தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

அக்கரை பார்வை

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அனந்து

சந்தை என்பது முதலில் நம்மை சுற்றி உள்ள அண்மை நுகர்வோரே என்றும் குழுக்களாக இயங்குவதால் உண்டாகும் நன்மையையும் பார்த்தோம். ஆனால் அதற்கெல்லாம் முன்னர் தற்சார்பு என்பது உழவன் தனக்கு வேண்டியவற்றை தானே உற்பத்தி செய்வதில்தான் உள்ளது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். பெல்காம் போன்ற பெரிய நகரங்களில் தான் இது போன்ற கூட்டுமுயற்சி வெல்லுமா என்று கேட்டனர் சிலர். இதை போல் பெரிய அளவில் முதலீட்டுடன் மதிப்பு கூட்டுதல் செய்தால் மட்டுமே சரியாக நடக்குமா என்றும் கேட்டனர். பெல்காம் பெரிய நகரமும் இல்லை, இந்த குழு துவக்கத்தில் பெரும் பணம் போடவும் இல்லை. பின்னர் வெல்ல ஆலைக்குத்தான் எல்லோரும் முதலீடு செய்து அமைத்தனர். இந்த சந்தையின் பெரும்பான்மையான நுகர்வோர் நடுத்தர மற்றும் அதற்கும் கீழ் உள்ள மக்கள் என்பதே சிறப்பு.

அடுத்து நாம் சிறிய ஊரில் சிறு விவசாயிகள் சேர்ந்து சிறப்பாக இயக்கிய வேறு ஒரு இயற்கை சந்தையை பார்ப்போம்:

விஷ் முக்த் துகான் என்பது வார்தாவில் உள்ள ஒரு 'விஷமற்ற கடை'. நஞ்சில்லா உணவை எல்லோருக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக இந்த சிறிய ஊரில் தொடங்கபெற்றது. காந்தி அடிகளுக்கு நெருக்கமான உறவு இருப்பதாலும், இன்னமும் வார்தா மற்றும் சேவாக்ராம் ஆசிரமங்களுக்கு பல காந்தியவாதிகளும் பொதுமக்களும் வந்து கொண்டும் இயங்கிகொண்டும் இருப்பதாலும், அந்த ஊரே கொஞ்சம் வித்தியாசமாகத்தான் உள்ளது. இந்தியாவிலேயே “உடன்கறந்த‌ பால் பண்ணை” (Fresh milk dairy) இங்கு மட்டுமே உள்ளது. நாம் பார்க்கப்போகும் இந்த சிறு இயற்கை அங்காடியும் மகன் சன்க்கராலயா அருகில், குமரப்பா சாலையில் (ஆம், நமது குமரப்பாவே தான்!) உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் குமரப்பாவினால் பல்வேறு இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்டும் , அவரே வடிவமைத்ததும் என பல கருவிகள் மற்றும் கைவினைப்பொருட்களும் இருந்தன என்பது பெருமகிழ்ச்சிக்குரிய விஷயம். (அவை இன்னும் அருங்காட்சியகத்திலே மட்டுமே இருப்பது நமது நாட்டின் கேடு - இது வேறு ஒரு சமயத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்.

இந்த வார்தா நகரில் 2003-இல் ஒரு சில சிறு விவசாயிகள் சேர்ந்து அமைத்த சந்தை இது. இதன் முக்கியமான பங்குதாரர் தலைவர் த்யானேஷ்வர் தாகே ஆவார். இவர் 1995-லேயே இயற்கை வேளாண்மைக்கு மாறியவர், முதலில் கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது ஆனால் பின்னர் நிலமும் விளைச்சலும் நன்றாக இருந்ததைப் பார்த்து பல விவசாயிகள் கிராமத்தில் மாறினர். இவர் கிரொலி தாகே என்னும் கிராமத்தில் நல்ல பதவி வகித்து வந்ததாலும், இவருக்கு நல்ல விலை/ விளைச்சல் வந்ததாலும் பலரும் இயற்கை வேளாண்மைக்கு இழுக்கப்பட்டனர் என்றார். காந்தி அடிகள் மற்றும் காந்திய சிந்தனைகள் மேல் மிகுந்த மதிப்பு இருந்ததால் இவர் ஜீவகாருணியம் மற்றும் தற்சார்பு ஆகிய இரண்டு காரணங்களுக்காகவே இயற்கை வேளாண்மை மேற்கொண்டார். இப்படி ஆரம்பித்த இவர்கள் 'கிராம ரக்ஷ பரிவார்' என்னும் குழுவாக இயங்க ஆரம்பித்தனர்.

2003-ல் இவர்கள் நேரடி வியாபாரம் செய்ய வேண்டும் என விரும்பினர். 4 கிராமங்களிலிருந்து 4 பேர் சேர்ந்து திட்டமிட்டு பல்வேறு காய் கறிகள் இயற்கையாக விளைவித்து அவற்றை நேரடி வியாபாரம் செய்வதென முடிவெடுத்தனர். விதர்பாவிலேயே அது தான் முதல் நஞ்சில்லா பண்டம் விற்கும் சந்தை என்ற சிறப்பினை பெற்றது. முதலில் ஒரு அரசு சாரா அமைப்பின் அலுவலகத்தின் வெளியில் நடத்தினர் இந்த வியாபாரத்தை. வாரம் மும்முறை இந்த சந்தையை அச்சிறு இடத்தில் நடத்தினர். முதல் சந்தை பெரியதாக விளம்பரப்படுத்தப்பட்டு பத்திரிக்கைகளில் எழுதபெற்று மிக கோலாகலமாக தொடங்கியது. இப்படி மிக சிறப்பாக தொடங்கி, வாய் வழியாக செய்தி பரப்பப்பட்டு இந்த நஞ்சில்லா சந்தை சிறப்பாக செயல்பட்டது. மக்களிடையே விஷமற்ற இவர்களது காய்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. முதல் நாளே ரூ. 5000/- க்கு மேல் வியாபாரம் ஆகியது.

