தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

பீடையிலாத‌தோர் கூடு

மண் பயனுற வேண்டும் - உழவன் பாலா

மண்ணால் வீடு கட்டுவது என்றால் வீட்டின் அனைத்து பாகங்களும் மண்ணாலேயே ஆனவை என்றும், மழை வலுவாகப் பெய்தால் கரைந்து விடும் என்றும், கரையானும், தேளும், பூரானும் வீட்டில் விளையாடும் என்றும் எல்லாம் நமக்குக் கற்பனைகள் தோன்றக் கூடும். ஆனால், நாம் செங்கல் வீடு என்றால், கூரை, ஜன்னல், கதவு, தரை போன்ற பலவற்றிற்கும் செங்கல் அல்லாத பொருட்களையே பயன்படுத்துகிறோம். செங்கல்லால் ஆன வீட்டிற்கு ஓட்டிலேயோ, கீற்றிலேயோ கூரை வேய்ந்தால் அதிலும் பூச்சிகள் வரக் கூடும். எனவே வீட்டை நாம் திட்டமிடுவதிலும், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதிலும் கவனம் செலுத்தினால் மண்வீடும் கான்க்ரீட் வீடு போல் பாதுகாப்பாகவும், நளினமாகவும் ஒளிர முடியும். மண்வீடு என்று சொல்வதை விட மண்சுவர் வீடு என்று சொல்வதே பொருந்தும்.” என் வீட்டைச் சுற்றியோ என் மனைக்கட்டிலோ நல்ல மண் இல்லையே” என்று ஆட்சேபிக்கலாம். ஆனால் நம் வீட்டச் சுற்றி செங்கல்லும், சல்லியும், சிமென்டும் இருக்கிறதா என்ன? இதையெல்லாம் மிகத் தொலைவில் இருந்து வண்டிகளில் ஏற்றி வரும் நாம் அருகில் நல்ல மண்ணைக் கண்டு கொண்டு வருவதில் முயற்சியைச் செலுத்தலாமே!

இனி மண்வீடு கட்டும் தொழில்நுட்பங்கள் என்ன? செங்கல் என்றால் அனைவரும் பார்த்தது; கொத்தனார், மேஸ்திரி, பொறியாளர் என்று பலரும் இருக்கிறார்கள். மண்வீடு கட்ட யார் இருக்கிறார்கள்? மேலை நாடுகளில், மாற்று வாழ்முறையை முயற்சி செய்யும் அனைவரும் தங்களின் பெரும்பகுதி வேலையைத் தாங்களே செய்து கொள்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் முதலாளி வேலை செய்வது என்பது இயலாததாக இருக்கிறது. இதற்கு ஒரே வழி நாம் வீடு கட்டப் போகும் மாவட்டத்தில் ஊர்ப்புறங்களில் சென்று அங்குள்ள மண்வீடுகள், விவசாயத் தொழிலாளர்கள் வீடுகள் எந்த முறையில் கட்டப் படுகின்றன என்று அறிந்து அதே முறையில் இன்னும் நேர்த்தியாக நாம் கட்டுவதுதான்.

மண்வகைகளைத் தேர்வு செய்வதையும், அவற்றை உறுதிப்படுத்தப் பயன்படும் பொருட்களையும் பற்றிச் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இக்கட்டுரையில் மண்ணால் வீடு கட்டும் ஐந்து விதமான தொழில்நுட்பங்களைப் பார்ப்போம்.(இவற்றிற்குச் சரியான தமிழ்ப்பெயர் இல்லாத‌தால், இயன்றவரை வினைச் சொற்களைக் கொண்டு பெயரிட்டுள்ளேன் - கடுமையான கலைச் சொற்கள் போல் இல்லாமல் வெகுஜனங்கள் எளிமையாக வழக்கத்தில் பயன்படுத்தக் கூடிய பெயர்களாக இருந்தால் இக்கருத்துக்கள் விரைவாய்ப் பரவ உதவும்.

இக்கட்டுரையின் பெரும் பகுதி லாரி பேக்கர் எழுதிய MUD என்ற குறுநூலில் இருந்து தொகுக்கப்பட்டது). இவ்வைந்தும் வருமாறு:

1. மிதிமண் சுவர்

மிதிமண் சுவர் என்பது மண்ணை தகுந்த உறுதிப்பொருட்களுடன் தயார் செய்தபின் அதை உருண்டைகளாக உருட்டி ஒன்றன் மேல் ஒன்றாய் அடுக்கிச் சுவர் செய்வது. களிமண் அதிகமுள்ள தஞ்சை மாவட்டத்தில் இம்முறையில் கட்டிய பற்பல வீடுகள் இன்றும் உள்ளன. இதற்கு ஏன் மிதிமண் என்ற பெயர்? மண்ணை முதலில் தரையில் கொட்டி வட்ட வடிவமாகச் செய்து அதனுள் நீரையும் அரைத்த சுண்ணாம்பு,p> கிளிஞ்சல் போன்ற உறுதிப்பொருட்களையும் சேர்த்து வேலையாட்கள் காலால் மிதிப்பார்கள். இவ்வாறு தொடர்ந்து மிதித்துப் புளிக்க வைத்த மண்ணை, நெல் உமி, கருக்காய், சிறு துண்டுகளாக நறுக்கப்பட்ட வைக்கோல் இவற்றுடன் கலந்து பிசைந்து உருண்டைகள் உருட்டி அவற்றை அடுக்கிச் சுவர் செய்வது இதன் தொழில்நுட்பம். எளிமையானதும் எளிதில் தெரிந்து கொள்ளக் கூடியதுமான தொழில்நுட்பம் இது. வட்ட வடிவக் கட்டிடங்களுக்கு மிக உகந்தது. மிதிமண் சுவர் கொண்டு அதிக உயரமான கட்டிடங்கள் கட்டுவது கடினம். நம் தமிழ் நாட்டில் அதிகமாகப் பயன்படுத்தப் பட்ட தொழில்நுட்பம் இதுதான்

