தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

உழவை வெல்வது எப்படி? - பசுமை வெங்கிடாசலம்


[தாளாண்மை தற்சார்பு வாழ்வியலைப் பரப்பும் நோக்கத்துடன் செயல்படுகிறது. அகிம்சை என்பது நம் கோட்பாட்டில் இன்றியமையாத ஒன்று. அதில் புலால் உண்ணாமை ஒரு முக்கியக் கூறு. எனினும், நாம் அடிக்கடி கூறுவது போல, உணவும், தொழிலும் ஆழ்ந்த வன்முறையை உள்ளடக்கியவை. உணவே தொழிலாகக் கொள்ளும் உழவன் அகிம்சையைக் கடைப்பிடிப்பது கடினமே. உழவன் பொருளாதார விடுதலையும் முன்னேற்றமும் அடையக் கால்நடை வளர்ப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே பசுமை வெங்கிடாசலம் அவர்களின் இப்பரிந்துரையை அவரவர் தம் சூழலுக்கும், மனசாட்சிக்கும், பொருட்தேவைக்கும் ஏற்பச் செயல் படுத்திக்கொள்ளவும் - ஆசிரியர் ]

டெல்டா பகுதியில் அமைந்துள்ள ஒரு 2.5 ஏக்கர் பண்ணையை எப்படி ஒரு தற்சார்பு பண்ணையாக மாற்றுவது என்று சென்ற இதழில் பார்த்தோம். தொடர்ந்து அதை நடைமுறைப் படுத்தும்போது ஏற்படும் இடர்பாடுகள், செலவினங்கள், அதன் வருவாய் எப்படி இருக்கும், அதற்குண்டான தொடர் தொழில்நுட்பம் பற்றியும் தோராயமான வரவு செலவு பற்றியும் இந்த இதழில் காண்போம். விவசாயத்தில் செலவு என்பது இரு வகைப்பட்டது. முதலீடு என்பது நிலைத்திருக்கக் கூடியது. இடுபொருட் செலவு என்பது ஒவ்வொரு அறுவடையுடனும் தீர்ந்து விடக் கூடியது.நாம் செய்யும் செலவுகளை மூன்று விதமாக பிரித்துக்கொள்ள வேண்டும்.

1.தேவையான ஆனால் உடனடி வருவாயற்ற‌ செலவு (capital investment)

தரமான வேலி அமைத்தல், பூமியை சரிசெய்தல், ஆழ்துளை கிணறு, பாசன குழாய்கள் பதித்தல், சொட்டு நீர் பாசனம் அமைத்தல் ஆகிய செலவுகள் அனைத்தும் இதனுள் அடங்கும். இந்த செலவுகளில் இருந்து நமக்கு நேரிடையாக எந்த ஆதாயமும் கிடைப்பதில்லை. இவற்றை தொடர்ந்து பராமரிக்கவேண்டிய கட்டாயத்திலும் உள்ளோம். இதற்கும் ஒரு விதத்தில் தொடர்ந்து செலவு செய்யவேண்டியுள்ளது.

2.வருவாய்க்கான‌ செலவு (input costs)

விதை, செடிகள், நாம் வளர்க்கும் கால்நடைகளை வாங்கும் செலவுகள் மற்றும் அவற்றை பராமரிக்கும் செலவுகள் இதனுள் அடங்கும். இதில் இருந்து நமக்கு பல மடங்கு பயன் கிடைக்கும். தொடர்ந்து இவற்றின் பலன்கள் பெருகிக்கொண்டே இருக்கும். இதற்காக நாம் தொடர்ந்து செலவு செய்துகொண்டே இருக்கவேண்டும்.

3.ஆடம்பரச் செலவு (white elephant investment)

நமக்கு தேவையற்ற ஒன்றை நமது பெருமைக்காக வாங்கி வைத்துக்கொள்ள செய்யும் செலவுகள். உதாரணமாக,வெளிநாட்டு நாய்கள், வெளிநாட்டு பறவைகள் போன்றவை. இவைகளை அதிக விலை கொடுத்து வாங்கி வந்து அவற்றிற்கு தேவையான சூழ்நிலையை உருவாக்க அதிக செலவு செய்வது. அது தொடர்ந்து அதிக செலவினத்தை உருவாக்கும். இதனால் நமக்கு எந்த வருவாயும் கிடைக்காது. நமது நேரத்தையும் செலவழிக்க வேண்டிவரும். வேறு யாரிடமும் இல்லாத ஒன்று என்னிடம் உள்ளது என்ற பெருமை மட்டுமே கிடைக்கும்.

