாக ஒத்துழைக்காதது போன்ற இடர்களை தாண்டி இது ஒரு சிறந்த அறுவடை அல்ல. எல்லாம் ஒத்துழைத்தால் ஏக்காருக்கு 1 டன் வரை மகசூல் பெறலாம் என்பது அனுபவம் உள்ளவர்கள் தெரிவித்தது.

மாடுகள் அதிகம் இல்லாத தற்போதைய கிராமங்களில் மாடுகளை வைத்தே ஏர் ஓட்டி, பிணை ஓட்டி ஆட்களை வைத்து ஒப்பிடி செய்வது சாகுபடி செலவை அதிகப்படுத்துகிறது. வீட்டுத்தேவைக்கு போக எஞ்சிய வரகை வியாபாரிகளுக்கு விற்பது இலாபமாகவே இருக்காது என்பது மக்கள் வரகை ஒதுக்க முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே, விவசாயிகள் ஒவ்வொரு கிராமங்களிலுல் குழுவாக இணைந்து, வரகை அரிசியாக்கி மேலும் பல மதிப்பு கூட்டிய பொருளாக விற்பது ஓரளவு இலாபம் ஈட்ட வழி வகுக்கும். ஆனாலும், டீசல், டிராக்டர், இலவச மின்சாரம், இரசாயன உரங்கள், பூச்சி கொல்லிகள் போன்ற மானியங்கள் உள்ள எந்த வசதியையும் உபயோகிக்காமல் கிடைத்த இந்த மகசூல் மணிபர்ஸுக்கு இதமாக இல்லாவிட்டாலும் மனசுக்கு இதமாகவே உள்ளது.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org