2. அச்சுமண் சுவர்

அச்சுமண் என்பது மண்தேர்வு செய்தபின் அதை ஒரு அச்சில் வார்த்துப் பின் வெயிலில் உலர்த்தி செங்கல்கள் போல் செய்து அவற்றை வைத்து வீடு கட்டுவது. இது மெக்சிகோ நாட்டில் பாரம்பரியமாக இருக்கும்

இதனை அடோபி (adobe) என்று அழைக்கிறார்கள். தமிழ்நாட்டில் இத்தொழில்நுட்பம் முன்பு செல்வந்தர்களின் வீடு கட்டப் பயன் படுத்தப் பட்டிருக்கிறது.” பச்சை மண் செங்கல்” என்றும் இதனை அழைப்பார்கள். இதில் இரண்டு மாடிக் கட்டிடங்கள் எளிதாய்க் கட்டலாம்.

3. திமிசுமண் சுவர்

இதுதான் மண்தொழில் நுட்பங்களிலேயே மிகவும் வலுவானது. உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் இதனால் ஆனதுதான். இம்முறையில் , நேர்த்தி செய்யப்பட்ட மண்ணை மரம் அல்லது இரும்புச் சட்டங்களுக்குள் இட்டு அம்மண் தன் உயரத்தில் பாதி ஆகும் வரை திமிச வேண்டும். அதன் பின்னர் அந்தச் சட்டத்தைக் கழற்றி சுவற்றின் அடுத்த இடத்திற்கு மாற்றி அதை மண் நிரப்பி திமிச வேண்டும். சுவற்றின் மூலைகளுக்கு “ட ” வடிவ அச்சுக்களும், இரண்டு சுவர்கள் இணையுமிடத்தில் ”+” வடிவ அச்சுக்களும் பயன்படுத்த வேண்டும். திமிசு மண் சுவர்கள் பார்க்க மிகுந்த நளினமாகவும், கரையான், பூரான் போன்ற பூச்சிகளால் புக முடியாதபடியும் உள்ளவை. காலத்தை வெல்லும் கட்டிடக் கலை என்பதற்கு மிகச் சிறந்த சான்று இம்முறைதான்.நன்றாய்த் திமிசிய மண்சுவர் கடப்பாரை பட்டால் வெண்கலம் மோதுவது போல் “ணங் டங்” என்று ஓசை எழுப்பும். செம்மண்ணிற்கு ஏற்ற தொழில்நுட்பம் இது. ஆனால் மிகுந்த நேரமும் ஆற்றலும் தேவைப்படும் முறை இது.

4. அழுத்தக்கல் சுவர்

இது அச்சுமண் போன்ற தொழில் நுட்பம் - ஆனால் அச்சில் மண்ணை வெறுமே நிரப்பாமல், திமிசு மண் போல் அதை அச்சில் வைத்து அழுத்துவது இம்முறையின் சிறப்பு. ஆரோவில் போன்ற இடங்களில் 5% சிமென்ட் உறுதிப்பொருளாய்க் கலந்து அழுத்தக்கல்கள் தயரிக்கிறார்கள். அதற்கான கையியங்கி இயந்திரங்களும் விற்கிறார்கள். இவை பார்க்க ஒரே சீராக அழகாக இருக்கும். நல்ல வலுவுள்ள இவற்றைக்கொண்டு மூன்று மாடி வரை கட்டிடங்கள் கட்டலாம்.

5. படல்மண் சுவர்

படல்மண் என்பது மூங்கிற்படல் அல்லது தட்டி போன்ற பொருளை சுவற்றின் ஒழுங்கிற்குக் கட்டி விட்டு அதன் இருபுறமும் பிசையும் பதத்தில் உள்ள ஈரமண்ணை வேகமாக அடிப்பது. அதன் பின்னர் அவற்றைக் கையாலோ மணியாசுக் கட்டையாலோ தடவி சமன் செய்து விட்டால் அழகான சுவர் உருவாகி விடும். இம்முறை மேற்கு வங்கம், வங்க தேசம் போன்ற வெள்ளத் தாக்கம் அதிகம் உள்ள இடங்களுக்கும், நில நடுக்கம் அதிகம் தாக்கக் கூடிய இடங்களுக்கும் மிக ஏற்றது.

இவ்வைந்து நுட்பங்களையும் ஒவ்வொன்றாக வரும் இதழ்களில் ஆராய்வோம்

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org