தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் - ராம்கி

ஆண்டுதோறும் உலகில் விளைவிக்கப்படும் உணவுப் பொருள்களில் முப்பது முதல் ஐம்பது விழுக்காடு (அதாவது, ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு முதல் பாதி வரை) யாருக்கும் பயன்படாமல் வீணாகிறது! சந்தைப்படுத்தும் பெருநிறுவனங்கள் அப்பொருள்களின் தரம் குறைவாக இருப்பதாகக் கூறி ஏற்றுக்கொள்ள மறுத்தல், நுகர்வோர் தம் இல்லங்களில் உணவை வீணாக்குதல் ஆகிய இரண்டும் இதற்கு முதன்மைக் காரணிகள். ஒன்றிய அரசியத்தின் இயந்திரவியல் பொறியாளர் கழகம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கை இந்தத் தகவல்களைத் தெரிவிக்கிறது.

இவ்வாறு வீணாகும் உணவுப் பொருள்களை விளைவிப்பதற்கு ஆண்டுதோறும் 5,50,00,000 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாக அந்தக் குழு கணித்துள்ளது

இப்போதைய நிலவரப்படி, 2050-ஆம் ஆண்டில் உலக உணவு உற்பத்திக்கு மட்டும் நூறு முதல் நூற்று முப்பது கோடி கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படும்! (நூறு கோடி கோடி = 10 000 000 000 000 000) இது இப்போது உலக மக்கள் அனைவரும் பயன்படுத்தும் நன்னீரின் அளவைவிட இரண்டரை முதல் மூன்றரை மடங்கு அதிகம்.

தண்ணீர்த் தட்டுப்பாட்டுக்குப் பல கோணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று மேற்கண்டது. இதைப் போன்ற மற்றொரு பகற்கொள்ளை பின்வருவது. அமெரிக்கா, ஐரோப்பா, சீனா, சப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பெருநிறுவனங்கள் ஆப்ரிக்கா, தென் அமெரிக்காக் கண்டங்களில் பல கோடி ஏக்கர் நிலங்களை மிக மிகக் குறைவான குத்தகைக்கு வளைத்துப்போட்டுவருகின்றன. அந்நிலங்களில் பெய்யும் மழை நீரின் அளவு மட்டும் ஆண்டொன்றுக்குச் சுமார் 3,08,00,000 கோடி லிட்டர்! அத்துடன் ஆறு, குளங்களில் இருந்து இந்த நிலங்களில் பயிரிடுவதற்குத் தேவையான நீர் தரப்பட்டால் அந்த நீரின் அளவு ஆண்டொன்றுக்கு 1,46,00,000 கோடி லிட்டர் வரை இருக்கக்கூடும் என்று அமெரிக்க தேசிய அறிவியல் மன்றம் கணித்துள்ளது. அப்படி விளைவிக்கப்படும் உணவுப் பொருள்கள் அந்நாடுகளின் ஏழைகளுக்கு எட்டாக்கனி தான். ஏனெனில், வளர்ந்த நாட்டு நுகர்வோருக்கு ஏற்றுமதி செய்வதற்காக மட்டுமே அந்நிலங்களில் பெரு நிறுவனங்கள் வேளாண்மை செய்யும்.

இத்தகைய கொடுஞ்செயல்களின் விளைவாக மிகச் சிறு எண்ணிக்கையிலான பெரு நிறுவனங்களின் சுரண்டலுக்காக நூறு கோடிக்கும் மேற்பட்ட ஏழைகள் பசிப்பிணியால் வாடுகின்றனர். மேலும், ஆலைமயமான வேளாண் முறைகளில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருள்கள் நிலம், நீர், காற்று அனைத்தையும் மாசுபடுத்துகின்றன. அது மட்டுமன்றி, ஒவ்வொரு பகுதியிலும் அவ்வப்பகுதியின் தேவைக்கான உணவை விளைவித்தால் அவ்வுணவுப் பண்டங்களை வெகுதொலைவு கொண்டு செல்லவேண்டியதில்லை. இதற்கு மாறாக, ஏற்றுமதி சார்ந்த வேளாண்மையின் விளைவாக உணவுப் பொருள்களைப் பக்குவப்படுத்தி நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவுக்குக் கொண்டுசெல்ல வேண்டியுள்ளது. இதுவும் சூழலை மிகவும் மாசுபடுத்தும் செயலே.

தகவல் மூலம்: http://www.grain.org/e/4637 (2013 சனவரி 15)

  • இயந்திரவியல் பொறியாளர் கழகம்: the institution of mechanical engineers
  • ஒன்றிய அரசியம்: the united kingdom
  • தேசிய அறிவியல் மன்றம்: the national academy of sciences (USA)
  • 5,50,00,000 கோடி லிட்டர் = 550 பில்லியன் கன மீட்டர்;
  • 1 பில்லியன் (billion) = 1 பெரும்பேராயிரம் = 1,000,000,000.
  • 1 கன மீட்டர் = 1,000 லிட்டர்
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org