பண்ணை வடிவமைக்கும்போது இந்த செலவுகளில் இவற்றுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று தெரிந்து, புரிந்து செலவு செய்தால் தேவையற்ற வேலைகளை நாம் செய்யமாட்டோம். வளர்ச்சிக்கு உண்டான முதலீட்டிற்கு துணையான செலவுக்கு மட்டுமே செலவிடவேண்டும். நாம் வளர்க்கும் கால்நடைகளுக்குத் தேவையான அனைத்து தீவனங்கள் மற்றும் மருந்துகளுக்கு உண்டான பொருட்களையும் நமது பண்ணைக்குள்ளேயே உற்பத்தி செய்துகொள்வது முக்கியம்.

ஆக அடிப்படை கட்டுமானத்திற்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 2 இலட்சம் செலவாகும் என்று முன்னர் கணக்கிட்டோம். 2 1/2 ஏக்கரில் மொத்தம் 5 இலட்சம் தேவைப்படும். 2 மாடுகள்,20 கோழிகள், 2 பெட்டை ஆடு, ஒரு ஆண் ஆடு, 20 ஜோடி புறாக்கள், 25 வாத்துக்கள் கொண்ட ஒரு பண்ணையின் வரவு செலவு கணக்கை தோராயமாக கணக்கிடுவோம்.

1. மாடுகள் 25000 * 2 = 50,000
2. ஆடுகள் 5000 * 3 = 15,000
3. கோழிகள் 300 * 20 = 6,000
4. புறாக்கள் 200 * 40 = 8,000
5. வாத்துக்கள் 100 * 25 = 2,500
6. மாட்டுக்கொட்டகை = 40,000 (16 அடிக்கு 10 அடி)
7. ஆட்டுக்கொட்டகை = 40.000 (16 அடிக்கு 10 அடி)
8. கோழிக்கொட்டகை = 40,000 (16 அடிக்கு 10 அடி)
9. வாத்துக்கொட்டகை = 20,000 (16 அடிக்கு 10 அடி)
10. புறாக்கொட்டகை = 50,000 (8 அடிக்கு 10 அடி)


ஆக மொத்தம் 2,70,500

வருமானம்


1. நாட்டு பசு - பால் - (1 வருடத்தில் 5 மாதம் - மொத்தம் 300 லிட்டர் ) 300 * 40 = 12,000
2. 2 ஆடுகள் - வருடத்திற்கு மொத்தம் 6 குட்டி 6000 * 6 = 36,000
3. 20 கோழிகள் - 200 குஞ்சுகள் - 6 மாத வளர்ச்சி 1 கிலோ எடை 200 * 300 = 60,000
4. 25 வாத்துக்கள் - 1 வருடத்தில் 150 முட்டை (ஆண் வாத்து போக) 3000 * 4 = 12,000
5. 20 ஜோடி புறாக்கள் - சேதாரம் போக 100 ஜோடி குஞ்சுகள் 100 * 200 = 20,000

ஆக மொத்தம் 1,40,000

1/2 ஏக்கர் மீன் குளத்தில் சுமார் 2000 மீன் குஞ்சுகள் வளர்க்கலாம். 7 முதல் 8 மாதத்தில் சுமார் 1 கிலோ எடை அளவு வளர்ந்துவிடும். சேதாரம் போக 1 1/2 டன் அறுவடை செய்யலாம். இதன் மூலம் சுமார் 1 1/2 இலட்சத்திற்குக் குறையாத வருவாய் கிடைக்கும். (சென்ற வருடம் காரைக்கால் திரு. முத்துகிருஷ்ணன் பண்ணையில் செய்யப்பட்ட அறுவடைக் கணக்கு இதுவாகத்தான் இருந்தது). ஆக ஒரு வருடத்தில் அதுவும் முதல் வருடத்திலேயே சுமார் 3 இலட்சத்திற்குக் குறையாமல் கால்நடைகளின் மூலமே வருவாய் பெற அபரிதமான சூழல் உள்ளது. இதில் கால்நடைகளின் பெருக்கத்தை மிகவும் குறைத்தே கணக்கிடப்பட்டுள்ளது. இந்த தகவல் பல வேறுபட்ட இடங்களில் இருந்து பல விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கணக்கு ஆகும். அடுத்த இதழில் மற்ற பயிர்களில் இருந்து கிடைக்கும் வரவு செலவு பற்றி எழுதுவோம்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org