மெதுவாக பிரச்சினைகள் தலை தூக்க ஆரம்பித்தன. உற்பத்தியில் திட்டமிடல் சரியாக இயங்காததால் ஒரே காய் மிக அதிகமாகவோ, சில காய்கள் அறவே இல்லாமலோ இடர்கள் உருவாயின‌.பிறகு உற்பத்தி பெருகும் பொழுது நுகர்வோர் பெருகாமல் விற்பனை மந்தமானது.எனினும் நாளாடைவில் கொஞ்சம் முன்னேற்றம் கண்டனர். தொடக்கத்தில் நாள் ஒன்றுக்கு 2 குவிண்டால் விற்று வந்த இவர்கள் மெதுவாக 5 குவிண்டால் விற்கத்தொடங்கினர். முதலில் கண்டதுபோல் லாபம் இல்லாவிடினும் வழக்கமான சந்தையை விட அதிகமாகவே பெற்றனர்.

பின்னர் இந்த சந்தையை கிராம சேவா மையத்திற்கு (பெரிய இடம்) மாற்றியமைத்தனர். அதன் பிறகு காய்கறிகள் விற்பனை குறைந்ததால் இவர்கள் கோதுமை முதலிய தானியங்களுக்கு சென்றனர். இதற்காக ஒரு பெரிய இடத்தை (மேற்கூறிய வார்தாவின் பிரதானமான குமரப்பா சாலையில்) வாடகைக்கு எடுத்தனர். அதனால் அதிக முதல் தேவைப் பட்டது. 10 விவசாயிகள் சேர்ந்து ஆளுக்கு ரூ.10,000/- முதலீடு செய்து இதனைத் தொடங்கினர்..கொஞ்சம் மந்தம் அடைந்த இத்தருணத்தில் இவர்கள் ஒரு சிறு கரும்புச்சாறு இயந்திரம் இட்டு, இயற்கை கரும்பு ரசம் விற்று ஆறே மாதத்தில் ஒரு லட்சம் வரவு கண்டு, இதனால் எல்லா செலவுகளையும் கையாண்டனர். மதிப்பு கூட்டுதலின் வலிமையை நேரடியாக உணர்ந்தனர்.

இன்று 32 விவசாயிகள் சேர்ந்து , அப்பளம், வற்றல், ஊறுகாய், அம்பாடி மற்றும் பல பழச்சாறுகள் என்று பல்வேறு மதிப்பு கூட்டிய பொருட்களை இயற்கை விளைபொருட்க‌ளில் இருந்து தயாரிக்கின்றனர். இவை மட்டுமே 1,50,000 வருமானம் ஈட்டுகிறது. இதனால் முதலீடு செய்த அனைவருக்கும் அவர்கள் முதல் திருப்பிக் கொடுக்கப்பட்டுவிட்டது.

இதற்கு பின் இன்னும் இரண்டு மிகவும் அருமையான நடவடிக்கைகள் எடுத்தனர். ஒன்று- பாரம்பரிய உணவகம் ஒன்றை திறப்பது. அதற்கும் அமோக வரவேற்பு கிடைத்தது. 'ஜுன்கா பாக்கர்' என்னும் ஒரு பாரம்பரிய கடலை மாவு ரொட்டியும் பச்சை பயறு சப்ஜியும் இதன் முதன்மையான உணவு. மிகவும் சிறந்த பழமையும் பாரம்பரியமும் வாய்ந்த நல்லுணவு நல்ல விலைக்கு கிடைப்பதால் அமோக வரவேற்ப்பு! சாயங்காலங்களில் முன் பதிவு செய்தால் மட்டுமே இடம் என்னும் அளவுக்கு கூட்டம் அலை மோதுகிறது.

இந்த சிறிய நகரத்தில் ரூ.5000 முதல் ரூ.6000/- வரை இந்த உணவகத்திலிருந்து மட்டும் தினமும் ஈட்டுகின்றனர். அடுத்த கட்ட நடவடிக்கையாக‌ இதன் முக்கிய நபர்கள், அநீதி எதிர்ப்பு மற்றும் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் முனைந்தனர். இதற்கு 'கிசான் அதிகார் அபிஞான்' என்று பெயரிட்டு உழவர்களின் உரிமை காப்பதற்காகப் பல்வேறு போராட்டங்கள் மற்றும் பிரசாரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்த அமைப்பு சிறிய ஊர்களிலும், சிறு விவசாயிகள் குழுவமைத்து இயற்கை வேளாண்மை, சிறு சந்தை மற்றும் பாரம்பரிய உணவு விடுதி அமைத்து சிறப்பாக இயங்க முடியும் என்பதையும், உள்ளூர் பொருளாதாரம் மற்றும் உழவர் வாழ்வாதாரம் இரண்டையும் பெருக்க முடியும் என்றும் நிருபித்துள்ளனர்.


அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் அதை
அங்கொரு காட்டினில் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ!

தற்சார்பு வேளாண்மைக்கும், சந்தைப்படுத்துதலுக்கும் முதலோ, ஊரோ பெரியதாக இருக்க வேண்டியதில்லை. விடுதலை வேட்கை ஒரு அக்கினிக் குஞ்சு போல் சுடர்விட்டால் போதும்!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org