தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

ரீஸ்டோர் என்னும் ஐந்தாண்டுக் குழந்தை - அனந்து

சென்னை அடையாறில் உள்ள‌, ரீஸ்டோர் என்னும் இலாப நோக்கில்லா இயற்கை அங்காடி கடந்த வாரம் தனது நெடும் பயணத்தின் 5 ஆண்டுகளை கடந்தது. இதை ஒரு சிறு விழாவாகக் கொண்டாடி, இயற்கை விவசாயிகள், நுகர்வோர் மற்றும் சூழலியலில் தொண்டாற்றி வரும் முக்கிய நபர்கள் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். முதலில் ரீஸ்டோர் எப்படி, ஏன் தொடங்கியது என்று பார்ப்போம்

ஐந்து ஆண்டுகளுக்கு முன் சென்னையில் வெகு சிலவே, இயற்கை பொருட்கள் மற்றும் நஞ்சில்லா உணவு விற்கும் கடைகள் இருந்தன. அவையும் பல காரணங்களால் தொடர்ந்து நடக்காமல் சில மாதங்களுக்குள் மூடப்பட்டு வந்தன. அன்றைய தினங்களில் இயற்கை விளை பொருட்கள் அதிக விலை கொண்டவையாக உள்ளன என்று பலரும் கூறிவந்தனர். விவசாயிகள், அதிலும் சிறு விவசாயிகள், இயற்கையாய் விளைவித்த பொருட்களுக்கு சரியான விலை கிடைக்க வில்லை என்றும் முறையிட்டு வந்தனர்.

அப்பொழுது 5-6 நண்பர்கள் (தன்னார்வலர்கள்) சிலர் கூடி ஒரு இயற்கை அங்காடி திறக்க முடிவெடுத்தனர். கடையில் தன்னார்வலர்களே எல்லா வேலைகளையும் செய்வது என்றும், விவசாயிகளே தங்கள் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் முடிவு செய்தனர். இதோடு நில்லாமல், இயற்கை மற்றும் மனிதகுலத்தை பாதுகாக்கும் ஒரு முழுமையான ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதாகவும் நெறியான பொறுப்பான நுகர்வோராக மாற்றவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

மக்களுக்கும் அவர்கள் உட்கொள்ளும் உணவிற்குமான தொடர்பு விலகி வருவதைத் தடுக்கவும் அந்த உணவை உற்பத்தி செய்யும் விவசாயியுடனான தொடர்பையும் புரிதலையும் உருவாக்கவும் முடிவு செய்தனர்.

இப்படி மாறிப்போன பழக்கங்களையும், மறந்து போன உணவையும் தொலைந்து போன ஆரோக்கியத்தையும், சீரழிக்கப்பட்ட இயற்கையையும் மறுபடியும் பழைய பொலிவிற்கு மீட்பதற்காகவே ரீஸ்டோர் தொடங்கப்பட்டது. மறக்கப்பட்ட உணவும், பாரம்பரிய தானியங்களும், தொலைந்த சிறு தானியங்களையும் மீட்டு பிரபலப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் விவசாயிக்கு கொடுக்கப்படும் விலை நிர்ணயம் மற்றும் நுகர்வோருக்கான விற்பனை விலை ஒளிவு மறைவின்றி பகிர்ந்து கொள்ளப்படவும் முடிவானது. Store என்ற ஆங்கிலப் பதத்திற்கு கடை என்ற பொருளாயினும், Restore என்ற பதம் மீட்சி என்ற பொருள் கொண்டது.

இப்படி பொறுப்புள்ள விவசாயிகளையும் அக்கறை உள்ள நுகர்வோரையும் உருவாக்கி இயற்கை சந்தையை நல்லதொரு திசையில் கொண்டு செல்ல முடிவு செய்து, இன்று வரை தனது சீரிய பணியை அதே பாதையில் வெற்றிகரமாக கொண்டு சென்று வருகிறது.

வாரம் இரு முறை நஞ்சில்லா இயற்கை காய் கறிகள் மற்றும் பழங்கள் கொண்டு வரப்படுகிறது. இது தவிர மக்களை இயற்கை வேளாண் பண்ணைகளுக்கு கொண்டு சென்று அங்கு மண் வீடு கட்டுமானம், இயற்கை விவசாயம், மழை நீர் சேகரிப்பு போன்ற பல வேலைகளில் ஈடுபட வைத்து இருவருக்கும் பாலம் அமைத்தும் கொடுக்கின்றனர். இவை எல்லாவற்றையும் விட பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பாரம்பரிய உணவு விழாக்கள் போன்றவை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பான உணவு, மரபணு அற்ற விதைகள், சிறு தானிய

பயிர்கள் இயற்கை விவசாயம் இவை பற்றியும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

ரீஸ்டோர், கடந்த பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி, இந்த 5ஆண்டு நிறைவை ஒரு சிறிய நிகழ்ச்சியின் மூலம் கொண்டாடியது. இயற்கை பொருட்களை அளித்து வரும் விவசாயிகளை வரவழைத்து,இந்த கடையில் பணி புரியும் அன்பர்களையும் கௌரவித்தனர். இந்த நிகழ்ச்சிக்கென ஊட்டி, ஆரணி, திருவண்ணாமலை, திருநின்றவூர், நெல்லூர், ரெட் ஹில்ஸ், திருத்தணி என பல இடங்களிலிருந்தும் விவசாயிகள் வந்து சிறப்பித்தனர். பல தன்னார்வலர்களும் நுகர்வோரும் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மருத்துவர் சிவராமன், தாளாண்மை ஆசிரியர் பாமயன், “நம்ம சென்னை” ஆசிரியர் அரவிந்தன் போன்றோரும் வந்து சிறப்பித்தனர்.

அன்று, ரீஸ்டோரின் சங்கீதா ஸ்ரீராம் எழுதிய புத்தகம் - ” பசுமைப் புரட்சியின் கதை” அறிமுகப்படுத்தப்பட்டது. “நம்ம சென்னை” ஆசிரியர் அரவிந்தன் அளிக்க‌ மருத்துவர் சிவராமன் மற்றும் பாமயன் பெற்றுக்கொண்டனர். [இது புத்தக வெளியீடு அல்ல. ஏற்கனவே வெளியிடப்பட்ட இந்நூலை ரீஸ்டோரின் வட்டத்தில் அறிமுகம் செய்தோம்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org